வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

க்ருஷ்ண-நாம-மஹா-மந்த்ரேர ஏஇத ஸ்வபாவ

ஜே ஜபே-தார க்ருஷ்ணே உபஜயே பாவ

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயல்பு யாதெனில், இதை யார் ஜபித்தாலும், உடனடியாக கிருஷ்ணரின் மீதான பேரன்பு வளரும்.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.83)

ஒவ்வோர் உண்மையான கிருஷ்ண பக்தரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தல் அவசியம். நாம் பல பணிகளில் மும்முரமாக இருந்தாலும், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.

எவ்வளவு ஜபிக்க வேண்டும்?

நாம் எவ்வளவு உச்சரிக்கிறோம் என்பதை அறிய ஜப மாலையில் ஜபம் செய்வது சிறந்தது. தற்போதைய உலகில் எம்பெருமானின் திருநாமங்களை உலகெங்கும் பரப்பிய சக்தி பெற்ற ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், தீக்ஷை பெற்ற பக்தர்கள் குறைந்தபட்சம் 16 மாலைகள் (108 முறை ஓ 16 சுற்றுக்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை) ஜபிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்துள்ளார்.

கிருஷ்ண உணர்விற்கு புதிதாக வருபவர்களில் சிலர் தினமும் 16 மாலைகள் ஜபம் செய்வதை கடினமாக உணரலாம். இவர்கள் தத்தமது வசதிக்கேற்ப, எட்டு, நான்கு, இரண்டு, அல்லது குறைந்தது ஒரு மாலை ஜபத்தினை தினமும் செய்யத் தொடங்கலாம். பின்னர், ஜபம் செய்வதில் அனுபவம் ஏற்பட்ட பின்னர், படிப்படியாக மாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்று பதினாறு மாலைகள் என்னும் எண்ணிக்கையை அடையலாம்.

தினமும் சொல்லும் மாலைகளின் எண்ணிக்கையை ஒருபோதும் குறைக்கக் கூடாது. தீக்ஷை பெற்ற பின் பதினாறு மாலைகளுக்குக் குறைவாக எந்தவொரு நாளும் ஜபம் செய்யக் கூடாது.

எனினும், ஜபம் செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட அளவு மாலைகளைச் சொல்லி முடிப்பது மட்டுமல்ல. தரமான முறையில் ஜபம் செய்தல் விரைவான ஆன்மீக முன்னேற்றம் பெற நமக்கு உதவும். ஜபமானது, தெளிவாகவும் நல்லுணர்வுடனும் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும்விதத்திலும் திருநாமத்தின் மீது கவனம் செலுத்தியும் செய்யப்பட வேண்டும்.

எவ்வாறு ஜபிக்க வேண்டும்?

துளசிக் கட்டையால் செய்யப்பட்ட ஜப மாலைகள் மிகச் சிறந்தவை. வேம்பும் பிரபலமாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. முன்னரே கூறியபடி, எத்தனை முறை நாம் உச்சரிக்கிறோம் என்பதை எண்ணுவதற்கு மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப மாலையில், எண்ணிக்கைக்காக 108 மணிகளும், தலைமை மணி” என்றழைக்கப்படும் ஒரு பெரிய மணியும் இருக்கும்.

ஜப மாலையை வலது கையில் எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளபடி கட்டை விரலுக்கும் நடு விரலுக்கும் இடையே பிடித்துக் கொள்ளவும். ஆட்காட்டி விரல் பயன்படுத்தப்படுவதில்லை; ஏனெனில், அஃது அசுத்தமானதாகக் கருதப்படுகிறது. தலைமை மணிக்கு அடுத்த மணியிலிருந்து உச்சரிக்க ஆரம்பிக்கவும். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக பஞ்ச தத்துவ மந்திரத்தைச் சொல்லவும்: ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு நித்யானந்த/ ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-விருந்த. பகவான் சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் இந்த திருநாமங்களைச் சொல்வது, திருநாம ஜபத்தில் புரியப்படும் அபராதங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றது.

திருநாமங்களைச் சொல்லும்போது தவிர்க்கப்பட வேண்டிய பத்து அபராதங்கள் உள்ளன. இவை பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் நூலின் எட்டாவது அத்தியாயத்தின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது, மஹா மந்திரத்தை உச்சரிக்கவும்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.  பின்னர் இரண்டாவது மணிக்குச் செல்லவும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் மஹா மந்திரத்தை முழுவதுமாக உச்சரித்த பின்னர் அடுத்த மணிக்குச் செல்லவும். 108 முறை உச்சரித்த பின்னர், மீண்டும் தலைமை மணியை அடையும்பொழுது, ஒரு மாலை ஜபம் செய்ததாகக் கருத  வேண்டும். பின்னர், தலைமை மணியைக் கடக்காமல் வந்த வழியே மீண்டும் திரும்பிச் செல்லும் வகையில், இரண்டாவது மாலை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

கவனத்துடன் ஜபித்தல்

ஜபம் எளிமையானதாகத் தோன்றினாலும் சிறந்த பலன்களைப் பெற முறையாகச் செய்யப்பட வேண்டும். ஜபமானது தனக்கு அருகிலிருப்பவரின் செவிகளுக்காவது கேட்குமளவிற்கு சப்தத்துடன் செய்யப்பட வேண்டும். ஜபம் செய்யும்போது மஹா மந்திரத்தை நன்கு காது கொடுத்துக் கேட்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒருநிலைப்படுத்துதல் ஜப-தியானம் எனப்படும். இது நமது உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. மனம் அலை பாய்வதை நிறுத்துவது கடினமென்றபோதிலும், மற்ற விஷயங்களைப் போலவே, பயிற்சியினால் நாளடைவில் பக்குவமடைய முடியும். ஒவ்வொரு சொல்லும் செவிகளில் நன்கு விழும்படி மந்திரத்தைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.

சில பக்தர்கள், மஹா மந்திரத்தைத் தெளிவின்றி உச்சரிப்பது, கிசுகிசுப்பது, சொற்களையோ எழுத்துகளையோ உச்சரிக்காமல் விட்டுவிடுவது, ஜபம் செய்கையில் தூங்கிவிடுவது, ஜபம் செய்கையில் மற்ற வேலைகளைச் செய்வது, இடையிடையே மற்றவருடன் பேசுவது, புத்தகம் படிப்பது போன்ற தவறான பழக்கங்களைக் கொண்டவர்களாக உள்ளனர். மேலும், சில மணிகளைத் தவிர்த்துவிட்டு ஜபம் செய்தல் (அதாவது, ஒரு மந்திரத்தை முழுமையாகச் சொல்லாமல், தன்னையறியாமலேயே அடுத்த மணிக்குச் செல்வது; இதனால் 108 மணிகளுக்குக் குறைவாக ஜபம் செய்தல்) மற்றொரு தவறாகும். நமது ஜபத்தினை தொடர்ந்து கண்காணித்து அதனை முன்னேற்ற வேண்டும்.

கிருஷ்ண உணர்விற்குப் புதிதாக வந்தவர்கள் மாலைகளை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், பயிற்சி பெற்ற பக்தர்கள் ஒன்றரையிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் பதினாறு மாலைகளை முடித்துவிடுவர். (அதாவது ஒரு மாலைக்கு ஐந்தரையிலிருந்து எட்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்வர்) வேகத்தைக் காட்டிலும் தரமே முக்கியம். எனவே, ஆரம்ப நிலைகளில் தெளிவாக உச்சரிப்பதிலும் கவனமாகக் கேட்பதிலும் மனதைச் செலுத்த வேண்டும். ஜபம் செய்யச்செய்ய தானாக வேகமும் வந்துவிடும். ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு மாலை முடிந்து விட்டால், (1) அந்த பக்தர் மஹா மந்திரத்தின் மீது கவனம் செலுத்தவில்லை, அல்லது (2) மந்திரத்தின் சொற்களை அல்லது உச்சரிப்புகளை விட்டுவிடுகிறார், அல்லது (3) மணிகளைத் தவிர்த்து விடுகிறார் என்றுதான் அர்த்தம்.

ஜபம் செய்வதற்கு ஏற்ற காலம், அதிகாலை நேரம் (சூரிய உதயத்திற்கு முன் வரக்கூடிய மங்கலகரமான நேரமான பிரம்ம முகூர்த்தம்). இரயிலில் செல்லும்போது, வேலைக்குச் செல்லும்போது, தெருவில் நடந்து செல்லும்போது என எந்நிலையிலும் ஒருவர் ஜபம் செய்யலாம். எனினும், அன்றாட வேலைகளைத் தொடங்குமுன் முழு கவனத்துடன் அதிகாலையில் பதினாறு மாலைகளை நிறைவு செய்வது சிறந்தது.

ஜபமாலைக்கான பை

ஜபமாலையை அதற்கென்றே சிறப்பாக தயாரிக்கப்படும்  ஜபமாலைப் பையில் வைத்துக் கொள்வது நல்லது. ஜபமாலைப் பையில் ஆட்காட்டி விரலை வெளியே வைப்பதற்காக ஒரு துளை இருக்கும். மேலும், இதனைப் பயன்படுத்தாதபோது எங்கும் கொண்டு செல்வதற்கு வசதியாக கழுத்தில் மாட்டிக் கொள்வதற்குத் தகுந்தாற் போல ஜபமாலைப் பைகள் அமைக்கப்படுகின்றன. எப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்தாலும் ஜபம் செய்யலாம் என்பதால், பக்தர்கள் எல்லாவிடத்திற்கும் ஜபமாலைப் பைகளை எடுத்துச் செல்வர். ஜப மாலைகளையும் அதன் பையையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். கழிப்பிடத்தினுள் ஜபமாலை அல்லது அதன் பையை கொண்டு செல்வது கூடாது.

(இக்கட்டுரை கிருஷ்ண பக்தி, ஓர் ஆரம்பநிலை வழிகாட்டி என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)