அனைவரையும் நேசிப்பது எவ்வாறு?

கிருஷ்ணரே இருப்பவை அனைத்திற்கும் மூலம் என்பதால் அவரை நேசிப்பதன் மூலம் அனைவரையும் நேசிக்க இயலும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபிஸ்

தாபிர் ய ஏவ நிஜ-ரூபதயா கலாபி:

கோலோக ஏவ நிவஸத்யகிலாத்ம-பூதோ

கோவிந்தம் ஆதி-புருஷம்-தம்-அஹம் பஜாமி 

தமது சொந்த லோகமான கோலோகத்தில் ராதை யுடன் வசிக்கும் ஆதி புருஷரான கோவிந்தரை நான் வணங்குகிறேன். ராதை அவரது சொந்த ஆன்மீக சாயலைக் கொண்டவள், அவரது ஹ்லாதினி சக்தியின் ஸ்வரூபமாவாள். ராதையின் தோழிகள் அனைவரும் அவளது திருமேனியின் விரிவுகளாவர், அவர்கள் அனைவரும் என்றும் ஆனந்தமான ஆன்மீக ரஸத்தினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்; அவர்களே ராதா-கிருஷ்ணருக்குத் துணையாக உள்ளனர்.”

ஆத்மா ஆனந்தமயமானது

ராதா-கிருஷ்ணர் இருவரும் ஆனந்த-சின்மய-ரஸ எனப்படும் ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். சின்மய என்றால் ஆன்மீகம் என்றும், ரஸ என்றால் சுவை என்றும் பொருள். இது நித்தியமானது. நாமும் இந்த ஆனந்த-சின்மய-ரஸத்தின் துணுக்குகளே. இதையே வேதாந்த சூத்திரமும் (1.1.12) கூறுகிறது, ஆனந்தமயோ  அனைத்து உயிர்வாழிகளும் ஆனந்தமயமானவை.

உயிர்வாழி இயற்கையிலேயே ஆனந்த மயமானது. ஆனால், அதன் தற்போதைய கட்டுண்ட நிலையோ அதற்கு முற்றிலும் நேர்மாறானது. கட்டுண்ட நிலையில் ஆனந்தமில்லை, ஞானமில்லை, நித்திய வாழ்வுமில்லை. ஆனால் அறிவு, ஆனந்தம், நித்தியத்தன்மைஶீஆகிய இம்மூன்றும் ஆன்மீக இருப்பின் இலட்சணங்களாகும்.

கிருஷ்ணரின் நித்திய இருப்பிடமான கோலோக விருந்தாவனம் அவரது அந்தரங்க சக்தியின் தோற்றமாகும். அங்குள்ள நிலம், நீர், மரங்கள், பூக்கள், பசுக்கள், கன்றுகள் என அனைத்தும் அவரது விரிவுகளே. கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் தானா என்பதை சோதிக்க விரும்பிய பிரம்மதேவர் கிருஷ்ணரது கன்றுகளையும் அவரது நண்பர்களான கோபர்களையும் திருடினார். அச்சமயத்தில், கிருஷ்ணர் திருடப்பட்ட கன்றுகளாகவும் கோபர்களாகவும் தம்மை விரிவுப்படுத்திக் கொண்டார்.

எங்கும் கிருஷ்ணரைக் காணுதல்

கிருஷ்ணரது சக்தியினால் ஆன்மீக உலகில் வேறுபாடுகள் உள்ளன. ஜடவுலகில் காணப்படும் வேறுபாடுகள் கிருஷ்ணரது பகிரங்க சக்தியின் விரிவுகளாகும், ஆன்மீக உலகில் காணப்படும் வேறுபாடுகள் அவரது ஆன்மீக சக்தியான அந்தரங்க சக்தியின் விரிவுகளாகும். நிஜ-ரூப, தமது உருவில்,” கோலோக ஏவ நிவஸதி, கோலோக விருந்தாவனத்தில் நித்தியமாக வீற்றிருப்பவர்.” அகிலாத்ம-பூதோ, அகிலம் முழுவதும் வீற்றிருப்பவர்.” கிருஷ்ணர் தமது சொந்த இருப்பிடமான கோலோக விருந்தாவனத்தில் வீற்றிருப்பினும், அவரால் பௌதிக உலகின் எல்லா இடங்களிலும் தம்மை விரிவுபடுத்திக்கொள்ள இயலும்; ஏனெனில், பௌதிக இயற்கையும் அவரது சொந்த சக்தியே. கோலோக விருந்தாவனத்தில் வீற்றிருக்கும் ராதா-கிருஷ்ணருக்கும் இங்கே நமது கோயிலில் வீற்றிருக்கும் ராதா-கிருஷ்ண விக்ரஹத்திற்கும் இடையில் எந்த வேறுபாடு இல்லை. நமது சேவையை ஏற்றுக்கொள்வதற்கான பகவானின் விரிவங்கமே விக்ரஹமாகும்.

நான் பலமுறை இந்த உதாரணத்தை வழங்கியிருக்கிறேன்: உங்களது வீட்டிற்கு அருகில் தபால் நிலையத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறிய தபால் பெட்டி பார்ப்பதற்கு சிறியதாக இருப்பினும் அது தபால் நிலையத்திலிருந்து வேறுபட்டதல்ல. ஒரு கடிதத்தை அப்பெட்டியில் போட்டால், அஃது ஆயிரம் மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டிய இடங்களுக்குக்கூட செல்கிறது. ஆகவே, தபால் பெட்டியும் தபால் நிலையத்தைப் போன்றதே. அதுபோலவே, விக்ரஹத்தை வழிபடுவதும் தபால் பெட்டியில் தபால் போடுவதைப் போலத்தான். உங்களது வழிபாட்டினை கிருஷ்ணர் ஏற்றுக் கொள்கிறார். ஏதோவொரு பொம்மையை நாம் வழிபடுவதாக நினைக்க வேண்டாம். தபால் நிலையத்திலிருந்து உங்களுக்கு உதவுவதற்காக ஒரு தபால் பெட்டியை உங்களது வீட்டிற்கு அருகில் வைத்திருப்பதைப் போலவே, பகவான் கோலோக விருந்தாவனத்தில் வீற்றிருப்பினும் உங்களது சிறிய சேவையை ஏற்றுக் கொள்வதற்காக கருணையுடன் தம்மை விக்ரஹமாக விரிவுபடுத்திக்கொள்கிறார். ஆகவே, கோயிலிலுள்ள விக்ரஹத்தை மரம், கல் அல்லது உலோகம் என்று ஒருபோதும் நாம் எண்ணக் கூடாது. ஏனெனில், அனைத்தும் கிருஷ்ணரின் சக்தி என்பதால், அனைத்தும் கிருஷ்ணரே. இது பகவத் கீதையில் (7.4) கூறப்பட்டுள்ளது.

பூமிர் ஆபோ  வாயு:கம் மனோ புத்திர் ஏவ ச

அஹங்கார இதீயம் மேபின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்ஶீஇந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.” அனைத்தும் கிருஷ்ணரது சக்தியே என்பதால், கிருஷ்ணரால் எதிலிருந்தும் தம்மை வெளிப்படுத்தி உங்களது சேவையை ஏற்றுக்கொள்ள முடியும். இதுவே பகவத் கீதையின் தத்துவமாகும். கல்லும் கிருஷ்ணரது சக்தியே என்பதால், கிருஷ்ணரால் கல்லிலும் தம்மை வெளிப்படுத்த இயலும். மின்சக்தி இருக்கும்போது மின்சாரத்தைப் பெறவியலும். அதுபோலவே, கிருஷ்ணரது சக்தி எங்கும் இருப்பதால், நீங்கள் அவரது சக்தியை உபயோகித்துக்கொள்ளலாம். அதை எவ்வாறு உபயோகிப்பது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அவ்வளவே. கிருஷ்ணரை எல்லா இடங்களிலும் காண்பது எவ்வாறு என்பதை இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பயிற்றுவிக்கிறது.

ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன

ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி

யம் ஷ்யாமஸுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம்

கோவிந்தம் ஆதி-புருஷம்-தம்-அஹம் பஜாமி

பிரேமை என்னும் மையினால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களின் கண்களால் எப்போதும் காணப்படும் ஆதி புருஷரான கோவிந்தனை நான் வணங்குகிறேன். பக்தரின் இதயத்தில் வீற்றுள்ள அவர், தமது நித்திய சியாமசுந்தர ரூபத்தில் எப்போதும் காணப்படுகிறார்.”

கிருஷ்ணரின் மீதான பிரேமையே அவரை எங்கும் காண்பதற்கான வழிமுறையாகும். அதை நீங்கள் அறிந்து கொண்டால் போதும். நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது பொருட்டல்ல. நீங்கள் இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்துவனாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. கடவுளிடம் அன்பு செலுத்துங்கள் என்றே கூறுகிறோம்.

உங்களிடம் அன்பு செலுத்துவதற்கான தன்மை உள்ளது, ஆனால் அந்த தன்மையை தவறான இடத்தில் செலுத்துகிறீர்கள். அன்பை கடவுளிடம் செலுத்துவதற்கு பதிலாக நாய் போன்ற பிராணிகளிடம் செலுத்துகிறீர்கள், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆகவே, கடவுளிடம் அன்பு செலுத்துவது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

ஸ வை பும்ஸாம் பரோ தர்மோயதோ பக்திர் அதோக்ஷஜே

அஹைதுக்யப்ரதிஹதாயயாத்மா ஸுப்ரஸீததி

பரம புருஷரின் உன்னதமான பக்தித் தொண்டை எதனால் மனிதன் பெற முடியுமோ, அதுவே மனித வர்க்கம் முழுமைக்கும் தர்மமாகும். ஆத்மாவை பூரண திருப்திப்படுத்துவதற்கு, இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாததாகவும் தடையின்றியும் இருக்க வேண்டும்.”

கிருஷ்ணர் பிரம்மாவை மோகித்தல்

மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுதல்

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது. மாறாக, இலைக்கு நீர் ஊற்றினால் அது வழிந்தோடிவிடும். மற்ற இடங்களுக்குச் செல்லாது. அதுபோலவே, மக்கள் சேவை, சமூக சேவை போன்ற சேவைகளை செய்தும் மக்கள் மகிழ்ச்சியற்று இருக்கின்றனர். ஏன்? அத்தகைய நலச் சேவைகள் அனைத்தும் மரத்தின் இலைக்கு நீர் ஊற்றுவதைப் போன்றதாகும், இங்கே மரத்தின் வேருக்கு நீரூற்றப்படவில்லை. உங்களது நாடு, சமூகம், நண்பர்கள் என அனைவரிடமும் அன்பு செலுத்துவது எவ்வாறு என்பதை கிருஷ்ண பக்தியின் மூலம் கற்றுக்கொள்ளுங்கள். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்தாத பட்சத்தில், உங்களால் யாரிடமும் அன்பு செலுத்த இயலாது. இதுவே இரகசியமாகும்.

தற்போது நான் உங்களது நாட்டிற்கு வந்துள்ளேன். உண்மையில், உங்களது நாட்டிற்கு வருவதற்கு எனக்கு எந்த தேவையும் இல்லை. இருப்பினும், கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். ஆகவே, இந்த கிருஷ்ண பக்தியை நாம் பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோமென்றால் நாம் அவர்களை விரும்புகிறோம் என்றே அர்த்தம். நாங்கள் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. நாங்கள் விலங்குகளிடமும் அன்பு செலுத்துகிறோம். விலங்குகள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்ப வில்லை. ஆகவே, மாமிசம் உண்ணக் கூடாது என்பதை எங்கள் விதிமுறைகளில் ஒன்றாக வைத்துள்ளோம். ஏன்? காரணம் நாங்கள் விலங்கு களைக் காப்பாற்ற விரும்புகிறோம். விலங்குகளையும் நாங்கள் நேசிக்கிறோம். அவ்வளவு ஏன்? சிறிய எறும்புகளைக்கூட நேசிக்கிறோம்; ஏனெனில், நாங்கள் கிருஷ்ணரை நேசிக்கிறோம்.

கிருஷ்ணரது அன்பு பூரணமானது

இவ்வாறாக, கிருஷ்ணரை நேசிப்பதன் மூலமாக சமூகம், நாடு, இனம், குடும்பம், கணவன், மனைவி, குழந்தை, நண்பன் என அனைவரையும் நேசிக்க இயலும். இந்த அன்பு பூரணமானது, முடிவற்றது. கிருஷ்ணருக்கான அன்பு பூரணமானதாக இருப்பதால், இதனை நீங்கள் தொடர்ந்து விநியோகம் செய்தாலும் அதன் அளவு ஒருபோதும் குறையாது. அந்த அன்பு என்றும் முழுமையாகவே எஞ்சியிருக்கும்.

உங்கள் அனைவரையும் இந்தக் கோயிலில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. கிருஷ்ண பக்தி தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள். எங்களது புத்தகங்களில் அவற்றை விளக்கியுள்ளோம். ஹரே கிருஷ்ண மந்திரத்தையும் உச்சரியுங்கள். இது குழந்தைகளும் பங்கேற்கும் மிக எளிய வழிமுறையாகும். கற்றறிந்த பண்டிதரும் பங்கேற்கலாம், கல்வி பயிலாத எழுத்தறிவற்ற ஏதுமறியா குழந்தையும் இதில் பங்கேற் கலாம். இருவரும் ஒரே நன்மையைப் பெற இயலும்.

விக்ரஹத்திற்கு முன்பு கைதட்டி நடனமாடும் சிறு குழந்தையும் பலனைப் பெறுகிறது. அக்குழந்தை செய்வது வீண் என்று நினைக்காதீர்கள். குழந்தையோ பெரியவரோ யார் நெருப்பைத் தொட்டாலும் விளைவு ஒன்றே. அதுபோலவே, கோயிலுக்கு வருகை தந்து பகவானை வணங்கி, கீர்த்தனத்தில் கலந்து கொண்டு, கிருஷ்ணரைப் பற்றி சிறிது கேட்டு, பிரசாதம் ஏற்றுச் செல்பவர்கள் அனைவரும் ஆன்மீக பயனைப் பெறுகின்றனர். இதுவே நமது கிருஷ்ண பக்தி இயக்கமாகும்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment