பக்குவமான எஜமானரை மகிழ்வித்தல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

நான் யாருக்கும் சேவகன் அல்ல என்று யாராவது கூற முடியுமா? நிச்சயம் இல்லை. நமது உண்மை நிலை சேவை செய்வதே. ஆனால் கிருஷ்ணருக்கு சேவை புரிய நாம் முன்வந்தால், கிருஷ்ணரே நமக்கு சேவை புரிவதை படிப்படியாக உணர இயலும்; மேலும், கிருஷ்ணரை மகிழ்விக்கும் ஆத்மா எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்க இயலும் என்பதையும் ஸ்ரீல பிரபுபாதர் இங்கே தெளிவாக விவரிக்கின்றார்.

மூன்று வகையான துன்பங்கள்

இந்த பௌதிக உலகில், இன்பத்தைத் தேடுவதிலும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் ஒவ்வொருவரும் முயன்று கொண்டுள்ளனர். நமது கட்டுண்ட நிலையானது ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக எனப்படும் மூவகைத் துன்பங்களுக்கு காரணமாகின்றது. உடலாலும் மனதாலும் வரும் துன்பங்கள் ஆத்யாத்மிக துயரங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக நமது உடலில் ஏற்படும் சில மாறுதல்களால் வலி அல்லது காய்ச்சலைப் பெறுகிறோம். மற்றொரு வகையான ஆத்யாத்மிக துயரம் மனதினால் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, எனக்கு மிகவும் பிரியமான ஒருவரை நான் இழக்க நேரிட்டால், எனது மனம் பாதிப்படையும். அதுவும் துன்பமே. எனவே, உடலில் ஏற்படும் நோய்களும் மனதில் ஏற்படும் பாதிப்புகளும் ஆத்யாத்மிக துன்பங்களாகின்றன.

அடுத்ததாக, பிற ஜீவராசிகளால் உண்டாக்கப்படும் துயரங்கள் ஆதிபௌதிக துன்பங்களாகும். உதாரணமாக, மனிதர்கள் தினமும் ஆயிரக்கணக்கான அப்பாவி விலங்குகளை கசாப்புக் கூடங்களுக்கு அனுப்புகின்றனர். விலங்குகளால் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதில்லை, ஆயினும் அவை மாபெரும் துயரத்திற்கு உட்படுகின்றன. நாமும் இதர உயிர்வாழிகளால் ஏற்படும் துன்பங்களால் பாதிக்கப்படுகிறோம்.

இறுதியாக, தேவர்களைப் போன்ற உயர் அதிகாரிகளால் விளையும் ஆதிதைவிக துன்பங்களாகும். பஞ்சம், நிலநடுக்கம், வெள்ளம், ஆட்கொல்லி நோய்கள் போன்ற துயரங்கள் ஆதிதைவிக துன்பங்களாகும்.

எனவே, நாம் இத்தகைய துன்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றால் எப்போதுமே துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். இந்த ஜட சக்தியானது நம்மை துன்புறுத்துவதற்காகவே நிறுவப்பட்டுள்ளது; இதுவே கடவுளின் சட்டம். ஆனால் தற்காலிகமான தீர்வுகளால் இத்துன்பங்களிலிருந்து வெளியேற நாம் முயற்சிக்கின்றோம். ஒவ்வொருவரும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று முயன்று கொண்டுள்ளோம். வாழ்க்கைப் போராட்டம் முழுவதுமே துன்பத்திலிருந்து வெளியேறுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நாம் பல்வேறு வழிமுறைகளின் மூலமாக துன்பங்களிலிருந்து விடுபட முயற்சிக்கின்றோம். நவீன கால விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், நாத்திகர்கள், ஆத்திகர்கள், பலன்நோக்கு கருமிகள் என பலதரப்பட்ட நபர்களும் பல்வேறு தீர்வுகளை வழங்கி வருகின்றனர். பலரிடம் பல்வேறு கருத்துகள் உள்ளன. இருப்பினும், கிருஷ்ண உணர்வு தத்துவத்தின்படி, உங்களது உணர்வுகளை கிருஷ்ண உணர்வாக நீங்கள் மாற்றிக் கொண்டால், அனைத்து துன்பங்களிலிருந்தும் உங்களால் வெளிவர இயலும். இது மிகவும் எளிதானதாகும்.

துன்பங்களுக்கான காரணம்

நமது அனைத்து துன்பங்களுக்கும் அறியாமையே காரணம். நாம் கிருஷ்ணரின் நித்திய சேவகர்கள் என்பதை நாம் முற்றிலுமாக மறந்த நிலையில் உள்ளோம். இந்த கருத்தினை ஒரு வங்காள ஸ்லோகம் மிக அழகாக விவரிக்கின்றது.

க்ருஷ்ண-பஹிர்முக ஹையா போக-வாஞ்சா கரே

நிகட-ஸ்த மாயா தாரே ஜாபதியா தரே

நமது உண்மையான மூல கிருஷ்ண உணர்வானது பௌதிக இன்பத்திற்கான உணர்வினால் களங்கமடையும்போது, அதாவது ஜடத்தை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணத்தினால் களங்கமடையும்போது, நமது துன்பங்கள் ஆரம்பமாகின்றன. உடனடியாக நாம் அறியாமையெனும் மாயையினுள் வீழ்ந்து விடுகிறோம். பௌதிக உலகிலுள்ள ஒவ்வொருவரும், “நான் இந்த உலகில் என்னால் முடிந்தவரை அனுபவிப்பேன்,” என்று எண்ணுகின்றனர். அற்பமான எறும்பிலிருந்து மிகவுயர்ந்த உயிர்வாழியான பிரம்மதேவர் வரை அனைவருமே எஜமானராக வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். உங்களது நாட்டிலும் எண்ணற்ற அரசியல்வாதிகள் தலைவர்களாக வேண்டும் என்று முயன்று கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன? அனைவருமே எஜமானராக விரும்புகின்றனர்; இதுவே அறியாமை எனப்படுகிறது.

ஆனால் கிருஷ்ண உணர்வு இயக்கத்திலுள்ள எங்களின் மனோபாவம் இவற்றிற்கு முற்றிலும் எதிரானதாகும்; ஏனெனில், நாங்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணரின் சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனாகவே இருக்க முயன்று கொண்டுள்ளோம் (கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ தாஸானுதாஸ:). எஜமானராக வேண்டும் என்ற விருப்பத்திற்கு மாறாக, கிருஷ்ணரின் சேவகனாக வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம்.

மனதாலும் உடலாலும் வரும் துன்பங்கள், மற்ற உயிர்வாழிகளால் வரும் துன்பங்கள், இயற்கையினால் வரும் துன்பங்கள் ஆகிய மூன்று துன்பங்களில் ஏதேனும் ஒன்றினால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

சேவை செய்வதை நிறுத்த முடியாது

தற்போதைய மக்கள் இதனை அடிமை மனப்பான்மை என்று கூறுகின்றனர். “நான் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? நானும் எஜமானராக முடியும்,” என்றெல்லாம் அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், “நான் எஜமானனாக ஆவேன்” என்ற மனப்பான்மையே அனைத்து தரப்பட்ட துன்பங்களுக்கும் காரணமாகின்றது என்பதை அவர்களால் உணர முடிவதில்லை. இந்த பௌதிக உலகத்தின் எஜமானராவேன் என்ற பெயரில், புலன்களின் சேவகர்களாக மாறி வருகிறோம் என்பது நாம் உணர வேண்டிய ஒன்றாகும்.

சேவை புரிவதினை நம்மால் நிறுத்திவிட முடியாது. இந்த கூட்டத்தில் அமர்ந்துள்ள ஒவ்வொருவரும் சேவகர்களாவோம். கிருஷ்ண உணர்வை ஏற்றுள்ள இந்த இளைஞர்கள் கிருஷ்ணரின் சேவகர்களாக மாறுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால், அவர்களது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. ஆனால் மற்றவர்களோ, “நான் எதற்கு கடவுளின் சேவகனாக வேண்டும்? நான் தலைவனாக வருவேன்” என்றெல்லாம் பிதற்றுகின்றனர். உண்மையில் யாருமே தலைவனாக முடியாது. அதே சமயம் யாராவது தலைவராக முயற்சித்தால், அவர் தனது புலன்களின் சேவகனாகவே மாறுகின்றார் என்பதே உண்மை. அவர் தனது காமத்தின் சேவகனாகின்றார், பேராசையின் சேவகனாகின்றார், கோபத்தின் சேவகனாகின்றார். இவ்விதமாக பலவற்றின் சேவகனாக ஆகிக்கொண்டே இருக்கின்றார்.

சற்று உயர்ந்த நிலையில், அவர் மனிதர்களின் சேவகனாகிறார், சமுதாயத்தின் சேவகனாகிறார், தேசத்தின் சேவகனாகிறார். ஆனால் அவரது உண்மையான குறிக்கோள் தலைவனாக வேண்டும் என்பதே. இதுவே ஒரு நோயாகும். தலைமைப் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர், “நான் இந்த தேசத்திற்கு சிறந்த முறையில் சேவை புரிவேன். எனக்கு வாக்களியுங்கள்,” என்று பலவகைப்பட்ட வாக்குறுதிகளை அளிக்கின்றார். இதற்கான உண்மை காரணம், எவ்வாறேனும் இந்த தேசத்தின் தலைவனாகி விட வேண்டும் என்ற வெறித்தனமேயாகும். இதுவே அறியாமையாகும்.

 

அர்ஜுனன் கிருஷ்ணரை தனது நண்பனாக நேசித்ததால், அத்தகைய நட்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக கிருஷ்ணர் தேரோட்டியாக அர்ஜுனனுக்கு சேவை புரிந்தார்.

நமது உண்மை நிலை, சேவை செய்வதே

எனவே, அனைவரின் ஸ்வரூபமும் (உண்மை நிலையும்) சேவகர்களாக இருப்பதே என்னும் முக்கியமான தத்துவத்தினை நாம் உணர வேண்டியது அவசியமாகும். “நான் முற்றிலும் சுதந்திரமானவன், நானே தலைவன்,” என்றெல்லாம் யாரும் கூற இயலாது. யாராவது அவ்வாறு எண்ணினால், அவர் அறியாமையில் உள்ளார் என்று பொருள். இங்குள்ள யாரேனும், “நான் யாருக்கும், எதற்கும் சேவகனாக இருப்பவன் அல்ல,” என்று உறுதியாக கூற இயலுமா? நிச்சயம் இயலாது; ஏனெனில், நமது உண்மை நிலை சேவை புரிவதே.

நாம் கிருஷ்ணரின் சேவகனாகவும் இருக்கலாம், புலன்களின் சேவகனாகவும் இருக்கலாம். ஆனால் இதில் பிரச்சனை என்னவெனில், புலன்களின் சேவகனாக நாம் இருக்கும்போது, நமது துன்பங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒருகட்டத்தில் போதைப் பொருட்களால் உங்களை மகிழ்விக்க விரும்புகிறீர்கள். இத்தகைய போதைப் பொருட்களின் மயக்கத்தின் பிடியில் உள்ளபோது, “நான் யாருக்கும் சேவகன் அல்ல, நான் சுதந்திரமானவன்” என்றெல்லாம் நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் இந்த வழிமுறைகளெல்லாம் செயற்கையானவை. போதை நீங்கியவுடன் மீண்டும் சேவக நிலையினை நீங்கள் காணத் தொடங்குகிறீர்கள்.

இவ்வாறாக, சேவை செய்வதற்கு நீங்கள் விரும்பவில்லையென்றாலும் அதற்காக கட்டாயப்படுத்தப் படுகிறீர்கள். இதனை முறைப்படுத்துவது எவ்வாறு? அதுவே கிருஷ்ண உணர்வாகும். கிருஷ்ணரின் சேவகனாக நீங்கள் மாறினால், தலைவனாக வேண்டும் என்ற உங்களின் விருப்பமும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. உதாரணமாக, இங்குள்ள கிருஷ்ண, அர்ஜுனனின் படத்தினைப் பாருங்கள். (குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரும் அர்ஜுனனும் தேரில் அமர்ந்துள்ள படத்தினை ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக் காட்டுகிறார்) கிருஷ்ணர் பரம புருஷ பகவானாவார், அர்ஜுனன் சாதாரண மனிதனாவான். ஆனால் அவன் கிருஷ்ணரை தனது நண்பனாக நேசித்ததால், அத்தகைய நட்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக கிருஷ்ணர் தேரோட்டியாக அர்ஜுனனுக்கு சேவை புரிந்தார். இதைப் போலவே கிருஷ்ணருடனான நமது உறவினை நாம் புதுப்பித்தால், தலைவனாக வேண்டும் என்னும் நமது விருப்பத்தினையும் உடனடியாக பூர்த்தி செய்துகொள்ள முடியும். கிருஷ்ணருக்கு சேவை செய்ய நீங்கள் ஒப்புக் கொண்டால், கிருஷ்ணரே உங்களுக்கு சேவை புரிவதை நீங்கள் படிப்படியாக காண இயலும்.

எனவே, பௌதிக உலகின் சேவையிலிருந்தும் புலன்களின் சேவையிலிருந்தும் நீங்கள் விடுபட விரும்பினால், உடனடியாக உங்களின் சேவையை கிருஷ்ணரை நோக்கி திருப்ப வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

புலன்களின் சேவை திருப்தியளிக்காது

புலன்களின் சேவை குறித்த அழகிய விளக்கத்தினை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது பக்தி ரஸாம்ருத சிந்துவில் விவரிக்கின்றார்: காமாதீனாம் கதி ந கதிதா பாலிதா துர்நிதேஷா. இங்கே ஒரு பக்தன் தான் நீண்ட காலமாக புலன்களின் சேவையில் ஈடுபாடு கொண்டவனாக இருந்து விட்டேன் என்று கிருஷ்ணரிடம் கூறுகின்றார் (காமாதீனாம் கதி ந கதிதா). “காமத்தின் கட்டுப்பாட்டில் நான் செய்யக்கூடாததை எல்லாம் செய்தேன்,” என்று அவர் கூறுகின்றார். ஒருவர் அடிமையாக வாழும்பட்சத்தில், தனக்கு விருப்பம் இல்லாவிடினும் சில செயல்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றார். இங்கே, காமத்தினால் மயங்கி தான் பாவகரமான செயல்களைச் செய்ததாக பக்தர் ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், பக்தர்களிடம் சிலர் கூறலாம்: “சரி, இதுவரை நீங்கள் புலன்களுக்கு சேவை புரிந்து வந்துள்ளீர்கள். ஆனால் இப்போது அந்த சேவை முடிந்துவிட்டது. எல்லாம் சரியாகி விட்டது,” என்று கூறலாம். ஆனால் இதிலுள்ள பிரச்சனை என்னவெனில்: தேஷாம் ஜாதா மயி ந கருணா ந த்ரபா நோபஷாந்தி:. பக்தர் கூறுகிறார்: “நான் எனது புலன்களுக்கு நிறையவே சேவை செய்துள்ளேன். இருப்பினும் என்னால் அவற்றை திருப்திப்படுத்த இயலவில்லை. இதுவே எனது பிரச்சனை. எனது புலன்களும் திருப்தியடையவில்லை, நானும் திருப்தியடையவில்லை. மேலும் எனது புலன்கள் எனக்கு எந்தவொரு நிவாரணத்தையும் தருவதில்லை, அவற்றின் சேவையிலிருந்து எனக்கு ஓய்வும் தருவதில்லை. இதுவே எனது நிலையாகும். எனது புலன்களுக்கு சேவை செய்வதின் மூலமாக நான் திருப்தியடைவேன் என்று நீண்ட காலமாக நம்பியிருந்தேன். ஆனால் அஃது ஒருபோதும் நடைபெறவில்லை. இவைகள் என்னை மேன்மேலும் வசியப்படுத்திக் கொண்டே உள்ளன.”

எனது சீடர்களில் ஒருவர் என்னிடம் கூறிய ஒரு தகவலை இங்கே நான் உங்களுக்குக் கூறுகின்றேன்: வயதான காலத்தில் அவனது தாய் வேறு திருமணம் செய்து கொள்வதற்கு சென்று விட்டாள். மேலும், அவனது பாட்டியும்கூட வேறு திருமணம் செய்து கொண்டதாக அவன் கேள்விப்பட்டுள்ளான். சற்று யோசித்துப் பாருங்கள்: ஐம்பது வயதானாலும் சரி, எழுபத்தைந்து வயதானாலும் சரி, உங்களது புலன்கள் உங்களை அடக்கி ஆள்கின்றன, “திருமணம் செய்து கொள்”, என்று கட்டளையிடுகின்றன. புலன்கள் எவ்வளவு வலிமையாக உள்ளன என்பதை உணர முயலுங்கள். புலன்களின் சேவகர்களாக உள்ளவர்கள் இளவயதினர் மட்டுமல்ல. எழுபது, எண்பது என முதுமைப் பருவத்தை அடைந்தபோதிலும், அதற்குமேலும் மரணகாலம்வரையில்கூட, அவர்கள் புலன் களின் சேவகர்களாகவே உள்ளனர். புலன்கள் ஒருபோதும் திருப்தியடைவதே இல்லை.

இதுவே பௌதிக உலகின் நிலையாகும். நாம் நமது புலன்களின் சேவகர்களாக உள்ளோம், ஆயினும் புலன்களின் சேவையினால் நாமும் திருப்தியடைவதில்லை, நமது புலன்களும் திருப்தியடைவதில்லை. நமக்காக அவை கருணை கொள்வதுமில்லை. அவை நம்மை நிலைதடுமாறவே செய்து கொண்டுள்ளன.

கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்

ஆகவே, கிருஷ்ணரின் சேவகனாகுதல் என்பதே சிறந்த வழிமுறையாகும். பகவத் கீதையில் (18.66) கிருஷ்ணர் கூறுகிறார்:

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய  மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ   மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

84 இலட்சம் வகையான உயிரினங்களில் எண்ணிலடங்கா பிறவிகளில் நீங்கள் புலன்களுக்கு சேவை செய்துள்ளீர்கள். பறவைகளும் புலன்களுக்கு சேவகம் புரிகின்றன, விலங்குகளும் புலன்களுக்கு சேவகம் புரிகின்றன. அதைப் போன்றே மனிதர்கள், தேவர்கள் என பௌதிக உலகிலுள்ள அனைவருமே புலன்களை திருப்திபடுத்தவே ஓடிக் கொண்டுள்ளனர். ஆகவே, கிருஷ்ணர் கூறுகிறார்: “என்னிடம் சரணடைவாயாக, எனக்கு சேவை செய்ய ஒப்புக் கொள். உன்னைக் காக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். நீ உனது புலன்களின் வசியத்திலிருந்து விடுதலை பெற்றுவிடலாம்.”

புலன்களின் வசியத்தினால்தான் நாம் பிறவிதோறும் பாவகரமான செயல்களைச் செய்து, பலதரப்பட்ட உடல்களை பெற்று வருகிறோம். நீங்கள் அனைவருமே சமமானவர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரும் அவரவரது செயல்களுக்கேற்ப குறிப்பிட்ட உடலினைப் பெற்றுள்ளீர். இத்தகு பலதரப்பட்ட உடல்கள் பல்வேறு நிலையிலான புலனிச்சைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அத்தகைய புலனின்பமானது பன்றியின் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றது, ஆனால் அதன் புலனின்பம் மிகவும் கீழ்த்தரமானதாகும். சகோதரி, மகள், தாய் என எந்த பேதமுமின்றி உறவு கொள்வதற்கு பன்றி தயங்குவதில்லை, அந்த அளவிற்கு அது புலனின்பத்தில் மூழ்கியுள்ளது. மனித சமூகத்தில்கூட, சிலர் தங்களது தாய் அல்லது சகோதரியுடனும் உறவு கொள்வதற்கு தயங்குவதில்லை. புலன்களோ அந்த அளவிற்கு வலிமையாக உள்ளன.

புலன்களின் வசப்பட்டு அவற்றின் சேவையில் ஈடுபடுவதால் நாம் துன்பங்களையே அடைகின்றோம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். துன்பங்களிலிருந்து வெளியேற நாம் விரும்பினாலும், புலன்களின் வசம் உள்ளவரை, நாம் மூவகைத் துன்பங்களால் துயரமடைந்து கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் கிருஷ்ணரின் சேவையில் நாம் ஆர்வம் கொண்டோமேயானால், இத்தகைய புலனின்பத்தின் பின்னால் செல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டோம். மதன-மோஹனர், காமதேவனையும் வெல்பவர் என்பது கிருஷ்ணரின் திருப்பெயர்களில் ஒன்றாகும். உங்களது அன்பினை கிருஷ்ணரின் மீது திருப்ப முடியுமெனில், அனைத்து துயரங்களும் உடனடியாக மறைந்துவிடும்.

கிருஷ்ணரை நேசியுங்கள்

“அனைத்தையும் அடக்கி ஆள்பவன் நானே” என்னும் எஜமான மனப்பான்மையையும் அதற்கான பெருமுயற்சியினையும் முதலில் கைவிட வேண்டும். ஸ்வரூப நிலையில் நாம் அனைவரும் சேவகர்களே. தற்போது நாம் புலன்களுக்கு செய்து கொண்டிருக்கும் சேவையினை கிருஷ்ணருக்கு மாற்ற வேண்டும். கிருஷ்ணரிடம் உள்ள உங்களது சேவையின் உறவிற்கு ஏற்ப கிருஷ்ணர் படிப்படியாக தன்னை வெளிப்படுத்தத் தொடங்குவார். அதன் பிறகு, கிருஷ்ணருக்கும் உங்களுக்கும் உள்ள பரிமாற்றமானது மிகவும் அருமையாக அமையும். கிருஷ்ணரை நீங்கள் நண்பனாக, தலைவனாக, காதலனாக என பல வழிகளில் நேசிக்கலாம்.

எனவே, முதலில் கிருஷ்ணரை நேசிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். இதன் மூலமாக அடையப்படும் மகிழ்ச்சியினை நீங்களே நேரில் காண்பீர்கள். இதைத் தவிர மகிழ்வடைவதற்கு வேறு வழிமுறை எதுவும் இல்லை. நிறைய பொருளை சம்பாதிப்பதால் மகிழ்ச்சியடைய முடியும் என்பதெல்லாம் ஒருபோதும் இல்லை. கல்கத்தாவில் எனக்கு தெரிந்த தனவான் ஒருவர் (சுமார் 70, 80 வருடங்களுக்கு முன்பு) மாதம் ஆறாயிரம் டாலர் சம்பாதித்தவர். இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டார். ஏன்? அந்த பணம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவர் வேறொன்றில் மகிழ்ச்சியை தேடிக் கொண்டிருந்தார்.

எனவே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள் என்னவெனில், வாழ்வின் மேன்மையான நல்வாய்ப்பாகிய கிருஷ்ண உணர்வினை புரிந்துகொள்வதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என்பதே. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக நீங்கள் கிருஷ்ணரின் மீதான திவ்யமான அன்பினை படிப்படியாக வளர்த்து விடுவீர்கள். அவரை நீங்கள் நேசிக்கத் தொடங்கியவுடன், உங்களது அனைத்து விதமான துன்பங்களும் அழிக்கப்பட்டு பரம சந்தோஷத்தையும் நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். மிக்க நன்றி.

கிருஷ்ணரிடம் உள்ள உங்களது சேவையின் உறவிற்கு ஏற்ப கிருஷ்ணர் படிப்படியாக தன்னை வெளிப்படுத்தத் தொடங்குவார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives