எனக்கு என் கண்கள் வேண்டும்!

Must read

மாயாபூர் இஸ்கான் கோவிலில் வீற்றிருக்கும் நரசிம்மர் பல்வேறு பக்தர்களுடன் பற்பல விதங்களில் லீலைகள் புரிந்து வருகிறார். எண்ணற்ற அத்தகு லீலைகளை மாயாபூர் கோவிலில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து ஓர் அற்புத லீலையினை பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு அர்ப்பணிக்கின்றோம்.

வழங்கியவர்: திருமதி. ஆத்மரதி தாஸி

1996ஆம் வருடம் ஒரு மிதமான காலை நேரத்தில், சுமார் 11.00 மணியளவில், அற்புதமான பகவான் நரசிம்மதேவரின் அருளை வேண்டி, அவரது அன்பிற்குப் பாத்திரமான பிரகலாத மஹாராஜரை துதித்துக் கொண்டிருந்தேன். அவர் பகவானுக்கு மிக அருகில் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருக்கிறார். அவருடைய சிறிய உடல் புத்தம்புது மலர்களாலும் அழகிய ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றது. வசீகரம் மிக்க பிரகலாதருக்கு நமஸ்காரங்களை தெரிவித்தபோது, “எனதருமை பிரகலாதரே! பகவான் நரசிம்மதேவரிடம் இருந்து எல்லாவித ஆசீர்வாதங்களையும் பெறுவதில் நீர் திறமைசாலி. உங்களின் அசுரத் தந்தையான ஹிரண்யகசிபு விற்கும் பகவானின் மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தந்தீர்கள். தயவுகூர்ந்து இந்த ஏழை ஆத்மாவின் பக்திப் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் அழித்து என்னை ஆசீர்வதிக்கும்படி உங்கள் பகவானிடம் கூறுங்கள், உண்மையான ஆனந்தத்திற்கு வழி காண்பியுங்கள்,” என நான் வேண்டிக் கொண்டேன்.

இவ்வாறு பிரகலாதரிடம் துதித்த பின்னர், நான் நரசிம்மரின் அழகினையும் கருணையையும் தியானித்துக் கொண்டிருந்தேன். அப்போது, மிகவும் இனிமையான குரல் ஒன்றினைக் கேட்டேன்: “எனக்கு என்னுடைய கண்கள் திரும்ப வேண்டும்!” நானோ அக்குரலை உதாசீனப்படுத்திவிட்டு, என் வேண்டுதலில் மனதை நிலைநிறுத்தினேன். ஆனால் அக்குரல் இரண்டாவது முறையும் ஒலித்தது, எனக்கு என்னுடைய கண்கள் திரும்ப வேண்டும்!” அந்த தெளிவான செய்தியை மீண்டும் அசட்டை செய்ய முயற்சித்தபோது, என் இதயத்தில் எரிவது போன்ற துன்பகரமான உணர்ச்சியை உணர முடிந்தது. நான் வாயடைத்துப் போனேன். என்ன செய்வது என யோசித்த போது, அந்த குரல், “பூஜாரியிடம் செல்!” என்றது. “சரி. எனக்கு அதனால் ஒன்றும் நஷ்டமில்லை; நான் சித்த சுவாதீனம் இல்லா தவள் என்று பூஜாரி கருதினால், அதிகபட்சம் எனது அகங்கார மாவது குறையும்” என்று நினைத்து பூஜாரியை அணுக முடிவு செய்தேன்.

பகவானின் கட்டளையை நிறை வேற்ற எனக்கு சக்தி தருமாறு அவரிடமே வேண்டிக் கொண்டு, கிட்டத்தட்ட மூச்சிரைக்க பூஜாரியின் அறையை நோக்கி முன்னேறி னேன். அங்கு திரு. ஜனநிவாஸ பிரபு ஸ்ரீமத் பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்த அறையின் சூழ்நிலை மிதமிஞ்சிய அமைதியுடன் வேறோர் உலகத்தைப் போன்று இருந்தது. அவர் என்னைக் கவனிப்பதற்காகச் சில நிமிடங்கள் காத்திருந்தேன். பிறகு, நடந்த விஷயத்தைக் கூறியபோது, அவர் நரசிம்மதேவரின் மற்றொரு பூஜாரியும் அவரது சகோதரருமான திரு. பங்கஜாங்கிரி பிரபுவைப் பார்க்கும்படி கூறினார். ஆனால் ஏதோ காரணத்தினால், செல்ல வேண்டாம் என்று கருதினேன்.

மறுநாள்: நரசிம்மதேவரின் அற்புதமான உருவத்தை நான் மீண்டும் நெருங்கியபோது, என் மனம் சந்தேகத்துடன் வட்டமிட்டது: “அக்குரல் வெறுமனே என் மனதாக இருந்தால் என்ன செய்வது? என்னுடைய கண் பார்வை கடந்த ஆறு வாரமாக மோசமாகவும், அதிக வலியுடனும் இருந்ததால், அதை குணப்படுத்த என் மனதில் வேண்டியிருக்கலாம் அல்லவா?” இவ்வாறு சிந்தனை செய்து கொண்டு, சரியான பதிலுக்காக வேண்டிக் கொண்டேன். அக்குரல் மீண்டும் என்னிடம் பேசியது. இம்முறை ஆணித்தரமான குரலில் பேசியது: “நான் என்னுடைய கண்களைத் திரும்பப் பெறும்போது நீ உன்னுடைய கண்களைப் பெறுவாய்.” நரசிம்மரின் உருவம் எப்போதும் போல மென்மையான ஒளியை வெளிப்படுத்தியது. என் இதயம் அமைதியையும் சாந்தத்தையும் உணர்ந்தது. வழக்கத்திற்கு மாறாக, அபரிமிதமான நம்பிக்கையுடன் என் தலை விண்ணைத் தொடுவது போன்று உணர்ந்தேன்.

மறுநாள் காலை, சரியாக 2.20 மணிக்கு புத்துணர்ச்சியுடன் விழித் தெழுந்தேன். இஃது எனது வழக்கத்திற்கு முற்றிலும் மாறானது; ஒரு மெல்லிய குரல் எழுமாறு தூண்டியது; குளித்து மங்கள ஆரத்தியில் கலந்து கொள்ளத் தூண்டியது. நானும் அவ்வாறே செய்தேன்.

மங்கள ஆரத்தி முடிவடைந்தவுடன், அதே குரல் என்னை நரசிம்மதேவரின் இடத்திலிருந்து பூஜாரியின் அறைக்குச் செல்லுமாறு கூறியது. தர்மசங்கடமான அந்த சூழ்நிலையில் எனது கண்களில் கண்ணீர் பெருகியது; எனது மனதை அவரிடம் வெளிப்படுத்துவதற்குத் தயக்கத் துடன் இருந்தேன்.

பூஜாரி பகவானின் அபிஷேகத் திற்கான பொருள்களை தயாரிக்கும் போது, அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய கதையை மிகவும் சிரத்தையுடன் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, எதுவும் கூறாமல், சிரித்துக்கொண்டே, பிரசாத இனிப்பு வகைகளை பகவான் நரசிம்மதேவரின் தட்டிலிருந்து எனக்கு எடுத்துக் கொடுத்தார்.

மறுநாள் காலை, கோவிலிலிருந்து திரும்பிய எனது மகள், “அம்மா, நரசிம்மரின் கண்களை மாற்றி விட்டார்கள். இப்போது அவர் அழகான சிவப்பு நிற கண்களுடன் உள்ளார்,” என சப்தமாகக் கூறினாள். அதன் பின்னர், தனது இனிய ஆழமான குரலில் பகவான் எனக்களித்த வாக்குறுதியின்படி, எனது கண் பார்வை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மூன்றே நாள்களில் குணமடைந்தது. ஸ்ரீ மாயாபூரில் உள்ள பகவான் நரசிம்மதேவருக்கு எல்லா புகழும் உண்டாகட்டும்!

(குறிப்பு: நரசிம்மதேவருக்கு முதலில் சிகப்பு நிற கண்கள்தான் இருந்தன. ஒருநாள் மாயாபூருக்கு வந்த ஒரு பக்தர், பகவானின் கண்களுக்காக மதிப்புமிக்க இரண்டு மஞ்சள் நிற கற்களை அளித்தார்; பூஜாரிகளும் விருப்பமின்றி விக்ரஹத்தின் இரண்டு கண்களையும் மாற்றினர். ஆனால் பகவானோ தனது பழைய சிவப்பு நிற கண்களையே விரும்புகிறார் என்பதை இந்த லீலையின் மூலம் தெரியப்படுத்தினார்.)

மாயாபூரில் எழுந்தருளியுள்ள பகவான் நரசிம்மர்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives