இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம் விளக்குகிறார்.

மேடம் சியாட்: இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தன் என்றால், அவருடைய உடல் ஆன்மீகமானது என்று நீங்கள் கூறினீர். இருப்பினும், அவர் பூமியில் மனித வாழ்வை ஏற்க விரும்பியதால், நாங்கள் அவரது உடலை பௌதிகமாகவே நினைக்கின்றோம்.

ஸ்ரீல பிரபுபாதர்:  இயேசு கிறிஸ்துவின் உடல் பௌதிகமானது என்று நீங்களாகவே ஏன் கற்பனை செய்கின்றீர்?

மேடம் சியாட்: இயேசு துன்பத்திற்கும் மரணத்திற்கும் உட்பட்டார் என்று எங்களது பிரார்த்தனைகளில் கூறப்படுகின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் அது பெயரளவிலான மரணம். அவர் இறந்துவிட்டதாக நீங்கள் உங்களது மனதில் கற்பனை செய்கின்றீர்கள். அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டார்.

மேடம் சியாட்: ஆனால் அவர் இறந்துவிட்டதாகவே புதிய ஏற்பாடு கூறுகின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: இருக்கலாம்.

மேடம் சியாட்: நீங்கள் எவ்வாறு வேதங்களின் வார்த்தைகளை முழுமையாக ஏற்கின்றீர்களோ, அவ்வாறே நாங்களும் பைபிளில் கூறப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்கின்றோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: இருப்பினும், பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவின் “மரணம்,” மரணத்தைப் போன்ற ஒரு வெளித்தோற்றமே. ஜன்ம கர்ம மே திவ்யம், பகவத் கீதையில், கிருஷ்ணர் தமது தோற்றம், செயல்கள், மறைவு முதலியவை தெய்வீகமானவை என்கிறார். அவரது தூய பக்தர்களும் அவரைப் போன்று தெய்வீகமானவர்களே. உதாரணமாக, இயேசுவின் “பிறப்பு” மேரியின் கருவிலிருந்து உண்டாகியது. இஃது ஒரு சாதாரணமான ஜட பிறப்பைப் போன்று தோன்றலாம். ஆனால் அது சாதாரண பிறப்பல்ல. பிறப்பது போன்ற ஒரு வெளித்தோற்றமே. உண்மையில் அது தெய்வீகமானது.

மேடம் சியாட்: இல்லை. கிறிஸ்துவின் மரணம் உண்மையானது என்பதை உணர வேண்டியது எங்களுக்கு மிகவும் முக்கியம். இயேசு உண்மையிலேயே இறந்தார் என்பது எங்களுடைய தத்துவத்திற்கும் நம்பிக்கைக்கும் மையக் கருத்தாக உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. ஒரு சாதாரண மனிதன்கூட இறப்பதில்லை என்று வேத இலக்கியம் விவரிக்கின்றது. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே. உங்களுக்கு சமஸ்கிருதம் புரியுமா?

மேடம் சியாட்: கேட்டால் புரியாது, படித்தால் புரியும்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஹன்யதே, “ஆத்மா ஒருபோதும் கொல்லப்படுவதில்லை.” ஹன்யமானே ஷரீரே, “உடல் மடிந்தாலும் ஆத்மா மடிவதில்லை.”

போதகர் கேனீவ்ஸ்: தெய்வத் திருவாளரே, உரையாடல் என்று வரும்போது, அடுத்தவரின் நிலைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்— மற்றவர்களை மாற்றுவதற்கு நாம் முயலக் கூடாது. வேத தத்துவத்தின் மீதான உங்களது முழு நம்பிக்கைக்கு நாங்கள் எவ்வாறு மதிப்பளிக்கின்றோமோ, அவ்வாறே இயேசுவின் வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்த எங்களது கிறிஸ்துவ கொள்கைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. நான் உங்களைவிட அதிகமாக இயேசு கிறிஸ்துவை மதிக்கின்றேன். “இயேசு மரணமடையவில்லை” என்றுதான் நான் கூறுகிறேன். நீங்களோ, “இயேசு மரணமடைந்தார்” என்கின்றீர். நான் உங்களைவிட அதிகமாகவே இயேசுவிற்கு மரியாதையளிக்கிறேன். நீங்கள் இயேசுவை மரணமடைந்த நபராகக் காண விரும்புகிறீர். நானோ அவரை மரணமடைந்தவராகக் காண விரும்பவில்லை.

மேடம் சியாட்: இயேசு மரணமடைந்தார். ஆயினும், அதன் பிறகு அவர் உயிர்த்தெழுந்தார்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, மரணமடையவில்லை. சமீபத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி, இயேசு கிறிஸ்து மரணமடையவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அவர் சிலுவையில் அறையப்பட்டதும், காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேடம் சியாட்: இருக்கலாம். ஆனால் அத்தகு வரலாற்று விஷயங்களை விவாதிப்பதில் எங்களுக்கு அவ்வளவு ஆர்வமில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: இயேசு குறித்த அந்தத் தகவல்களைக் கேட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தினால் நான் வருத்தத்தில் இருந்து வந்தேன். தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

போதகர் கேனீவ்ஸ்: தெய்வத் திருவாளரே, நேற்று இரவு நீங்கள் நிகழ்த்திய சொற்பொழிவில் நானும் இருந்தேன். அதில், மனித வாழ்க்கை கடவுளை அறிவதற்கு என்று நீங்கள் கூறியதைக் கேட்டேன். கடவுளை அறிவதற்கான உங்களது வழிமுறை என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்:  இது மிகவும் எளிதானது. உங்களது உடலையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், இந்த உடலிற்கு, ஆத்மாவாகிய நீங்களே ஆதாரமாக உள்ளீர். அதுபோலவே, மாபெரும் பிரபஞ்சப் படைப்பிற்கும் ஆதாரமாக ஒருவர் இருக்க வேண்டும். அவரே கடவுள். கடவுளை இவ்வாறு அறிவதில் என்ன சிரமம்?

போதகர் கேனீவ்ஸ்: உங்களுடைய பிரார்த்தனை
களை நீங்கள் எவ்வாறு…

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பிரார்த்தனை செய்யலாம். கடவுளையே புரிந்துகொள்ளாதபோது, பிரார்த்தனையைப் பற்றி எவ்வாறு புரிந்துகொள்வோம்? பிரபஞ்சப் படைப்பிற்கு ஆதாரம் உள்ளது என்பதைப் புரிந்துகொண்டால், அப்போது நாங்கள் கூறிய ஸ்ரீமத் பாகவத பிரார்த்தனையைப் புரிந்துகொள்ள முடியும். ஜன்மாத்யஸ்ய யதோ ந்வயாத் இதரதஸ் சார்தேஷ்வபிஜ்ஞ: ஸ்வராட், “எல்லா படைப்பிற்கும் ஆதிமூலமாகிய பரம புருஷ பகவான் வாஸுதேவரை வணங்குகிறேன்.” இதுவே அடிப்படை.

இவ்வாறாக, யாரால் அனைத்தும் படைக்கப்பட்டதோ, யாரால் அனைத்தும் செயல்
படுகின்றதோ மற்றும் அழிவிற்கு பின்னர் யாரிடம் அனைத்தும் திரும்பிச் செல்கின்றதோ அந்த பரம உண்மையாகிய பரம புருஷருக்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன் என்பதே வழிமுறை.

ஆதி மூலத்தின் இயல்புகளையும் செயல்களையும் நீங்கள் மேலும் கற்க விரும்பும்போது, வேத இலக்கியம் உங்களுக்கு அதிகத் தகவலை வழங்குகிறது. அபிஜ்ஞ,  அவரே அனைத்தையும் அறிந்தவர். இந்த உடலினுள் இருக்கும் ஆத்மா என்ற முறையில், நான் இந்த உடலை அறிந்திருந்தாலும், இந்த உடல் எவ்வாறு இயங்குகின்றது என்பதை நான் அறிவதில்லை. நான் உண்ணும் உணவுப் பொருட்கள் எவ்வாறு பலவாறு பிரிக்கப்பட்டு இதயத்திற்கும் பிற உறுப்புகளுக்கும் செல்கின்றது என்பதை நான் அறியேன். பெயரளவு விஞ்ஞானிகள் சற்றே தெரிந்து வைத்திருந்தாலும் முழுமையாக அறிய முடிவதில்லை. எனது உடலினுள் நிகழ்வதே எனக்குத் தெரிவதில்லை. உடலில் எத்தனை ரோமங்கள் இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் கடவுளோ பிரபஞ்சத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் அறிந்துள்ளார்.

எனவே, நாம் நம்மை ஒருபோதும் கடவுளுடன் ஒப்பிடவே முடியாது. அஃது இயலாத ஒன்று. அவ்வாறு இருப்பினும், நமது அறிவு மற்றவர்களிடமிருந்து பெறப்படும் காரணத்தினால், “கடவுள் யாரிடமிருந்து அறிவைப் பெறுகிறார்?” என்ற கேள்வி நம்மில் இயல்பாக எழும். அதற்கு வேத இலக்கியம் மேலும் கூறுகின்றது, ஸ்வராட், “கடவுள் எவரிடமிருந்தும் அறிவைப் பெறவில்லை—அவர் தன்னிச்சையாகவே பூரண அறிவுடன் திகழ்கிறார்.”

மேலும், பிரபஞ்சத்தில் முதன்முதலாகப் படைக்கப்பட்ட பிரம்மாவிற்கு அந்த கடவுள் ஞானத்தை வழங்கினார். அந்த ஞானமே வேத அறிவு என்று அறியப்படுகின்றது. வேறு விதமாகக் கூறினால், வேத அறிவு நேரடியாக கடவுளிடமிருந்து வருகின்றது. இது பிரம்மாவின் மூலமாக விநியோகிக்கப்படுகின்றது. கடவுள் ஸர்வ வல்லமை மிக்கவர் என்பதால், கற்றறிந்த பண்டிதர்களும்கூட, அவரைப் புரிந்துகொள்வதில் குழப்பம் அடைகின்றனர். இந்த பௌதிக உலகமானது தற்காலிகமான மாயையே என்றாலும்கூட, கடவுளின் சக்தி என்பதால் காண்பதற்கு உண்மையாகவே தோன்றுகின்றது.

மேடம் சியாட்:  தெய்வத் திருவாளரே, வேத இலக்கியத்தில் கடவுள் என்பவர் அந்தர்யாமி, “இதயத்தினுள் வீற்றுள்ள சாட்சி,” என்று படித்தது நினைவிற்கு வருகின்றது. இதை வைத்து பார்க்கும்போது, கடவுளை சாஸ்திரங்களின் மூலமாக அணுகுவதோடு அவரை நேரடியாகவும் அறிய முடியும் எனத் தோன்றுகிறது. சாத்தியமா?

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. கடவுளை அவ்வாறு நேரடியாக அறிவதே பக்தி யோகப் பயிற்சியாகும்.

நம்மை கடவுளிடம் அர்ப்பணித்தால் போதும், அனைத்தும் முழுமையாகி விடும். எனவேதான், பகவத் கீதையில் கிருஷ்ணர், ப்ரபத்தி எனப்படும் சரணாகதியை விளக்குகின்றார். பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் பரபத்யதே, “பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான்.” மேலும், அடுத்த வரியில் கிருஷ்ணர் கூறுகின்றார், வாஸுதேவம் ஸர்வம் இதி மஹாத்மா ஸுதுர்லப, “அனைத்தும் வாஸுதேவரே (கிருஷ்ணரே) என்பதை உணர்ந்தவன் முழு அறிவுடையவன். இத்தகைய மஹாத்மாவை, உயர் ஆத்மாவைக் காண்பது மிகமிக அரிது.”

உடல் மடிந்தாலும் ஆத்மா மடிவதில்லை

பிரம்மா வேத ஞானத்தை கிருஷ்ணரிடமிருந்து பெறுதல்