மகிழ்ச்சியின் தரத்தை உயர்த்துதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

 ஸ்ரீ-ப்ரஹ்லாத உவாச

ஸுகம் ஐந்த்ரியகம் தைத்யா

 தேஹ-யோகேன தேஹினாம்

ஸர்வத்ர லப்யதே தைவாத்

 யதா து:கம் அயத்நத:

பிரகலாத மஹாராஜர் கூறினார், “அசுர குலத்தில் பிறந்த எனதருமை நண்பர்களே, ஒருவன் தனது பூர்வீக கர்ம வினையின்படி எல்லாவிதமான உயிரினங்களிலும் புலனின்பத்தைப் பெறுகின்றான். எவ்வாறு எந்தவிதமான முயற்சி செய்யாமல் துன்பம் தானாக வருகின்றதோ, அதைப் போலவே இன்பமும் வரும்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.6.3)

அறியாமை

நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது காளையைப் போன்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஓட்டுநர் கயிற்றை இழுப்பதற்கு தகுந்தாற்போல அந்த விலங்கு செல்லும். அதற்கு சுதந்திரம் என்பதே கிடையாது. நாம் சுதந்திரமானவர்கள் என்று கருதி, “கடவுள் இல்லை. கட்டுப்படுத்துபவரும் இல்லை. நாம் விரும்பியதைச் செய்யலாம்” என்று கூறுவதெல்லாம் அறியாமையே. அறியாமையினால் நாம் பல பாவ காரியங்களைச் செய்கின்றோம்.

ஒருவன் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அறியாமை வழியல்ல என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து நாம் அறிகிறோம். உதாரணமாக, ஒரு குழந்தை நெருப்பைத் தொடும்போது, குழந்தை அறியாமையில் தொடுகிறதே என்று நினைத்து, நெருப்பு குழந்தையைச் சுடாமல் விடுவதில்லை. குழந்தையாக இருந்தாலும் வயதானவராக இருந்தாலும், நெருப்பைத் தொட்டால் கண்டிப்பாகச் சுடும். எந்தவித மன்னிப்பும் கிடையாது. அதைப் போலவே, தெரிந்தோ தெரியாமலோ கடவுளின் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

தோன்றி மறையும் இன்பமும் துன்பமும்

மாத்ராஸ்பர்ஷாஸ் து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:தா:, நமது இன்பமும் துன்பமும் புலன்களினாலேயே வருகின்றன. உதாரணமாக, தொடுவுணர்வை எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய தோலினால் பல பொருட்களைத் தொடுகின்றோம். சூழ்நிலையைப் பொறுத்து, தொடுதல் சில நேரங்களில் வலியையும், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. குளிர்ந்த நீர் கோடைக்காலத்தில் இன்பமாகவும் குளிர்காலத்தில் துன்பமாகவும் உள்ளது. பருவநிலை மாற்றத்தினால் ஒரே நீர் சுகமாகவும் துன்பமாகவும் உள்ளது. இந்த ஜடவுலகில் ஜடவுடலுடன் இருக்கும் வரை, இன்பமும் துன்பமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை உங்களால் நிறுத்த முடியாது.

ஆகமாபாயினோநித்யாஸ், இன்பமும் துன்பமும் தற்காலிகமாகத் தோன்றி மறையக்கூடியவை என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆகையால், துன்பத்தினால் நாம் பாதிக்கப்படக் கூடாது. அதே சமயம் நமது விலைமதிப்பற்ற நேரத்தை பெயரளவிலான இன்பத்தைத் தேடுவதில் வீணடிக்கக் கூடாது. இருப்பினும், அறியாமையின் காரணமாக ஒவ்வொருவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தைப் பெறுவதற்காக கடினமாக உழைக்கின்றனர். இதுதான் பெளதிக உலகமாகும்.

சில சமயம் தெருவில் நாய் சுற்றித் திரிவதைப் பார்க்கிறோம். அது சிறிதளவு இன்பத்தை அனுபவிக்கிறது. அதுபோலவே நாகரிகமடைந்த மனிதனும் காரில் சுற்றித் திரிகின்றான். இங்கே நாய்களுக்கான போட்டியே நிகழ்கிறது. நாமோ காரில் செல்வதால் நம்மை நாகரிகமானவர்கள் என்று நினைக்கிறோம். “வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.” என்று பிரகலாத மஹாராஜர் கூறுகிறார். நான்கு கால்களாக இருந்தாலும் சரி, நான்கு சக்கரங்களாக இருந்தாலும் சரி, நமது பொன்னான நேரத்தை நாய் பந்தயத்தில் வீணடிக்கக் கூடாது.

நாய் நான்கு கால்களில் சுற்றித் திரிகிறது, மனிதன் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிகிறான், அஃது அவனை நாகரிக மனிதனாக மாற்றி விடுவதில்லை.

பிரகலாதரின் அறிவுரை

பகவானுடைய விருப்பத்தின்படி, பிரகலாத மஹாராஜர் அசுரர்களை விடுவிப்பதற்காக அசுர குலத்தில் தோன்றினார். ஒரு குறிப்பிட்ட குலம் அல்லது சமூகத்தை விடுவிப்பதற்காக, சில நேரங்களில் தூய பக்தர் அக்குலத்தில் தோன்றுகிறார். இங்கு பிரகலாத மஹாராஜரின் நண்பர்கள் அசுர குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உயர் குடும்பத்தில் பிறக்கவில்லை.

பிரகலாத மஹாராஜர் கூறுகிறார், தேஹ யோகேன தேஹினம். தேஹ என்றால் “உடல்” என்றும், தேஹி என்றால், “உடலை உடையவன்” என்றும் பொருள். இந்த நவீன உலகில், நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் உடலுக்கும் ஆத்மாவிற்கும் இடையிலான வேறுபாட்டினை அறிவதில்லை. 99.9 விழுக்காடு மக்கள் உடலே அனைத்தும் என்று நினைக்கின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல.

ஆத்மா பல்வேறு விதமான உடல்களை ஏற்கிறான். அவன் தான் ஏற்றுள்ள உடலின் தன்மையைப் பொறுத்து இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றான். உதாரணமாக, பன்றிக்கென்று ஓர் உடலும் மனிதனுக்கென்று ஓர் உடலும் உள்ளன. பன்றி உடலிலுள்ள ஆத்மாவின் இன்பமும், மனித உடலிலுள்ள ஆத்மாவின் இன்பமும் வேறுபட்டதாகும். ஒரு மனிதனுக்கு சுவையான அல்வாவை அளிக்கும்போது, அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஒரு பன்றிக்கு மலத்தை அளிக்கும்போது அது மகிழ்ச்சி அடைகிறது, அது மலத்தை எதிர்ப்பதில்லை, விரும்புகிறது, “ஆஹா, மலம் சுவையாக உள்ளது!” ஆனால், மனிதனோ மலத்தின் அருகில் நிற்பதைக்கூட விரும்புவதில்லை.

நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட சுவையுடன் பிறந்திருக்கிறோம். உதாரணமாக, ஒருவன் இங்கு வந்து பாகவத தர்மத்தை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சியை உணர்கிறான். ஆனால் மற்றொருவனோ விலைமாதர்களிடம் செல்வதிலும் மது அருந்துவதிலும் மகிழ்ச்சியை உணர்கிறான். காரணம் குண
ஸங்கோஸ்ய, ஜட இயற்கை குணங்களின் ஒரு குறிப்பிட்ட சேர்க்கையின் தொடர்பே இத்தகைய வேறுபாட்டிற்கான காரணமாகும்.

மாயை

ஒருவன் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், பக்தர்களின் சங்கத்தினால் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதே பாகவத தர்மத்தின் சிறப்பாகும். பாகவத தர்மத்தைக் கடைபிடிப்பவர்களின் நோக்கம் பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதே; பெளதிகவாதிகளின் நோக்கம் புலனின்பம் மட்டுமே. இதுவே முக்கியமான வேறுபாடாகும். மரணத்திற்குப் பின் நித்தியமான ஆனந்தம் தரக்கூடிய வாழ்க்கை உண்டு என்பது பெளதிகவாதிகளுக்குத் தெரியாது.

உண்மையில், இந்த பெளதிக உலகில் இன்பமே கிடையாது, அனைத்தும் துன்பமே. ஆனால் அறியாமையின் காரணமாக, நாம் துன்பத்தையே இன்பமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதுவே மாயா எனப்படுகிறது. மா என்றால் “இல்லை” என்றும், யா என்றால் “அது” என்றும் பொருள். மாயையில் இருப்பவன் இல்லாததை இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றான். பன்றியின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், அது மலத்தைத் தின்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது மகிழ்ச்சி அல்ல. மாயையில் இல்லாதவன், “என்ன நாற்றமான பொருளை அது தின்கின்றதே!” என்று கூறுகிறான். உணவு என்ற முறையில், மலத்திற்கும் மதிப்பு இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். அதற்கு மதிப்பு இருக்கிறது என்பதற்காக, ஒரு மனிதன் மலத்தை உண்பதை ஏற்றுக்கொள்ள மாட்டான். இரண்டாம் உலகப் போரில், சித்ரவதை முகாமில் சில கைதிகளை மலம் உண்பதற்குக் கட்டாயப்படுத்தினர். அதுவே கர்ம வினை.

நம்முடைய கர்ம வினையை நாம் சரி செய்ய வேண்டும். பாகவத தர்மத்தைப் பின்பற்றினால், நமது கர்ம வினை மாறி விடும். கர்மாணி நிர்தஹதி கிந்து பக்திபாஜாம். (பிரம்ம சம்ஹிதை 5.54) இல்லையெனில் கர்ம வினையை மாற்றுவது சாத்தியமில்லை. ஒவ்வொருவரும் தன்னுடைய பூர்வீக கர்ம வினையின் காரணமாகவே பிறக்கின்றனர். இந்த நவீன உலகில் மக்களுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றைப் பற்றி எதுவுமே தெரியாது; அவர்கள் விலங்கினத்தைப் போலவே உள்ளனர். “ஆத்மா என்றால் என்ன?” “கர்மா என்றால் என்ன?” என்பதை அறியாமல் நாய்களையும் பூனைகளையும் போல உள்ளனர். மனித வாழ்க்கையை விலங்கைப் போல வீணாக்கக் கூடாது. பகவான் ரிஷபதேவர் கூறுகிறார், நாயம் தேஹோ தேஹபாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்புஜாம் யே, மலம் தின்னும் பன்றியைப் போல புலனின்பத்திற்காகப் பாடுபட்டு, மக்கள் தங்களுடைய நேரத்தை வீணடிக்கக் கூடாது.

பாகவத தர்மம்

ஆகையால், அரசர், தந்தை, முதியவர்,  குரு ஆகிய அனைவரும் தங்களுடைய பொறுப்பிலுள்ள நபர்கள் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு வருவதற்கான சரியான பயிற்சியை வழங்க வேண்டும். இதுவே அவர்களுடைய கடமை, பொறுப்பு. இது பாகவத தர்மத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்; மற்ற வழிகளால் அல்ல; அஷ்டாங்க யோகத்தினால் சாத்தியமல்ல. பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்து, பாகவத தர்மத்தைப் பின்பற்றினால் மட்டுமே வாழ்க்கையின் பூரணத்துவத்தை அடைய முடியும்.

பன்றிக்கும் நாய்க்கும் பூனைக்கும்கூட கிடைக்கும் இன்பமான ஆஹாரநித்ரபயமைதுனம், உண்பது, உறங்குவது, தற்காத்துக்கொள்வது, உடலுறவு ஆகியவற்றைக் கடந்து நாம் முன்னேற வேண்டும். அதுவே பாகவத தர்மம். உடல் சார்ந்த செயல்கள் பன்றிக்கும் நாய்க்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் பாகவத தர்மத்தின் தன்னுணர்வுப் பாதைக்கான செயல்கள் மனித வர்க்கத்துக்கு மட்டுமே உரித்தானவை.

குழந்தைப் பருவம் முதல்

பிரகலாத மஹாராஜர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறுகிறார்.

கௌமார ஆசரேத் ப்ராஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ

துர்லபம் மானுஷம் ஜன்ம தத் அப்யத்ருவம் அர்ததம்

“புத்திசாலி மனிதன் இந்த பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டும், இந்த மனிதப் பிறவியானது தற்காலிகமானதும் அரிதானதுமாகும். ஆனால், இது வாழ்வின் உன்னத நோக்கத்தை அடைவதற்கு வழிவகுக்கிறது.”

பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி செய்ய வேண்டும். பல குழந்தைகள் கோயிலுக்கு வருவதைப் பார்க்கிறோம். இது மிகவும் நல்லது. இவர்கள் பக்தர்களுடன் பழகுகிறார்கள், விக்ரஹத்தையும் குருவையும் வணங்குகிறார்கள். இவை வீணாவதில்லை. ஒருநாள் இவர்கள் தூய பக்தர்களாக மாறுவார்கள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒரு நாய்க்கு உடலுறவில் கிடைக்கும் இன்பம் ஒரு மனிதனுக்குக் கிடைப்பதை விடக் குறைவு என்று எண்ண வேண்டாம். நாயாக, பன்றியாக, மனிதனாக என யாராக இருந்தாலும், உடலின் இன்பம் அனைவருக்கும் ஒரே அளவாகவே இருக்கும். உணவினை இரும்பு பாத்திரத்திலிருந்து போட்டாலும் சரி, தங்க பாத்திரத்திலிருந்து போட்டாலும் சரி, அதன் சுவை மாறாது. இன்றைய மக்கள் பாத்திரத்தை மட்டுமே மாற்றி முன்னேறிய நாகரிகமடைந்த மக்களாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

ஒருவன் புலனின்பத்திற்காக மட்டும் முயலக் கூடாது. ஏனெனில், புலனின்பம் வாழ்க்கையின் எந்த நிலையிலும் முயற்சியின்றி தானாகக் கிடைக்கும் என்று பிரகலாத மஹாராஜர் வலியுறுத்துகிறார். உயர்ந்த ஏற்பாட்டினால் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புலனின்பத்தைப் பெறுகின்றனர். பன்றி மலத்தை உண்கிறது. அதைப் போலவே, ஆடு, மாடு முதலிய நான்கு கால் பிராணிகள் புல்லைத் தின்கின்றன; அவை மாமிசத்தைத் தொடுவதில்லை. நாய், பூனை, புலி முதலியவை புல்லைத் தொடுவதில்லை; மாமிசத்தையே விரும்புகின்றன. அவரவர் என்ன உண்ண வேண்டும், அவர்களது மகிழ்ச்சியின் தரம் என்ன முதலியவை அனைத்தும் உயர்ந்த சக்தியினால் முடிவு செய்யப்பட்டு விட்டது, அதை மாற்றவே முடியாது.

புத்திசாலி மனிதன் பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டும் என்று பிரகலாதர் தமது சக மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

அமெரிக்கரின் ஆச்சரியம்

பாகவத தர்மத்தைப் பின்பற்றுவதால், ஒருவர் தன் மகிழ்ச்சியின் தரத்தை மாற்ற முடியும். உதாரணமாக, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் தங்களுடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்கள் பாகவத தர்மத்தைப் பின்பற்றியதனாலேயே இது சாத்தியமானது. இல்லையென்றால் சாத்தியமில்லை. “பல இலட்சம் டாலர்கள் செலவு செய்தும், மக்களிடம் உள்ள போதைப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் இதை எவ்வாறு நிறுத்தியுள்ளனர்!” என்று அமெரிக்காவின் தலைவர்களும் ஆச்சரியமடைகின்றனர். ஆம், நமது இயக்கத்தில் இணைந்து, பாகவத தர்மமான கிருஷ்ண உணர்வைப் பின்பற்றும்போது, தகாத பாலுறவு, மாமிசம், போதைப் பழக்கம், சூதாட்டம் ஆகிய நான்கு தீய செயல்களை ஒருவன் இயல்பாகக் கைவிடுகிறான். ஐக்கிய நாடுகள் சபையில் சட்டம் இயற்றுவதால் நாயின் மனநிலையில் இருக்கும் இன்றைய நவீன மக்களுடைய மனதை மாற்ற முடியாது. பாகவத தர்மத்தைப் பின்பற்றுவதே தீர்வாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives