ஆன்மீக ஒளியில் தொழில்நுட்பத்தை காணுதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கிருஷ்ண உணர்வு இல்லாமல் தொழில்நுட்பத்தில் மட்டும் கவனம் செலுத்துவோரின் வாழ்க்கை குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல்.

 

சீடர்: மேற்கத்திய உலகம் ஆன்மீகத்தில் குருட்டுத்தனத்துடன் உள்ளது என்றும் இந்தியா தொழில்நுட்பத்தில் ஊனமுற்று உள்ளது என்றும், இவ்விரு நாடுகளும் தங்களது மூலதனங் களை ஒன்று திரட்டினால் இருவருமே பயனடைவார்கள் என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மேற்கத்திய உலகம் என்னும் குருடன், இந்தியா என்னும் ஊனமுற்றவனை தோளில் தாங்கிச் சென்றால், ஊனமுற்றவனால் குருடனுக்கு ஆன்மீக வழியை காண்பிக்க முடியும், குருடனால் ஊனமுற்றவனுக்கு பௌதிக நன்மையை தொழில்நுட்ப நன்மையை வழங்க முடியும். அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது தொழில்நுட்ப மற்றும் ஆன்மீக மூலதனங்களை ஒன்று சேர்த்தால், அஃது உலகெங்கிலும் பக்குவமான அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரும்.

இந்த அமெரிக்கர்கள் இவ்வளவு குருட்டுத்தனமாக உள்ளனரே! அவர்கள் கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை பெற்றுள்ளனர்–புத்திக்கூர்மையுள்ள பிறவி–ஆனால் இதனை அவர்கள் ஏரியில் மோட்டார் படகை ஓட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். நீங்கள் பார்த்துள்ளீர்களா? மனிதன் தனது ஒவ்வொரு நொடியையும் இறையுணர்வை திரும்பப் பெறுவதில் பயன்படுத்த வேண்டும். ஒரு நொடியைக் கூட வீணாக்கக் கூடாது. ஆனால் இவர்களோ நேரத்தை வீணாக்குவதற்கு புத்தம் புதிய வழிகளை கண்டுபிடித்து வருகிறார்கள்.

அமெரிக்கர்கள் தங்களது மிகச்சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது உண்மையே. ஆனால் அவர்களது செயல்கள் குருட்டுத்தனமானவை. நீங்கள் மிகச் சிறந்த ஓட்டுநராக இருக்கலாம், ஆனால் நீங்கள் குருடராக இருந்தால் எப்படி உங்களால் நன்றாக ஓட்ட முடியும்? நீங்கள் அழிவையே உண்டாக்குவீர்கள். எனவே, அமெரிக்கர்கள் தங்களது ஆன்மீக கண்களைத் திறக்க வேண்டியது அவசியம், அப்போது அவர்களது ஓட்டும் திறன் முறையாக உபயோகிக்கப்படும். தற்போது அவர்கள் நுண்நோக்கிகளைக் கொண்டு பார்க்க முயன்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது ஆன்மீக அடையாளத்தை உணராத குருடர்களாக இருக்கும்வரையில், அவர்களால் எதைப் பார்க்க முடியும்? அவர்களிடம் நுண்நோக்கிகள் இருக்கலாம், இந்த இயந்திரம் இருக்கலாம், அந்த இயந்திரம் இருக்கலாம்–ஆனால் அவர்கள் குருடர்களே. இதனை அவர்கள் அறிவதில்லை.

சீடர்: பெரும்பாலான அமெரிக்கர்கள் தன்னுணர்வைக் காட்டிலும், குடும்பத்தைப் பேணிப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்விற்கு குடும்ப வாழ்க்கை யினால் எவ்வித தடையும் வராது. அஹைதுக்யப்ரதிஹதா. நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பீர்களானால், இறையுணர்வை எதனாலும் தடுக்க முடியாது. நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இதில் ஈடுபட முடியும். நீங்கள் கிருஷ்ண உணர்வை நான்கு வழிகளில் செயல்படுத்தலாம்: ப்ராணைர் அர்தைர் தியா வாசா—-பிராணம், பணம், அறிவு, மற்றும் வார்த்தைகளைக் கொண்டு கிருஷ்ண உணர்வை நீங்கள் செயல்படுத்தலாம். எனவே, நீங்கள் ஒரு குடும்பத்தினராக இருக்க வேண்டுமெனில், அதாவது உங்களால் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் அர்ப்பணிக்க முடியாவிடில், நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்காக உபயோகியுங்கள். உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியாவிடில், உங்களின் அறிவை உபயோகியுங்கள். அறிவுபூர்வமான பணிகள் இங்கே பல உள்ளன–புத்தகம் வெளியிடுதல், ஆராய்ச்சி என எவ்வளவோ உள்ளன. உங்களால் அதுவும் செய்ய முடியாவிடில், உங்களது வார்த்தைகளை உபயோகித்து கிருஷ்ண உணர்வைப் பற்றி மக்களுக்கு எடுத்துரையுங்கள். நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, “கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அவரை நாம் வணங்க வேண்டும்,” என்பதை யாருக்காவது எடுத்துச் சொல்லுங்கள். அது போதும்.

இவ்வாறாக, கிருஷ்ண உணர்வின் வாய்ப்பிற்கு பஞ்சம் ஏற்பட ஏதேனும் வழி உண்டோ? நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முடியும், சேவை செய்வதற்கான விருப்பம் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். ஆனால் கிருஷ்ணரை நீங்கள் உங்களது சேவையில் ஈடுபடுத்த நினைத்தால், அது மாபெரும் குற்றமாகும். மக்கள் தேவாலயத்திற்குச் சென்று, கடவுளே எங்களுக்கு சேவை செய்யுங்கள்; எங்களுக்கு தினசரி ரொட்டியைக் கொடுங்கள்,” என்று கேட்கிறார்கள்.

மக்கள் தங்களது பிரச்சனைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், கடவுள் அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். அவர் அனைத்தையும் குறைவற்றதாக, முழுமையானதாக படைத்துள்ளார். பறவைகளுக்காக பற்பல பழங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்–தேவைக்கு அதிகமாகவே கொடுத்துள்ளார். பூர்ணம் இதம், கிருஷ்ணர் ஏற்கனவே எல்லாவற்றையும் போதிய அளவில் தந்துள்ளார். ஆனால் இந்த அயோக்கியர்கள் குருடர்களாக உள்ளனர்; அவர்கள் இதனைப் பார்ப்பதில்லை. அவர்கள் இவற்றை திருத்த முயல்கிறார்கள். இங்கே திருத்துவதற்கு என்ன இருக்கிறது? அனைத்தும் ஏற்கனவே போதுமான அளவில் உள்ளது. ஆனால் மக்கள் அவற்றை தவறாக உபயோகித்து வருகிறார்கள். இல்லாவிடில், மக்களிடம் ஏற்கனவே போதுமான நிலம் உள்ளது, போதுமான அறிவு உள்ளது–அனைத்தும் போதுமான அளவில் உள்ளன.

ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அதிக அளவில் நிலம் உள்ளது. இயற்கையின் வளமான விளைச்சலை நாடி வாழாமல், கால்நடைகளை வளர்த்து அவற்றைக் கொன்று உணவருந்தி வருகிறார்கள். இதுவே அவர்களின் புத்திசாலித்தனம். உடலுக்குக் கெடுதல் தரக் கூடியது என்று அறிந்தும்கூட, காபி, தேயிலை, புகையிலை போன்றவற்றை வளர்க்கிறார்கள். உலகின் சில பகுதிகளில் மக்கள் தானியம் இல்லாமல் பசியால் இறக்கிறார்கள். ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் வியாதியையும் மரணத்தையும் தரக்கூடிய புகையிலையை வளர்க்கிறார்கள். இதுவே அவர்களின் புத்திசாலித்தனம்.

பிரச்சனை என்னவெனில், இந்த அயோக்கியர்கள் மனித வாழ்வு கடவுளைப் புரிந்துகொள்வதற்கானது என்பதை அறியாமல் உள்ளனர். யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்: ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் அப்பேர்ப்பட்ட முட்டாள்கள். நாய்களுக்கு எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் குருடர்களாக உள்ளனர்–கடவுள் உணர்வுடன் உள்ளோமா, நாய் உணர்வுடன் உள்ளோமா என்பதைக்கூட அவர்கள் அறிவதில்லை. நாயானது நான்கு கால்களில் ஓடுகிறது, மக்களோ நான்கு சக்கரம் பூட்டிய கார்களில் ஓடுகிறார்கள்–இதனால் தங்களை முன்னேற்றம் அடைந்தவர்களாக நினைக்கிறார்கள்.

 

சீடர்: இவர்கள் ஓடுவதற்கான காரணமும் ஒன்றுதான்–உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், மற்றும் பாதுகாத்தல்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உங்களுடைய காரணங்கள் நாய்களுக்குரிய காரணங்களாக இருப்பின், நீங்கள் காரில் ஓடுவதன் பயன் என்ன? மக்களுக்கு கிருஷ்ண உணர்வின் செய்திகளைத் தெரிவிப்பதற்காக நீங்கள் காரை உபயோகிக்கலாம், அதில் தவறில்லை. நீங்கள் எதை வேண்டுமானாலும் கிருஷ்ணரின் தொண்டில் உபயோகிக்கலாம். அதைத்தான் நாங்கள் போதிக்கின்றோம். நல்ல கார் இருந்தால், அதனை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? அதனை கிருஷ்ணருக்காக பயன்படுத்துங்கள்; அப்போது அது சரியானதாக அமையும். “துறந்து விடுங்கள்” என்று நாங்கள் கூறவில்லை. கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனத்தைக் கொண்டு நீங்கள் சில பொருட்களை தயாரிக்கும்போது, அவற்றை கடவுளுக்காக பயன்படுத்தினால், அது சரியானதாகும். ஆனால் கிருஷ்ணருக்காக அல்லாமல் அதனை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தினால், அஃது அபத்தமாகும்.

 

இந்த காரை எடுத்துக் கொள்ளுங்கள்–மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. “இவையெல்லாம் அபத்தம்,” என்று நான் சொன்னால், அது புத்திசாலித்தனமா? இல்லை. நீங்கள் எதற்காக இந்த காரை தயாரித்தீர்களோ, அந்த காரணத்தையே நான் அபத்தம் என்று கூறுகிறேன். இவ்வாறாக மக்கள் தங்களது உணர்வை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அவர்கள் தயாரித்த பொருட்களை நாங்கள் புறக்கணிப்பதில்லை.

 

உதாரணமாக, கத்தியைக் கொண்டு காய்கறிகளையும் பழங்களையும் நறுக்கலாம். ஆனால் அதனை தொண்டையை அறுக்க உபயோகித்தால், அது தவறு. தற்போதைய மக்கள் தொழில்நுட்பம் என்னும் கத்தியை, தங்களது தொண்டையையே அறுப்பதற்கு உபயோகிக்கிறார்கள். அதாவது, கிருஷ்ண உணர்வை, தன்னுணர்வை மறப்பதற்காக உபயோகிக்கிறார்கள். இதுவே தவறாகும்.

 

நிருதேஹம் ஆத்யம் ஸுலப்தம் ஸுதுர்லபம் ப்லவம் ஸுகல்பம். நமது மனித உடல் நல்லதொரு படகைப் போன்றது–நமது மனித அறிவைக் கொண்டு அறியாமையின் கடலை, அதாவது பௌதிக உலகின் பிறப்பு இறப்புக் கடலைக் கடக்க முடியும். குருகர்ணதாரம் மயானுகூலேன நபஸ்வதேரிதம் புமான் பவாப்திம் ந தரேத் ஸ ஆத்மஹா. வேத இலக்கியங்களில் உள்ள கிருஷ்ணரின் உபதேச வடிவில் சாதகமான காற்று நமக்கு வீசுகின்றது, மேலும், உண்மையான ஆன்மீக குரு என்னும் நல்ல மாலுமி நம்மிடம் உள்ளார். அவர் நம்மை வழிகாட்டி ஆன்மீக ஒளியை ஏற்றுகிறார். இந்த எல்லா வசதிகள் உள்ளபோதிலும், துன்பக் கடலை நம்மால் கடக்க முடியாவிட்டால், அது நாமே நம்முடைய தொண்டையை அறுத்துக் கொள்வதாகும். படகு உள்ளது, மாலுமி உள்ளார், சாதகமான காற்று உள்ளது; ஆனால் நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. நம்மை நாமே கொல்கிறோம் என்பதே இதன் பொருள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives