வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

தமிழக அரசிடமிருந்து விருது பெறுவதற்காக அடியேன் சென்றிருந்த சமயத்தில், அங்கு வந்திருந்த பலரிடம் இயல்பான முறையில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், “உங்களது இயக்கத்தில் திருமணமானவர்கள் இணையலாமா?” என்று வினவினார். “தாராளமாக இணையலாம்,” என்று அவருக்கு விளக்கமளித்த சிறிது நேரம் கழித்து, மற்றொருவரும் அதே வினாவினை எழுப்பினார்.

“கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள்,” “பகவத் கீதையைப் படியுங்கள்,” “கோயிலுக்கு தொடர்ந்து வாருங்கள்,” என்று மக்களிடம் கூறும்போது, அவர்கள் இல்லற வாழ்வினைப் பற்றிய வினாவினை பல்வேறு வடிவங்களில் எழுப்புகின்றனர்.

இந்த வினா உங்களிடம் இருந்தாலும், உங்களிடம் இந்த வினாவினை யாரேனும் எழுப்பியிருந்தாலும், இக்கட்டுரை உங்களுக்காகவே.

கிருஷ்ண பக்தி அனைவருக்கும் உரித்தானது

கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியவை மட்டுமின்றி, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவியாக இருப்பவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் கிருஷ்ண பக்தியில் பங்கேற்கலாம்.

பகவத் கீதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் ஒரு துறவியா என்ன! உண்மையைச் சொல்லப்போனால், பகவத் கீதையைக் கேட்பதற்கு முன்பாக அர்ஜுனன் துறவறம் பூண்டு கானகம் செல்ல விரும்பினான். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரது அறிவுரையின்படி போரிட ஒப்புக் கொண்டான். அவ்வாறு இருக்கையில் கீதையைப் படித்தால் சந்நியாசியாகி விடுவார்கள் என்று சிலர் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?

தீவிரமானால் துறவியாக வேண்டுமா?

கிருஷ்ண பக்தி வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் தீவிர கிருஷ்ண பக்தி வேண்டாம். தீவிரமாக தினமும் ஜபம் செய்தல், பகவத் கீதையைப் படித்தல் என்று வாழ்ந்தால், விரைவில் சாமியாராகி விடுவார்கள்,” என்று சிலர் கூறலாம். பக்தி முற்றினால் துறவறம் பூண்டு விடுவர் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அதுவும் உண்மையல்ல. அர்ஜுனனைக் காட்டிலும் நமது பக்தி முற்றி விட்டதோ! பக்தியின் முன்னேற்றத்திற்கும் வெளிப்புற சூழ்நிலைக்கும் நேரடி தொடர்பு ஏதுமில்லை.

ஒருவன் கிருஷ்ணரின் மீது எவ்வளவு பற்றுதல் வைத்துள்ளான் என்பதையும், பௌதிக விஷயங்களின் மீது எவ்வளவு பற்றற்றவனாக உள்ளான் என்பதையும் அறிகுறிகளாகக் கொண்டே பக்தியின் முன்னேறிய நிலை தீர்மானிக்கப்படுகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் (11.2.42) கூறுகிறது. எனவே, பக்தியில் முன்னேற துறவியாக மாற வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆயினும், உண்மை என்னவெனில், பற்றற்ற நிலையைத்தான் ஸ்ரீமத் பாகவதம் பரிந்துரைக்கிறதே தவிர, துறவறம் என்னும் சமுதாய நிலையை அல்ல.

பக்குவமடைந்த பக்தன் (அர்ஜுனனைப் போல) பற்றற்ற நிலையினை இல்லற வாழ்விலும் அடையலாம். பற்றற்ற நிலை என்பது அன்றாடக் கடமைகளைச் செய்யாதிருக்கும் நிலையல்ல; மாறாக, கிருஷ்ணரை மையமாக வைத்து, கிருஷ்ணரை நோக்கமாக வைத்து, கிருஷ்ணரை எல்லாமாக வைத்து செயல்படக்கூடிய நிலையாகும். மனைவி, மக்கள் முதலிய முக்கிய பற்றுதல்களைத் துறந்து விட்ட துறவிகளும் சில நேரங்களில் பற்றுடையவர்களாக வாழக்கூடும்; செல்வம், பெயர், பதவி, புகழ் ஆகியவற்றின் மீதான பற்றுதலுக்கான வாய்ப்பு துறவிக்கும் உள்ளது. எனவே, ஒரு துறவி கிருஷ்ண பக்தியில் உயர்ந்தவர் என்றோ, ஓர் இல்லறத்தார் கிருஷ்ண பக்தியில் தாழ்ந்தவர் என்றோ ஒருபோதும் கூறி விட இயலாது.

கானகம் செல்ல விரும்பிய அர்ஜுனன் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணருக்காகப் போரிட்டான்.

மஹாஜனங்களிலும் இல்லறத்தார்கள்

கிருஷ்ண பக்தியின் தத்துவங்களை உண்மையாக தெரிந்துகொள்ள பன்னிரண்டு மஹாஜனங்களை அணுக வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதம் (6.3.20) கூறுகிறது: (1) பிரம்மா, (2) சிவபெருமான், (3) மனு, (4) பிரகலாதர், (5) ஜனகர், (6) பலி சக்கரவர்த்தி, (7) எமராஜர், (8) பீஷ்மர், (9) நாரதர், (10) குமாரர்கள், (11) கபிலர் மற்றும் (12) சுகதேவ கோஸ்வாமி. இவர்களில் முதல் ஏழு மஹாத்மாக்களும் இல்லற வாழ்வைச் சார்ந்தவர்கள். எட்டாவதாக கூறப்பட்டுள்ள பீஷ்மர் திருமணம் செய்யாவிடினும் சகோதர குடும்பத்துடன் வாழ்ந்தவர். மீதமுள்ள நால்வர் மட்டுமே துறவிகள்.

எனவே, மஹாஜனங்களின் பட்டியலில்கூட மூன்றில் இரண்டு பங்கினர் துறவிகளாக இருக்கவில்லை.

ஏன் துறவிகள்?

அப்படியெனில், துறவறம் தேவையில்லையே என்று நினைத்து விட வேண்டாம். பகவத் கீதை உட்பட பல்வேறு வேத சாஸ்திரங்கள் இல்லறத்தில் மயங்கிக் கிடக்கும் மனிதனை வன்மையாகக் கண்டிக்கின்றன. இல்லறத்தின் பொதுவான இயல்பு மோகிக்கக்கூடியதாக இருப்பதே இதற்கான காரணமாகும். இல்லறத்தில் இருந்தபடி பற்றில்லாமல் வாழ்பவன் துறவியைக் காட்டிலும் உயர்ந்தவனாவான். (பகவத் கீதை 5.2) ஏனெனில், புலனின்ப பொருட்களுக்கு மத்தியில் புலனின்பத்தைத் துறப்பவன் அப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவனைக் காட்டிலும் சிறந்தவனாவான்.

இருப்பினும், பெரும்பாலும் புலனின்ப பொருட்களுக்கு மத்தியில் பற்றின்றி இருத்தல் என்பது மிகவும் கடினமானது என்பதால், சாஸ்திரங்கள் துறவற வாழ்வினையும் பரிந்துரைக்கின்றன. இல்லற வாழ்வில் இருப்பவர் ஐம்பது வயதைக் கடந்த பின்னர், வீடு, மக்கள், தொழில் முதலியவற்றைத் துறந்து, மனைவியுடன் இணைந்தபடி (பாலுறவு ஏதுமின்றி) வானபிரஸ்த வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; அதன் பின்னர், காலப்போக்கில் மனைவியை மகனிடம் ஒப்படைத்து விட்டு, அவர் சந்நியாசம் ஏற்கலாம். ஆயினும், இந்த அறிவுரை அனைவருக்கும் பொதுவானதல்ல. சிலர் சந்நியாசம் வரை செல்லலாம், சிலர் வானபிரஸ்த வாழ்வு வரை செல்லலாம், வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் இல்லறத்திலேயே இருக்கலாம். இவை அவரவரது விருப்பத்தையும் சுபாவத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.

யானைக்கு நிலத்தில் பலம், முதலைக்கு நீரில் பலம்; அதுபோல, ஒவ்வொருவரும் தமக்குரிய சுபாவத்தின்படி வாழ்தல் பலம்.

யார் துறவியாக வேண்டும்?

துறவறத்திற்கென்று பல்வேறு தகுதிகள் தேவைப்படினும், துறவறம் ஏற்பதில் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதியாகும். பெரும்பாலான நபர்கள் சூழ்நிலையின் விரக்தியினால், வெளிப்புற தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக துறவறம் ஏற்கின்றனர். ஆனால், அத்தகு துறவு நீடிப்பதில்லை. இவ்வுலகம் எப்போதும் துன்பகரமானதே. துறவறம் பூண்டாலும் துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே, உலக வாழ்வின் மீதான விரக்தி மட்டுமே துறவற வாழ்வினை ஏற்பதற்கு உதவாது.

கிருஷ்ணருக்கு பலவிதமான சேவைகளைச் செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டு, கிருஷ்ணரின் தொண்டிற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் மன பக்குவம் பெற்றவர்கள் மட்டுமே துறவிகளாக வேண்டும். அமைதியாகவும் வசதியாகவும் வாழலாம் என்ற நினைப்பில் எவரும் ஒருபோதும் துறவறம் ஏற்கக் கூடாது. படிப்பு வரவில்லை, வேலை கிடைக்கவில்லை, வாழ்வதற்கு வழியில்லை முதலிய காரணங்களால் துறவி வேடத்தை ஏற்றல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

கிருஷ்ண பக்தன் துறப்பதற்காக துறவியாவதில்லை; மாறாக, கிருஷ்ண சேவைக்காக துறவியாகிறான். இல்லறத்தில் இருப்பவன் மனைவி, மக்களைப் பராமரிப்பதற்காக பொருளீட்ட வேண்டும். அந்தப் பணியானது நேரடி கிருஷ்ண சேவைக்கான பெருமளவு நேரத்தை அபகரித்துக்கொள்வதால், கிருஷ்ண சேவையில் தீவிரமாக இருப்பவர்களில் சிலர் துறவறத்தை ஏற்கின்றனர்.

துறவியாகுதல் தவறா?

நல்ல கல்வியும் செல்வமும் வேலையும் பெற்றவர்கள் பலர் இஸ்கானில் பிரம்மசாரிகளாக இணைகின்றனர். அப்போது அவர்களது பெற்றோரும் உற்றார் உறவினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். “உனக்கு என்ன குறை? ஏன் இந்த முடிவு?” என்று துக்கம் விசாரிப்பதைப்போல வினவுவர். வாழ்வில் குறையுள்ளவர்களே இறைப்பணிக்குச் செல்கின்றனர் என்றும், நிறைவுள்ளவர்கள் உலகப் பணிகளிலேயே இருக்கின்றனர் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

உலகிலுள்ள எண்ணிலடங்காத மக்கள் தங்களது வாழ்வை எத்தனையோ விஷயங்களுக்காக தியாகம் செய்கின்றனர். காதலுக்காக தியாகம் செய்வோர், கட்சிக்காக தியாகம் செய்வோர், விளையாட்டிற்காக தியாகம் செய்வோர், சினிமா நடிகர்களுக்காக தியாகம் செய்வோர் ஆகியோரைக்கூட இன்றைய சமுதாயம் குறை கூறுவதில்லை. தனி மனித சுதந்திரம் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் கிருஷ்ண பக்தனைக் குறை கூறுதல் எந்த விதத்தில் நியாயம்?

கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டு பொதுமக்களை மாயையின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக எல்லா வித அபாயத்தையும் தியாகத்தையும் மேற்கொள்ளும் கிருஷ்ண பக்தனின் பணியானது, எல்லையில் நின்றபடி எதிரிகளின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக எல்லா வித அபாயத்தையும் தியாகத்தையும் மேற்கொள்ளும் இராணுவ வீரனின் பணியினைப் போன்றதாகும். கிருஷ்ண பக்தி இயக்கம் மாயைக்கு எதிரான ஒரு போர் என்பதால், இந்த இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள் போற்றுதலுக்குரிய வீரர்களாவர். உடலைக் காக்கும் சாதாரண இராணுவ வீரர்களைக் காட்டிலும் ஆத்மாவை காக்கும் கிருஷ்ண பக்த வீரர்கள் பல மடங்கு உயர்ந்தவர்களாவர்.

கிருஷ்ண பக்தியை ஒரு தனி நபர் எல்லா சூழ்நிலையிலும் இன்பகரமாக பயில முடியும் என்றபோதிலும், வீட்டை விட்டு விலகி இயக்கத்தில் முழு நேர தொண்டாற்றுதல் என்பது நாம் பெற்ற கிருஷ்ண பக்தியின் அமிர்தத்தை மற்றவர்களுக்கும் பரவலாக வழங்குவதற்கான தியாகமே தவிர வேறொன்றுமில்லை.

கோயிலுக்குச் செல்ல விரும்புகிறோம், அங்கே பூஜாரி இருக்க வேண்டுமல்லவா; ஆழ்ந்த அறிவுபூர்வமான சொற்பொழிவுகளைக் கேட்க விரும்புகிறோம், பக்தியும் பாண்டித்துவமும் பெற்ற பக்தர்கள் அதற்கு வேண்டுமல்லவா; நூல்களைப் படிக்க விரும்புகிறோம், அவற்றை எழுதுவதற்குத் தகுந்த பக்தர்கள் வேண்டுமல்லவா; இத்தகு சேவைகளை முழு நேர பக்தர்களால்தானே திறம்பட செய்ய முடியும்.

இல்லறம் நல்லறமா, துறவறம் நல்லறமா?

கிருஷ்ண பக்தன் இல்லறத்திலும் இருக்கலாம், துறவறத்திலும் இருக்கலாம் என்று கூறும்போது, “இல்லறம் நல்லறமா, துறவறம் நல்லறமா?” என்று பலரும் வினவுவது வழக்கம். முன்னரே கூறியபடி, எது நல்லறம் என்பது ஒவ்வொருவரின் சுபாவத்தைப் பொருத்ததாகும்.

யானைகளின் மன்னனான கஜேந்திரன் ஒரு முதலையினால் பிடிக்கப்பட்ட சம்பவத்தை நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம். கஜேந்திரன் மிகப்பெரிய பலசாலி, அந்த முதலையோ அவ்வளவு பலம் வாய்ந்ததல்ல. இருப்பினும், கஜேந்திரனால் முதலையை வெல்ல முடியவில்லை. ஏனெனில், யானைக்கு நிலத்தில் மட்டுமே பலமுண்டு, நீரில் பலம் கிடையாது; முதலையோ நீரில் அசுர பலத்தைப் பெற்று நிலத்தில் பலமற்றதாக உள்ளது. கஜேந்திரன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் அதற்கு அவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்காது.

அதுபோல, சில பக்தர்களுக்கு இல்லறம் நல்லறமாகவும் வேறு சில பக்தர்களுக்கு துறவறம் நல்லறமாகவும் அமையும். இல்லறத்தில் இருக்க வேண்டியவர்கள் துறவறத்தில் இருந்தால் அது கஷ்டமானதாகும், துறவறத்தில் இருக்க வேண்டியவர்கள் இல்லறத்தில் இருந்தால் அதுவும் கஷ்டமானதாகும். ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கும் சுபாவத்திற்கும் ஏற்ப இதனை முடிவு செய்ய வேண்டும்.

கிருஷ்ண பக்தியின் அடிப்படை கொள்கை: ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம், “கிருஷ்ண பக்திக்கு சாதகமான விஷயங்களை ஏற்க வேண்டும், பாதகமான விஷயங்களைத் துறக்க வேண்டும்.” எனவே, எந்த வாழ்க்கை ஒருவனது கிருஷ்ண பக்திக்கு சாதகமாக இருக்குமோ, அதனை அவன் ஏற்க வேண்டும். அதனை அறிவதற்கு ஆன்மீக குருவை அணுக வேண்டும்.

உலகின் யதார்த்த நிலை

இருப்பினும், இவ்வுலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு அதிலும் குறிப்பாக கலி யுக மக்களுக்கு, இல்லறமே பொருத்தமான பாதையாக இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம். இஸ்கான் இயக்கத்தில் இன்று தீக்ஷை பெற்ற பக்தர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். முழு நேர பிரம்மசாரிகளும் சந்நியாசிகளும் நூற்றுக்கணக்கில் உள்ளனர். மொத்த பக்தர்களில் ஒரு சதவீதத்தினர்கூட பிரம்மசாரிகளாகவும் சந்நியாசி களாகவும் இல்லை என்பது யதார்த்தமான உண்மை.

இயக்கத்தின் முழு நேர சேவைக்காக பிரம்மசாரிகளாக இணையும் பக்தர்களில் பலரும்கூட சில வருட சேவைக்குப் பின்னர் இல்லற வாழ்வினை தங்களுக்குப் பொருத்தமானதாக ஏற்று திறம்பட சேவை புரிகின்றனர். பிரம்மசரிய பயிற்சியுடன் இல்லற வாழ்வை ஏற்கும் அத்தகு பக்தர்கள் சிறப்பான இல்லறத்தாராக இருப்பதைக் காண்கிறோம்.

இயக்கத்தின் எல்லா நெறிகளையும் பின்பற்றும் தீவிரமான பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்தினரையும் பக்தர்களாக மாற்றி, குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியை மகிழ்ச்சியாக பயின்று வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தினமும் ஹரே கிருஷ்ண மந்திரத்தைத் தவறாமல் பதினாறு சுற்றுகள் ஜபிக்கின்றனர், ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிக்கின்றனர், கிருஷ்ணருக்கு பூஜை செய்கின்றனர், கிருஷ்ண பிரசாதம் மட்டுமே உண்கின்றனர்; இஸ்கான் கோயிலுக்கு வந்து சொற்பொழிவுகளைக் கேட்டு, பக்தர்களின் சங்கத்தைப் பெற்று, சேவையும் செய்கின்றனர். சிலர் தங்களால் இயன்றபோதெல்லாம் கோயிலுக்கு வருகின்றனர், சிலர் வாரம் ஒருமுறை வருகின்றனர். இதுபோன்ற சத்சங்க பக்தர்களே இஸ்கான் பக்தர்களில் 99 சதவீத பக்தர்களாவர்.

அனைவரும் வாரீர்

கிருஷ்ண பக்தி அனைவருக்கும் உரியது. அனைவரையும் துறவியாக மாற்ற முடியுமா என்ன? துறவறம் ஏற்கும்படி யாரையேனும் வற்புறுத்த இயலுமா? அப்படியே வற்புறுத்தினாலும் அந்தத் துறவு நிச்சயம் நிலைத்திருக்காது.

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் அனைத்து மக்களையும் பௌதிக வாழ்விலிருந்து காப்பாற்றி கிருஷ்ண பக்தர்களாக மாற்றுவதாகும். அவர்கள் இல்லறத்திலிருந்து கிருஷ்ண பக்தியைப் பயில்வதும் பிரம்மசாரியாக அல்லது சந்நியாசியாக வாழ்ந்து கிருஷ்ண பக்தியைப் பயில்வதும் அவரவர்களது சொந்த விருப்பமாகும். அதில் யாரும் யாரையும் பலவந்தப்படுத்த முடியாது.

கிருஷ்ண பக்தி மிகவும் எளிமையானது. இதில் அனைவரும் எளிமையாக பங்குகொள்ளலாம். ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தல், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய நூல்களைப் படித்தல், வைஷ்ணவர்களுடன் சங்கம் கொள்ளுதல், பகவான் கிருஷ்ணரை பூஜித்தல், துளசி தேவியை வழிபடுதல், குருவிடம் தீக்ஷைப் பெறுதல், ஏகாதசி விரதம் அனுசரித்தல் முதலியவை கிருஷ்ண பக்தியின் அடிப்படை அங்கங்களாகும். இவற்றை எந்தவொரு சமுதாய சூழ்நிலையிலும் நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றி எவ்வித ஐயமுமின்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கோலோக விருந்தாவனத்தை அடையவும் முடியும்.

ஆகவே, இல்லறத்தாராகவும் சரி, துறவியாகவும் சரி, கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அனைவரும் தத்தமது விருப்பத்தின்படி பங்குகொள்ளலாம் என்பதே இறுதி முடிவாகும்.