பக்தித் தொண்டின் மீதான கபிலரின் அறிவுரைகள்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 ஸ்கந்தங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், இருபத்தெட்டாம் அத்தியாயம்

சென்ற இதழில் உலக இயல்பினைப் புரிந்துகொள்வதுகுறித்த கபிலரின் அறிவுரைகளைக் கண்டோம். இந்த இதழில் பக்தித் தொண்டில் பகவானை எவ்வாறு தியானிப்பது என்பதைக் காண்போம்..

அஷ்டாங்க யோகம்

பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும், பரம புருஷ பகவானைப் புரிந்துகொள்ளும் வழியில் முன்னேற முடியும். ஒருவர் தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும். பகவானின் அருளால் கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். ஆன்மீக குருவை வழிபட வேண்டும். பொருளாதார வளர்ச்சி அல்லது புலனின்பத்திற்கான மதச்சடங்குகளை தவிர்க்க வேண்டும். முக்திக்கு உதவும் செயல்களால் கவரப்பட வேண்டும், மிதமாகவே உண்ண வேண்டும். (அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்னும் வகையில் உண்ண வேண்டும்.) தனி இடத்தில் வசித்தல், அதிகம் உண்ணாமை, தூய்மை, துறவு, புலனுகர்வில் பற்றின்மை, விக்ரஹ வழிபாடு, வேதங்களைப் பயிலுதல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். திருட்டு பழக்கம் அறவே கூடாது.

பல்வேறு ஆசன முறைகள் மூலமாக மனதை அமைதிப்படுத்த வேண்டும். பின் தனிமையான புனிதமான இடத்தில் ஆசனம் அமைத்து எளிமையான நிலையில் அமர்ந்து, உடலை நிமிர்த்தி வைத்துக் கொண்டு சுவாசத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி செய்ய வேண்டும். இது பிராணாயாமம் எனப்படும். இதில் மூன்று நிலைகள் உள்ளன: சுவாசத்தை உள்ளிழுத்தல் (பூரகம்), தக்கவைத்தல் (கும்பகம்), வெளிவிடுதல் (ரேசகம்) என்பவை அவை. இப்பயிற்சியை நேர்மாறாகவும் அதாவது முதலில் மூச்சை வெளிவிட்டு, காற்றை வெளியில் தக்கவைத்து பின் உள்ளிழுத்தல் எனும் முறையிலும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு செய்யப்படும்போது மனமானது உறுதி கொண்டு வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது. புடம் போட்ட தங்கம் போல் மனம் தூய்மையடைகிறது. புலன்களை அடக்குவதால் ஒருவர் உலகியல் தொடர்பிலிருந்து விடுபட முடியும். (ப்ரத்யாகாரம்). மனதை ஒருமுகப்படுத்துவதால் ஒருவர் எல்லா பாவச் செயல்களிலிருந்தும் விடுபட முடியும் (தாரண).

பரம புருஷ பகவானை தியானிப்பதால் (தியானம்) ஒருவர் உலகப் பற்றின் முக்குணங்களிலிருந்து விடுபட முடியும். இந்த யோகப் பயிற்சியால் மனம் முழுமையாகத் தூய்மையடையும்பொழுது, ஒருவர் பாதி மூடிய விழிகளுடன் மூக்கின் நுனியில் ஒருமுகப்படுத்தி, பரம புருஷ பகவானின் வடிவத்தைப் பார்க்க வேண்டும்.

பகவானின் திருவுருவம்

பரம புருஷ பகவான் மகிழ்ச்சி நிரம்பிய தாமரைத் திருமுகம், தாமரைக் கண்கள், நீலத்தாமரை போன்ற கரிய திருமேனி என பேரழகுடன் காணப்படுகிறார். அவர் தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரையை ஏந்தியுள்ளார். தாமரையின் மகரந்தம் போன்ற செம்மஞ்சள் நிறமுள்ள ஒளிவீசும் ஆடையை அணிந்துள்ளார். அவரது திருமார்பில் ஸ்ரீ வத்ஸக் குறி காணப்படுகிறது. மேலும், ஒளிவீசும் கௌஸ்துப மணி, முத்தாரம், மகுடம், என அற்புத ஆபரணங்களால் அவர் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

நறுமணமிக்க வனமாலை அவரது கழுத்தை அலங்கரிக்கிறது. அவரது இடுப்பில் ஒட்டியாணம் ஒளி வீசுகிறது. அவர் பக்தரின் இதயத் தாமரையில் அன்புடன் எழுந்தருளி அங்கே நிற்கிறார். அவரது மிக அழகிய, அற்புத, அமைதியான தன்மை பக்தரின் கண்களுக்கும் மனதிற்கும் உன்னத மகிழ்ச்சியைத் தருகிறது. அதி அற்புதமான இளமையுடன் திகழும் அவர் அனைத்து கிரகவாசிகளாலும் வழிபடப்படுகிறார். எப்போதும், அவர் தமது பக்தர்களுக்கு ஆசி வழங்குவதில் பெருவிருப்பம் கொண்டு விளங்குகிறார். (வரதராஜர்)

பகவானின் புகழ் எப்போதும் பாடுவதற்குத் தகுதியானது, அவரது புகழின் தன்மை, அவரது பக்தர்களின் புகழை உயர்த்துகிறது. ஒருவர் பரம புருஷ பகவான் மீதும் அவர்தம் பக்தர்களுடன் புரியும் லீலைகள் மீதும் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

திவ்ய தியானம்

ஒருவர் தன் சிந்தனையை பகவானின் மேனியின் ஒவ்வொரு உறுப்பிலும் பதிய வைக்க வேண்டும். முதலில் வஜ்ராயுதம், அங்குசம், தாமரை, கொடி ஆகிய அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பகவானின் தாமரை பாதங்கள், பிறை நிலவை ஒத்திருக்கும் அழகிய சிவந்த நகங்கள் போன்றவற்றை தியானிக்க வேண்டும்.

பகவானின் பாத கமலங்களைக் கழுவி வரும் கங்கை நீரினை சிறப்புமிக்க சிவபெருமான் தம் தலைமீது தாங்கி மேலும் மேன்மையடைகிறார். பகவானின் அந்த பாத கமலங்களை தியானிக்கும் பக்தர்கள் மனதில் சேர்த்து வைக்கப்பட்ட மலை அளவு பாவங்களைக்கூட தூள் தூளாக்கி விடுகின்றனர். எனவே, ஒருவர் நெடுங்காலத்திற்கு பகவானின் திருப்பாதங்களை கவனத்துடன் தியானிக்க வேண்டும்.

அதன் பிறகு, அப்பாத கமலங்களில் இடையறாது கவனமுடன் பணிபுரியும் லக்ஷ்மிதேவியின் சேவையை நம் மனதில் தியானிக்க வேண்டும். அதன்பின், எல்லா சக்திகளின் இருப்பிடமான பரம புருஷ பகவானின் தொடைகளை தியானிக்க வேண்டும். பின் ஒளிவீசும் மஞ்சள் பட்டாடை அணிந்துள்ள பகவானின் இடுப்பை தியானிக்க வேண்டும். பின் பிரம்மதேவரின் பிறப்பிடமான பகவானின் நாபியை தியானிக்க வேண்டும். பின் லக்ஷ்மி தேவியின் உறைவிடமான பகவானின் திருமார்பை தியானிக்க வேண்டும்.

இயற்கையின் பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்தும் தேவர்களின் எல்லா சக்திகளுக்கும் ஆதாரமான பகவானின் திருக்கரங்களை தியானிக்க வேண்டும். பாற்கடலை கடையும் பொழுது தாங்கிய மந்தார மலையை உரசியதால் மெருகேற்றப்பட்ட பகவானின் அற்புத ஆபரணங்களை தியானிக்க வேண்டும். பின் மின்னும் ஒளியுடன் கூடிய ஆயிரம் ஆரங்களைக் கொண்ட பகவானின் சுதர்சன சக்கரம், பகவானின் தாமரை போன்ற உள்ளங்கையில் அன்னம் போன்று விளங்கும் பாஞ்சஜன்ய சங்கு, பகைமையுடைய அரக்கர்களை தகர்க்கும் கௌமோதகீ எனும் கதாயுதம் என தியானிக்க வேண்டும்.

பின் வண்டுகளைக் கவர்ந்திழுக்கும் பகவானின் கழுத்திலுள்ள மலர்மாலை, தூய பக்தர்களை பிரதிநிதிக்கும் முத்தாரம் ஆகியவற்றை தியானிக்க வேண்டும். எடுப்பான மூக்கு, பளிங்கு போன்ற கன்னங்கள், ஒளிவீசும் மகர குண்டலங்களை உடைய பகவானின் அழகிய திருமுகத்தை தியானிக்க வேண்டும். அத்திருமுக மண்டலத்தில் உள்ள தாமரை விழிகள், மன்மதனை மயக்கும் நடனமாடும் புருவங்கள், அருள்நிறைந்த திருப்பார்வை, இரக்கமுள்ள புன்சிரிப்பு, மல்லிகை மொட்டுகளைப் போன்ற சிறிய பற்கள் ஆகியவற்றை தியானிக்க வேண்டும்.

பகவானின் திவ்ய ரூபத்தில் ஆழ்ந்து (சமாதி) விட்டவருக்கு உலக கவர்ச்சிகள் தொல்லை தருவ தில்லை. இது யோகத்தின் உயர்ந்த நிலையாகும்.

முக்தியின் அறிகுறிகள்

இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் யோகி படிப்படியாக பரம புருஷ பகவான் ஹரியிடம் தூய அன்பை வளர்க்கிறார். அவரில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது, மயிர் கூச்செறிகிறது, அவர் பகவானிடமான ஆழ்ந்த அன்பில் திளைக்கிறார். அவரது மனம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு பகவானின் நோக்கத்துடன் முழுவதுமாக இணைந்து விடுகிறது. இதனால் இன்ப துன்பங்களின் எல்லா கருத்துகளிலிருந்தும் விடுபடுகிறது. பகவானின் தொண்டில் முழுவதுமாக ஈடுபடுபவர் உலகியல் தேவைகளை மறந்துவிடுகிறார்.

விடுதலை பெற்ற ஆத்மா தானும் தன் உடலும் ஒன்றல்ல என்பதை தெளிவாக உணர்ந்து குடும்பம், செல்வம், உடைமை என்பனவற்றின் தொடர்பிலிருந்து விடுபடுகிறார். கொழுந்து விட்டெரியும் நெருப்பானது, தீக்கதிர், தீப்பொறி ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதல்ல. அதுபோலவே, பரம புருஷ பகவான் இந்த ஜடவுலக படைப்பிலிருந்தும் உயிர்வாழிகளிடமிருந்தும் வேறுபட்டவராகவும் ஒன்றுபட்டவராகவும் திகழ்கிறார்.

பரமாத்மா எல்லா உயிர்வாழிகளுடனும் வீற்றிருப்பதால் பக்தர் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். ஒரே தன்மையுள்ள தூய ஆத்மா குணங்களின் தாக்கத்தால் பலவகையான உடல்களை ஏற்கிறது. மாயையின் மயக்கத்திலிருந்து பூரணமாக விடுபட்ட பிறகு, பக்தர் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டு தன்னுணர்வில் முழுமையடைகிறார்.

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment