கபிலரின் செயல்பாடுகள்

வழங்கியவர்: திரு. வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், முப்பத்துமூன்றாம் அத்தியாயம்.

சென்ற இதழில் பலன்நோக்குச் செயல்களின் பல பிரிவுகள், பக்தித்தொண்டின் உயர்வு மற்றும் அதனைக் கேட்பவரின் தகுதிகள் ஆகியவற்றைக் கண்டோம். இந்த இதழில் கபிலரது இறுதி உபதேசங்கள் மற்றும் தேவஹூதி பக்குவ நிலை எய்துதல் ஆகியவற்றைக் காணலாம்.

தேவஹூதியின் பிரார்த்தனை

பக்தித் தொண்டு மற்றும் திவ்ய ஞானம் குறித்து பகவான் கபிலரிடமிருந்து உபதேசம் பெற்ற தேவஹூதி பிரார்த்தித்தாள், அன்புள்ள பகவானே, தங்களது நாபி கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மதேவர் பிறப்பற்றவர் என்று அறியப்படுகிறார். அவர் தங்களை தரிசிப்பதற்கு பன்னெடுங்காலம் தவமிருந்தார். எல்லா உயிர்களின் பரம புருஷ பகவானாகிய தாங்கள், உயிர்வாழிகள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு தூய்மையடைந்து மீண்டும் தங்களிடம் வருவதற்கான வாய்ப்பினை அளிப்பதற்காக இந்த பௌதிக உலகங்களைப் படைக்கின்றீர்.

பிரளய காலத்தில் பிரபஞ்சம் முழுவதையும் திருவயிற்றில் அடக்கி தாமரை பாதத்தைச் சுவைத்தபடி ஆலிலையில் சயனித்திருக்கும் தாங்கள் எனது வயிற்றில் பிறந்தது மிக வியப்பானதல்ல. பிரபுவே! வீழ்ந்த ஆத்மாக்களின் பாவச் செயல்களைக் குறைத்து அவர்களுக்கு பக்தி, முக்தியை அளிக்கும் பொருட்டு பற்பல அவதாரங்களைத் தாங்கள் மேற்கொள்கிறீர்கள்.

எம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? நாயை உண்ணும் இழிகுலத்தில் பிறந்தவனாயினும் தங்களது திருநாமத்தை உச்சரிப்பவன் வழிபாட்டிற்குரிய வனாவான். அவன் புனித யாகங்கள், தவங்கள், தீர்த்த யாத்திரை, வேதங்கள் பயிலுதல் ஆகியவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்க வேண்டும்.

எம்பெருமானே! பர பிரம்மனும், பரம புருஷனும் நீரே. முனிவர்களும் பக்தர்களும் புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தி உம்மை தியானிப்பதன் மூலம் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுதலை பெறுகின்றனர். நீங்களே வேதங்களின் உறைவிடமாவீர்.”

கபிலதேவரின் இறுதி அறிவுரை

அன்னையின் இனிய சொற்களால் திருப்தியுற்ற பகவான் கூறினார், அன்னையே! நான் உமக்கு அறிவுறுத்திய தன்னுணர்வு வழிமுறை மிகவும் எளிதானது. இதைப் பின்பற்றுவதன் மூலம் தற்போதைய உடலிலேயே விடுதலை (ஜீவன் முக்தி) பெறலாம்.” இவ்வாறாக, பக்தி நிரம்பிய ஸாங்கிய தத்துவத்தை தமது அன்னையின் மூலம் உலகிற்கு வழங்கிய பகவான் கபிலர், அன்னையிடம் அனுமதி பெற்று வீட்டைவிட்டு வெளியேறினார்.

பிரளய காலத்தில் ஆலிலையில் சயனித்திருக்கும் பகவான் தமது தாமரை பாதத்தைச் சுவைத்தல்.

தேவஹூதியின் யோகப் பயிற்சி

பகவான் கபிலதேவரால் உபதேசிக்கப்பட்டதுபோல, தேவஹூதி சரஸ்வதி நதிக்கரையில் தமது ஆஷ்ரமத்தில் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்யத் தொடங்கினாள். அவளது பக்தியினால் முழுவீடும் சரஸ்வதி நதிக்கு மலர் கிரீடம்போல் விளங்கியது. அடிக்கடி ஸ்நானம் நீராடியதால் அவளது சுருண்ட அழகிய கருங்கூந்தல் பழுப்பு நிறமாகி சடைமுடியானது, தவத்தினால் அவள் உடல் இளைத்தாள்.

அவளது மாளிகை கர்தம முனிவரின் யோக சக்தியால் உருவாக்கப்பட்டு வானவரும் வியக்கும் செல்வச் செழிப்புகள் நிறைந்து காணப்பட்டது. அம்மாளிகையில் தங்கத்தாலான படுக்கைகள், பாலின் நுரையைப் போன்று மென்மையான  வெளுத்த படுக்கைகள், ஸ்படிகத்தாலான சுவர்கள், அழகிய தோட்டங்கள், தாமரை மலர்கள் நிரம்பிய தடாகங்கள் முதலியவை இருந்தன. இவ்வாறாக, மேலுலகப் பெண்களும் வியக்கும் உடைமைகளைப் பெற்றிருந்தும், தேவஹூதி எதன் மீதும் பற்றுதல்கொள்ளாது பகவான் மீதான பக்தியுடன் வாழ்ந்தாள்.

இவ்வாறான அழகிய மாளிகை, நந்தவனம், உயர்ந்த போகங்கள் ஆகியவை அனைத்தையும் அவள் துறந்தாள். இறுதியில், நான், எனது எனும் அபிமானத்தையும் துறந்தாள். அவளது மனம் எல்லா மாசிலிருந்தும் நீங்கப்பெற்று தூய்மையடைந்திருந்தது. எனினும், கன்றைப் பிரிந்த பசுவைப் போல தனது மகனது பிரிவை எண்ணி வருந்தினாள்.

இருப்பினும், புன்சிரிப்புடன் கூடிய பகவான் கபிலதேவரை தன் மனதில் நிலைநிறுத்தி தியானிக்கத் தொடங்கினாள். இவ்வாறாக, அவள் பகவானின் மீதான தியானத்தில் முழுவதும் ஆழ்ந்துவிட்டாள். பரம சத்தியத்தை உணர்ந்ததால் மேன்மையான அறிவைப் பெற்றாள். இயற்கையின் குணங்களால் ஏற்பட்ட எல்லா அச்ச உணர்வுகளும் அவளிடமிருந்து மறைந்தன. மனதின் கவலைகள் மற்றும் துன்பங்களிலிருந்து விடுபட்டு திவ்ய ஆனந்தத்தில் திளைத்தாள்.

தேவஹூதியின் பக்குவநிலை

கபிலரின் உபதேசங்களைப் பின்பற்றிய தேவஹூதி உலகப் பிணைப்புகளிலிருந்து விரைவில் விடுபட்டாள். அவள் கடினமின்றி கபில வைகுண்டம் எனும் ஆன்மீக உலகை அடைந்தாள். அவள் சித்தியடைந்த பரம பவித்ரமான அந்த இடம் ’ஸித்தபதம் என்று மூவுலகிலும் கொண்டாடப்படுகிறது. யோகத்தால் தூய்மையான அவளது திருமேனி ஒரு நதியாக ஆயிற்று, அந்நதி அனைத்து சித்திகளையும் தரவல்லது.

கபிலதேவர், அவளது அனுமதியுடன் வடகிழக்கு திசையில் பயணமானபோது சாரணர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்ஸராக்கள் ஆகிய மேலுலகவாசிகள் அவரை வணங்கி எல்லாவித மரியாதைகளையும் அர்ப்பணித்தனர். பின்னர், அவர் இமயமலையிலிருந்து புறப்பட்டு கங்கைநதி சமுத்திரத்தில் கலக்கும் இடமான ’கங்கா சாகர தீர்த்தத்திற்கு வந்தார். அங்கு சமுத்திரராஜன் அவருக்கு இடமளித்தான். அங்கே கபிலதேவர் எல்லா கட்டுண்ட ஆத்மாக்களின் விடுதலைக்காக இன்றும் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். உண்மையான ஸாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் அங்கே சென்று அவரை வழிபடுகின்றனர்.

பகவான் கபிலதேவர் மற்றும் அன்னை தேவஹூதியின் செயல்களைப் பற்றிய இரகசியமான இந்த வர்ணனையைப் படிப்பவர்களும் செவியுறுபவர்களும் பகவான் கிருஷ்ணரின் தூய பக்தர்களாகி அவருக்கு அன்புத் தொண்டாற்ற ஆன்மீக உலகிற்குச் செல்வர்.

(மூன்றாம் ஸ்கந்தம் முடிவுற்றது)

மக்களின் நன்மைக்காக கபிலர் இன்றும் வீற்றிருக்கும் கங்கா சாகர தீர்த்தம்.

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment