வழங்கியவர்: வனமாலி கோபால் தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: பதினேழாம் அத்தியாயம்

சென்ற இதழில் எருது வடிவிலிருந்த தர்ம தேவனும் பசு வடிவிலிருந்த பூமித்தாயும் உரையாடியதைக் கண்டோம்; மேலும், பரீக்ஷித் மஹாராஜர் கலியை சந்தித்ததையும் பார்த்தோம். இந்த இதழில் அவர் கலியின் மீது எடுக்கும் நடவடிக்கைகளைக் காணலாம்.

பரீக்ஷித் மஹாராஜரின் கண்டிப்பு

சரஸ்வதி ஆற்றின் கரையை அடைந்த மாமன்னர் பரீக்ஷித், அரச உடைதரித்த சூத்திரன் ஒருவன் அனாதையைப் போல காணப்பட்ட ஒரு பசுவையும் எருதுவையும் கதையால் அடிப்பதைக் கண்டார். வெண் தாமரையைப் போல் வெண்மையாக இருந்த அந்த எருது, தன்னை இம்சித்துக் கொண்டிருந்த அந்த சூத்திரனால் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி, நடுக்கத்துடன் சிறுநீர் கழித்தவாறு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

கன்றில்லாமல் இரங்கத்தக்க நிலையில் இருந்த பசுவின் கால்களும் அந்த சூத்திரனால் அடிக்கப்பட்டன. துன்பத்திற்கு ஆளாகி இளைத்து காணப்பட்ட அப்பசு கண்களில் கண்ணீரோடு எங்கேனும் சற்று புல் கிடைக்குமா என ஏங்கிய வண்ணம் இருந்தது.

இக்காட்சியைக் கண்ட பரீக்ஷித் உடனடியாக கலியைக் கண்டிப்பதற்காக தம் ஆயுதங்களுடன் தயாரானார். இடிமுழக்கம் போன்ற ஆழமான குரலில் அந்த சூத்திரனுடன் பேசினார்: யார் நீ? பலசாலியைப் போல் காணப்பட்டாலும் என் பாதுகாப்பில் உள்ள  ஆதரவற்றவர்களை கொல்லத் துணிந்தாயே! உடையால் உன்னை அரசனைப் போல் காட்டிக் கொள்கிறாய், ஆனால் செயலால் சத்திரியர்களின் கொள்கைகளை நீ எதிர்க்கின்றாய்.

“அயோக்கியனே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் காண்டீப வில்லை ஏந்திய அர்ஜுனனும் மறைந்துவிட்டதால் குற்றமற்ற பசுவையும் அடிக்கத் துணிந்தாயா? மறைவான இடத்தில் இவ்வாறு அடிப்பதால் குற்றவாளியான நீ கொல்லப்பட வேண்டியவனாக இருக்கிறாய்.”

பரீக்ஷித் மஹாராஜரின் ஆறுதல்

பிறகு அவர் எருதைப் பார்த்து இரக்கத்துடன் வினவினார்: “நீங்கள் யார்? வெண் தாமரையைப் போல் நிறம் கொண்ட எருதா? அல்லது ஒரு தேவனா? மூன்று கால்களை இழந்து ஒரே காலுடன் நடமாடுகிறீர். எருதின் உருவில் இருந்து கொண்டு எங்களுக்கு துன்பம் தரும் தேவனா நீங்கள்? இன்றுவரை குரு வம்சத்தின் ஆட்சியில் அலட்சியத்தால் ஒருபோதும் பூமியிலுள்ள யாரும் கண்ணீர் சிந்தியதே இல்லை. இதுவே முதல்முறை.

“சுரபியின் மகனே, இனி நீங்கள் வருந்தத் தேவையில்லை. நான் வாழும்வரை இழிந்தவர்களைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. ஆதரவற்ற உயிரினங்கள் துன்பப்படும்போது, அரசனின் ஆயுள், நற்பெயர், நற்பிறப்பு ஆகியவை அனைத்தும் மறைந்துவிடும். துன்பப்படுபவர்களின் துன்பங்களைத் தீர்ப்பது அரசனின் முக்கியக் கடமை. எனவே, ஜீவராசிகளை துன்புறுத்தும் இழிவான இவனை நான் கொன்றுவிடுகிறேன்.”

சூத்திரனின் வடிவில் இருந்த கலி புருஷனே உண்மையான குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்காக பரீக்ஷித் மஹாராஜர் எருதிடம் பின்வருமாறு மேலும் வினவினார்: “சுரபியின் மகனே, உமது மூன்று கால்களைத் துண்டித்தவன் யார்? பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி அரசாளும் அரசர்களின் இராஜ்ஜியத்தில், உம்மைப் போல இவ்வளவு மகிழ்ச்சியற்றவர் யாரும் இல்லை. குற்றமற்றவனாகவும் முற்றிலும் நேர்மையுடையவனாகவும் இருக்கும் உம்மை அங்கஹீனம் செய்தவர் யாரென்று தயவுசெய்து சொல்லுங்கள். அவன் இவ்வுலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஸ்வர்கலோகவாசியாக இருந்தாலும், அவன் நேரடியாக என்னால் நாசம் செய்யப்படுவான். சாஸ்திர விதிகளை மீறுபவர்களைக் தண்டிப்பதே அரசனாகிய எனது உயர்ந்த கடமை.”

எருதுவின் வேதனையைக் கண்ட மன்னர் கலி புருஷனைக் கொல்ல முனைதல்.

தர்மதேவனின் தத்துவ உரை

பரீக்ஷித் மஹாராஜரின் கேள்விகளுக்கு பதிலாக தர்ம தேவன் பின்வருமாறு கூறினார்: “உம்மால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் பாண்டவ வம்சத்தைச் சார்ந்தவருக்கு மிகவும் பொருத்தமானவை. பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும்கூட பாண்டவர்களின் பக்தியினால் கவரப்பட்டு தூதரின் கடமைகளைச் செய்தார்.”

கலியை நேரடியாக காட்டிக் கொடுக்காமல் தர்ம தேவன் தொடர்ந்து கூறினார்: “மனிதருள் மிகச் சிறந்தவரே, துன்பத்தின் காரணத்தைப் பற்றி பேசும் தத்துவவாதிகள், ஒருவரது சொந்த இன்ப துன்பங்களுக்கு அவரே பொறுப்பு என்று கூறுகின்றனர். சிலர் அமானுஷ்யமான சக்திகளே அதற்கு பொறுப்பு என்றும், மற்றவர்கள் செயலே அதற்கு பொறுப்பு என்றும் கூறுகின்றனர். ஆழ்ந்த பௌதிகவாதிகளோ இயற்கையே முடிவான காரணம் என்று சாதிக்கின்றனர். எனவே, ராஜரிஷியே, இதில் எது சரி என்பதை உமது புத்தியால் நீரே ஆராய்ந்து சொல்வீராக.”

இதைக் கேட்ட பரீக்ஷித் மஹாராஜர் பூரண திருப்தியடைந்து பேசத் துவங்கினார்: “அதர்மம் செய்தவனுக்கு ஏற்படும் நிலை அதைக் குறித்துப் பேசுபவனுக்கும் ஏற்படும் என்ற தத்துவத்திற்கு ஏற்ப தாங்கள் பேசுகிறீர். எருதின் வடிவிலுள்ள தாங்கள் தர்ம தேவரே அன்றி வேறு யாருமில்லை.”

ஓர் ஆதரவாளராக அல்லது விஷமியாக இருப்பதற்கு யாரும் நேரடியான பொறுப்பாளியல்ல என்பது பக்தர்களின் முடிவாகும். எனவே, தீங்கு செய்பவர் அல்லது விஷமியை அடையாளம் காண்பவரும் அந்த விஷமிக்குச் சமமான பாவம் செய்தவராகவே தெரிகிறார். பகவானின் கருணையால் பக்தர் எல்லா தீமைகளையும் பொறுத்துக் கொள்கிறார். பக்தனுக்குத் துன்பமே இல்லை; ஏனெனில், அனைத்திலும் பகவானையே காணும் பக்தருக்கு பெயரளவேயான அத்துன்பமும் கூட பகவானின் கருணையே. பிறரால் துன்புறுத்தப்படும்போது பொதுவாக மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் புகார் செய்வார்கள். ஆனால் கலி புருஷனால் சித்ரவதை செய்யப்பட்டதைக் குறித்து பசுவும் எருதும் அரசரிடம் எந்த புகாரும் செய்யவில்லை. எருதின் அசாதாரணமான நடத்தையைக் கொண்டு அது நிச்சயமாக தர்ம தேவனாக இருக்க வேண்டும் என்று அரசர் முடிவு செய்தார். ஏனெனில், மதக் கோட்பாடுகளின் மென்மையான நுட்பங்களை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

பரீக்ஷித் தர்ம தேவனை சமாதானம் செய்தல்

பரீக்ஷித் மஹாராஜர் தொடர்ந்து பேசினார்: “ஸத்ய யுகத்தில் தங்களின் நான்கு கால்களும் தவம், தூய்மை, தயை, உண்மை எனும் நான்கு கொள்கைகளால் நிலைநாட்டப்பட்டிருந்தன. ஆனால் தற்பெருமை, சிற்றின்ப வெறி, குடிவெறி ஆகியவற்றின் உருவிலுள்ள அளவு கடந்த அதர்மங்களால் தற்போது உங்களின் மூன்று கால்கள் உடைந்துவிட்டதாகத் தெரிகிறது.

“உண்மை எனும் ஒரே காலினால் தாங்கள் எப்படியோ நடமாடி வருகிறீர்கள். ஆனால் வஞ்சகமாக செழிப்படைந்து வரும் கலி புருஷன் அந்த காலையும் அழித்துவிட முயல்கின்றான்.”

அதைத் தொடர்ந்து பசுவின் நிலையைப் பற்றி பரீக்ஷித் பின்வருமாறு கூறினார்: “பரம புருஷராலும் மற்றவர்களாலும் பூமியின் பாரம் குறைந்ததில் சந்தேகமில்லை. பூமியில் அவர் அவதரித்திருந்த பொழுது மங்களகரமான அவரது அடிச்சுவடுகளால் எல்லா நன்மைகளும் நிகழ்ந்தன. ஆனால் இப்பொழுது அரசர்களைப் போல் நடிக்கும் தகுதியற்ற தாழ்ந்த பிரிவினரால் ஆளப்படுவதால், குற்றமற்ற பூமி தேவி தனது எதிர்காலத்தை எண்ணி கண்களில் கண்ணீருடன் வருந்திக் கொண்டிருக்கிறாள்.”

பரீக்ஷித் கலியைக் கட்டுப்படுத்துதல்

இவ்வாறாக, தர்ம தேவனையும் பூமித் தாயையும் சமாதானப்படுத்திய பரீக்ஷித் மஹாராஜர், எல்லா அதர்மங்களுக்கும் காரணமான கலி புருஷனைக் கொன்றுவிட தமது கூர்மையான உடைவாளை எடுத்தார்.

மாமன்னர் தன்னைக் கொல்லப் போகிறார் என்பதைப் புரிந்து கொண்ட கலி புருஷன் உடனடியாக அரச உடையைக் களைந்து, அச்சத்துடன் சிரந் தாழ்த்தி அவரிடம் முழுமையாக சரணடைந்தான்.

சத்திரியர்கள் சரணடைந்தவர்களைக் கொல்லமாட்டார்கள். எனவே, இயற்கையாகவே எளியவர்களிடம் இரக்கமும் அன்பும் கொண்டவரான பரீக்ஷித் மஹாராஜர் கலியைக் கொல்லவில்லை. கலி தன் வேஷத்தைக் கலைத்ததால் அவனை நோக்கி புன்னகையுடன் கூறினார்: “அர்ஜுனனின் பரம்பரையில் வந்துள்ள என்னிடம் சரணாகதி அடைந்திருப்பதால், உயிருக்காக நீ இனிமேல் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதர்மத்தின் நண்பனான நீ எனது இராஜ்ஜியத்தில் இனிமேல் இருக்க முடியாது.

கலி புருஷனை தலைமை நிர்வாகியாக செயல்பட அனுமதித்தால், பேராசை, நேர்மையின்மை, கொள்ளை, அநாகரிகம், நம்பிக்கை துரோகம், துரதிர்ஷ்டம், ஏமாற்றுதல், கலகம், தற்பெருமை போன்ற அதர்மக் கொள்கைகள் நிச்சயமாக நிரம்பிவிடும். எனவே, அதர்மத்தின் நண்பனே, பரம புருஷரின் திருப்திக்காக யாகம் இயற்றும் இந்த இடத்தில் வசிப்பதற்கு உனக்கு தகுதியில்லை.”

இவ்வாறு உத்தரவிடப்பட்ட கலி புருஷன் பயத்தால் நடுங்க ஆரம்பித்தான். தன்னைக் கொல்ல எமராஜனைப் போல் தன்முன் நிற்கும் அரசரைப் பார்த்து கலி பின்வருமாறு பேசினான்: “மாட்சிமை தாங்கிய அரசே, உலகிலுள்ள எல்லா இடங்களிலும் சக்தி வாய்ந்த உமது ஆட்சி பரவியிருப்பதால், நான் செல்லும் இடமெல்லாம் தாங்கள் என்னைக் கொல்வதற்காகக் கூரிய வாளுடன் நிற்கும் காட்சியையே காண்கிறேன். நான் தங்களின் எதிரி என்றாலும், தங்களிடம் சரணடைந்த ஆத்மாவாக இருப்பதால், தங்களின் அரசாங்கத்தின் பாதுகாப்பில் நிரந்தரமாக வாழ்வதற்கு உரிய ஓரிடத்தை தயவுசெய்து எனக்குத் தாருங்கள்.”

 

பரீக்ஷித் மஹாராஜர் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுதல்

 

கலியின் வேண்டுதலைக் கேட்ட பரீக்ஷித், சூதாட்டம், போதைப் பொருள் உபயோகம், விபச்சாரம், மிருகவதை ஆகிய செயல்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ, அங்கெல்லாம் வாழ்வதற்கு கலி புருஷனுக்கு அனுமதியளித்தார். இந்நான்கு இடங்களும் பரீக்ஷித் மஹாராஜரின் ஆட்சியில் அரிது என்பதால், தான் வசிப்பதற்கு மேலும் ஓரிடத்தை கலி வேண்டினான். பொய், குடிப் பழக்கம், காமம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றை தூண்டக்கூடிய தங்கம் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு தங்கிக் கொள்ளும்படி கலிக்கு மன்னர் இருப்பிடம் வழங்கினார்.

எனவே, பிராமணர்கள், சந்நியாசிகள், அரசியல்வாதிகள் போன்ற மக்களை வழிநடத்தும் தலைவர்கள், கலி குடி கொண்டுள்ள அதர்மக் கொள்கைகளான போதை, விபச்சாரம், சூது, மிருகவதை ஆகியவற்றோடு ஒருபோதும் தொடர்பு கொள்ளக் கூடாது.

அரசர் தமது பிரஜைகளை அதர்மத்திலிருந்து பாதுகாத்து தர்மத்தின் இதர மூன்று கால்களையும் சரி செய்தார். மேலும் நற்செயல்களை ஊக்குவித்ததால் பூமித்தாயும் செழிப்படைந்தாள்.

யுதிஷ்டிர மஹாராஜரின் வழிவந்த அபிமன்யுவின் புதல்வரான பரீக்ஷித் மஹாராஜரின் சீரிய ஆட்சியால், அவரின் மறைவிற்குப் பின்னரும் நைமிஷாரண்ய முனிவர்களால் உலக நன்மைக்காக யாகம் செய்ய முடிந்தது.