வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகின்றன.

கலி யுகத்தின் போக்கை ஸ்ரீமத் பாகவதம் பன்னிரண்டாம் ஸ்கந்தம் விளக்குகிறது. கலி யுகத்தில் மனத் தூய்மையும் கிடையாது, புறத் தூய்மையும் கிடையாது. கலி யுகத்தின் ஒவ்வொரு விஷயங்களும் பல்வேறு தோஷங்கள் நிறைந்தது. இருப்பினும். கலி யுகத்திற்கென்று இருக்கும் ஒரு மாபெரும் சிறந்த குணம் என்னவெனில், பகவானின் திருநாமத்தைச் சொல்வதாலேயே நாம் எளிதில் முக்தி பெற முடியும். கிருஷ்ண ஸங்கீர்த்தனத்தால் மட்டுமே மூன்று குணங்களின் சங்கத்திலிருந்து விடுபட்டு, உயர்ந்த இடமான கிருஷ்ண உலகத்தை அடைய முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகின்றது.

கலேர் தோஷ நிதே ராஜன்

அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:

கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய

முக்த ஸங்க: பரம் வ்ரஜேத் 

கிருஷ்ணருடைய நாமத்தையும் புகழையும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று, யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், அவர்களுக்கு பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்று விடுகிறது. ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலி யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள், ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள். ஆதலின், இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதுதான்.”

ஹரேர் நாம ஹரேர் நாம

ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ

நாஸ்த்யேவ கதிர் அன்யதா

சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்த கலி யுகத்தில் முக்தியைப் பெற ஒரே வழி பகவான் ஹரியின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமே. இதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.”  

கலி யுக தர்மமே ஹரி நாமம் சொல்வதுதான், இது நாம் நம்மையும் இறைவனையும் உணர்வதற்கு வழி செய்யும். கிருஷ்ணருக்கும் அவருடைய நாமத்திற்கும் வேறுபாடு கிடையாது. நாமத்தைச் சொல்லும்பொழுது கிருஷ்ணர் நம்முடன் இருப்பதால், கலியின் தாக்கம் மறைந்து விடுகிறது. ஆத்மா மகிழ்ச்சியடைவதுடன் கிருஷ்ணருடைய திருநாட்டிற்குச் செல்வதற்கு வழிவகை செய்கிறது.

ஹரி நாம ஸங்கீர்த்தனம் செய்ய எளிய மந்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பதற்காகவும் ஸங்கீர்த்தனமாக பாடுவதற்காகவும் மக்களுக்கு இதனை எடுத்துச் சொல்வதற்காகவும், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். ஜீவன்கள் மேலுள்ள அவரின் கருணை, முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் மூலமாக மேலும் விரிவடைந்தது. ஸ்ரீல பிரபுபாதர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்து உலகமெங்கும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதச் செய்திகளையும் பரப்பினார்.

இறைவனுடைய திருப்புகழைப் பாடுவதுகுறித்து வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்து, அறியாமையாகிய இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேராது.” (திருக்குறள் 5)

அதாவது, ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நாம் ஈடுபட்டால், நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளிலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இருவகையான வினைகளே அறியாமை என்னும் ஜட வாழ்வினை நமக்குக் கொடுக்கின்றன.

திருவள்ளுவரின் வாக்கு வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை இச்சிறு பகுதியில் தொடர் தலைப்புகளில் விளக்கிக் காட்டியுள்ளோம், இது படித்தவர்கள் அனைவருக்கும் பயனளித்திருக்கும் என நம்புகிறோம்.

(குறளின் குரல் முற்றும்)

ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது சகாக்களும்.