காரேய் கருணை இராமானுஜா!

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையே வடிவானவர், கருணைக் கடல். எனவே, ஜடவுலகம் என்னும் காட்டுத் தீயில் தவித்துக் கொண்டிருப்போரை விடுவிக்க அவர் பேராவல் கொண்டுள்ளார். அந்த முழுமுதற் கடவுளுக்கு இதயபூர்வமாகத் தொண்டு செய்வதே அவரை அடைவதற்கான வழியாகும். அந்த வழிமுறை பகவத் பக்தர்களின்–மூலமாகவே மற்றவர்களுக்குப் பரிமாற்றப்படுகிறது. பகவானின் கருணை பெரும்பாலும் ஜடவுலக மக்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை. பகவானின் உயர்ந்த பக்தர்களே அந்த கருணையைக் கொண்டு செல்லும் ஊடகமாகத் திகழ்கின்றனர்.

மேகம்போன்ற பக்தர்கள்

இதனால், அத்தகு பக்தர்கள் அல்லது ஆச்சாரியர்கள் சாஸ்திரங்களில் மேகங்களுக்கு ஒப்பிடப்படுகின்றனர். மேகம் எவ்வாறு கடல் நீரைக் கவர்ந்து மழையாக மற்றவர்களுக்கு வழங்குகின்றதோ, அதுபோலவே உயர்ந்த ஆச்சாரியர்கள் பகவானின் கருணை என்னும் கடல் நீரைக் கவர்ந்து அதனை எல்லா மக்களுக்கும் கருணை மழையாகப் பொழிகின்றனர். ஆச்சாரியர்களின் அத்தகு கருணை மழை கிடைக்காவிடில், மக்களுடைய நிலை கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினுள் சிக்கியவர்களைப் போன்றதாகும். காட்டுத் தீயினை அணைப்பதற்கு எத்தனை வண்டிகளில் நீர் கொண்டு சென்றாலும் இயலாது, ஆனால் மேகம் மழையைப் பொழிந்தால் அதனை அணைப்பது எளிதாகி விடும். அதுபோலவே, நமது பௌதிக வாழ்க்கை என்னும் காட்டுத் தீயினை அணைப்பதற்கு நாம் ஆச்சாரியர்கள் என்னும் மேகங்களின் கருணையைச் சார்ந்துள்ளோம்.

ஆயினும், அந்தோ பரிதாபம்! ஜடவுலக மக்கள் தாம் காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டு வருகிறோம் என்பதை உணராமலேயே வாழ்கின்றனர். உலகில் வாழும் மக்களைக் காக்க கருணையின் உருவான பகவான் தாமே இவ்வுலகில் பல்வேறு அவதாரங்களாக வருகிறார். அப்போதும்கூட மக்கள் அவரை அணுகத் தயங்குகின்றனர். இதனால், கருணையே வடிவான அந்த பகவான் தம்மை விட அதிக கருணை வாய்ந்த தமது பக்தர்களை ஆன்மீக உலகிலிருந்து பௌதிக உலகிற்கு அனுப்பி வைக்கின்றார். அதன்படி இவ்வுலகில் தோன்றும் ஆச்சாரியர்கள் பகவானின் நோக்கத்தை அறிந்தவர்களாக அதை நிறைவேற்றுபவர்களாக உலகில் பவனி வருகின்றனர்.

அவ்வாறு இவ்வுலகில் தோன்றிய ஆச்சாரியர்களுள் ஒருவரே ஸ்ரீபாத இராமானுஜாசாரியர்.

கருணை என்றால் என்ன?

ஆச்சாரியர் என்பவர் ஜடவுலக வாழ்வின் அன்றாடத் துயரங்களைப் போக்குபவர் அல்லர், அவர் ஜடவுலக வாழ்க்கை என்னும் ஒட்டு மொத்த துயரத்தையும் போக்குபவர். நவீன காலத்தில் ஆன்மீகப் பணிகள் என்ற பெயரில், பலரும் பௌதிக சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். மருத்துவமனை திறத்தல், பள்ளிகளைத் திறத்தல், அன்னதானம் வழங்குதல் முதலிய பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவோரை மக்கள் ஆன்மீகவாதிகள் என்று அங்கீகரித்து அவர்களைப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் அத்தகு பௌதிகமான சமூக சேவைகள் எதுவும் ஆச்சாரியர்களின் பணியல்ல. ஆச்சாரியர்கள் மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க வல்லவர்கள். அதாவது, மக்களை முற்றிலுமாக பௌதிகப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றக்கூடியவர்கள். உடல் சார்ந்த சேவைகள் அனைத்தும் தற்காலிகமானவை, ஆத்மாவைக் காப்பாற்றும் பணியே உண்மையான சேவை, அதைச் செய்வோரே உண்மையான ஆச்சாரியர்கள்.

ஆற்றில் ஒரு மனிதன் மூழ்கிக் கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்வோம். அவனைக் காப்பாற்றுவேன் என்று கூறி நீரில் குதித்தவன் மூழ்கியவனின் சட்டையை மட்டும் கொண்டு வந்தால், அது நியாயமாகுமா? அஃது அவனைக் காப்பாற்றியதாக ஆகுமா? நிச்சயமாக இல்லை. அதுபோலவே, நம்முடைய உடல் என்பது நாம் (ஆத்மா) அணிந்துள்ள சட்டையைப் போன்றதாகும். பெரும்பாலான மக்கள் இந்த சட்டையே எல்லாம் என்று எண்ணிக் கொண்டு சட்டைக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர், அதையே ஆன்மீகம் என்றும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையான ஆச்சாரியர்கள் அதுபோன்ற உடல் சேவையில் ஈடுபடாது, உண்மையான சேவையில் (ஆத்மாவின் சேவையில்) ஈடுபடுகின்றனர்.

எனவே, ஆச்சாரியர்களின் கருணை என்பது ஜீவன்களுக்கு பௌதிக வசதிகளைக் கொடுப்பதல்ல. மாறாக, அவர்களை மீண்டும் ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்வதாகும். இதுவே எல்லா கருணையிலும் மிகச்சிறந்த மிகவுயர்ந்த கருணை. ஸ்ரீபாத இராமானுஜர் அதுபோன்ற கருணையை வெளிப்படுத்தினார். அதற்கு அவரது வாழ்க்கை முழுவதையும் சாட்சியாக எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், அவரது வாழ்விலிருந்து ஒரு முக்கிய சம்பவத்தை இங்கே தியானித்து அவரது கருணையை அறிய முயலலாம்.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரணம்

பெரும்பாலான ஆன்மீக அன்பர்கள் நன்கறிந்த சம்பவம்; இருப்பினும், பக்தர்களின் உன்னத லீலைகளை மீண்டும்மீண்டும் நினைத்தல் சுவையை அதிகரிக்கும் என்பதால், இதனை நினைவுகூர்வோமாக, ஆயினும் சுருக்கமாக.

இராமானுஜருக்கு வைஷ்ணவ சித்தாந்தங்கள் பலவற்றையும் போதித்து அருளிய பெரிய நம்பிகள், வைஷ்ணவ மந்திரத்தை திருக்கோஷ்டியூரில் வாழும் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். உடனே கோஷ்டியூருக்குப் புறப்பட்ட இராமானுஜர், நம்பிகளை அணுகித் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். நம்பிகளோ துளியும் விசாரிக்காமல், கண்டும் காணாதவர்போல இருந்து விட்டார். தம்மை குரு சோதிக்கிறார் என்பதை அறிந்து இராமானுஜரும் திருவரங்கம் திரும்பினார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு பெருமாளை சேவிக்க திருவரங்கம் வந்த திருக்கோஷ்டியூர் நம்பிகளை இராமானுஜர் சேவிக்க, நம்பிகள் அவரை நோக்கி, நம் ஊருக்கு வாரும்,” என்று சொல்லிப் போய்விட்டார்.

இராமானுஜரும் திருக்கோஷ்டியூர் சென்றார். ஆனால் நம்பிகளோ இப்போது அவகாசமில்லை, வேறொரு சமயம் வாருங்கள்,” என்று கூறி திருப்பி அனுப்பினார். இப்படி பதினெட்டு முறை திரும்பத்திரும்ப திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டார். எனினும், இராமானுஜரின் உள்ளம் தளரவில்லை, ஊக்கம் குறையவில்லை, கோஷ்டியூர் நம்பிகளைக் குறைகூறலாம் என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. ஒருநாள் திருவரங்கம் வந்த ஒரு பாகவதரின் உதவியுடன் இராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்குச் செய்தி அனுப்பினார். நம்பிகளும் அகம் மகிழ்ந்து மறுசெய்தி அனுப்பினார்: ஒரு மாதம் உபவாசம் இருந்து விட்டு உபதேசம் பெற வாருங்கள்.”

மகிழ்ச்சியில் திளைத்த இராமானுஜர் திருக்கோஷ்டியூரை அடைந்து, ஸௌம்ய நாராயணப் பெருமாளின் சந்நிதியில், நீர்கூட பருகாமல் உபவாசமிருந்தார். பதினாறு நாள்களில் அவரது மேனி முற்றிலும் இளைத்தது, மெலிந்தார், சுருங்கினார். பதினேழாம் நாளில் சற்றும் நகர இயலாதவராய் ஆயினார், மூச்சும் அடங்கிவிடுமோ என்றெண்ணிய பக்தர்கள், நோய் தீர்க்கும் பத்தியம் நோயாளியையே தீர்த்து விடுமோ!” என்று பதறினர். இராமானுஜரை நம்பி வைஷ்ணவம் இருக்கிறது என்பதால், கெட்டது திருமால் மார்க்கம், கெடுத்தனன் நம்பி!” என்று கதறினர்.

நம்பிகளோ, இறந்தால் ஆளவந்தாரிடம் உபதேசம் கேட்பார், இருந்தால் நானாக உரைப்பேன் நாளை! இரண்டில் ஒன்று எப்படியும் தப்பாது!” என்று அமைதியுடன் மொழிந்தார். இந்த குருவிற்கு இணை யாருமில்லை, இந்த சீடருக்கும் யாரும் இணையில்லை,” என்று பக்தர்கள் சொல்லிக் கொண்டனர். நீரைப் பருகுவதற்கு நம்பிகள் அனுமதி யளிக்க, இராமானுஜருக்கு பெருமாளின் தீர்த்தத்தை ஊட்டி ஊட்டமளித்தனர் பக்தர்கள். அன்றிலிருந்து நீர் மட்டும் பருகி உபவாசத்தைத் தொடர்ந்தார்.

உண்ணா நோன்பு இனிதே நிறைவேறியதை அறிந்த கோஷ்டியூர் நம்பிகள், அந்த அரங்கநகர்ச் சீடர் தண்டு பவித்திரங்களோடு தனியாக வந்து உபதேசம் பெற்றுச் செல்லலாம்,” என்று சொல்லியனுப்பினார்.

திருக்கோஷ்டியூர் நம்பிகளை இராமானுஜர் மீண்டும்மீண்டும் அணுக, நம்பிகளோ பிறகு பார்க்கலாம்” என்று அவரை திருவரங்கத்திற்கே திருப்பி அனுப்பினார்

வைஷ்ணவ மந்திரத்தைப் பெறுதல்

தண்டு என்று அவர் கூறியது சந்நியாசியின் திரிதண்டத்தை, பவித்திரம் என்று அவர் கூறியது சந்நியாச உடையை. ஆனால் இராமானுஜரோ தனியாகச் செல்லாமல், தம்முடன் தம் சீடர்களான முதலியாண்டாரையும் கூரத்தாழ்வாரையும் அழைத்துச் சென்றார். உபவாசத்தினால் பலவீனமாகக் காணப்பட்ட இராமானுஜர் தனியாக வராதது கண்டு திகைத்தார் நம்பிகள்.

உம்மை நான் தண்டு பவித்திரங்களுடன் தனியாகத் தானே வரச் சொன்னேன்.”

அப்படித்தான் வந்துள்ளேன், அடியேன்!”

நம்பிகளின் திகைப்பு அதிகரித்தது. முதலியாண்டாரைத் தமது தண்டாகவும் கூரத்தாழ்வாரைத் தமது பவித்திரமாகவும் அறிமுகம் செய்தார் இராமானுஜர். (அதாவது, முதலியாண்டவர் இராமானுஜருக்கு எப்போதும் ஊன்றுகோல் போல உதவியதால் அவரது தண்டு போலக் கருதப்பட்டார். கூரத்தாழ்வார் தமது ஒப்பற்ற பரிவால் தம் வாழ்க்கையை பவித்திரமாக்கியுள்ளதால் (புனிதமாக்கி யுள்ளதால்) அவர் பவித்திரமாகவும் கருதப்பட்டார்.)

உங்கள் மூவருக்கும் மட்டுமே எனது உபதேசம், வேறு எவருக்கும் சொல்லிவிடக் கூடாது,” என்ற கட்டளையுடன் வைஷ்ணவ மந்திரத்தை விளக்க ஆரம்பித்தார் நம்பிகள். தாகத்தில் தவித்தவன் நீரைக் கண்டதுபோல, இராமானுஜர் அவற்றைப் பருகினார். நம்பிகள் இராமானுஜரிடம் மீண்டும் உரைத்தார், இந்த ஞானம் குரு பரம்பரையில் வந்துள்ளது, இதை நீரும் இரகசியமாக வைத்துக் கொண்டு, பாத்திரம் அறிந்து பக்குவமாக வழங்க வேண்டும்.”

அவ்வாறே செய்வதாகத் தம் தலையைத் தொட்டு சீடர் உறுதியளிக்க வேண்டும் என்றார் நம்பிகள். இராமானுஜரும் அவரடிகளில் தாழ்ந்து திருவடிகள் இரண்டையும் தொட்டு, குருவின் ஆணையை மீறினால் நரகம் புகுவேன்!” என்று உறுதியளித்தார்.

உபதேசம் பெறும் சமயத்திலேயே இராமானுஜரின் உள்ளம் இளகியது, இவ்வளவு எளிதான பாதையை அறியாது மக்கள் வருந்துகிறார்களே, அந்தோ பரிதாபம்!” என்று எண்ணத் தொடங்கினார். இறுதியில் நம்பிகள் வாழ்த்த, இராமானுஜர் சிரம் தாழ்த்தி தண்டம் சமர்ப்பித்து வணங்கி விடைபெற்றார். ஆனந்தத்தில் திளைத்தது இராமானுஜரின் உள்ளம்.

வைஷ்ணவ மந்திரத்தையும் அதன் அர்த்தத்தையும் இராமானுஜர் அனைவருக்கும் தாராளமாக எடுத்துரைத்தல்.

வைஷ்ணவ மந்திரத்தை உலகிற்கு உரைத்தல்

அற்புதமான இந்த மந்திரத்தைப் பெறுவதற்காக தாம் மேற்கொண்ட தவங்கள் அனைத்தும் இராமானுஜரின் உள்ளத்தில் நிழலாடின, இத்தனை கஷ்டங்களைத் தாண்டி எத்தனை மக்களால் இந்த பொக்கிஷத்தைப் பெற முடியும்? எவ்வளவு பேரால் இக்கருணையைப் பெற்று வைகுண்டம் செல்ல முடியும்? தாம் வந்த பயனே நிறைவேறாமல் போய் விடுமோ? எண்ணங்கள் பல, இராமானுஜரின் கனிவான உள்ளத்தில்.

மறுநாள், காலைக் கதிரவன் கதிர்களை வீச, திருக்கோஷ்டியூரில் திருவிழா ஒன்றிற்காக மக்கள் கூட ஊரே களைக்கட்டியது. அனைவரின் தாகத்தையும் தேவையையும் பூர்த்தி செய்யும் மழை மேகம்போல கருணை மழையைப் பொழியலாம் என்று முடிவு செய்தார் இராமானுஜர். ஆசையுடையோர் அனைவரும் கேட்டு அனுபவிக்கலாம்,” என்று அறிவித்து, அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் வைஷ்ணவ மந்திரத்தை எடுத்துரைத்தார் என்று குரு பரம்பரையின் கதைகள் கூறுகின்றன. கோபுரத்தில் ஏறி நின்று முழங்கினார் என்றும் சிலர் கூறுகின்றனர். எப்படி நோக்கினும், ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தையும் அதன் விசேஷ அர்த்தங்களையும் அனைவருக்கும் வாரி வழங்கினார் கருணையின் உருவான இராமானுஜர்.

செய்தி கேட்ட திருகோஷ்டியூர் நம்பிகள் உடனடியாக இராமானுஜரை தமது இடத்திற்கு வரவழைத்தார், ஊருக்கெல்லாம் உபதேசித்து என்ன பெற்றாய்?”

நரகம் பெற்றேன், ஸ்வாமி!” என்று பணிவுடன் உரைத்தார் இராமானுஜர்.

ஒப்புக்கொள்கிறீரா?”

ஆம், ஆச்சாரியரின் ஆணையை மீறி விட்டேனே!”

அறிந்தும் இவ்வாறு செய்யலாமா?”

அறிந்தே செய்தேன், ஸ்வாமி! நான் ஒருவன் நசிந்தாலும் ஊரார் அனைவரும் பேரின்பம் அடைவரே என நினைத்துவிட்டது என் உள்ளம்.”

தமது சீடனின் மொழிகளைக் கேட்டு நம்பிகள் திகைத்தார், மகிழ்ந்தார், உறைந்தார், அரவணைத்து வாழ்த்தினார். இராமானுஜரின் கருணையான உள்ளத்தை எண்ணிஎண்ணி நெகிழ்ந்தார். இச்சம்பவத்தை எண்ணிஎண்ணி இன்றும் வைஷ்ணவர்கள் நெகிழ்கின்றனர். தாம் நரகம் புகுந்தாலும் எண்ணற்றோர் வைகுண்டம் சென்றால் நன்று என்ற எண்ணம் அவ்வளவு எளிதான எண்ணமா?

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலையிலும் இதே போன்ற சம்பவத்தை நாம் காண்கிறோம். வாசுதேவ தத்தர் என்னும் பக்தர் உலகிலுள்ள அனைவரின் கர்மத்தையும் தாம் சுமந்து கொண்டு அவர்களுக்கு முக்தியளிக்க விரும்பினார். இவையல்லவா வைஷ்ணவ எண்ணங்கள்.

சீடரின் கருணையை உணர்ந்து நம்பிகள் அவரை அன்புடன் அரவணைத்தல்.

கருணையே வாழ்வாக வாழ்ந்தவர்

இந்த ஒரு சம்பவம் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள் அவரது ஒவ்வொரு செயலுக்கும் கருணையே காரணமாக இருந்தது என்பதை நன்கறிவர். ஒருத்திக்கு உடையவராக வாழ வேண்டாம் என்று முடிவு செய்து, உலகிற்கே உடையவராக வாழ திரிதண்டம் ஏந்தியதும் அவரது கருணையே. தம்மைக் கொல்ல நினைத்த ஆசிரியரான யாதவ பிரகாசரையும் வைஷ்ணவராக மாற்றியதும் அவரது கருணையே. ஆளவந்தாரின் அறிகுறியை அறிந்து ஆண்டவனை உணர்வதற்கான ஸ்ரீபாஷ்யத்தை வழங்கியதும் அவரது கருணையே. உறங்காவில்லி தாஸருக்கு அரங்கனின் விழிகளைக் காட்டி அருள் புரிந்ததும் அவரது கருணையே. திருக்குறுங்குடியில் திருமாலுக்கே திருஉபதேசம் வழங்கியதும் அவரது கருணையே.

திருவரங்கம், காஞ்சிபுரம் மட்டுமின்றி, திருமலை, திருநாராயணபுரம், கூர்மக்ஷேத்திரம் உட்பட பல இடங்களுக்குப் பயணம் செய்ததும் அவரது கருணையே. சிவ பக்தனான சோழ மன்னனிடம் அச்சம் கொண்டதுபோலச் செயல்பட்டு வெள்ளை உடையில் வெளியே சென்றதும் அவரது கருணையே. தமது ஆதிசேஷ தன்மையை வெளிப்படுத்தி ஆயிரம் ஜைனர்களுக்கு ஒரே நேரத்தில் பதிலளித்து பக்தர்களாக்கியதும் அவரது கருணையே. திருமண்ணிற்கு மத்தியில் மண்ணில் மறைந்திருந்த திருநாராயணப் பெருமாளை உலகிற்கு உளமாக்கியதும் அவரது கருணையே. இஸ்லாமிய இளவரசியையும் பெருமாளிடம் பெரும் பக்தி கொள்ளச் செய்து, தம் பெருமாளைச் செல்லப் பிள்ளையாக தில்லியிலிருந்து கொண்டு வந்ததும் அவரது கருணையே. கூரத்தாழ்வாருக்கு கண்கள் வழங்கியதும் அவரது கருணையே.

இவ்வாறு கருணையே வாழ்வாகக் கொண்ட இராமானுஜரை காரேய் கருணை இராமானுஜா!” என்று திருவரங்கத்து அமுதனார் போற்றுகிறார். அவரிடமிருந்து அக்கருணையின் சிறு துளியை நாமும் பெற்று, உலகெங்கிலும் கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காக கருணையுடன் தோன்றிய ஸ்ரீல பிரபுபாதரின் திருப்பணியைத் தொடர்வோமாக.

ஆளவந்தாரின் மூன்று விரல்கள் மூடியிருப்பதைக் கண்டு உறுதிமொழிகளை மொழிய இராமானுஜர் தயாராகுதல்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives