பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம் காண்டம், எட்டாவது அத்தியாயம்

சென்ற இதழில், பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றி கண்டோம், இந்த இதழில், ஸ்ரீமத் பாகவதம் குறித்த பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகளைக் காண்போம்.

ஸ்ரீமத் பாகவதத்தின் சிறப்பு

பரீக்ஷித் மகாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் விசாரித்தார்: “பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்ற நாரத முனிவர், யார் யாருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை விளக்கினார்? அற்புத சக்திகளைப் பெற்றுள்ள பகவானைப் பற்றிய வரலாறுகள், எல்லா கிரகவாசிகளுக்கும் நிச்சயமாக மங்களம் அளிப்பவையாகும்.

தங்களிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பதால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனதைப் பதிய வைக்க முடியும். இதனால் ஜட குணங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலையில், இவ்வுடலை என்னால் கைவிட முடியும்.

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரைவில் எழுந்தருள்வார். அவர் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சப்த அவதாரமாக தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், பேராசை முதலான அழுக்குகளைப் போக்கிவிடுகிறார்.

துன்பம் நிறைந்த ஒரு பிரயாணத்திற்குப் பின் வீட்டில் திருப்தியுடன் இருக்கும் ஒருவரைப் போல், தூய பக்தித் தொண்டில் ஈடுபடும் ஒருவர் பூரண திருப்தி அடைகிறார்.”

 

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

மேலும், ஸ்ரீமத் பாகவதத்தை விரிவாகக் கேட்கும் ஆவலுடன் அரசர் பின்வரும் கேள்விகளைக் கேட்டார்: “உன்னதமான ஆத்மா ஜடவுடலிலிருந்து வேறுபட்டது. அவன் தன் உடலைத் தற்செயலாகப் பெறுகிறானா? அல்லது ஏதேனும் காரணத்தால் பெறுகிறானா?

“பகவான் கர்போதகஷாயி விஷ்ணுவின் உடலுக்கும் சாதாரண ஜீவராசியின் உடலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பகவானின் உடலும் அவரது நாபியிலிருந்து பிறந்த பிரம்மாவின் உடலும் ஒரே தன்மை உடையனவையா? வேறானவையா? பரமாத்மாவைப் பற்றி விளக்கவும்.

“தேவர்கள், மனிதர்கள் போன்ற ஜீவராசிகளின் ஆயுட்காலத்தைப் பற்றியும் படைப்பிற்கும் அழிவிற்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றியும் விளக்கியருளுங்கள். ஜட இயற்கை குணங்கள் ஜீவராசிகளிடம் எவ்வாறு செயல்படுகின்றன? வெவ்வேறு கிரகங்கள் மற்றும் அவற்றில் வசிப்பவர்களின் படைப்பு, பராமரிப்பு மற்றும் அழிவு எவ்வாறு நிகழ்கின்றன?

“மஹாத்மாக்களின் குணங்கள் மற்றும் செயல்களை விளக்குங்கள், வர்ணாஷ்ரம முறையையும் விளக்குவீராக. வெவ்வேறு யுகங்கள், அவற்றின் ஆயுட்காலம் மற்றும் யுக அவதாரங்களைப் பற்றியும் விளக்கவும். மனித சமூகத்தில் பொதுவான சமய ஒற்றுமையை ஏற்படுத்துவது எது? மற்றும் துன்பத்தில் உள்ளவனுக்குரிய மதக் கடமை என்ன? படைப்பின் மூலப் பொருட்கள், அவற்றின் எண்ணிக்கை, காரணம், அவற்றின் வளர்ச்சி, அத்துடன் பக்தித் தொண்டின் முறை மற்றும் யோக சக்திகளின் முறை ஆகியவற்றை விளக்கியருளவும்.

“பக்குவமடைந்த யோகி முடிவாக உணர்வது என்ன? அவர் சூட்சும உடலிலிருந்து தன்னை எவ்வாறு பிரித்துக் கொள்கிறார்? வேத இலக்கியங்களின் அடிப்படை அறிவு என்ன? பக்தித் தொண்டாற்றுவதால் விளையும் நன்மை தீமைகள் யாவை? பிரளய காலத்தில் பகவானின் உடலில் ஐக்கியப்பட்டுள்ள ஜீவராசிகள், சிருஷ்டியின்போது எப்படி மீண்டும் படைக்கப்படுகின்றன? நாஸ்திகர்கள் எப்படி தோன்றுகின்றனர்? பந்தப்படாத ஜீவராசிகள் எவ்வாறு வாழ்கின்றனர்?

“சுதந்திரமுள்ள பகவான் அவரது அந்தரங்க சக்தியின் மூலமாக லீலைகளை அனுபவிக்கிறார். அழிவுக் காலத்தில், சாட்சியாக அவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இதைப் பற்றியும் விளக்கவும்.”

பரீக்ஷித் மகாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் ஸ்ரீமத் பாகவதத்தினைத் தொடர்ந்து கேட்டல்

பரீக்ஷித் மகாராஜரின் உறுதி

இவ்வாறு கேள்விகள் கேட்ட அரசர் தொடர்ந்து கூறினார்: “மகா முனிவரே, நீங்கள், முதல் ஜீவராசியான பிரம்மாவிற்கு நிகரானவர். கடல் போன்ற தங்கள் பேச்சிலிருந்து பெருகியோடும் பரம புருஷரின் அமிர்தம் போன்ற செய்தியை நான் பருகிக் கொண்டிருப்பதால் எனது உபவாசத்தின் காரணமாக எவ்விதமான சோர்வையும் நான் உணரவில்லை.”

இதைக் கேட்டு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பூரண திருப்தி அடைந்தார். பகவத் விஞ்ஞானமான ஸ்ரீமத் பாகவத புராணம் வேதங்களுக்கு சமமானதென்றும், பிரம்மா பிறந்தபொழுது அவருக்கு பகவானாலேயே உபதேசிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். பாண்டுவின் வம்சத்தில் மிகச் சிறந்தவரான பரீக்ஷித் மகாராஜர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கத் துவங்கினார். அடுத்த அத்தியாயத்திலிருந்து அப்பதில்களை நாம் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives