ஆத்மாவை விஞ்ஞானபூர்வமாக அறிதல்

ஆத்மாவை விஞ்ஞானபூர்வமாக அறிதல்

1973ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இலண்டன் ஹரே கிருஷ்ண மையத்தில் தெய்வத்திரு

அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் இந்திய மருத்துவர் ஒருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்.

 

 

மருத்துவர்: ஆத்மா இருக்கிறதென்பதை உங்களால் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியுமா? நான் சொல்வது என்னவென்றால், இது முழுக்கமுழுக்க நம்பிக்கைதானா அல்லது…

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. இது விஞ்ஞானபூர்வமான உண்மை. எங்களது விஞ்ஞானம் பக்குவமானது. ஏனெனில், கிருஷ்ணர் என்னும் பக்குவமான மூலத் திலிருந்து நாங்கள் அறிவைப் பெறுகிறோம். மாறாக, விஞ்ஞானிகளின் அறிவு பக்குவமற்ற மூலத்திலிருந்து பெறப்படுவதால், நவீன கால பெயரளவு விஞ்ஞானம் பக்குவமற்றதாகும். நீங்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருப்பினும், உங்களது புலன்கள் குறைபாடுடையவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மருத்துவர்: ஆம்.

ஸ்ரீல பிரபுபாதர்: குறைபாடுகளுடைய புலன்களால் குறைபாடுடைய அறிவையே தர முடியும். விஞ்ஞான அறிவு என்று நீங்கள் கூறுவது போலியாகும். ஏனெனில், அந்த அறிவினை உண்டாக்கிய மனிதர்கள் குறையுடையவர்கள். குறையுள்ள மனிதர்களிடமிருந்து குறையற்ற அறிவை எவ்வாறு பெற முடியும்?

மருத்துவர்: இது தரத்தைப் பற்றிய கேள்வி.

ஸ்ரீல பிரபுபாதர்: என்னுடைய கருத்து என்னவெனில், உங்களால் குறையற்ற அறிவைத் தர முடியாத நிலையில், உங்களிடமிருந்து அறிவைப் பெறுவதால் என்ன பயன்?

மருத்துவர்: சரி, இக்கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆத்மா இருப்பதை நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: குறையற்ற மூலமாகிய கிருஷ்ணரிடமிருந்தோ, கிருஷ்ணரின் வார்த்தை களை திருப்பிச் சொல்லும் கிருஷ்ணரின் பிரதிநிதியிடமிருந்தோ தகவல்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவையே எங்களது சாட்சிகள். ஏவம் பரம்பரா-ப்ராப்தம், தெய்வீக ஞானம் குரு சீடப் பரம்பரையின் மூலமாகப் பெறப்பட வேண்டும்.” நாங்கள் அயோக்கியனிடமிருந்து வரும் அறிவை ஏற்பதில்லை; முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரி டமிருந்து வரும் அறிவையே ஏற்கிறோம். நான் ஓர் அயோக்கியனாக இருக்கலாம், ஆனால் பக்குவமான நபரிடமிருந்து ஞானத்தைப் பெற்று அதை அப்படியே திருப்பிச் சொல்வதால், நான் சொல்பவை அனைத்தும் பக்குவமானவை.

குழந்தை அறியாத அப்பாவியாக இருக்கலாம். ஆனால் அக்குழந்தை ஒரு பொருளை மேஜை என கற்றறிந்து, அப்பா, இஃது ஒரு மேஜை,” என்று சொல்லும்போது, அதனுடைய வார்த்தைகள் பக்குவமானவை. அதுபோல பக்குவமான நபரிடமிருந்து கேட்டு, அதில் நம்பிக்கை வைத்தால், உங்கள் அறிவு பக்குவமானதாகும். ததா தேஹாந்தர-ப்ராப்தி:, மரணத்திற்குப் பிறகு ஆத்மா மற்றொரு ஜடவுடலில் நுழைகிறது,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். நாங்கள் அதனை ஒப்புக்கொள்கிறோம். பக்குவமற்ற பெயரளவு விஞ்ஞானிகளிடமிருந்து இதற்கு எங்களுக்கு ஆதாரம் தேவையில்லை.

மருத்துவர்: எனவே, நம்பிக்கை என்னும் கேள்வி முதலில் எழுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: இது வெறும் நம்பிக்கையல்ல, உண்மை.

மருத்துவர்: இருக்கலாம், ஆனால் அந்த உண்மையை நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் அதைச் சொல்கிறார். அதுவே நிரூபணம்.

மருத்துவர்: (ஏளனமாக) இது கிருஷ்ணரால் சொல்லப்பட்டது.” ஆனால்…

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே எங்களது வேத சாட்சி. நாங்கள் ஏதாவது சொல்லும்போது, அதை ஆதரிக்கும் வேத இலக்கியத்தை உடனடியாக மேற்கோள் காட்டுகிறோம். இதுவே எங்களது நிரூபண முறை, இது நீதிமன்றத்தில் வாதிடுவதைப் போன்றது. வக்கீல் ஒருவர் நீதிமன்றத்தில் வாதாடும்போது, அவர் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவது மரபு. அப்போதுதான் அவரது வாதம் சட்ட நிரூபணமாக நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படும். அதுபோலவே நாங்கள் ஏதாவது சொல்லும்போது வேத இலக்கியத்தின் ஆதாரத்தை உடனடியாகக் குறிப்பிடுகிறோம். ஆன்மீக விஷயங்களை நிரூபிப்பதற்கு இதுவே முறையான வழி. இல்லையெனில் சாஸ்திரங்கள் (சமய நூல்கள்) எதற்காக உள்ளன? அவை மனக் கற்பனையால் உருவானவையாக இருப்பின், அப்புத்தகங்களின் பயன்தான் என்ன? வேத இலக்கியங்கள் பூரண உண்மையை தக்க தர்க்கங்களுடனும் ஆதாரங்களுடனும் தெரிவிக்கின்றன என்பதையும் நாம் உணர வேண்டும். உதாரணமாக, பகவத் கீதையில் (2.13) கிருஷ்ணர் கூறுகிறார்:

தேஹினோ  யதா தேஹே

கௌமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹாந்தர-ப்ராப்திர்

தீரஸ் தத்ர ந முஹ்யதி

ஆத்மா தனது உடலை குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக்கும், பின்னர் இளமையிலிருந்து முதுமைக்கும் மாற்றுகின்றது. அதுபோன்று மரணத்தின்போது ஆத்மா வேறு உடலினுள் நுழைகின்றது.” இஃது எதார்த்தமானதாக இல்லையா? இது விஞ்ஞானபூர்வமானது. அறிவாளிகளுக்கு இது விஞ்ஞானபூர்வமான ஆதாரம். இவ்விளக்கத்திற்கு பிறகும் ஒருவன் அறிவின்றி மந்தமாக இருந்தால் என்ன செய்ய இயலும்?

மருத்துவர்: ஆனால் கண்ணுக்குப் புலப்படாத நிலையில், ஆத்மா இருக்கிறது என எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏதேனும் ஒன்று கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் மட்டும், அஃது இருப்பதை நம்மால் அறிந்துகொள்ள இயலாது என்று பொருளல்ல. மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றால் ஆன சூட்சும உடல்கூட உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை, ஆனால் சூட்சும உடல் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர். நமக்கு இருவிதமான உடல்கள் உள்ளன: (1) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றினால் ஆன ஸ்தூல உடல்; (2) மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றினால் ஆன சூட்சும உடல். நிலம், நீர் முதலியவற்றால் உருவாக்கப்பட்ட ஸ்தூல உடலை உங்களால் காண முடியும், ஆனால் சூட்சும உடலை உங்களால் காண முடியுமா? மனதை உங்களால் காண முடியுமா? அல்லது உங்கள் புத்தியைத்தான் காண முடியுமா? இருப்பினும், உங்களுக்கும் மனம் உண்டு, எனக்கும் மனம் உண்டு என்பதை அனைவரும் அறிவார்கள்.

மருத்துவர்: இவை கிரகித்து உணரக்கூடியவை, தாங்களும் அறிவீர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. கிரகிக்கப்படுபவை அல்ல, சூட்சுமமானவை, இவற்றைப் பார்க்கக்கூடிய கண்கள் உங்களிடம் இல்லை.

மருத்துவர்: உம். புத்தியைப் பற்றி அறிய தற்போது மூன்று முறைகள் உள்ளன.

ஸ்ரீல பிரபுபாதர்: எப்படியிருப்பினும், சூட்சும உடலை உங்களால் காண முடியாவிட்டாலும், அஃது இருக்கின்றது என்பதை நீங்கள் ஏற்கின்றீர்கள். இதுவே என்னால் சுட்டிக்காட்டப்படும் கருத்து. அதுபோல நீங்கள் பார்க்க முடியாவிட்டாலும், ஆத்மா இருப்பது உண்மையே. ஆத்மாவானது சூட்சும, ஸ்தூல உடல்களால் மறைக்கப்பட்டுள்ளது. ஸ்தூல உடலின் அழிவே மரணம் என்று அறியப்படுகிறது. அழியாமல் நிற்கும் சூட்சும உடல், ஆத்மாவை அடுத்த இடத்திற்குக் கொண்டுச் செல்கிறது. அங்கு அவன் தனது மனதின் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஏற்ற ஸ்தூல ஜடவுடலை மீண்டும் வளர்க்கின்றான்.

ஆங்கிலேய விருந்தினர்: சூட்சும உடலும் ஆத்மாவும் ஒன்று என்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. ஆத்மாவானது சூட்சும உடலிலிருந்து வேறுபட்டதாகும். ஆத்மா மனதைக் காட்டிலும் சூட்சுமமானது. இவையனைத்தும் பகவத் கீதையில் (3.42) விளக்கப்பட்டுள்ளன:

இந்த்ரியாணி பரான்யாஹுர்இந்த்ரியேப்ய: பரம் மன:

மனஸஸ் து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ் து ஸ:

முதலில் நாம் நமது வெளிப்புற அறிவின்படி, உடலின் புலன்களை மட்டுமே அறிகின்றோம். விலங்குகளைப் போன்றவர்கள் புலன்களே எல்லாம் என நினைக்கின்றனர். புலன்கள் மனதால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது. ஒருவனின் மனம் பேதலித்துவிட்டால், அவனது புலன்கள் செயல்பட முடியாது; அவன் பைத்தியமாகிறான். எனவே, மனமே புலன்களைக் கட்டுப்படுத்துகிறது. மனதைவிட மேலானது புத்தியாகும். புத்தியைவிட உயர்வானது ஆத்மாவாகும்.

நம்மால் மனதையும் புத்தியையும்கூட பார்க்க முடியவில்லை. அப்படியிருக்க ஆத்மாவை எவ்வாறு பார்க்க முடியும்? அவ்வாறு பார்க்க முடியாவிடினும், ஆத்மா இருப்பதும், அதற்கென்று ஓர் அளவு இருப்பதும் உண்மையே. மேலும், ஆத்மாவைப் பற்றிய அறிவு ஒருவனுக்கு இல்லையெனில், அவன் மிருகத்தைவிட மோசமானவன் ஆவான். ஏனெனில், அவன் தன்னைத் தனது ஸ்தூல, சூட்சும உடல்களால் அடையாளப்படுத்திக் கொள்கின்றான்.

 

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment