கிருஷ்ணரின் மூலமாக அறிவைப் பெறுவோம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

 

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோள் அனைத்து உயிர்வாழிகளையும் தங்களது உண்மையான உணர்விற்குக் கொண்டு வருவதாகும். இந்த பௌதிக உலகிலுள்ள அனைத்து உயிர்வாழிகளும் ஒருவகையான அறியாமையால் துன்பப்படுகிறார்கள். அந்த பௌதிக நோயை குணப்படுத்தி அனைவரையும் மீண்டும் தங்களது உண்மையான உணர்விற்குக் கொண்டு வருவதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும்.

நமது உண்மையான உணர்வு

“பேய் பிடித்த மனிதன் முட்டாள்தனமாகவே பேசுவான், அதுபோல ஜட இயற்கையினால் பீடிக்கப்பட்டுள்ள அனைவரும் என்ன பேசினாலும் அது முட்டாள்தனமாகவே இருக்கும்,” என்று ஒரு வங்காள கவிஞர் கூறியுள்ளார். ஒருவன் சிறந்த தத்துவவாதியாக அல்லது விஞ்ஞானியாக கருதப்படலாம்; ஆனால் அவன் மாயை என்னும் பேயினால் பீடிக்கப்பட்டிருந்தால், அவனது ஆராய்ச்சி, பேச்சு என அனைத்தும் ஏறக்குறைய அபத்தமானதாகும். மனோவியல் மருத்துவர் ஒருவர் ஒரு கொலையாளியை சோதனை செய்ய நேர்ந்தபோது, தன்னால் சோதிக்கப்படும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பைத்தியக்காரர்களே என்று அறிவித்தார். அதாவது, இந்த பௌதிக உலகத்தில் நிதான புத்தியுள்ள ஒருவனைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும்.

கிருஷ்ண உணர்வு என்னும் தங்களுடைய உண்மையான உணர்விற்கு மனிதர்களை கொண்டு வருவதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோளாகும். மேகத்திலிருந்து விழும் நீர் தூய்மையானது, ஆனால் அது நிலத்தைத் தொட்டவுடன், நிறம் மாறி சேறும் சகதியுமாக ஆகிவிடுகிறது. அதே போல, கிருஷ்ணரின் அங்கத் துணுக்குகளான நாம் உண்மையில் தூய்மையான ஆத்மாக்கள். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்:

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத: ஸனாதன:

மன: ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

 “இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர், கட்டுண்ட வாழ்வின் காரணத்தால் மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.” (பகவத் கீதை 15.7)

கிருஷ்ணர் என்றால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் முழுமுதற் கடவுள் என்று பொருள். தங்கத்தின் சிறு துணுக்கும் தங்கமே என்பதால், கிருஷ்ணருடைய மிகச்சிறிய அங்க துணுக்குகளான நாமும் குணத்தின் அடிப்படையில் கிருஷ்ணருக்கு சமமானவர்களே. இறைவனின் உடலும் உயிர் வாழிகளின் உண்மையான ஆன்மீக உடலும் ஒரே ஆன்மீக இயற்கையைக் கொண்டவையாகும். எனவே, களங்கமற்ற நிலையில் கடவுளைப் போன்ற உடலைப் பெற்றிருந்த நாம், மழை நீர் நிலத்தில் விழுவதுபோல, கிருஷ்ணரின் புறசக்தியான பௌதிக சக்தியால் ஆதிக்கம் செய்யப்படுகின்ற இந்த பௌதிக உலகத்தோடு தொடர்பு கொண்டுள்ளோம்.

இயற்கை கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில்

பௌதிக இயற்கையைப் பற்றி பேசும் போது, “யாருடைய சக்தி? யாருடைய இயற்கை?” என்ற கேள்வி எழலாம். பௌதிக சக்தியோ இயற்கையோ தனித்துச் செயல்படுவதில்லை. அது தனித்து செயல்படுகிறது என்னும் எண்ணம் தவறானதாகும். முட்டாள் ஒருவன் ஓர் இயந்திரத்தைப் பார்த்து, அது தானாக இயங்குகிறது என்று நினைப்பான். ஆனால் அது தானாகவா இயங்குகிறது? அதற்கு ஓர் ஓட்டுனர் இருக்கிறார், அவர் அதனைக் கட்டுப்படுத்துகிறார். ஆகவே, நமது குறைபாடுள்ள பார்வையினால் இயந்திரத்திற்கு அப்பால் உள்ள தொழில்நுட்ப வல்லுநரைக் காண முடிவதில்லை. இயந்திரம் முழுமையாகத் தோன்றலாம். ஆனால், அஃது ஓர் ஆத்மாவால் கையாளப்படாவிட்டால் வேலை செய்யாது. அதுபோல, இயற்கை என்னும் சிறந்த இயந்திரத்திற்குப் பின்னே கடவுள் கிருஷ்ணர் இருக்கிறார். இதனை நாம் உணர வேண்டும். இது பகவத் கீதையில் (9.10) உறுதி செய்யப்படுகிறது.

அசைகின்ற உயிரினங்கள் (மனிதர்கள், மிருகங்கள், மற்றும் புழு பூச்சிகள்), அசையாத உயிரினங்கள் (மரங்கள் மற்றும் மலைகள்) என இருவகையான உயிரினங்கள் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்துகின்ற பௌதிக இயற்கையானது தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதாக கிருஷ்ணர் கூறுகிறார். இவ்வாறாக, ஒவ்வொன்றின் பின்னும் ஓர் இயக்குநர் உள்ளார். இதனை அறிவு பற்றாக்குறையின் காரணத்தினால் தற்போதைய நாகரிகத்தினால் புரிந்துகொள்ள முடிவதில்லை. பௌதிக இயற்கையின் ஆதிக்கத்தினால் முட்டாள்களாக்கப்பட்ட மக்களுக்கு அறிவூட்டுவதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். வேறுவிதமாக கூறினால், மனிதர்களைத் தங்களது இயற்கையான நிலைக்குத் தட்டி எழுப்புவதே எங்களுடைய குறிக்கோள்.

ஒரு மனிதன் இறக்கும்போது ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. அதனை மறுபடியும் பழைய இடத்திலேயே வைக்கும் தொழில் நுட்பம் எங்கே?

ஆத்மாவின் அறிவு எங்கே?

அநேக பல்கலைக் கழகங்களும் கல்வி நிலையங்களும் உள்ளன. ஆனால் அங்கே இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. பகவத் கீதையில் கிருஷ்ணர் கொடுக்கும் அறிவு, வேறு எங்கேனும் உள்ளதா? ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் நான் உரையாற்றியபோது, சில அறிவுள்ள மாணவர்கள், “இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஆராய்கின்ற தொழில்நுட்பம் எங்கே?” என்று கேட்டார்கள். ஒரு மனிதன் இறக்கும்போது ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. அதனை மறுபடியும் பழைய இடத்திலேயே வைக்கும் தொழில் நுட்பம் எங்கே? விஞ்ஞானிகள் ஏன் இந்த பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யக் கூடாது? ஏனெனில், இது அவர்களுக்கு மாபெரும் தலை வலியைத் தருகின்ற விஷயம். ஆகையால், அவர்கள் இதை விட்டுவிட்டு, சாப்பிடுவது, தூங்குவது, பாதுகாப்பது, உடலுறவு போன்ற தொழில்நுட்பத்தில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

இது மிருகங்களின் தொழில் நுட்பம் என்று வேத இலக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. மிருகங்களும் தங்களுக்கான உணவைத் தேடுகின்றன, அமைதியாக உறங்குகின்றன, உடலுறவும் வைத்துக்கொள்கின்றன, தங்களைத் தாங்களே பாதுகாத்தும் கொள்கின்றன. அப்படியெனில், மனிதனின் அறிவிற்கும் மிருகத்தின் அறிவிற்கும் என்ன வித்தியாசம்? மனித அறிவானது, இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஆராய்வதற்கானதாகும். ஆத்மாவைப் பற்றிய அந்த அறிவை பகவத் கீதையின் ஆரம்பத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கினார்.

இந்த உடலுக்கு ஓர் உரிமையாளர் இருக்கிறார் என்பதை பகவத் கீதை நமக்குத் தெரிவிக்கிறது. “என்னுடைய கை” என்று நான் கூறுகிறேன். “நான் கை” என்று கூறுவதில்லை. இந்தக் கை என்னுடையதாக இருப்பதாலும், நான் அதற்கு சொந்தக்காரனாக இருப்பதாலும், நான் இந்தக் கையிலிருந்து மாறுபட்டவன். அப்படியெனில், நான் எங்கே இருக்கிறேன்?–இந்த கேள்விக்கானப் பதிலை ஆராய்வதே யோக முறையாகும். இத்தகைய கேள்விகளுக்கு எவ்வித பௌதிக முயற்சியாலும் விடை காண முடியாது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்தக் கேள்விகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. “இது மிகவும் தொந்தரவான விஷயம்,” அல்லது “இது சம்பந்தமில்லாத விஷயம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால் பொறியியல் நிபுணர்கள் அனைவரும் தங்களது கவனத்தை வாகனங்கள் மற்றும் விமானங்களை ஏற்படுத்துவதில் ஈடுபடுத்துகிறார்கள்.

ஜட சக்தியின் இயக்கத்திற்குப் பின்னால் கிருஷ்ணர் உள்ளார் என்பதை கீதையின் மூலமாக எளிதில் உணரலாம்.

கிருஷ்ணரே ஆளுநர்

முன்பெல்லாம் சரக்குகள் கொண்டுவர குதிரைகள் இருந்தன, காற்று மண்டலத்தை அசுத்தப்படுத்தும் விமானங்களும் ராக்கெட்டுகளும் கிடையாது. ஆனால் தற்போது கார்களும் ராக்கெட்டுகளும் இருப்பதால், “குதிரைகளற்ற பயணத்தினை ராக்கெட்டுகளால் கண்டுபிடித்துள்ளோம்” என்று விஞ்ஞானிகள் தம்பட்டம் அடிக்கிறார்கள். போலிப் பறவைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ள போதிலும், ஆத்மா இல்லாத மனிதனை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆத்மா இல்லாமல் எந்த இயந்திரமும் செயல்பட முடியாது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கணிப்பொறியைக் கையாள்வதற்குக் கூட ஒரு மனிதன் தேவைப்படுகிறான். அதுபோல, மிகச்சிறந்த இயந்திரமான இந்த பிரபஞ்சத்தினை மிகத் திறமையாக இயக்கும் உயர்ந்த ஆத்மாவே கிருஷ்ணர். விஞ்ஞானிகள் இந்த பௌதிக உலகத்தின் இறுதியான காரணத்தை அறிவதற்காக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளனர். ஆனால் உண்மையான அறிவு மிகமிக சுலபமானதும் பூரணமானதும் ஆகும். பூரண நபரான கிருஷ்ணரிடமிருந்து நாம் காது கொடுத்துக் கேட்டறிந்தால் போதும். பகவத் கீதையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிவை ஏற்பதன் மூலம், பூமியை ஒரு பாகமாகக் கொண்ட மிகச்சிறந்த இயந்திரமான இந்த பிரபஞ்சம் மிக அருமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், அதற்கு காரணம் பிரபஞ்சத்திற்குப் பின்னால் ஓர் இயக்குநர் உள்ளார் என்றும், அந்த இயக்குநரே கிருஷ்ணர் என்றும் உடனடியாக அறிந்துகொள்ளலாம்.

எங்களுடைய அறிவு முறை மிக மிக சுலபமானதாகும். கிருஷ்ணருடைய உபதேசமாகிய பகவத் கீதை அறிவின் அடிப்படை புத்தகமாகும். ஏனெனில், இஃது ஆதிபுருஷர் என்று அறியப்படும் முழுமுதற் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பூரணமான நபர். கிருஷ்ணரை நாங்கள் பூரணமான நபராக ஏற்கின்றோம். கிருஷ்ணர் பூரணமான நபர் என்பது பல்வேறு ஆச்சாரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாங்கள் இதனை வெறும் அபிப்பிராயத்தின்படி ஏற்கவில்லை. அனைத்து வேத இலக்கியங்களுக்கும் ஆசிரியரான வியாஸரைப் போன்ற வல்லுநர்களால், கிருஷ்ணர் கடவுளாக ஏற்கப்பட்டிருக்கிறார். அறிவுப் பொக்கிஷம் வேதங்களில் உள்ளது, அதன் ஆசிரியர் வியாஸர். அவர் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். வியாஸரின் ஆன்மீக குரு நாரதர், அவரும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்கிறார். நாரதரின் ஆன்மீக குரு பிரம்மா, அவர் கிருஷ்ணரை முழுமுதற் கடவுள் என்று கூறுவது மட்டுமின்றி, கட்டுப்படுத்துபவர்களில் தலைசிறந்தவர் என்றும் ஏற்றுக்கொள்கிறார். ஈஸ்வர: பரம க்ருஷ்ண: “கிருஷ்ணரே கட்டுப்படுத்துபவர்களில் மிகவுயர்ந்தவர்.”

குரு பரம்பரையை ஏற்போம்

மிகப்பிரம்மாண்டமான இந்த பௌதிக இயற்கைக்கு பின்னே முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் இருக்கிறார் என்பதை ஆச்சாரியர்கள் கூறியதன் அடிப்படையில் நாம் அறிய வேண்டும். அனைத்து வேத இலக்கியங்களும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்கின்றன. ஆச்சாரியர்களை ஏற்பது என்பது புதிதல்ல. ஒவ்வொருவருமே ஏதேனும் ஓர் அதிகாரியை ஏற்கிறார்கள். படிப்பைப் பொறுத்தவரை, ஓர் ஆசிரியர், பள்ளி, அல்லது தாய் தந்தையரிடமிருந்து நாம் பாடங்கள் பயில்கிறோம். அவர்கள் அனைவரும் நமக்கு குருவே. பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதே நமது இயற்கையாகும். நமது குழந்தைப் பருவத்தில், “அப்பா இஃது என்ன?” என்று நாம் கேட்கிறோம், “இஃது ஒரு பேனா, மேஜை, மூக்குக் கண்ணாடி” என்று தந்தை நம்மிடம் கூறுகிறார். வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே நாம் விஷயங்களைக் கேட்டு அறிந்து வருகிறோம். ஒரு நல்ல பெற்றோர்கள் தங்களுடைய மகன் கேள்வி கேட்கும்போது ஏமாற்ற மாட்டார்கள், சரியான பதிலையே கூறுவார்கள். அதே போல, ஆன்மீக விஷயங்களைப் போலியான குருவிடம் இருந்து கேட்காமல், உண்மையான ஆன்மீக குருவிடமிருந்து கேட்போமானால், நமது அறிவு பக்குவமானதாகும். நமது சொந்த மனக்கற்பனையினால் தீர்மானிக்க முயற்சி செய்தால், நாம் தவறு செய்து விடுவோம். நாமும் நமது அனுபவமும் குறைபாடுகள் கொண்டவை என்பதால், அவை எப்போதும் பக்குவமற்ற நிலையிலேயே இருக்கும்.

நாம் பரிபூரண மூலமான கிருஷ்ணரிடமிருந்து தகவல்களைப் பெற்று, அவற்றை அப்படியே பிறருக்குக் கூறினால், நாம் கூறுபவை அனைத்தும் பக்குவமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும். கிருஷ்ணரிடமிருந்து, அல்லது கிருஷ்ணரை ஏற்று கிருஷ்ணர் கூறியதை அப்படியே கூறும் அதிகாரிகளிடமிருந்து கேட்கும் வழிமுறை, குரு சீட பரம்பரையில் கேட்டல் எனப்படுகிறது; மிகச்சிறந்த இந்த அறிவு முறையினை பகவத் கீதையில் கிருஷ்ணர் சிபாரிசு செய்கிறார். ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:, இந்த உன்னத விஞ்ஞானம் குரு சீட பரம்பரை மூலமாகப் பெறப்பட்டு, புனிதமான அரசர்கள் இவ்வழியிலேயே இதை அறிந்தார்கள்.” (பகவத் கீதை 4.2)

நமக்குப் பொருத்தமான யோக முறை

பக்தர்களும் சிறந்த பண்டிதர்களுமே முன்பு அரசர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்களது ஆட்சி மிக அருமையாக இருந்திருக்கிறது. கடவுளின் பக்தராக இருந்து பக்குவத்தை அடைந்த அரசர்களைப் பற்றி வேதத்தில் அநேக உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக, துருவ மகாராஜன் கடவுளைத் தேடிக் காட்டிற்குச் சென்றார். அங்கே கடின தவத்தினால் ஆறே மாதத்தில் கடவுளைக் கண்டார். அவர் ஐந்து வயது இளவரசனாக இருந்தபோதிலும், தனது முயற்சியில் அவர் வெற்றி கண்டார். ஏனெனில், அவர் தனது ஆன்மீக குருவான நாரத முனிவரின் உபதேசங்களைப் பின்பற்றினார். காட்டில் துருவ மகாராஜன் முதல் மாதத்தில் மூன்று நாளைக்கு ஒருமுறை காய்கனிகளையுமே உண்டு வாழ்ந்தார். அதன்பிறகு ஆறு நாட்களுக்கு ஒரு முறை நீர் அருந்தி வாழ்ந்தார். கடைசியாக அவர் தனது உள்மூச்சை அடக்கி ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தார். இத்தகைய தவங்களுக்கு பிறகு கடவுள் அவர் முன்னே நேருக்கு நேர் தோன்றினார்.

தற்போதைய கலி யுகத்தில், இத்தகைய கடினமான யோகப் பயிற்சிகள் நமக்குத் தேவையில்லை. வேத வல்லுநர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் நாமும் கடவுளை நேருக்கு நேர் காணலாம். இதுவே பக்குவமான வாழ்வாகும். கிருஷ்ண உணர்வு முறை சற்று கடினமானதாக இருக்கலாம், ஆனால் இது மிகவும் கடினமானது அல்ல. சாப்பிடுவதிலும் உடலுறவு முறையிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யப்பட்ட உணவை பிரசாதமாக ஏற்க வேண்டும். மேலும், தவறான பாலுறவைக் கைவிட்டு திருமணம் என்னும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும். ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்காக வேறு சில நியமங்களும் உள்ளன. துருவ மகாராஜனைப் போல தற்காலத்தில் யாரும் யோகத்தைப் பின்பற்ற முடியாது. ஆனால் குறிப்பிட்ட அடிப்படை வேத நியமங்களைப் பின்பற்றினால், ஆன்மீக உணர்வாகிய கிருஷ்ண உணர்வில் நாம்  முன்னேற்றம் அடையலாம். எந்த அளவிற்கு நாம் முன்னேறுகிறோமோ அதே அளவிற்கு அறிவிலும் பக்குவம் அடைவோம். நமது அடுத்தபிறவி என்ன என்று சொல்லத் தெரியாத விஞ்ஞானியாகவோ தத்துவவாதியாகவோ மாறுவதால் என்ன பிரயோஜனம்? கிருஷ்ண உணர்வை அறிந்த ஒருவன், அடுத்த பிறவி என்ன? கடவுள் யார்? ஆத்மா என்றால் என்ன? கடவுளுடன் ஆத்மாவிற்கு என்ன தொடர்பு? போன்றவற்றை மிகச் சுலபமாக கூறுவான். அவனது அறிவு பக்குவமானதாகும்! ஏனென்றால், அந்த அறிவு, பூரண அறிவான ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.

எளிமையான கிருஷ்ண உணர்வு

இதுவே கிருஷ்ண உணர்வு முறை. இது மிகவும் சுலபமானது. ஒருவர் இதை ஏற்று தனது வாழ்க்கையை பக்குவமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். “எனக்கு படிப்பறிவு கிடையாது. என்னால் புத்தகங்களைப் படிக்க முடியாது,” என்று ஒருவர் கூறலாம், இருக்கட்டுமே. இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து அவர் தனது வாழ்க்கையைப் பக்குவமானதாக ஆக்கிக் கொள்ளலாம். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.

கிருஷ்ணர் நமக்கு நாக்கையும் காதுகளையும் கொடுத்துள்ளார். இதன் மூலம் கிருஷ்ணரை அறிந்துகொள்ள முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். கிருஷ்ணரைப் பற்றி உச்சரிப்பதால் நாக்கை அடக்க நாம் கற்கிறோம். நாக்கு அடங்கியவுடன் இதர புலன்கள் அனைத்தும் கட்டுப்படுகின்றன. அனைத்துப் புலன்களிலும் நாக்கை அடக்குவதே மிகவும் கடினமானதாகும். இருப்பினும், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதாலும் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்பதாலும் அதனை அடக்க முடியும்.

துரதிர்ஷ்டவசமாக, உலகிலுள்ள ஒவ்வொருவரும் புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். நல்லதோர் அதிகார சக்தியை ஏற்க மனிதன் மறுக்கிறான். ஆனால் அவனது புலன்கள் எங்கெங்கெல்லாம் அவனை இழுத்துச் செல்கிறதோ, அதைக் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறான். இதைவிட மேலும் ஒரு பரிதாப நிலை ஏது? சுதந்திரம் என்று நாம் தவறாக உரிமை கொண்டாடுவது முட்டாள்தனம். நாம் அனைவரும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம், ஆனால் நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று பெருமையாக கூறுகிறோம். இதுவே மாயை. கிருஷ்ணரின் அதிகாரம் அல்லது புலன்களின் அதிகாரம்–இதனைத் தேர்ந்தெடுக்க நமக்கு பூரண சுதந்திரம் உள்ளது. சிறந்த இறுதியான அதிகாரி கிருஷ்ணரே, அவர் நமது நிரந்தர நன்மையை விரும்புகிறார். ஏதேனும் ஓர் அதிகாரியை நாம் ஏற்க வேண்டும் என்னும் பட்சத்தில், ஏன் கிருஷ்ணரை ஏற்கக் கூடாது? பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கிருஷ்ணரின் பெருமைகளைக் கேட்டு, ஹரே கிருஷ்ண என்று அவரின் பெயரை உச்சரித்து, நமது வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்வோமாக.

துருவ மஹாராஜன் தனது கடுமையான தவத்தினால் பகவானின் தரிசனத்தைப் பெறுதல்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment