கொவ்வூர்

Must read

பகவானே பாடம் பயின்ற திருத்தலம்

வழங்கியவர்: பிரியதர்ஷினி ராதா தேவி தாஸி

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிரியமானவர்களோடு பிரியமான விஷயங்களை விவாதிக்க விரும்புகின்றனர். ஒத்த மனமுடையவர்களுடன் தங்களது எண்ணங்களையும் அந்தரங்க உணர்வுகளையும் பரிமாறிக்கொள்வதில் அனைவரும் இன்பம் காண்கின்றனர். இதே வகையான இன்பம் ஆன்மீக வாழ்விற்கும் பொருந்தும். ஆன்மீக இரகசியங்களை விவாதிப்பது பக்தர்களிடையே இருக்க வேண்டிய அன்பு பரிமாற்றத்தின் ஓர் அறிகுறி என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி கூறியுள்ளார். அத்தகு அன்புப் பரிமாற்றத்தின் தலைசிறந்த விவாதமாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கும் இராமானந்த ராயருக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தை கௌடீய வைஷ்ணவர்கள் போற்றுகின்றனர். அவர்களது விவாதம் கௌடீய வைஷ்ணவ தத்துவத்தின் மணிமகுடமாகும். அந்த விவாதம் இன்றைய ராஜமுந்திரி மாநகரத்தின் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள கொவ்வூர் எனப்படும் சிறு கிராமத்தில் நிகழ்ந்த காரணத்தினால், இந்த திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் பிரியமானதாகவும் முக்கியமானதாகவும் விளங்குகிறது.

2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பகவத் தரிசன சேவாதாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாத்திரையில் இந்தப் புனித ஸ்தலத்திற்குச் செல்லும் பாக்கியத்தைப் பெற்றேன். நாங்கள் அந்த யாத்திரையில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய பயணத்தின்போது விஜயம் செய்த ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரம், சிம்மாசலம், கொவ்வூர், மங்களகிரி ஆகிய திருத்தலங்களை தரிசித்து ஆன்மீக நன்மையை அடைந்தோம். பகவத் தரிசனத்தில் மங்களகிரி, சிம்மாசலம் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில், அந்த யாத்திரையில் என்னை மிகவும் கவர்ந்த திருத்தலமான கொவ்வூரைப் பற்றி எழுத விரும்பினேன். கொவ்வூரில் நிகழ்ந்த தெய்வீக விவாதத்தின் சுருக்கத்தினையும், அருகாமையில் உள்ள இதர கோயில்களையும் இங்கே விளக்குகிறேன்.

இராமானந்தரை மஹாபிரபு சந்தித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையைத் தொடங்கியபோது, ஸார்வபௌம பட்டாசாரியர் இராமானந்த ராயரை கோதாவரி நதிக்கரையில் சந்தித்து தங்களது கருணையை வழங்குங்கள்,” என்று ஸ்ரீ சைதன்யரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கோதாவரி நதியில் நீராடி விட்டு கரையிலிருந்து சற்று தொலைவில் அமர்ந்த மஹாபிரபுவிற்கு இராமானந்தரைச் சந்திப்பதற்கான ஆவல் அதிகரித்தது. அச்சமயத்தில் இராமானந்தர் அரச மரியாதையுடன் பிராமணர்கள் சூழ ஒரு பல்லக்கில் அங்கே வந்து நதியில் நீராடினார். அவர் இராமானந்தரே என்பதை உணர்ந்து அவரை ஓடிச் சென்று ஆலிங்கனம் செய்ய விரும்பியது மஹாபிரபுவின் மனம். இருப்பினும், சற்று பொறுமையுடன் அவர் அமர்ந்திருக்க, நீராடித் திரும்பிய இராமானந்தர் அபூர்வ சந்நியாசியைக் கண்டு உடனடியாக சாஷ்டாங்கமாக விழுந்தார்.

வந்தவர் இராமானந்தரா என மஹாபிரபு வினவ, அவர், ஆம், தங்களின் கீழான சேவகன், சூத்திர ஜாதியைச் சேர்ந்தவன்,” என்று கூறியபடி இராமானந்தர் பணிவுடன் நின்றார். மஹாபிரபு ஒரு சந்நியாசி, அன்றைய சமுதாய வழக்கத்தின்படி ஒரு சந்நியாசி ஒரு சூத்திரனைத் தீண்டக் கூடாது. ஆனால் மனிதர்களின் மாண்பினை மட்டும் நாடும் மஹாபிரபுவோ, அத்தகு சமுதாய வழக்கத்தினைச் சற்றும் கவனியாது, இராமானந்தரை மகிழ்ச்சியுடன் பலமாக அரவணைத்தார். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக, நிற்க இயலாது தரையில் விழுந்தனர், இருவரின் உடலிலும் மயிர்கூச்செறிந்தது, பரவசத்தில் உடல் நடுங்கியது, ஆனந்தத்தில் ஸ்தம்பித்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் சுற்றி இருப்பவர்களை நினைவுகூர்ந்த மஹாபிரபு தமது பரவசத்தினை மறைத்துக் கொண்டு, அவருடன் சகஜமாக உரையாடத் தொடங்கினார். மஹாபிரபுவின் தரிசனத்தினால் தாம் ஜன்ம சாபல்யம் பெற்றதாக கூறினார் இராமானந்தர். மஹாபிரபுவோ இராமானந்தரால் தமக்கு பிரேமை ஏற்பட்டதாகக் கூறினார்.

இராமானந்தரின் திருவாயிலிருந்து கிருஷ்ணரைப் பற்றி தாம் கேட்க விரும்புவதாகவும், அதன் பொருட்டு மாலை வேளையில் மீண்டும் வரும்படியும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவரிடம் கூறினார். மாலை தொடங்கி விடியவிடிய அவர்கள் கிருஷ்ணரைப் பற்றி உரையாடினர். இது பத்து நாள்களுக்குத் தொடர்ந்தது. இறுதியில், ராதா-கிருஷ்ணரின் இணைந்த ரூபமே தான் என்பதை மஹாபிரபு அவருக்கு வெளிப்படுத்தினார். அவர்களுடைய பத்து நாள் உரையாடல் பக்தி பரவசத்தின் உயர்நிலையை எடுத்துரைக்கும் பொக்கிஷமாக இன்று நமக்குக் கிடைக்கின்றன.

பொதுவாக பக்தன் பகவானிடமிருந்து கேட்பது வழக்கம். ஆனால், இங்கே பகவானே ஒரு மாணவனின் கதாபாத்திரத்தை ஏற்று பாடம் பயில்கிறார், இராமானந்த ராயரோ அவர் கேட்ட வினாக்கள் அனைத்திற்கும் விடையளித்து உபதேசிக்கிறார். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை எட்டாவது அத்தியாயத்தில் இதனை விளக்குகிறார். ஸ்ரீ சைதன்யர் ஆன்மீக உண்மைகள் அனைத்தையும் அறிந்த கடலைப் போன்றவர். அவர் ஒரு மேகமாகி இராமானந்த ராயரை பக்தி ரஸங்களின் அமிர்தத்தினால் நிரப்பினார். கடலிலிருந்து வந்த அதே அமிர்தத்தினை தெய்வீக ஞானத்தின் இரத்தினங்களாக இராமானந்த ராயர் மீண்டும் கடலில் பொழிந்தார். பகவத் கீதையில் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரிடமிருந்து கேட்கிறார். ஆனால் இங்கு அதே கிருஷ்ணர் தமது பக்தனிடமிருந்து கேட்கிறார். என்னே மகிமை! என்னே மகிமை!

மஹாபிரபுவும் இராமானந்தரும் சந்தித்ததன் நினைவாக ஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விக்ரஹங்கள்

இஸ்கான் ராஜமுந்திரி

அவர்களின் அந்த அரிய சந்திப்பு நிகழ்ந்த கொவ்வூர் கிராமம் இன்றைய ராஜமுந்திரி நகரத்திற்கு அருகில் இருப்பதால், நாங்கள் முதலில் அங்கே சென்றோம்.

சிம்மாசலத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டு ராஜமுந்திரியில், இஸ்கான் சார்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கோபிநாத தசாவதார கோயிலை அடைந்தோம். கோதாவரி நதிக்கரையில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் ரம்மியமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கோபிநாதர், ஸ்ரீ ஸ்ரீ ஜகந்நாத பலதேவ சுபத்ரா, ஸ்ரீ ஸ்ரீ  கௌர நிதாய், ஸ்ரீ பாலாஜி ஆகியோர் பிரதான விக்ரஹங்களாக வீற்றுள்ளனர். இக்கோயிலை வலம் வருகையில் தசாவதாரங்கள் மண்டபத்தில் வீற்றிருப்பதை தரிசிக்கலாம். பிரசாத உபசரிப்பு மிகவும் தடபுடலாக இருந்தது. ஸ்ரீல பிரபுபாதர் உத்யனம் என்னும் அழகிய தோட்டம் வண்ணவண்ண பூக்களால் நிரம்பியிருந்தது. கோயிலின் கீழ் தளத்தில் வேதக் கண்காட்சியும் சபைக் கூடமும் உள்ளது. கோயிலுக்கென்று ஒரு கோசாலையும் விருந்தினர் இல்லமும் உள்ளது. கோதாவரி நதி மிக அருகாமையில் உள்ளதால் நாங்கள் அங்கு சென்று நீராடினோம், மாலையில் அங்கிருந்து அருகிலுள்ள கௌடீய மடத்திற்குப் புறப்பட்டோம்.

இஸ்கான் ராஜமுந்திரியின் முகப்புத் தோற்றம்

ஸ்ரீ இராமானந்த கௌடீய மடம், கொவ்வூர்

இஸ்கான் ராஜமுந்திரியிலிருந்து பேருந்தில் கொவ்வூரை நோக்கிப் புறப்பட்டோம், கோதாவரி நதியின் மறுகரையிலுள்ள ஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்தை சுமார் 20 நிமிடத்திற்குள் அடைந்தோம். இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் ஆன்மீக குருவான தெய்வத்திரு பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் ஜுலை 10, 1932இல் இந்த மடம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ஸ்ரீ இராமானந்த ராயரும் சந்தித்த இடத்தை துல்லியமாகக் கண்டறிந்த பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அந்த இடத்தில், அவர்களுடைய விவாதத்தின் நினைவுச் சின்னமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருப்பாதச் சுவட்டினை நிறுவினார். அதனைத் தொடர்ந்து கௌடீய மடத்தின் ஒரு கிளையையும் அங்கே ஸ்தாபித்தார். இங்கே ஒரு சிறிய அறையில் ஸ்ரீ சைதன்யரும் இராமானந்த ராயரும் கிருஷ்ண உணர்வு தத்துவங்களை விவாதிப்பதைப் போன்ற விக்ரஹங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கோதாவரி பாய்ந்து கொண்டுள்ளாள். ஸ்ரீ ஸ்ரீ ராதா நயன அபிராமரும் கௌராங்க மஹாபிரபுவும் இக்கோயிலின் பிரதான விக்ரஹங்கள் ஆவர். அருமையான முப்பரிமாணம் காட்டும் ஒரு வண்ணக் காட்சியகங்களில் கிருஷ்ண லீலைகளும் கௌராங்க மஹாபிரபுவின் லீலைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மடத்தில் ஒரு சிறிய கோசாலையும் உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கிருந்து பலமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்துடன் அருகிலுள்ள ஸ்ரீ கோஷபாத க்ஷேத்திரத்தை அடைந்தோம்.

ஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்தின் முகப்புத் தோற்றம்

ஸ்ரீ கோஷ்பாத க்ஷேத்திரம்

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத மத்திய லீலை, 9 ஆவது அத்தியாயம், 14 ஆவது ஸ்லோகத்தின் பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் இவ்விடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்: கௌதமி-கங்கா என்பது கோதாவரி நதியின் ஒரு கிளையாகும். முன்பு கௌதம ரிஷி என்ற பெரும் முனிவர் இந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்தார்.” பகீரதர் கடுந்தவங்களைப் புரிந்து கங்கை நதியை இந்த பௌதிக உலகிற்கு வரவழைத்ததைப் போல கௌதம முனிவரும் கடுந்தவம் புரிந்து கங்கையை வரவழைத்தார். கௌதமர் கோஹத்ய பாவத்திலிருந்து (பசுவைக் கொன்ற பாவத்திலிருந்து) விடுபடுவதற்காக கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை திருப்தி செய்து கங்கையை வரவழைத்தார். கௌதம ரிஷியால் வரவழைக்கப்பட்டதால் கங்கை கௌதமி கங்கை” அல்லது கோதாவரி என்று அழைக்கப்படுகிறாள். கோதாவரி நதியானது நாசிக்கிலிருந்து தௌலேஷ்வரம் வரை அகண்ட கோதாவரியாகப் பாய்கிறாள். அங்கிருந்து ஏழு கிளைகளாக (சப்த கோதாவரி) பிரிந்து, இறுதியாக வெவ்வேறு இடங்களில் கடலில் சங்கமிக்கிறாள்.

இவ்விடத்தைப் பற்றிய ஒரு கதை உள்ளது. ஒரு சமயம் தன்னுடைய சீடர்களுடன் கௌதம ரிஷி இங்கு வாழ்ந்து வந்த காலத்தில் கடுமையான வறட்சியினால் மக்கள் பஞ்சத்தில் அவதியுற்றனர். தமது ஆன்மீக சக்தியை பிரயோகித்து கௌதமர் அவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்தார். அதனால் பல முனிவர்கள் கௌதமரின் ஆஷ்ரமத்திற்கு வந்து தங்களது பக்தி காரியங்களைச் செய்தவாறு அமைதியாக சில காலம் தங்கினர். வெளியுலக சூழ்நிலை சரியானதும் அவர்கள் தத்தமது இடங்களுக்குச் செல்ல விரும்பினர். ஆனால் அவர்களிடம் தனக்கிருந்த அன்பினால் கௌதம ரிஷி அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

அச்சமயத்தில் முனிவர்கள் தங்களது மந்திர சக்தியில் ஒரு பொய்யான பசுவினைப் படைத்து அவரது வயல்வெளியில் அதனை மேயவிட்டனர். பசு வயலில் மேய்வதைக் கண்டு சற்று கோபம் கொண்ட கௌதம ரிஷி அதனை அங்கிருந்து விரட்டுவதற்காக புல்லை அதன்மீது எறிந்தார். ஆனால், உடனடியாக அந்த பசு இறந்து விட்டது. இதைக் கண்ட மற்ற முனிவர்கள் அப்பாவி பசுவினைக் கொன்றுவிட்டதாக அவர்மீது கோ-ஹத்யா” குற்றத்தைச் சாட்டினர். அதிர்ச்சியுற்ற கௌதம முனிவர் தமது ஆன்மீக வலிமையால் இஃது அவர்களின் சதியே என்பதை உணர்ந்தார். இருப்பினும், சிவபெருமானை திருப்திபடுத்தி கங்கையை பூமிக்கு வரவழைத்த கௌதமர் அப்பாவத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். பசு இறந்த அந்த இடமே கோஷ்பாத க்ஷேத்திரம் என்று அறியப்பட்டது.

இராமானந்த கௌடீய மடத்தில் எழுந்தருளியுள்ள விக்ரஹங்கள்

ஸ்ரீ வரத கோபாலர் கோயில், கொவ்வூர்

ஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் ஸ்ரீ வரத கோபாலர் கோயில் உள்ளது. பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த கோயிலை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கௌதம ரிஷியிடம் பொய் பசுவினைப் படைத்து அவர் மீது கோ-ஹத்யா” பாவத்தினைச் சுமத்திய முனிவர்கள் பின்னர் தாங்கள் செய்த குற்றத்தினை மன்னித்தருளும்படி வேண்டினர், கௌதம ரிஷியின் ஆஷ்ரமத்திற்கு அருகில் தங்களது ஆஷ்ரமத்தை அமைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் அங்கே ஆஷ்ரமத்தை அமைப்பதற்கு முன்பாக அந்த கிராமத்தில் கௌதம ரிஷி பகவான் கிருஷ்ணரின் விக்ரஹத்தை ஸ்தாபிக்க விரும்பினார். அவர் நதியில் நீராடி எழுந்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹம் அவர் முன் தோன்றினார். அன்றிரவே கௌதம ரிஷியின் கனவில் தோன்றிய பகவான் ஒரு யாகம் புரிந்து தம்மை (விக்ரஹத்தை) வாழை இலைமீது வைத்து வலம் வரும்படி கேட்டுக் கொண்டார். மேலும், வாழை இலையிலிருந்து கீழே விழும் இடத்தில் தம்மை ஸ்தாபிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தற்போது ஸ்ரீஶவரத கோபால் வீற்றுள்ள இடம் அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட இடமே. அவர் கௌதம ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டவர்.

அதன் பிறகு கொவ்வூர் என்ற கிராமம் இங்கு நிர்மாணிக்கப்பட்டது. தற்போது அந்த கிராமத்தின் பெயர் கொவ்வூர். முதலில் கோவூர் என்றே அறியப்பட்டது. கோ” என்றால் பசு என்று பொருள். அதாவது கோவூர் என்றால் பசுவின் ஊர்” என்று பொருள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது அவர்கள் இதனை ஆங்கிலத்தில் கொவ்வூர் (உடிற ஊர்) என்று மாற்றி உச்சரித்ததால், இந்த இடம் கொவ்வூர் என்று தற்போது அறியப்படுகிறது.

முகலாயர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பல்வேறு கோயில்களையும் வழிபாட்டு ஸ்தலங்களையும் இடித்தனர் என்பதை அனைவரும் அறிவர். அவர்களுக்கு அஞ்சி கொவ்வூரின் மக்கள் வரத கோபால் விக்ரஹத்திற்கு குறுக்கே ஒரு தடுப்பு சுவரை எழுப்பினர். அதற்கு அருகாமையில் வேறு ஒரு விக்ரஹத்தையும் வைத்தனர். முகலாயர்கள் அவரையே வரத கோபால் என்று தவறாகப் புரிந்து கொண்டு அந்த புதிய விக்ரஹத்தை இடித்து தள்ளினர். இவ்வாறு வரத கோபால் பாதுகாக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு முகலாயர்கள் இவ்விடத்தை விட்டுச் சென்றனர். உள்ளுர்வாசிகள் மீண்டும் ஸ்ரீ வரத கோபாலை அதே இடத்தில் வழிபடத் தொடங்கினர். கோயிலை தரிசிக்க வருபவர்கள் இன்றும் முகலாயர்களால் உடைக்கப்பட்ட விக்ரஹத்தையும் காணலாம்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், அந்தர்வேதி: அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் கோயில் மிகவும் பழமையானது. இஃது ஆந்திராவில் அமைந்துள்ள நரசிம்மதேவரின் 32 பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். வங்கக் கடலும் வசிஷ்ட கோதாவரியும் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. கொவ்வூரிலிருந்து இங்கு வருவதற்கு சுமார் இரண்டு மணிநேரம் பிடிக்கும். இக்கோயில் 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வழக்கத்திற்கு மாறாக மேற்கு நோக்கியவாறு உள்ளார். இங்கு பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரரின் விக்ரஹங்களும் உள்ளனர். இவ்விடம் பௌதிக வாழ்வின் முடிவாக அறியப்படுகிறது. அந்தர்” என்றால் முடிவு, வேதி” என்றால் பௌதிக வாழ்க்கை.

ஸ்ரீ ஜகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில், ரியாலி: ரியாலி என்றால் தெலுங்கு மொழியில் விழுதல்” என்று பொருள். அசுரர்களும் தேவர்களும் அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதில் சண்டையிட்டபோது, தேவர்களைக் காப்பதற்காக பகவான் மஹாவிஷ்ணு மோஹினி ரூபத்தில் (ஓர் அழகிய பெண்ணின் வடிவில்) தோன்றினார். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை சமமாகப் பகிர்ந்தளிப்பதாகக் கூறிய அவர்(ள்), உலக அமைதிக்காக தேவர்களிடம் மட்டுமே அமிர்தத்தினை தந்திரமாக அளித்தாள். அதன் பின்னர், சிவபெருமான் அவளது அழகினால் கவரப்பட்டு அவளைப் பின்தொடர்ந்து ஓடினார். அப்போது மோஹினியின் கூந்தலிலிருந்து ஒரு மலர் கீழே விழுந்தது. அதனை முகர்ந்த சிவபெருமான் அதிசயிக்கும் வகையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை மோஹினி ரூபத்தில் கண்டார், தனது நடத்தைக்காக மிகுந்த வெட்கமும் அடைந்தார்.

மோஹினியின் கூந்தல் பின்னலிலிருந்து மலர் விழுந்த இடமே ரியாலி என்று அழைக்கப்படுகிறது. ரியாலி கோயில் ஜெகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இக்கோயிலை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் கொவ்வூரிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் பயணித்து செல்ல வேண்டும். இங்குள்ள மூல விக்ரஹம் ஸ்ரீ கேசவ ஸ்வாமியாகும். அவர் சங்கு, சக்கரம், கதை மற்றும் மந்தார மலையை ஏந்தியவாறு முன்புறம் காட்சியளிக்கிறார், ஸ்ரீ ஜெகன் மோஹினியாக பின்புறம் காட்சியளிக்கிறார். வேறு எங்கும் காணவியலா தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். அவரது தாமரைத் திருவடியிலிருந்து எப்போதும் கங்கை நீர் உற்பத்தியாகிக் கொண்டே உள்ளது, அதனை அங்குள்ள பூஜாரி அவ்வப்போது எடுத்து அனைவரின் மீதும் தெளிக்கிறார்.

நாங்கள் அங்கே சென்ற நேரத்தில் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. நீண்ட நேரம் நாம ஸங்கீர்த்தனத்துடன் காத்திருந்தோம், ஸ்வாமி தரிசனம் கிடைக்கப் பெற்று புத்துணர்வுடன் இஸ்கான் ராஜமுந்திரி திரும்பினோம்.

கோதாவரி நதியின் ஒரு தோற்றம்

கொவ்வூருக்கு அருகிலுள்ள இதர கோயில்கள்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், அந்தர்வேதி: அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் கோயில் மிகவும் பழமையானது. இஃது ஆந்திராவில் அமைந்துள்ள நரசிம்மதேவரின் 32 பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். வங்கக் கடலும் வசிஷ்ட கோதாவரியும் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. கொவ்வூரிலிருந்து இங்கு வருவதற்கு சுமார் இரண்டு மணிநேரம் பிடிக்கும். இக்கோயில் 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வழக்கத்திற்கு மாறாக மேற்கு நோக்கியவாறு உள்ளார். இங்கு பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரரின் விக்ரஹங்களும் உள்ளனர். இவ்விடம் பௌதிக வாழ்வின் முடிவாக அறியப்படுகிறது. அந்தர்” என்றால் முடிவு, வேதி” என்றால் பௌதிக வாழ்க்கை.

ஸ்ரீ ஜகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில், ரியாலி: ரியாலி என்றால் தெலுங்கு மொழியில் விழுதல்” என்று பொருள். அசுரர்களும் தேவர்களும் அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதில் சண்டையிட்டபோது, தேவர்களைக் காப்பதற்காக பகவான் மஹாவிஷ்ணு மோஹினி ரூபத்தில் (ஓர் அழகிய பெண்ணின் வடிவில்) தோன்றினார். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை சமமாகப் பகிர்ந்தளிப்பதாகக் கூறிய அவர்(ள்), உலக அமைதிக்காக தேவர்களிடம் மட்டுமே அமிர்தத்தினை தந்திரமாக அளித்தாள். அதன் பின்னர், சிவபெருமான் அவளது அழகினால் கவரப்பட்டு அவளைப் பின்தொடர்ந்து ஓடினார். அப்போது மோஹினியின் கூந்தலிலிருந்து ஒரு மலர் கீழே விழுந்தது. அதனை முகர்ந்த சிவபெருமான் அதிசயிக்கும் வகையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை மோஹினி ரூபத்தில் கண்டார், தனது நடத்தைக்காக மிகுந்த வெட்கமும் அடைந்தார்.

மோஹினியின் கூந்தல் பின்னலிலிருந்து மலர் விழுந்த இடமே ரியாலி என்று அழைக்கப்படுகிறது. ரியாலி கோயில் ஜெகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இக்கோயிலை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் கொவ்வூரிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் பயணித்து செல்ல வேண்டும். இங்குள்ள மூல விக்ரஹம் ஸ்ரீ கேசவ ஸ்வாமியாகும். அவர் சங்கு, சக்கரம், கதை மற்றும் மந்தார மலையை ஏந்தியவாறு முன்புறம் காட்சியளிக்கிறார், ஸ்ரீ ஜெகன் மோஹினியாக பின்புறம் காட்சியளிக்கிறார். வேறு எங்கும் காணவியலா தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். அவரது தாமரைத் திருவடியிலிருந்து எப்போதும் கங்கை நீர் உற்பத்தியாகிக் கொண்டே உள்ளது, அதனை அங்குள்ள பூஜாரி அவ்வப்போது எடுத்து அனைவரின் மீதும் தெளிக்கிறார்.

நாங்கள் அங்கே சென்ற நேரத்தில் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. நீண்ட நேரம் நாம ஸங்கீர்த்தனத்துடன் காத்திருந்தோம், ஸ்வாமி தரிசனம் கிடைக்கப் பெற்று புத்துணர்வுடன் இஸ்கான் ராஜமுந்திரி திரும்பினோம்.

அந்தர்வேதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி.

ரியாலியில் உள்ள ஜகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயிலின் முகப்புத் தோற்றம்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives