பௌத்தர்களிடையே கிருஷ்ண பக்தி

ஜாதி, மதம், இனம் என எல்லா வேற்றுமைகளையும் கடந்தது கிருஷ்ண பக்தி. நிரூபனம், இதோ இங்கே.

வழங்கியவர்: வாஸுதேவ தத்த தாஸ்

போயா–பௌர்ணமியை இங்குள்ள (இலங்கையிலுள்ள) பௌத்தர்கள் இப்படித்தான் அழைக் கின்றனர், ஒவ்வொரு போயாவும் இங்கு மிகவும் விசேஷமானது, அரசு விடுமுறையும்கூட.

மார்ச் மாதத்தின் போயா நாளன்று மத்துகம பகுதியைச் சார்ந்த சில பக்தர்கள் அங்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு எங்களை அழைத்தனர். இரவில் மத்துகம சென்ற எங்களுக்கு தங்குவதற்கு இடமில்லை. எங்களுக்கு ஓர் இரவு தங்குவதற்கு இடமளிக்கும்படி அங்கிருந்த பௌத்தர்களின் மடத்தில் உள்ளூர் பக்தர்கள் வேண்டுகோள் விடுக்க, அவர்களும் அனுமதி வழங்கியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மடத்தின் முதல்வரான திரு. மஹாநாம தெரோ எங்களை இன்முகத்தடன் வரவேற்றார். விடியற் காலை 4 மணிக்கு முன்னர் நாங்கள் அனைவரும் விழித்து விடுவோம் என்பதைக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்த அவர், காலையில் அங்கு மங்கள ஆரத்தி செய்வதற்கும் ஒப்புக் கொண்டார். காலையில் அவரைப் பற்றி நாங்கள் மேலும் தெரிந்து கொண்டோம். தனது ஒன்பது வயதில் துறவு வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு தற்போது வயது 60, புத்த மதத்தினரிடையே இவருக்கு அலாதி செல்வாக்கு, பல்வேறு பௌத்த கல்வி நிறுவனங்கள் இவரது தலைமையில் செயல்படுகின்றன.

போயா நாள் என்பதால் பல்வேறு பக்தர்கள் மடத்தில் கூடுவர் என்றும், அவர்களின் மத்தியில் கரதாளம் மற்றும் மிருதங்கத்துடன் சங்கீர்த்தனம் செய்யும்படியும் உரையாடும்படியும் அவர் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். நகரில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தோம். அவர்களின் பக்தர்கள், போயா நாளில், மதியத்திற்குப் பின்னர், மௌன விரதத்தை அனுசரிப்பர் என்றும், பாடவோ ஆடவோ இசைக்கவோ மாட்டார்கள் என்றும், எதையும் உண்ண மாட்டார்கள் என்றும் அவர் கூறியபோது, நிகழ்ச்சி எப்படி இருக்கும் என வியந்தோம்.

மத்துகம பகுதி, பௌத்தர்களால் (சிங்களர்களால்) நிரம்பிய ஒன்று. சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான நீண்ட பகையை கருத்தில் கொண்டு, நகர சங்கீர்த்தனம் செய்தால் மக்கள் வரவேற்பார்களா என்பதில் உள்ளூர் பக்தர்கள் சிறிது சந்தேகம் கொண்டனர். இருப்பினும், காலை 9 மணிக்கு திட்டமிட்டபடி நகர சங்கீர்த்தனம் தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்க இருந்த மண்டபத்தில் அப்போதே 300க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் கூடியிருந்தனர்.

புத்த மதத்தைச் சார்ந்த மடாதிபதியான திரு. மஹாநாம தெரோ அவர்களுடன் இஸ்கான் பக்தர்கள். இச்சமயத்தில் தெரோ அவர்களுக்கு பகவத் கீதை பரிசளிக்கப்பட்டது.

எங்களின் விருந்தினரும் இத்தாலியைச் சார்ந்த பிரபல பாடகருமான திரு. ஹரே கிருஷ்ண தாஸ் அவர்கள் கீர்த்தனத்தை தொடங்க, நாங்கள் சுமார் 20 பேர் அவருடன் நடக்க ஆரம்பித்தோம். சில நிமிடங்கள் கழித்து எதர்ச்சையாக திரும்பிப் பார்த்த என்னை ஆச்சரியம் ஆழ்த்தியது, சுமார் 400 பேர் கீர்த்தனத்தில் பாடியபடி எங்களுடன் நடந்து வந்தனர். பொதுமக்களோ எங்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர், சிலர் சந்தேக கண்களுடன் பார்த்தனர்–சுமார் 30 வருட போருக்குப் பின்னர் அந்த மாவட்டத்தில் நடக்கும் முதல் “இந்து” பேரணி அல்லவா!

ஏதோ போராட்டப் பேரணி என்று நினைத்த சிலர் முதலில் தயங்கினர். அதைக் கண்ட நமது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை அசைக்க, சந்தேகம் நீங்கி புன்னகை பூத்தனர். பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் இயல்பாக சூழ்ந்து கொண்டனர். அன்று மாலை, இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சக்தி சேனலில், எங்களின் நாம சங்கீர்த்தன பேரணி செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்கு திரும்பியபோது எங்களுக்கு மேலும் ஆச்சரியம் காத்திருந்தது. சுமார் 2,000 மக்கள் கூடியிருக்க, உள்ளே நுழைவதற்கு இடமில்லாத சூழல் நிலவியது. சற்று நேரம் தொடர்ந்த கீர்த்தனத்திற்குப் பின்னர், உடல் சார்ந்த வாழ்வின் தற்காலிகத் தன்மையைப் பற்றி திரு. ஹரே கிருஷ்ண தாஸ் அவர்கள் சிறப்பான உபன்யாஸம் வழங்கினார். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை வாங்கி பயன்பெறும்படி அன்பர்களை வேண்டிய பின்னர், இனிப்புகளை வழங்கத் தொடங்கிய அவரைச் சுற்றிலும் பல்வேறு குழந்தைகள் எறும்பு போன்று மொய்க்கத் தொடங்கினர். புத்தகங்கள் ஒருபுறம் மளமளவென்று விற்கத் தொடங்கின, பல்வேறு கேள்விகள், பல்வேறு சந்தேகங்கள், சுவையான பிரசாத விருந்து, மகிழ்ச்சியான முகங்கள்–இறுதியில் சுமார் 100 புத்தகங்கள் தற்போது அவர்களின் கைகளில்.

அங்கிருந்த பௌத்தர்களின் மடத்திற்குச் சென்றோம்–மிகுந்த எதிர்பார்ப்புடன். இனிமையான கீர்த்தனத்தை ஆரம்பித்தபோது, இளம் துறவிகள் மிகுந்த ஆர்வத்துடன் எங்களைப் படம் பிடித்தனர், எங்களைக் கண்டதில் அவர்களுக்கு ஏற்பட்ட அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. இருப்பினும், போயா நாளில் தங்களின் மௌன விரதத்தின் காரணத்தினால், யாரும் எங்களுடன் பேசவில்லை, எங்களின் பாடலுக்கு பின்பாட்டு பாடவும் இல்லை; நூற்றுக்கணக்கான மக்கள், ஆர்வமிக்க முக பாவனைகள், ஆனால் யாரும் பாடவில்லை–வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

கீர்த்தனத்தைத் தொடர்ந்து சொற்பொழிவு வழங்க நான் தயாரானேன். மௌனமாக இருக்கும் இவர்களிடம் என்ன கூறுவது என்று வியந்தபடி, குரு கௌராங்கரின் கருணையை வேண்டி உபன்யாஸத்தை ஆரம்பித்தேன். “இன்று போயா என்பதால், நீங்கள் மௌன விரதம் அனுசரிப்பதாகக் கேள்விப்பட்டேன். நாங்களும் உங்களைப் போலத்தான். போயா நாளில் மட்டுமல்ல, எப்போதும் மௌன விரதம் அனுசரிப்பவர்கள்,” என்று நான் மௌனமாக அல்லாமல் சப்தமாகக் கூற, அவர்களின் மனதில் விநோதம் விண்ணை முட்டியது. கிருஷ்ணரின் நாமம், குணம், லீலைகள் இவையாவும் பௌதிகம் அல்ல என்றும், பௌதிக விஷயங்களை பேசாமல் கிருஷ்ணரைப் பற்றி மட்டும் பேசுதல் மௌன விரதமே என்றும் விளக்கமளித்தேன்.

ஒரு குழந்தைக்கு தண்டனை கொடுத்து எவ்வளவு நேரம் அதனை ஓரத்தில் உட்கார வைக்க முடியும்? அதனை நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதுபோல, நாம் நமது தவறுகளுக்கு தண்டனையாக மௌன விரதம் இருக்கலாம், ஆனால் கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடுவதும் அவரைப் பற்றி உரையாடுவதும் நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் என்று விளக்கமளித்தேன். பக்தித் தொண்டின் அத்தகு நற்செயல்கள் நமது உண்மையான தன்மை என்றும், பல்வேறு தவறுகள் நிறைந்த இக்கலி யுகத்தில் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதே மிகச்சிறந்த வழி என்றும் எடுத்துரைத்தேன்.

குழந்தையைப் பற்றிக் கூறியபோது அனைவரும் வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினர். என்னுடைய பேச்சை சிங்களத்தில் மொழிபெயர்த்த மடாதிபதியும் வாய் விட்டு சிரிக்க, அனைவரையும் மஹா மந்திர கீர்த்தனத்தில் இணையும்படி வேண்டினோம். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று நாங்கள் பாடத் தொடங்க, அனைவரும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இறுதியில் கிருஷ்ண பிரசாத இனிப்புகளை வழங்கினோம், தங்களது விரதத்தைக் கைவிட்டு அவர்களும் மகிழ்ச்சியுடன் பிரசாதம் ஏற்றனர். அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்றாமல், உண்மையை உள்ளது உள்ளபடி வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தியதை நினைத்து நாங்களும் மகிழ்ந்தோம்.

இறுதியில், திரு. மத்துமக மஹாநாம தெரோ அவர்களிடம் பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தின் சிங்கள பிரதி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி, நூலகத்தில் வைக்கும்படி வேண்டினோம். அங்கு கூடியிருந்தவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துவிட்டு, மஹா மந்திர அட்டைகளை வழங்கி, தொடர்ந்து திருநாமத்தை உச்சரிக்கும்படி வேண்டிய பின்னர், நாங்கள் வசிக்கும் திருகோணமலையை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம்.

இனிப்புகளை விநியோகிக்கத் தொடங்கியவுடன் ஒன்றுகூடிய குழந்தைகள்.

2017-02-01T12:15:06+00:00May, 2012|பொது|0 Comments

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment