வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம். அவரே அனைத்திற்கும் ஆதியான பரம்பொருள். வேதம் போற்றும் நாயகனும் அவரே. கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணமாக எவ்வாறு விளங்குகிறார் என்பதைக் காண்போம்.

பிரம்மதேவரின் பிரார்த்தனை

இந்த பிரபஞ்சத்தின் முதல் ஜீவராசியான பிரம்மா தம்முடைய பிரார்த்தனையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பின்வருமாறு பிரார்த்திக்கிறார்:

ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்சிதானந்த விக்ரஹ:

அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ காரண காரணம்

“கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள். அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, ஆனந்தமயமானது. அவரே அனைத்திற்கும் தோற்றுவாய். அவர் ஆதியற்றவர். மேலும், அவரே எல்லா காரணங்களுக்கும் காரணமாவார்.” (பிரம்ம சம்ஹிதை 5.1)

பிரம்மா தம்முடைய இந்த பிரார்த்தனையின் மூலமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார். அவருடைய அதிகாரம் பொருந்திய வார்த்தைகளிலிருந்து, கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் என்பதை நாம் தெள்ளத்தெளிவாக உணரலாம். மேலும், பிரம்மா தம்முடைய மற்றொரு ஸ்லோகத்தில் (பிரம்ம சம்ஹிதை 5.39), இராமர், நரசிம்மர் முதலிய எண்ணற்ற அவதாரங்களாகவும் பல உப அவதாரங்களாகவும் எப்போதும் நிலைபெற்றுள்ள போதிலும், ஸ்வயமாகவும் அவதரிக்கும் மூல முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை தாம் வணங்குவதாக எடுத்துரைத்து, பகவான் கிருஷ்ணரின் விரிவங்கங்கள், அந்த விரிவங்கங்களின் விரிவங்கங்கள் என்று எண்ணிலடங்காத ரூபங்கள் இருந்தாலும், அனைத்திற்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மூல காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

வேதம் போற்றும் நாயகன்

பகவானின் மூச்சுக் காற்றிலிருந்து வந்தவையே வேதங்கள். ஆதியில் வேதம் ஒரே தொகுப்பாக இருந்தது. கலி யுகத்தில் வரக்கூடிய மக்கள் மந்த புத்தியில் இருப்பர் என்பதால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான வேத வியாஸர், வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வண என நான்கு பாகங்களாகப் பிரித்தார். எல்லா வேதங்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே நாயகனாகப் போற்றுகின்றன. நாம் வேதங்களையே பிரமாணமாக ஏற்க வேண்டும். வேதம் என்பது தாய் போன்றது. தந்தையை அறிய வேண்டுமெனில், தாயின் சொல்லை ஏற்றல் அவசியம். அதுபோல, நம்முடைய நித்திய தந்தையான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தாயான வேதத்தைக் கொண்டு அறியலாம்.

ஜடம், ஜீவாத்மா, பரமாத்மா என மூன்று வஸ்துகள் உள்ளன. ஜீவாத்மா தன்னுடைய உண்மை நிலையினை மறந்து ஜடத்துடன் தொடர்பு கொண்டுள்ளான். ஆனால் வேதம் மற்றும் ஆச்சாரியர்களின் துணையுடன் அவனால் பரமாத்மாவை அணுக முடியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதை உணர முடியும், வேதம் போற்றும் நாயகனான கிருஷ்ணரை உணர முடியும்.

அர்ஜுனன் கிருஷ்ணரை பரபிரம்மனாக ஏற்றுக்கொள்ளுதல்

தேவர், ரிஷிகளால் அறிய முடியாத கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (10.2), தேவர்களோ மாபெரும் ரிஷிகளோகூட தம்முடைய வைபவங்களை அறிவதில்லை என்றும், ஏனெனில், தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தாமே ஆதியானவன் என்றும் கூறுகிறார். தேவர்கள், ரிஷிகள் முதலியவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாது எனும்பட்சத்தில், நம்மைப் போன்ற சாதாரண ஜீவன்களைப் பற்றி என்ன கூறுவது? முழுமுதற் கடவுள் ஒரு சாதாரண மனிதனைப் போல இவ்வுலகிற்கு வந்து, அசாதாரணமான அற்புதச் செயல்களைச் செய்வது ஏன் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்கு இன்றைய ஏட்டறிவு ஒருபோதும் உதவாது. மன அனுமானத்தின் மூலமாக கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயன்ற தேவர்களும் பெரும் ரிஷிகளும் தோல்வியையே தழுவினர்.

இருப்பினும், கிருஷ்ணரை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ள, கீதையில் அவரே ஓர் உபாயத்தினைக் கூறுகிறார்: பக்தித் தொண்டு. “பக்தித் தொண்டினால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்.” (பகவத் கீதை 18.55) இதுவே பகவானை அறிந்துகொள்ளும் முறையாகும். குரு, சாது, சாஸ்திரம் ஆகியவற்றின் துணையுடன் பக்தித் தொண்டினைப் பயிலும்போது, கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பகவத் கீதையின் பிரமாணம்

பகவத் கீதையின் பல இடங்களில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே முழுமுதற் கடவுள் என்றும் அனைவரும் தம்மையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். பகவத் கீதையில் சது: ஸ்லோகம் என்று நான்கு பிரதான ஸ்லோகங்கள் கூறப்படுகின்றன. அதில் முதல் ஸ்லோகத்தில்,

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே

இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ-ஸமன்விதா:

“ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.” (பகவத் கீதை 10.8)

இதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே அனைத்திற்கும் காரணம் என்பதை நேரடியாக தெளிவாக எடுத்துரைக்கின்றார். ஒருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த நபரே தன்னைப் பற்றிச் சொல்லும்போது முழுமையாக அறியலாம். பகவான் கிருஷ்ணரே தம்முடைய திருவாயினால், ஜடம், ஆன்மீகம் என அனைத்திற்கும் தாமே மூலம் என்று கூறும்போது, இதைவிடப் பெரிய பிரமாணம் என்ன இருக்க முடியும்?

கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள் என்பதை .பாகவதம் பறைசாற்றுகின்றது

உபநிஷதங்களின் பிரமாணம்

உபநிஷதங்கள் பல்வேறு விதமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் போற்றி, அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்று தெளிவாகக் கூறுகின்றன.

“வேத ஞானத்தை பிரம்மாவிற்கு முதலில் உபதேசித்ததும், ஆதியில் அந்த வேத ஞானத்தைப் பரப்பியதும் கிருஷ்ணரே.” (கோபால-தாபனீ உபநிஷத் 1.24). மேலும், நாராயண உபநிஷத்தில் (1), பரம புருஷ பகவானான நாராயணர் உயிரினங்களை படைக்க விரும்பினார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாராயணரிடமிருந்தே பிரம்மா பிறந்தார், நாராயணரிடமிருந்தே பிரஜாபதிகள் பிறந்தனர், நாராயணரிடமிருந்தே எட்டு வசுக்கள் பிறந்தனர், நாராயணரிடமிருந்தே பன்னிரண்டு ஆதித்தியர்கள் பிறந்தனர் என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது.

அதே உபநிஷத்தில், ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர:, தேவகியின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் கூறப்பட்டுள்ளது.

“படைப்பின் ஆரம்பத்தில் பரம புருஷரான நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மா, சிவன், நீர், அக்னி, சந்திரன், நட்சத்திரங்கள், சூரியன் என யாரும் இருக்கவில்லை.” (மஹா உபநிஷத், 1) பரம புருஷரின் நெற்றியிலிருந்து சிவபெருமான் பிறந்தார் என்றும் மஹா உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

படைப்புகள் அனைத்திற்கும் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. அவர் எல்லா காரணங்களுக்கும் காரணமாக அறியப்படுகிறார். எல்லாம் அவரிடமிருந்தே பிறந்தன என்பதால், அவரே எல்லாவற்றின் மூல காரணம். அனைத்தும் கிருஷ்ணருக்குக் கீழ்ப்பட்டவையே, அவருக்கு மேற்பட்டு எவரும் இல்லை.

அர்ஜுனனின் பிரமாணம்

எல்லா உபநிஷதங்களின் சாரமான கீதோபநிஷத் என்று அழைக்கப்படும் பகவத் கீதை ஒரு பசுவைப் போன்றது, இஃது இடையர்குலச் சிறுவனாகப் புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணரால் கறக்கப்படுகின்றது. அர்ஜுனன் ஒரு கன்றைப் போன்றவன், அறிவு சான்றவரும் தூய பக்தர்களும் பகவத் கீதை எனும் அமிர்தப் பாலைக் குடிக்க வேண்டியவர்கள் என்று கீதா மஹாத்ம்யம் (6) போற்றுகின்றது.

அப்படிப்பட்ட கீதையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகப் பெற்ற சீடன் அர்ஜுனன் ஆவான். அவன் தன்னுடைய பிரார்த்தனையில் பின்வருமாறு கூறுகிறான்: “நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம். நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.” (பகவத் கீதை 10.12–13)

அர்ஜுனன் எல்லாவிதமான சந்தேகங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டு கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக ஏற்றுக்கொள்கிறான். அர்ஜுனன் கிருஷ்ணரின் நண்பன் என்பதால், அவன் இவ்வாறு கூறுகிறான் என்று மக்கள் எண்ணலாம் என்பதால், தான் மட்டும் இவ்வாறு ஏற்கவில்லை என்பதையும் பல்வேறு ரிஷிகளும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்கின்றனர் என்பதையும் அர்ஜுனன் சுட்டிக் காட்டுகிறான். இதன் மூலம் கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதை ஒருவர் அறிய முடியும்.

ஸ்ரீமத் பாகவதத்தின் பிரமாணம்

ஸ்ரீமத் பாகவதம் எல்லா வேதங்களுக்கும் சாரம் என்று வர்ணிக்கப்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம்முடைய அவதாரம் முடியும் தருவாயில், உத்தவரிடம் என்னுடைய பிரதிநிதியாக ஸ்ரீமத் பாகவதத்தை இக்கலி யுக மக்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று கூறுகிறார். கிருஷ்ணரிடமிருந்து வேறுபடாத ஸ்ரீமத் பாகவதத்தில், மேற்குறிப்பிட்ட அவதாரங்கள் அனைத்தும் பகவானின் அம்சங்கள் அல்லது அம்சங்களின் அம்சங்கள் என்றும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28) க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்னும் வார்த்தைகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பல்வேறு அவதாரங்களைத் தோற்றுவித்தபோதிலும், அவரே மூல முழுமுதற் கடவுள் என்பதைப் பறைசாற்றுகின்றது.

பிரம்மா, சிவன், நான்கு குமாரர்கள், இராமானுஜர், மத்வர், நிம்பார்கர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ரிஷிகள், மாமுனிகள், ஸ்ரீல பிரபுபாதர் என அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றனர். மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:, மஹாஜனங்கள் ஏற்படுத்திய பாதையினை நாம் பின்பற்ற வேண்டும் என மஹாபாரதத்தின் வன பர்வத்தில் (313.117) கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த மஹாஜனங்களைப் பின்பற்றி கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதை நாமும் உணர்ந்து, அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுவோமாக.