கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கிருஷ்ணர் ஏன் கோபியர்களுடன் நடனமாடினார்? அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்கிறார்? போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் நேற்று, இன்று, நாளை என்று என்றென்றும் எழும் கேள்விகள். சாஸ்திரங்களும் பல்வேறு ஆச்சாரியர்களும் இதற்கு வழங்கியுள்ள பதில்கள் புத்திக்கூர்மையுள்ள அனைவரையும் திருப்திப்படுத்துபவை.

 

கிருஷ்ண லீலைகள் சாதாரணமானவை அல்ல

முழுமுதற் கடவுளின் செயல்களில் எந்தவொரு குற்றமும் இருக்க முடியாது, அவ்வாறு ஏதேனும் குற்றமிருப்பின் அவர் முழுமுதற் கடவுளாக இருக்க முடியாது. கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவரது செயல்கள் அனைத்தும் தெய்வீகமானவை என்றும் சாஸ்திரங்களும் ஆச்சாரியர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர். கிருஷ்ணரது பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதை தத்துவபூர்வமாக உணர்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று பகவத் கீதை (4.9) உறுதிப்படுத்துகிறது.

இருப்பினும், கிருஷ்ணரது செயல்களை தெய்வீகமானதாக ஏற்றுக்கொள்ளும் பக்தர்களில்கூட பெரும்பாலானோர் அவற்றை தத்துவபூர்வமாக அணுகுவதில்லை. அவர்களால் கிருஷ்ணரது தெய்வீக லீலைகளின் அசாதாரணமான தன்மைகளை மக்களுக்கு விளக்க முடிவதில்லை. இதனால் கிருஷ்ண லீலைகளை ஏளனம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிருஷ்ணரது உயர் இயற்கையை அறியாதோர் மூடர்கள் (முட்டாள்கள், அயோக்கியர்கள்) என்று பகவத் கீதை (9.11) எடுத்துரைக்கின்றது. அத்தகு மூடர்கள் எழுப்பும் கேள்விகளில் கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் முக்கிய பங்காற்றுகிறது. இதுகுறித்து ஆழமாக ஆராய்ந்து விளக்கமளிப்பது கிருஷ்ண பக்தர்களுக்கும் சராசரி மனிதர்களுக்கும் நிச்சயம் உதவியாக அமையும்.

அர்த-குக்குடி-நியாய

கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் குறித்து கேள்வி எழுப்புவோரிடம் நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: “நீங்கள் இதனை நம்புகிறீர்களா?” “இல்லை” என்று அவர்கள் பதிலளித்தால், அவர்களிடம் உரையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு விஷயத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் அதைப் பற்றி பேசுதல் நிச்சயம் முட்டாள்தனம் என்பதால், கிருஷ்ணருடைய நடனத்தை நம்பாமல் அதுகுறித்து கேள்வி எழுப்புதல் முட்டாள்களின் பணியே.

 

கிருஷ்ணரின் அதி அற்புத சக்தி

கிருஷ்ணரின் ராஸ நடனத்தை ஆழ்ந்து கவனிப்பவர்களால் அவரது அதி அற்புத சக்தியைக் காண முடியும். கிருஷ்ணருடன் நடனமாடுவதற்காக இலட்சக்கணக்கான கோபியர்கள் விருந்தாவனத்தில் கூடினர். சாதாரண நபரால் ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கானோருடன் நடனமாடுதல் சாத்தியமா? இலட்சக்கணக்கானோரை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துதல் சாத்தியமா? கிருஷ்ணரோ தன்னை இலட்சக்கணக்கான வடிவில் விரிவடையச் செய்து ஒவ்வொரு கோபியருடனும் தனித்தனியாக ஆடினார். இஃது அவரது நடனத்தின் அசாதாரணமான தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

கிருஷ்ணரும் கோபியர்களும் ஓர் இரவு முழுக்க நடனமாடியதாக கூறப்படுகிறது. ஆயினும், உண்மையில் அவர்கள் ஆடியது சாதாரண மனிதர்களின் இரவு அல்ல, பிரம்மாவின் கணக்கில் ஓர் இரவாகும் (ஸ்ரீமத் பாகவதம் 10.33.38). சாதாரண மக்களின் கண்களுக்கு அவர்கள் ஆடியது ஓர் இரவாகத் தோன்றலாம், ஆனால் காலத்தின் அதிபதியான கிருஷ்ணரோ அந்த இரவினை பிரம்மாவினுடைய இரவிற்கு சமமாக நீட்டித்தார். பிரம்மாவினுடைய ஓர் இரவு என்பது நமது கணக்கின்படி 432 கோடி வருடங்கள் என்பது பகவத் கீதையில் (8.17) கூறப்பட்டுள்ளது. 432 கோடி வருடங்கள் கிருஷ்ணரும் கோபியர்களும் நடனமாடினர் என்பதை மனிதர்களால் கற்பனை செய்ய இயலாமல் போகலாம். ஆம், அதுவே உண்மை, கிருஷ்ணரின் அதிஅற்புத சக்தியை யாராலும் கற்பனை செய்ய இயலாது. திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்பாலினர் என பலருக்காக நடனமாடும் இன்றைய மக்களால் உண்மையில் 432 நிமிடங்கள்கூட தொடர்ந்து நடனமாட முடியாது. அப்படியிருக்க, கிருஷ்ணரின் நடனத்தைப் பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

கோபியர்களுடனான கிருஷ்ணரின் உறவை ஆழ்ந்து கவனிப்பவர்கள் கிருஷ்ணரின் அதி அற்புத சக்தியை உணர முடியும்.

காமமும் ராஸ நடனமும்

கிருஷ்ணருடைய ராஸ நடனத்தில் காமத்திற்கு துளியும் இடம் கிடையாது. இவ்வுலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் காமத்தில் மூழ்கியவர்களாக இருப்பதால், கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனத்தைப் பற்றி கேட்கும்போது, கிருஷ்ணரும் கோபியர்களும் தங்களைப் போன்று காம வயப்பட்டவர்கள் என்று தவறாக எண்ணுகின்றனர். கிருஷ்ணரின் மீதான கோபியர்களின் அன்பை சாதாரண காமத்துடன் என்றும் ஒப்பிடக் கூடாது. அவர்களின் அன்பு மிகவும் தூய்மையானது, துளியும் பௌதிக களங்கங்கள் இல்லாதது. ஒருவரின் சொந்த புலன்களை திருப்தி செய்வதற்கான விருப்பம் காமம் எனப்படுகிறது. மாறாக, கிருஷ்ணரின் புலன்களை திருப்தி செய்வதற்கு ஒருவர் விருப்பப்படும்போது அது பிரேமை (தூய அன்பு) எனப்படுகிறது. காமம் என்பது இரும்பைப் போன்றது, கிருஷ்ணரின் மீதான கோபியர்களின் தூய அன்போ தங்கத்தைப் போன்றது.

கிருஷ்ணர் தன்னில் திருப்தியுற்றவர் என்பதால் ஆத்மராமர் என்று அழைக்கப்படுகிறார். மற்றவர்களைக் கொண்டு இன்பமடைவதற்கான தேவை கிருஷ்ணருக்கு இல்லை. ராஸ நடனத்தில் கிருஷ்ணர் பங்கெடுத்ததற்கான ஒரு காரணம் தன்னுடைய தூய பக்தர்களான கோபியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே. கிருஷ்ணரை தங்களுடைய கணவராக பெற வேண்டி கோபியர்கள் அனைவரும் கடும் விரதங்களை மேற்கொண்டிருந்தனர். பக்தர்களின் விருப்பத்தை எப்போதும் பூர்த்தி செய்யும் எம்பெருமான் அதற்காகவே கோபியர்களுடன் நடனமாடினார்.

மறுபுறம் பார்த்தால், கோபியர்களுடன் நடனமாடிய போது கிருஷ்ணரின் வயது எட்டு. எட்டு வயது சிறுவனும் சிறுமியும் நடனமாடியதில் காமத்தைக் கொண்டு வருவது நியாயமா?

மேலும், தகாத உறவுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் வேத பாரம்பரியத்தில், கோபியர்களுடனான கிருஷ்ணரின் லீலைகள் தொன்றுதொட்டு பாடப்பட்டும் புகழப்பட்டும் வந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணரின் உறவிலோ கோபியர்களின் உறவிலோ காமம் என்பது இருந்திருந்தால், அன்றைய மக்கள் நிச்சயம் அதனை பாராட்டியிருக்க மாட்டார்கள்.

 

நெருப்பில் விறகை வைத்தாலும் குப்பையை வைத்தாலும் எரித்துவிடும், நெருப்பு என்றும் களங்கமடைவதில்லை. அதுபோல, கிருஷ்ணருடன் தொடர்புகொள்ளும் அனைவரும் தூய்மையடைகின்றனர், அவர் என்றும் களங்கமடைவதில்லை.

ராஸ நடனம் அதர்மமாகுமா?

தர்மத்தை நிலைநாட்டுவதற்காக இப்பூவுலகில் அவதரிப்பதாக கிருஷ்ணர் கீதையில் (4.7) கூறுகிறார். அவ்வாறு இருக்கையில் மற்றவர்களின் மனைவியருடன் நடனமாடியது தர்மமாகுமா என்னும் கேள்வியையும் அதற்கான பதிலையும் நாம் ஸ்ரீமத் பாகவதத்திலேயே காணலாம்.

அதர்மம் என்றால் என்ன? எந்தவொரு செயல் நமக்கு தீய விளைவை ஏற்படுத்துமோ அதுவே அதர்மம். எந்தவொரு செயலும் கிருஷ்ணரை பாதிக்காது என்று பகவத் கீதை (4.14) கூறும் பட்சத்தில், அவரது செயல்களில் அதர்மம் என்பது சாத்தியமா? முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் தர்ம அதர்மத்திற்கு அப்பாற்பட்டவர்.

தர்மம் எது, அதர்மம் எது என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாது. ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தர்மமாக இருப்பது மற்றொருவருக்கு அதே சூழ்நிலையிலோ வேறு சூழ்நிலையிலோ அதர்மமாக இருக்கலாம். உதாரணமாக, போரில் எதிரியைக் கொல்பவனுக்கு பதக்கமும் வீட்டில் எதிரியைக் கொல்பவனுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்படுவதைக் காண்கிறோம். எனவே, எது தர்மம் என்பதை நம்மால் உறுதியிட்டுக் கூற முடியாமல் போகலாம். உயர்ந்த தர்மம் எது என்பதை ஸ்ரீமத் பாகவதம் (6.3.19) நமக்குத் தெரிவிக்கின்றது. கிருஷ்ணர் என்ன செயல்களைச் செய்கிறாரோ, அவருக்கு எந்த செயல் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அதுவே மிகவுயர்ந்த தர்மம். இதனை தேவர்கள், முனிவர்கள், பண்டிதர்கள் என யாராலும் எளிதில் உணர முடியாது என்று கூறப்படும் பட்சத்தில், சாதாரண மனிதர்களான நம்மால் அதனை முடிவு செய்ய முடியுமா?

கடவுள் என்பவர் நமது தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் நமது தீர்ப்புகளுக்கு உட்பட்டவராக இருப்பின் அவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பவர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பத்தை முன் வைக்கலாம். ஆனால், கடவுள் என்பவர் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அவ்வாறு இருப்பவராக இருக்க வேண்டும்.

கிருஷ்ணருடைய செயல்கள் தர்ம அதர்மத்திற்கு அப்பாற்பட்டவை என்பதற்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தில் ஓர் உதாரணத்தை முன் வைக்கின்றார். சூரியன் அல்லது நெருப்பானது எல்லாவித களங்கத்திற்கும் அப்பாற்பட்டது. நெருப்பில் நாம் விறகை வைத்தாலும் அஃது அதனை எரித்துவிடும், குப்பையை வைத்தாலும் எரித்துவிடும். சூரியன் சாதாரண நீரையும் கிரகிக்கும், சிறுநீரையும் கிரகிக்கும். அதனால் சூரியன் களங்கமடைவதில்லை. அதுபோல அனைவரையும் கிரகிக்கும் கிருஷ்ணர் எதனாலும் களங்கமடைவதில்லை. உண்மையில், சூரியனுடன் தொடர்புகொள்ளும் சிறுநீரும் தூய்மையடைவதுபோல கிருஷ்ணருடன் தொடர்புகொள்ளும் களங்கமுடைய நபர்களும் தூய்மையடைகின்றனர்.

சூரியனின் சக்தியான மேகம் சூரியனை நம்மிடமிருந்து மறைக்கும்போது நாம் இருளை உணர்கிறோம். ஆனால் சூரியனைப் பொறுத்தவரையில் இருள் என்பதும் இல்லை, ஒளி என்பதும் இல்லை; ஏனெனில், அதன் ஸ்வரூபமே ஒளிதான். அதுபோல, கிருஷ்ணரின் சக்தியான மாயை நம்மை மறைக்கும் போது கிருஷ்ணரை அதர்மம் செய்பவராக நாம் காண்கிறோம். ஆனால் கிருஷ்ணரைப் பொறுத்தவரையில் அவருக்கு தர்மம், அதர்மம் என்று ஏதுமில்லை; ஏனெனில், அவரது ஸ்வரூபமே தர்மம்தான்.

கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதால் அவரே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். உலகின் சட்டதிட்டங்களை அமைத்தவர் அவரே என்பதால், அவர் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட தன்னுடைய உயர்நிலையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் பொருட்டு சில நேரங்களில் கிருஷ்ணர் சட்டதிட்டங்களை மீறுகிறார். இதன் மூலமாக அவர் தனது பூரண சுதந்திர தன்மையையும் சக்தியையும் வெளிப்படுத்துகிறார்.

சுகதேவ கோஸ்வாமியைப் போன்ற முற்றும் துறந்த துறவியர்கள் கிருஷ்ணரின் ராஸ நடனத்தைப் போற்றுகின்றனர்.

பௌதிகத்திற்கு அப்பாற்பட்டது

கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் முற்றிலும் பௌதிக நிலைக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ண பக்தர்கள் ஜட சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஆன்மீக சக்தியின் நேரடி பாதுகாப்பில் உள்ளனர் என்றும் பகவத் கீதை (9.13) கூறுகிறது. கிருஷ்ண பக்தர்களே பௌதிகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் பட்சத்தில், பகவான் கிருஷ்ணர் பௌதிகத்திற்கு உட்பட்டவர் என்று கருதுவது நியாயமா?

கிருஷ்ணருடைய செயல்கள் யாவும் அவரது அந்தரங்க சக்தியினால் செய்யப்படுபவை; அவர் தனது சுய விருப்பத்தினால் தோன்றுகிறார், சுய விருப்பத்தின்படி செயல்களைச் செய்கிறார் (பகவத் கீதை 4.6). இதில் பௌதிக சக்திக்கு வேலையில்லை என்பதால், ராஸ நடனத்தை பௌதிகமாகக் கருதுவது முறையல்ல.

பௌதிக நிலைக்கும் காமத்திற்கும் அப்பாற்பட்ட பல்வேறு ஆச்சாரியர்கள் கிருஷ்ணரின் ராஸ லீலையை புகழ்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தை உரைத்த சுகதேவ கோஸ்வாமி எங்கும் எப்போதும் நிர்வாணமாக வலம் வந்த துறவியாவார். இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு போன்ற உயர்ந்த துறவிகளால் பாராட்டப்பட்டு விரும்பப்படும் ராஸ நடனம் நிச்சயமாக பௌதிகத்திற்கு அப்பாற்பட்டதே.

 

கிருஷ்ணரே அனுபவிப்பாளர்

கிருஷ்ணர் மட்டுமே புருஷர் (அனுபவிப்பாளர்) மற்ற அனைவரும் பிரக்ருதி (அனுபவிக்கப்படுபவர்கள்) எனும் அடிப்படை அறிவினை ஒவ்வொருவரும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அனைத்தும் அவரது சக்தி என்பதால் அவை அவரது ஆனந்தத்திற்காக உள்ளன. அனுபவிப்பவராக அவர் இருப்பதும் அனுபவிக்கப்படுபவர்களாக மற்றவர்கள் இருப்பதும் அவரவர்களின் உண்மை நிலையாகும். இந்த உண்மை நிலையினை மறந்திருப்பதே நமது வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம். இதை உணர்ந்தோர் கிருஷ்ணரின் ஆனந்தத்திற்கான செயல்களைச் செய்வர். கிருஷ்ணரால் அனுபவிக்கப்படும்போது மற்றவர்களும் ஆனந்தத்தை உணர முடியும். இந்த அடிப்படை அறிவை உடையோர் கிருஷ்ணரின் ராஸ நடனத்தை தவறாக நினைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எல்லா கோபியர்களும் கிருஷ்ணரின் சக்தியே என்பதால், கிருஷ்ணர் தன்னுடைய சொந்த சக்தியுடன் விளையாடுவதில் என்ன தவறு? சக்திகள் அனைவரும் கிருஷ்ணருடைய பிரதிபிம்பம் என்பதால், அவர்களுடன் நடனமாடுவது என்பது கண்ணாடியின் முன்பு

நடனமாடுவதைப் போன்றதாகும்.

நகல் செய்தல் சாத்தியமா?

கிருஷ்ணர் உன்னதமானவர் என்பதால் தர்ம அதர்மத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது சரி; ஆயினும் அவரது செயல்கள் மற்றவருக்கு தவறான உதாரணத்தை அமைத்துவிடுகிறதே என்னும் கேள்வியை சிலர் எழுப்பலாம். பெரியோர்கள் அமைக்கும் பாதையை மற்றவர்களும் பின்பற்றுவதாக பகவத் கீதையில் (3.21) கூறப்படுவதை அவர்கள் உதாரணமும் காட்டலாம். அஃது உண்மைதான். இருப்பினும், பின்பற்றுவதற்கும் நகல் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். உயர்ந்த நபர்கள் வழங்கிய அறிவுரைகளை நாம் பின்பற்ற வேண்டுமே தவிர அவர்களின் செயல்களை நகல் செய்ய முயற்சிக்கக் கூடாது. கிருஷ்ணர் கீதையில் வழங்கும் உபதேசங்களை முதலில் பின்பற்றி, அவரது லீலைகளில் பங்குகொண்டு அவருக்குத் தொண்டு செய்ய விரும்ப வேண்டுமே தவிர அவருடன் போட்டியிட முயற்சி செய்யக் கூடாது.

கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடினார், நானும் நடனமாடலாம் என்று நினைப்பவர்கள் கோபியர்களுடன் ஆடுவதற்கு முன்பாக கிருஷ்ணர் காளியனின் மீது நடனமாடினார் என்பதை நினைத்துப் பார்ப்பது அவசியம். ஆயிரம் தலை கொண்ட காளியனின் மீது ஆடிய பிறகே கிருஷ்ணர் கோபியர்களுடன் ஆடினார். அவ்வளவு பெரிய பாம்பினைக் காண இயலாது என்று கூறுபவர்கள் பாம்பு பண்ணைக்குச் சென்று அங்கு இருக்கும் பாம்புகளுடன் சற்று விளையாடிப் பார்க்கலாமே!

கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடினார் என்பதற்காக தாங்களும் ஆடலாம் என்று நினைப்பவர்கள் சிவபெருமான் விஷத்தைக் குடித்தார் என்பதற்காக விஷத்தைக் குடிக்க முன்வருவார்களா? பெரிய நபர்களை நகல் செய்ய முயற்சிப்பதை தவிர்த்து பின்பற்ற முயற்சிப்பது உசிதம்.

கிருஷ்ணரின் ராஸ நடனத்தை நகல் செய்ய நினைப்பவர்கள் காளியனின் மீதான அவரது நடனத்தையும் யோசித்துப் பார்க்கட்டும்.

கோபியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல

கிருஷ்ணருடன் நடனமாடிய கோபியர்களில் நான்கு பிரிவினர் உள்ளனர்: (1) ஆன்மீக உலகிலிருந்து கிருஷ்ணருடன் வந்த நித்ய ஸித்தர்களான கோபியர்கள், (2) தண்டகாரண்ய ரிஷி கோபியர்கள் (ஸ்ரீ இராமர் தண்டகாரண்யத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த ரிஷிகள் அவரது துணைவியராக விரும்பினர். தான் ஏக பத்தினி விரதம் மேற்கொண்டிருப்பதால் அடுத்த அவதாரத்தில் அதற்கு வாய்ப்பளிப்பதாக பகவான் அவர்களுக்கு உறுதியளித்தார். அவர்கள் கோபியர்களாக ராஸ நடனத்தில் கலந்து கொண்டனர்.), (3) தேவ கன்னியர்கள், மற்றும் (4) ஷ்ருதி-சாரி கோபியர்கள் (கோபியர்களின் வடிவில் வந்த வேதங்கள்). இப்பிரிவுகளை விளக்கி இவர்களில் யாருமே சாதாரண பெண்கள் அல்ல என்பதை பத்ம புராணம் உறுதிப்படுத்துகிறது. எனவே, கோபியர்களை சாதாரண பெண்களாக நினைப்பது முற்றிலும் தவறு.

மேலும், இந்த கோபியர்கள் யாவரும் 432 கோடி வருடங்கள் நடனமாடியதாகக் கண்டோம். அவர்கள் சராசரி பெண்களாக இருந்திருந்தால் அத்தகு நடனம் சாத்தியமா? உண்மையில், அவர்கள் யாரும் பௌதிக உடலில் கிருஷ்ணருடன் நடனமாடவில்லை. பௌதிக உடலுடன் இத்தனை கோடி வருடங்கள் ஆட இயலுமா?

கணவன்மார்களை பிரிந்து கிருஷ்ணரிடம் வந்தது தவறு என்று நினைப்பவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள்.

கணவன்மார்களுக்குச் சொந்தமானது மனைவியரின் ஜட உடல்களே. ஆன்மீக உடல்கள் கிருஷ்ணருக்கு மட்டுமே சொந்தமானவை. கிருஷ்ணருக்குச் சொந்தமான ஆன்மீக உடலில், கிருஷ்ணருடன் நடனமாடியவர்களை கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த கணவனால் உரிமை கொண்டாட முடியும்?

கோபியர்களின் உயர்நிலை

கிருஷ்ண பக்தர்களிலேயே கோபியர்கள் தலைசிறந்த வர்களாக ஆச்சாரியர்களால் நிலைநாட்டப்பட்டுள்ளனர். கோபியர்களை போல் சரணாகதி அடைந்தோர் யாரும் இல்லை. சமுதாய கடமைகள், சாஸ்திர கடமைகள், உடல் தேவைகள், பலன்நோக்கு செயல்கள், வெட்கம், தேக சுகம், ஆத்ம சுகம், உற்றார், உறவினர், பெண்களுக்கான கடமைகள் என எல்லாவற்றையும் துறந்து எந்தவொரு சமுதாய மதிப்பையும் எதிர்பார்க்காமல் கிருஷ்ணரை நோக்கி வந்த கோபியர்களுக்கு இணை யாருமே இல்லை. முழுக்கமுழுக்க கிருஷ்ணரின் இன்பத்திற்காக அவர்கள் செய்த சேவை முற்றிலும் தூய்மையானது.

தன்னிடம் யார் எந்த அளவிற்கு சரணடைகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் தானும் அவர்களிடம் நடந்து கொள்வதாக கிருஷ்ணர் கீதையில் (4.11) உறுதியளிக்கிறார். அதன்படி, எல்லாவற்றையும் கிருஷ்ணரிடம் அர்ப்பணித்த கோபியர்களுக்காக கிருஷ்ணர் தம்மையே அர்ப்பணித்தார். அவர்கள் செய்த களங்கமற்ற சேவைக்கு பிரம்மாவின் ஆயுள் வரை கைமாறு செய்தாலும் தம்மால் ஈடுகட்ட இயலாது என்றும், தன்னுடனான அவர்களது உறவு குற்றமற்றது என்றும் கோபியர்களை கிருஷ்ணரே புகழ்ந்துள்ளார் (ஸ்ரீமத் பாகவதம் 10.32.22). அவர்களின் அன்பினை தம்மால் ஈடுசெய்ய இயலாததை சுட்டிக்காட்டி, அந்த அன்பிலேயே திருப்தியடையுங்கள் என்று கிருஷ்ணர் தமது இயலாமையை எடுத்துரைத்துள்ளார். அத்தகு உயர்நிலை பக்தர்களை நம்முடைய தளத்தில் வைத்து பார்ப்பது சற்றும் முறையல்ல.

தனது பக்தர்களில் கோபியர்களே மிகச்சிறந்தவர்கள் என்பதை ஒரு லீலையின் மூலமாக கிருஷ்ணர் நாரதருக்கு வெளிப்படுத்தினார். துவாரகையில் வசித்து வந்த கிருஷ்ணர், தனக்கு தலைவலி என்றும், அதிலிருந்து விடுபட பக்தர்களின் பாத தூசியைப் பெற்று வரும்படியும் நாரதரை உலகம் முழுவதும் அனுப்பி வைத்தார். நாரதர் பல்வேறு பக்தர்களை அணுகியபோதிலும், கிருஷ்ணருக்கு தங்களின் பாத தூசியை எவ்வாறு கொடுப்பது என்ற தயக்கத்தினாலும் பயத்தினாலும் அவர்கள் அனைவரும் மறுத்து விட்டனர். இறுதியில் கோபியர்களை அணுகிய நாரதர் கிருஷ்ணரின் நிலையை எடுத்துரைத்த போது, “கிருஷ்ணருக்கு தலைவலியா! ஐயகோ! நாங்கள் பக்தர்கள் இல்லையே, எங்களது பாத தூசியால் ஏதேனும் பலன் கிட்டுமா?” என்று கேள்வி எழுப்பினர். நாரதரோ, “கிருஷ்ணருக்கு உங்களது பாத தூசியை கொடுப்பது பாவமென உணரவில்லையா? நீங்கள் நரகத்திற்கு சென்றுவிடுவீர்களே?” என்று பதில்கேள்வி கேட்க, “கிருஷ்ணரின் தலைவலி தீருமெனில் நாங்கள் எங்கு செல்லவும் தயார்” என்று பதிலளித்தனர். இதிலிருந்து கோபியர்களின் உயர்நிலையை எளிதில் காணலாம்.

கிருஷ்ணருக்காக தம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து எப்போதும் அவரது சிந்தனையிலேயே வாழ்ந்த கோபியர்களே கிருஷ்ண பக்தர்களில் தலைசிறந்தவர்கள்.

இந்த ஜடவுலகம் ஆன்மீக உலகின் திரிபடைந்த பிம்பம் என்பதால், அங்கு மிகவும் உயர்வாக இருப்பது இங்கு தாழ்வானதாகத் தோன்றலாம்.

ராஸ நடனம் சாதாரணமானது அல்ல

கிருஷ்ணரும் கோபியர்களும் மட்டுமல்ல அவர்களது  ராஸ நடனமும் அசாதாரணமானதே. ராஸ நடனத்தைக் காண பிரம்மதேவர், சிவபெருமான் உட்பட எண்ணற்ற தேவர்கள் கூடினர் என்பதிலிருந்து இதன் அசாதாரண தன்மையை அறியலாம். அவர்கள் அனைவரும் ராஸ நடனத்தைக் கண்டு பேரானந்தமும் பரவசமும் அடைந்தனர். வைகுண்டத்தில் வசிக்கும் லக்ஷ்மியும் ராஸ நடனத்தில் கலந்துகொள்ள விரும்பி தவமிருந்தாள் என்பதை வைத்து பார்க்கும்போது, நிச்சயம் இது சாதாரணமானதல்ல. ராஸ நடனத்தைக் கண்டு கவர்ச்சியுற்ற சிவபெருமான் தானும் ஒரு கோபியாக மாறி அதில் கலந்துகொள்ள முனைந்தார். ராஸ நடனம் சாதாரண நடனமாக இருந்திருந்தால் இவர்கள் அனைவரும் ஏன் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்?

ஆன்மீக உணர்வின் பரிபக்குவநிலை ராஸ நடனம் என்பது சாஸ்திரங்களாலும் ஆச்சாரியர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது கண்ணோட்டத்திற்கு ராஸ நடனத்தில் தவறு இருப்பதுபோலத் தோன்றலாம். இந்த பௌதிக உலகமானது ஆன்மீக உலகின் திரிபடைந்த பிம்பம் என்று கூறப்படுகிறது (பகவத் கீதை 15.1). ஆன்மீக உலகின் உயர்நிலைகள் பிம்பமாக இருப்பதன் காரணத்தால் இவ்வுலகில் தாழ்ந்தவையாக தோன்றலாம். இருப்பினும், ஆன்மீக நிலையிலிருந்து பார்த்தால் உண்மை புலப்படும். அதன்படி, கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் ஆன்மீக ஆனந்தத்தின் சிகரமாகும்.

முதலில் கிருஷ்ணர் யார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

ராஸ நடனமே மிகவுயர்ந்த நிலை என்றபோதிலும், ஆன்மீக வாழ்வை பயிற்சி செய்பவர்களுக்கு அதனை உடனடியாக அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் ராஸ நடனத்தைப் பற்றி கேலி செய்பவர்களுக்கு யாம் இங்கே விளக்கமளித்துள்ளோம். இருப்பினும், ராஸ நடனமானது படிப்படியாக அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். முதலில், நாம் யார், கடவுள் யார், கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு என்ன, அந்த உறவை எவ்வாறு வளர்ப்பது போன்றவற்றை பகவத் கீதையிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், கிருஷ்ணரை பாகவதத்தின் மூலமாக படிப்படியாக அணுக வேண்டும். கிருஷ்ண பக்தியின் தத்துவங்களை ஆழமாக புரிந்துகொண்டவர்களால் மட்டுமே கிருஷ்ண லீலைகளைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, தத்துவங்களை அறிவதில் யாரும் சோம்பேறிகளாக இருக்கக் கூடாது. தத்துவங்களின்றி கிருஷ்ணரை அணுகுவது வெறும் மனயெழுச்சியாகவே இருக்கும்.

கிருஷ்ணர் யார் என்பதை தத்துவபூர்வமாக உணராவிடில் அவரது லீலைகளை நிச்சயமாக புரிந்துகொள்ள இயலாது. ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி அறிய விரும்புபவர், முதலில், அவர் யார் என்பதையும் அவருடைய பணிகள் என்னென்ன என்பதையும் அறிய வேண்டும். அவரது அந்தரங்க வாழ்வினை அறிவதில் ஆர்வம் காட்டுதல் முறையல்ல. அதுபோல, கிருஷ்ணரது அந்தரங்க வாழ்வில் ஆரம்ப நிலை பக்தர்கள் ஆர்வம் காட்டுவது உகந்ததல்ல. பக்தித் தொண்டின் விதிமுறைகளைப் பின்பற்றி படிப்படியாக முன்னேறிய பக்தர்களால் அவரது அந்தரங்க லீலைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

கிருஷ்ணரது லீலைகள் ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தை அணுகுவோர் அதனை படிப்படியாக அணுக வேண்டும், திடீரென்று பத்தாவது காண்டத்தினுள் குதிக்கக் கூடாது. அவ்வாறு குதித்தால், கிருஷ்ணரைப் பற்றிய தவறான எண்ணங்களும் கருத்துகளும் நிச்சயம் ஏற்படலாம். இன்றைய சமுதாயத்தில் கிருஷ்ண தத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் ஏனைய மக்கள் கிருஷ்ண லீலைகளை கேட்பதில் ஈடுபடுவதால் மக்களிடையே பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் பரவி கிடக்கின்றன. ஆன்மீக பாடம் என்பது அதற்கென்று இருக்கும் வழிமுறைகளின்படி அணுகப்பட வேண்டும்.

ஆத்மாவின் நித்திய எதிரியான காமமே ஜடவுலகின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. காமத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்ட ராஸ நடனத்தைப் பற்றி சரியான தருணத்தில் சரியான நபரிடமிருந்து கேட்பவர்கள் காமத்திலிருந்து விடுபட முடியும். இருப்பினும், பக்குவமின்றி கேட்பவர்கள் காமத்தினால் பாதிக்கப்படலாம் என்பதால், ஆச்சாரியர்கள் பலரும் இதில் கவனமாக இருக்கும்படி நம்மை வலியுறுத்தியுள்ளனர். எனவே, ராஸ நடனத்தின் தத்துவங்களை யாம் இங்கே விவரித்துள்ளபோதிலும் அதன் நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை.

வேத பாரம்பரியத்தின்படி உயர்ந்த விஷயங்கள் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்படாது. நவீன காலத்திலோ, புத்தகங்கள், பாகவத சப்தாகம், இணையம் போன்றவற்றின் வடிவில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்றது. தங்களது பாகவத சொற்பொழிவினால் மக்களுக்கு புலனின்பத்தை கொடுக்கும் எண்ணற்ற பாகவதர்கள், கிருஷ்ண தத்துவங்களை விளக்காமல், நேரடியாக கிருஷ்ண லீலைகளை விவரித்து வருகின்றனர். அத்தகு பாகவத சொற்பொழிவுகளால் கேட்பவருக்கும் பலனில்லை, சொல்பவருக்கும் பலனில்லை. அதைக் கேட்பவர்களில் பலர், “நான் என் மனைவியுடன் ஆடுகிறேன், அதுபோல கிருஷ்ணரும் ஆடினார்,” என்று நினைத்து கிருஷ்ணரது ராஸ நடனத்தை தங்களது காம நடனத்துடன் ஒப்பிடுகின்றனர்.

இவையாவும் கிருஷ்ண தத்துவத்தை முறையாக அறியாததின் விளைவே என்பதால் தத்துவங்களை தெளிவாக அறிந்துகொள்ளும்படி பகவத் தரிசன வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். அவ்வாறு செய்தால், கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் எவ்வளவு உயர்ந்தது என்பதை குறைந்தபட்சம் ஏட்டளவிலாவது புரிந்துகொள்ள முடியும்.

கோபியர்களுடனான கிருஷ்ணரின் தெய்வீக நடனத்தை சாதாரண மக்களின் காம நடனத்துடன் ஒப்பிடுதல் அறியாமையின் உச்சகட்டமாகும்.

2016-12-03T16:31:15+00:00August, 2013|ஞான வாள்|0 Comments

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment