கிருஷ்ணர் பரம்பொருளின் இறுதிநிலை

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

வழிபாட்டு முறைகள் பல, அதிலும் குறிப்பாக, நம்முடைய பாரதப் பண்பாட்டில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதே அவற்றில் சிறந்தது என்பதையும் அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதையும் இங்கு காண்போம்.

பல்வேறு வழிபாடுகளால் குழம்பியுள்ள மக்கள்

இன்றைய மக்கள் பெரும்பாலும் தங்களது முன்னோர்கள் கொடுத்த வழிபாட்டு முறைகளை மறந்துவிட்டனர், அப்படியே முன்னோர்களைப் பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள்கூட அதிலுள்ள அர்த்தங்களை சற்றும் அறியாமல் உள்ளனர். முறையான வழிபாடு குறித்து மக்களை வழிநடத்த வேண்டிய பிராமண குலத்தில் பிறந்தவர்கள்கூட, தங்களது பாண்டித்துவத்தின் அகங்காரத்தினால், பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபட தவறுகின்றனர். வேத மந்திரங்களை உச்சரிப்பதில் ஈடுபட்டுள்ளபோதிலும், வேத மந்திரங்களால் அறியப்பட வேண்டியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், அவர்கள் வேத மந்திரங்களைக் கற்ற முழுப் பலனை அடைவதில்லை.

வேதங்கள் ஏற்கும் சிலர், “நீயும் கடவுள், நானும் கடவுள்” என்று கூறிக் கொண்டு, கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவை உயர்ந்த நபராக ஏற்கத் தவறுகின்றனர். வேதைஷ் ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய, வேதங்களால் அறியப்பட வேண்டியவன் தானே என்பதை கிருஷ்ணர் பகவத் கீதையில் (15.15) தெளிவாக கூறுகிறார். இருப்பினும், வேதங்களைக் கற்பதாகக் கூறுபவர்கள், பல்வேறு தேவர்களை சம நிலையில் வைத்து வழிபடுகின்றனர். ஆதிசங்கரரை தங்களது குருவாக ஏற்றுள்ள இவர்கள், பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூட மதே, “மூடனே, கோவிந்தனின் திருநாமத்தைப் பாடுவாயாக, இதைத் தவிர வேறு எதுவும் உன்னைக் காப்பாற்றாது,” என்று கூறியிருப்பதை மறந்துள்ளனர். மாயாவாதிகள் என்று அழைக்கப்படும் இவர்கள், கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை ஏற்காமல், கிருஷ்ணரின் ஆன்மீக உலகிலிருந்து வெளிப்படும் பிரம்மஜோதியில் ஒன்றாக கலந்துவிட விரும்புகின்றனர்.

 

பிரம்மஜோதியும் கிருஷ்ணரும்

அருவமான பிரம்மஜோதியானது பரம்பொருளின் உயர்ந்த நிலை அல்ல. அருவமான பிரம்மன், எங்கும் வீற்றிருக்கும் பரமாத்மா, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஆகிய மூன்று நிலைகளில் பரம்பொருளானது உணரப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (1.2.11) உரைக்கின்றது. அதாவது, பரம்பொருளின் இறுதிநிலை, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே. பரம்பொருளின் இந்த மூன்று நிலைகளை சூரியனை உதாரணமாகக் கொண்டு நாம் உணரலாம். சூரியனைப் பொறுத்தவரையில், சூரியக் கதிர்கள், சூரிய கிரகம், சூரிய தேவன் என்று மூன்று நிலைகள் உள்ளன. சூரியக் கதிர்களும் சூரிய கிரகமும், சூரிய தேவனின் சக்திகளாகும்; அதுபோலவே, அருவமான பிரம்மஜோதியும் எங்கும் வீற்றிருக்கும் பரமாத்மாவும், கருநீல நிறத்தில் அழகிய திருமேனியுடன் வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சக்திகளேயாவர். எனவே, கடவுளை பிரம்மஜோதியின் வடிவில் உணர்வது பூரண உணர்வு அல்ல.

பரம்பொருளை பிரம்மஜோதியின் வடிவில் அணுகும் மாயாவாதிகள், வேதங்களை ஏற்றுக்கொள்ளும்போதிலும், வேதங்களை உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமராக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தங்களின் தவங்களின் மூலமாக பிரம்மஜோதியை அடைந்தால்கூட, மீண்டும் இந்த ஜடவுலகிற்கு திரும்ப நேரிடும் என்று ஸ்ரீமத் பாகவதம் (10.2.32) குறிப்பிடுகிறது. எனவே, கிருஷ்ணரில் ஆர்வம் கொள்ளாமல், பிரம்மஜோதியில் ஆர்வம் காட்டும் மாயாவாதிகளின் விளக்கவுரைகளைக் கேட்டல் ஆன்மீக தற்கொலைக்கு சமமானது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். மாயாவாத பாஷ்ய ஷுனிலே ஹய ஸர்வ நாஷ.

தானே எல்லா தேவர்களுக்கும் ஆதியானவன் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தல்

போலி குருமார்கள்

இன்றைய சூழ்நிலையில் மக்களை கிருஷ்ணரிடமிருந்து திசைதிருப்புவதில் முக்கிய பங்காற்றுபவர்கள் போலி குருமார்கள். அவர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாததாகி விட்டன. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக போலி குருக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளனர், இது அதிக அளவில் பொருளாதார நன்மையைத் தரும் தொழிலாகவே மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. மக்களிடம் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களின் அறிவு இல்லாத காரணத்தினால், போலி சாதுக்களிடம் தங்களை அர்பணிக்கின்றனர்; அவர்களும் மக்களின் அறிவின்மையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்.

யாராவது காவியுடை அணிந்திருந்தால், மக்கள் அவர்களை உடனடியாக குருக்களாக கருதுகின்றனர். அவர் யார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவருடைய பூர்வீகம் யாது? அவர் எந்த சீடப் பரம்பரையை சார்ந்தவர்? அவர் கடவுளைப் பற்றி என்ன கூறுகிறார்? அவருடைய தத்துவம் என்ன? போன்ற கேள்விகளை கேட்பதே கிடையாது. பல்வேறு குருமார்கள் மக்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, “நீங்கள் எங்களிடம் வந்தால், மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியும், நல்ல வேலை கிடைக்கும், உயர் பதவியை அடையலாம், குழந்தை வரம் கிடைக்கும், குடும்ப பிரச்சனை தீரும், நோய்கள் தீரும்,” என்று விளம்பரம் செய்து, “எங்களுக்கு இவ்வளவு நன்கொடை தாருங்கள்,” என்று கூற, மக்களும் அவர்களை நம்பி ஆன்மீகத் தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய போலி சாமியார்கள் கடவுளைப் பற்றி பேச விரும்புவதில்லை. அங்கு பார்த்தாலும் அவருடைய படம்தான் இருக்கும், எங்காவது ஒரு மூலையில் வேண்டுமானால், யாராவது ஒரு தேவரின் படம் இருக்கும். மக்களோ அந்த மனிதனைக் கடவுளாக நினைத்து, தங்களை வாழ்வை வீணடிக்கின்றனர். (இதுகுறித்து மேலும் விளக்கங்களைப் பெற, பகவத் தரிசனத்தின் ஜூலை இதழில் வெளிவந்த கத்திரிக்காயும் குருவும் என்ற கட்டுரையினைப் படிக்கவும்.)

எல்லா தேவர்களிலும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ணர்

பல்வேறு தேவர்களை வழிபடும் பழக்கம் இன்றும் உள்ளது, சாஸ்திரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது; அதே சமயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா தேவர்களுக்கும் ஆதியானவராக, அதாவது, முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம், ஆதிதேவம். (பகவத் கீதை 10.2, 10.12) சிவபெருமான், பிரம்மா உட்பட மற்ற தேவர்கள் அனைவரும் கிருஷ்ணருக்கு கீழ்படிந்த சேவர்கர்களே. பல்வேறு அமைச்சர்கள், முதல் மந்திரிகள், ஆளுநர்கள், அரசாங்க அதிகாரிகள் என பலரும் பிரதம மந்திரியின் கீழ் இருப்பதைப் போலவே, பல்வேறு தேவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குக் கீழ்படிந்த நபர்களாக அவருக்குக் கீழ் உள்ளனர்.

படைக்கும் தொழிலை எற்றுக் கொண்டுள்ள பிரம்மா, பிரம்ம சம்ஹிதை என்னும் தன்னுடைய நூலில், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். ஈஷ்வர: பரம க்ருஷ்ண, எவராலும் மிஞ்ச முடியாதவரான கிருஷ்ணரே அனைவரிலும் உயர்ந்தவர் என்றும், ஸச்சித்ஆனந்த விக்ரஹ, அவரது திருமேனி, அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்தியமான உடல் என்றும் அவர் கூறுகிறார் (பிரம்ம சம்ஹிதை 5.1). மேலும், ஆரம்பமும் முடிவும் இல்லாத அந்த கோவிந்தனே எல்லா காரணங்களுக்கும் காரணமாக விளங்குபவர் என்றும் கூறுகிறார். படைப்பின் முதல் உயிர்வாழியான பிரம்மதேவரே இவ்வாறு கூறும்போது, இதனை யாரால் மறுக்க முடியும்?

 

காளியனின் மீது நடனமாடியது உட்பட பல்வேறு அசாதாரணமான லீலைகளை கிருஷ்ணர் அரங்கேற்றினார்.

கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தன்னுடைய திருவாயிலிருந்து அருளிய காரணத்தினால், பகவத் கீதை எல்லா வேதங்களின் சாரமாக கருதப்படுகிறது. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அவரைப் பற்றி அவரால்தான் சிறப்பாக கூற முடியும். அதன்படி, பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை முழுமுதற் கடவுளாக அர்ஜனனிடம் பிரகடனப்படுத்துகிறார். “ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன,” என்று அவர் அங்கே (பகவத் கீதை 10,8) தெளிவாக கூறுகிறார். மேலும், தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரோ வேறு யாரும் இல்லை என்றும் அவர் கூறுகிறார் (பகவத் கீதை 7.7).

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இக்கூற்றுகள், அனைத்து சாஸ்திரங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இராமானுஜர், மத்வர், அசிதர், தேவலர், நாரதர் போன்றோர் மட்டுமின்றி, சங்கராசாரியரும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனனும் ஏற்றுக் கொண்டுள்ளான். எனவே, கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

தான் முழுமுதற் கடவுள் என்பதை கிருஷ்ணர் தன்னுடைய பல்வேறு அதியற்புத லீலைகளின் மூல மாகவும் உறுதிப்படுத்தினார். கோவர்தன மலையை இடது கை சுண்டுவிரலால் ஒரு வாரம் தூக்கியது, சிறு வயதிலேயே பல்வேறு அசுரர்களைக் கொன்றது, கொடிய விஷம் கொண்ட காளியனின் தலையில் நடனமாடியது, படைப்பின் இறைவனான பிரம்மதேவரையே மயக்கியது, இலட்சக்கணக்கான கோபியர்களுடன் ராஸ லீலையில் ஈடுபட்டது, 16,108 மனைவியரை திருமணம் செய்தது, குருக்ஷேத்திர போர்க்களத்தில் பாண்டவர்களை காத்து கௌரவர்களை அழித்தது போன்றவை உட்பட மானிட சக்திக்கும் தேவ சக்திக்கும் அப்பாற்பட்ட பல்வேறு லீலைகளை கிருஷ்ணர் அரங்கேற்றினார்.

 

கிருஷ்ணரிடம் சரணடைவோம்

பெரும் ரிஷிகளாலும் முனிவர்களாலும்கூட தன்னுடைய வைபவங்களை அறிய முடியாது என்று கீதையின் ஒரு பகுதியில் (10.2) எடுத்துரைக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மற்றொரு இடத்தில் (18.55) தன்னுடைய பக்தர்கள் தன்னை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார். தனக்கென்று எந்த தேவையும் இல்லாதபோதிலும், அவர் தன்னுடைய பக்தர்கள் அன்புடனும் பக்தியுடனும் வழங்கும் துளசி இலை, பூக்கள், நீர், பழங்கள் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்.

சிலர், பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, கீதையின் இறுதியில், எல்லா தர்மங்களையும் விடுத்து தன்னிடம் சரணடையும்படி கிருஷ்ணர் விடுக்கும் கட்டளையினை ஏற்க மறுக்கின்றனர். கிருஷ்ணரிடம் பூரணமாக சரணடைந்து, அர்ஜுனனைப் போல அவரை நினைத்துக் கொண்டு நாமும் நம்முடைய கடமைகளைச் செய்தால், நாம் எந்தவொரு பாவ விளைவுகளுக்கும் ஆளாக மாட்டோம்.

பல்வேறு பிறவிகளில் ஞானத்தை வளர்த்துக் கொண்டவர்களால் மட்டுமே வாஸுதேவனான ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை அறிய முடியும் (பகவத் கீதை 7.19). அவ்வாறு அறிந்து தன்னிடம் சரணடையும் நபர்களை கிருஷ்ணர் மஹாத்மா என்று கூறுகிறார். இலட்சக்கணக்கான நபர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே அந்த நிலையினை அடைய முடியும், மிகவுயர்ந்த கிருஷ்ண பக்தியானது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை (பகவத் கீதை 7.3).

இருப்பினும், கலி யுகத்தில் தன்னுடைய குழந்தைகள் மிகவும் துன்பப்படுவதை பார்த்து வருத்தமடைந்த கிருஷ்ணர், சுமார் 500 வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தனின் வடிவில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து, கிருஷ்ணரிடம் சரணடைந்து மிகவுயர்ந்த பக்தராக வாழ்வதற்கு ஏற்ற எளிமையான வழிமுறையான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினை கற்றுக் கொடுத்தார். அனைத்து தரப்பட்ட மக்களும், எந்தவொரு ஜாதி, மத, இனப் பாகுபாடுகளும் இன்றி, இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திர உச்சாடனத்தின் மூலமாக கிருஷ்ண பக்தியை எளிமையாக அடைய இயலும்.

கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்யும் நபர்கள் உண்மையிலேயே மிகமிகமிக அதிர்ஷ்டசாலிகளாவர். அதிலும் குறிப்பாக, ஸ்ரீல பிரபுபாதர் ஏற்படுத்திய பரம்பரையில், இஸ்கான் இயக்கத்தின் மூலமாக ஆன்மீக பயிற்சி செய்யக்கூடிய நபர் மிகவும் பாக்கியசாலிகளாவர்.

தற்சமயத்தில், ஒரு நூல், ஒரு கடவுள், ஒரு மதம், ஒரு தொழில் போன்ற கருத்துகளில் மனிதர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். எனவே, ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீபுத்ரகீதம்–உலகம் முழுமைக்கும் ஒரே பொது நூல் இருக்கட்டும்–பகவத் கீதை. ஏகோ தேவோ தேவகீபுத்ரஏவ–உலகம் முழுமைக்கும் ஒரே கடவுள் இருக்கட்டும்–ஸ்ரீ கிருஷ்ணர். ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி–மேலும், ஒரே மந்திரம், ஒரே பிராத்தனை–அவரது திருநாமத்தை உச்சரித்தல்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. கர்மாப்யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா–மேலும், ஒரே ஒரு செயலிருக்கட்டும்–பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தொண்டாற்றுதல்.

 

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment