ஜெயனும் விஜயனும் குமாரர்களால் சபிக்கப்படுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பதினாறாம் அத்தியாயம்

சென்ற இதழில் வைகுண்டத்தின் வாசலில் காவலர்கள் இருவருக்கும் குமாரர்கள் சாபமளித்த சம்பவத்தை கண்டோம். உடன் அங்கு விரைந்து வந்த பகவான் நாராயணர், குமாரர்களின் பிரார்த்தனைகளை ஏற்று பதிலளிப்பதை இவ்விதழில் காணலாம்.

பகவான் நாராயணரின் அன்புள்ளம்

பக்தவத்சலரான முழுமுதற் கடவுள் கூறினார்: “எனது வாயிற் காவலர்களான ஜெயன், விஜயன் எனும் இவ்விருவரும் எனது விருப்பத்தை புறக்கணித்த காரணத்தால் உங்களுக்கு மாபெரும் குற்றத்தை இழைத்துவிட்டனர். மாமுனிவர்களே, என்மீது மிகுந்த பக்தியுடைய நீங்கள் இவர்களுக்கு அளித்த தண்டனையை அங்கீகரிக்கிறேன். அவர்கள் எனது சேவகர்கள் என்பதால், அவர்கள் இழைத்த குற்றத்திற்கு நான் பொறுப்பேற்று உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

“உடலில் ஒரு சிறு புள்ளியாகத்தோன்றும் வெண்குஷ்டமானது எவ்வாறு உடல் முழுவதையும் கெடுத்துவிடுகிறதோ, அதுபோல ஒரு வேலைக்காரன் செய்யும் தவறினால் அவனது எஜமானன் பொதுமக்களால் பழிக்கப்படுகிறான். பிராமணர்கள் எனது வழிபாட்டுக்குரியவர்கள். எனவே, எனது சொந்த கையாக இருப்பினும், அது பிராமணர்களான உங்களுக்கு எதிரான செயலை செய்தால், அதை துண்டித்து எறியவும் தயங்கமாட்டேன்.”

“நான் எனது பக்தர்களுடைய தொண்டனாக இருக்கும் காரணத்தால், எனது தாமரைத் திருவடிகளானது மிகவும் புனிதமடைந்து அனைத்து வகையான பாவங்களையும் உடனடியாக நீக்குகின்றன. வேள்வித் தீயில் எனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களால் எனக்கு மகிழ்ச்சியில்லை. மாறாக, தம் செயல்களின் பலன்கள் அனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து எனது பிரசாதத்தால் முழுமையாக திருப்தியடையக்கூடிய எனது பிராமண பக்தர்களுக்கு அளிக்கப்படும் சுவை மிகுந்த உணவுகளை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

“எனது பாதங்களைக் கழுவிவரும் நீரே கங்கையாகும். இந்நதி மூவுலகங்களையும் தூய்மைப் படுத்துகிறது. நானோ வைஷ்ணவர்களின் பாத தூசியை எனது தலையில் தாங்கவே விரும்புகிறேன். அந்தணர்கள், பசுக்கள் மற்றும் பாதுகாப்பற்ற உயிர்களை என்னிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எமராஜரின் தண்டனைக்குரிய கொடிய பாவமாகும். மாறாக, பக்தர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், அவர்களை அன்பான வார்த்தைகளால் அமைதிப்படுத்த முயல்பவர்களே எனது உள்ளம் கவர்ந்தவர்கள் ஆவர்.

“இவ்விரு காவலர்களும் எனது மனதினை சரியாக புரிந்துகொள்ளாது உங்களிடம் வரம்புமீறி நடந்துவிட்டனர் என்றாலும், நீங்கள் இவர்கள்மீது கருணைகாட்டி நீண்ட கால தண்டனையை வழங்காமல் வெகு சீக்கிரமே என்னை வந்தடைய உதவி செய்தல் வேண்டும்.”

குமாரர்களின் புகழுரை

பகவானின் மேன்மைமிக்க உரையானது புரிந்துகொள்ள கடினமானதாக இருந்தது; ஏனெனில், அதில் ஆழங்காண முடியாத கருப்பொருளும் சிறப்பு வாய்ந்த உட் பொருளும் புதைந்திருந்தது. முனிவர்கள் அதைக் கூர்ந்த கவனத்துடன் கேட்டபோதிலும் அவர்களால் பகவானின் உள்மனதை அறிந்துகொள்ள முடியவில்லை.

எனினும், இறைவனின் தரிசனத்தால் ஓர் இன்பப் பரவச உணர்வு தம் உடல் முழுதும் ஊடுருவிச் செல்வதை முனிவர்கள் உணர்ந்தனர். எல்லையற்ற பெருமைகளையுடைய பகவானிடம் அவர்கள் பணிவுடன் பேசத் துவங்கினர். “முழுமுதற்கடவுளே, நாங்கள் எதைச் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லாரையும் ஆள்கின்ற ஆதிமூலமாக தாங்கள் விளங்குகிறீர். அந்தணர்களை உயர்நிலையில் வைத்துப் பார்க்கும் தங்களின் இயல்பு பிறருக்கு ஒரு பாடமாக உள்ளது. உண்மை என்னவெனில், அந்தணர்கள் மற்றும் தேவர் களுக்கும்கூட வழிபாட்டுக்குரிய பரம்பொருள் தாங்களே.

“அனைத்து உயிர்களின் நித்திய தர்மத்திற்கும் தாங்கள் ஒருவரே ஆதாரமாக விளங்குகிறீர்கள். தாங்கள் அந்தமற்றவர், எல்லா காலத்திலும் மாற்றமின்றி இருப்பவர். தங்களுடைய கருணை ஒன்றினால் மட்டுமே அனைவரும் அறியாமைக் கடலைக் கடக்க முடியும். தேவர்களாலும் பூஜிக்கப்படும் செல்வத் திருமகளான இலட்சுமி தேவி தங்கள் திருவடியில் ஓர் இடம் வேண்டி நிற்கிறாள். தாங்கள் பற்பல அவதாரங்களாக அவதரித்து ஜடப் பிரபஞ்சங்களை காத்து அருள்கிறீர்கள். கருணைகூர்ந்து ஜீவராசிகளின் ரஜோ மற்றும் தமோ குணங்களை நீக்கி அருள்வீராக!

.
“தாங்களே அனைத்து நற்குணங்களின் உறைவிடமாவீர். உமது பணி வார்ந்த தன்மையால் உமது சக்தி ஒருபோதும் குறைவதில்லை. அதன்மூலம் தாங்கள் தங்களுடைய உன்னத லீலை களை வெளிப்படுத்துகிறீர்கள். (உதாரணமாக, நந்த மஹாராஜர். யுதிஷ்டிரர், குந்தி, அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியது)

“ஏதுமறியாத இந்த வாயிற் காவலர்களுக்கோ எங்களுக்கோ தாங்கள் விரும்பி அளிக்கும் தண்டனை எதுவாயினும், அதை நாங்கள் மனபூர்வமாக ஏற்கிறோம். இவர்கள் குற்ற மற்றவர்கள் என்பதையும் நாங்கள் தவறாக சபித்துவிட்டோம் என்பதையும் உணர்கிறோம்.”

பகவானின் வாக்குறுதி

இவ்வாறு புகழ்ந்தும் வேண்டியும் பேசிய ஸனகாதி முனிவர்களிடம் பகவான் பின்வருமாறு பதிலளித்தார்: அந்தணர்களே, இவர்களுக்கு நீங்கள் அளித்த தண்டனையானது உண்மையில் என்னால் விதிக்கப்பட்டதாகும். ஆகையால், அசுர குலத்தில் இவர்கள் பிறப்பெடுக்கப் போகின்றனர். எனினும், இவர்கள் சினத்துடன் என்னைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பர், கூடிய விரைவில் மீண்டும் என்னை வந்தடைவர்.”

பகவானின் இத்தகைய முடிவைக் கேட்ட முனிவர்கள் அவரை வலம்வந்து தம் வந்தனங்களை அர்ப்பணித்த பின்னர் விடைபெற்று சென்றனர். அதன்பின் பகவான் தமது காவலர்களிடம் பேசலானார்: அன்புள்ள ஜெய, விஜயர்களே! அச்சமின்றி நீங்கள் புறப்படுங்கள். அந்தணரின் சாபத்தை பயனற்றுப் போகச் செய்யும் திறன் எனக்கிருந்தபோதிலும், என் ஒப்புதலுடன் அது நடந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாப் புகழும் உங்களுக்கு உண்டாகட்டும்! இதற்குமுன் ஒருநாள் நான் துயில் கொண்டிருந்த சமயத்தில் வெளியே சென்று திரும்பியபோது, உங்களால் தடுத்து நிறுத்தப்பட்ட லக்ஷ்மிதேவி உங்களுடைய இந்த வீழ்ச்சியை முன்பே கணித்துக் கூறினாள்.

“ஜடவுலகினுள் விழ நேர்ந்தாலும், நீங்கள் பகை உணர்ச்சியுடன் என்னை தீவிரமாக நினைத்தவண்ணம் இருப்பீர்கள். இதனால் உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு என்னை விரைவில் வந்தடைவீர்கள்.” இவ்வாறு கூறியபின்னர், பகவான் வைகுண்ட வாசலிலிருந்து உள்ளே தமது உறைவிடத்திற்குச் சென்றார்.

பகவானின் பக்தர்களான ஜெயன், விஜயன் முனிவர்களால் சபிக்கப்பட்டதற்கு ஓர் இரகசிய காரணம் உள்ளது. அதை பெரும் ஆச்சாரியர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர்: பகவான் சிலசமயம் யுத்தம் செய்ய விரும்புகிறார், ஆனால் வைகுண்டத்திலோ பகைமை என்ற பேச்சுக்கே இடமில்லை; ஆகையால், சில நேரங்களில் அத்தகு தகுதிபெற்ற பக்தர்களை ஜடவுலகிற்கு அனுப்பி தாமும் பலவாறாக அவதரித்து யுத்த லீலை புரிந்தபின் மீண்டும் அவர்களை தமது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்.

ஜெய விஜயனின் வீழ்ச்சி

அதன்பின் ஜெயனும் விஜயனும் முகம்வாட்டமுற்று பொலிவிழந்து, வைகுண்டத்திலிருந்து கீழே வீழ்ச்சியடைந்து ஜடவுலகில் திதியின் கருப்பையினுள் கஸ்யப முனிவரால் வைக்கப்பட்டனர். இந்த அசுர கர்ப்பமே, பிரபஞ்சம் இருள் சூழ்ந்து இருப்பதற்கு காரணம் என பிரம்மதேவர் தேவர்களிடம் விளக்கினார். (மேற்கொண்டு நடக்கும் நிகழ்வுகளை அடுத்த இதழில் காணலாம்.)

அச்சம் கொண்டிருந்த தேவர்களை நோக்கி பிரம்மதேவர் பரிவுடன் தொடர்ந்து பேசினார், “குழந்தைகளே, இச்சூழ்நிலையை சரிசெய்யும் சக்தி என்னிடம் இல்லை. மேலும், இது பகவானின் பரம விருப்பப்படி நிகழ்கிறது, முக்குணங்களைக் கட்டுப்படுத்துபவர் பகவானே. அவரே பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முச்செயல்களுக்கும் பொறுப்பாளியாவார். அவரது கருணையை வேண்டி பிரார்த்திப்போமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives