இறையருள்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

இறையருள் அல்லது இறையன்பு என்பதுதான் மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

“செல்வங்களுள் சிறந்த செல்வம் அருளாகிய செல்வமே. பொருளாகிய செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன.” (திருக்குறள் 241)

அறம் அல்லது தர்மத்தின் வழி நின்றால்தான் இறையருள் அல்லது இறையன்பினைப் பெற முடியும். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளின் அடிப்படையில், வாழ்வின் நோக்கம்

முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துதல் மற்றும் அன்பைப் பெறுதல் என்று விளக்கியுள்ளார்.

முழுமுதற் கடவுளிடம் அன்பு செலுத்தும்போது, அவரின் படைப்பான பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல் தானாக அமையும். வேருக்கு நீரூற்றினால் மரத்தின் எல்லாப் பகுதிகளும் நலம் பெறும் என்பதுபோல.

அருளுடைமையின் முக்கியத்துவத்தை வள்ளுவர்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

“அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் வாழும் வாழ்க்கை அருள் பொருந்திய நெஞ்சம் உடையோருக்கு இல்லை.” (திருக்குறள் 243)

இங்கே, “துன்பமான இருள் பொருந்திய உலகம்” என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் காண்க. இதிலிருந்து ஒளிபொருந்திய இன்பமான உலகம் மற்றொன்று இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார். பகவான் சைதன்ய மஹாபிரபுவின் நோக்கமும் நம்மை ஒளி மிகுந்த இனிய உலகமான கிருஷ்ண உலகிற்கு அல்லது கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதுதான்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு

“பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு சிறப்பாகக் கருதப்படுகின்ற செம்பொருளாகிய உண்மைப் பொருளை (இறைவனை) காண்பதே அறிவாகும்.” (திருக்குறள் 358)

வள்ளுவரின் இந்தக் கூற்றினை, பகவத் கீதையின் (4.9) கீழ்க்காணும் கூற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஜன்ம கர்ம ச மே திவ்யம்  ஏவம் யோ வேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம  நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன

 “எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.”

மேலும், அறிவு என்பது, இயற்கையையும் அதை அறிபவர்களான ஆத்மாவையும் இறைவனையும் அறிவதே என்று பகவத் கீதையில் (13.3) கிருஷ்ணர் கூறுகின்றார். இதுவே உண்மையான பகுத்தறிவாகும்.

2017-01-09T14:29:01+00:00November, 2016|பகவத் கீதை|0 Comments

About the Author:

தயாள கோவிந்த தாஸ் M.Tech., Ph.D. அவர்கள், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண பக்தியைக் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment