இராமாயணத்தில் சீதையைக் கடத்திச் சென்ற பின்னர் இராமருக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது. சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக சுக்ரீவனும் வாலியைக் கொல்வதாக இராமரும் பரஸ்பரம் உறுதியளித்தனர். இதற்கிடையில், நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான துணுக்கினைக் காண்போம்.

இராமர் பெரும் வருத்தத்துடன் சுக்ரீவனிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது சுக்ரீவன் மொழிந்தான், கொடிய செயல்களைச் செய்யும் ஓர் அரக்கனால் ஒரு பெண் அபகரித்துச் செல்லப்படுவதை நான் கண்டேன். அவள் உமது பத்தினியாகத்தான் இருக்க வேண்டுமென்று தற்போது யூகிக்கின்றேன். அவள் பரிதாபமான குரலில் ’இராமா, இலக்ஷ்மணா என்று கதறிக் கொண்டிருந்தாள். மலைச் சிகரத்தில் என்னையும் இதர வானரங்களையும் கண்டபோது, அவள் தமது மேலாடையில் முடித்து வைத்திருந்த அணிகலன்களைக் கீழே போட்டாள். நாங்கள் அவற்றை பத்திரமாக வைத்துள்ளோம்.”

மகிழ்ச்சி தரும் இச்சொற்களைக் கேட்ட இராமர், அவற்றைக் காண பேராவல் கொண்டார். மலைக்குகையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அந்நகைகளைக் கொண்டு வந்து இராமரிடம் வழங்கினான் சுக்ரீவன்.

அணிகலன்களைக் கண்ட இராமர் பனியினால் மூடப்பட்ட நிலாவைப் போன்று கண்ணீரால் மறைக்கப்பட்டு காட்சியை இழந்தார். பெருந்துயரத்துடன் கூடிய சினத்தில் புலம்பினார், பெருமூச்சுவிட்டார். அருகிலிருந்த இலக்ஷ்மணரிடம் பரிதாபத்துடன் பேசினார், இலக்ஷ்மணா, கடத்தப்பட்ட வைதேகியின் அணிகலன்களைப் பார்.”

அப்போது இலக்ஷ்மணர் கூறிய பதில்:

நாஹம் ஜாநாமி கேயூரேநாஹம் ஜாநாமி குண்டலே

நூபுரே த்வபிஜாநாமிநித்யம் பாதாபிவந்தநாத் 

பிராட்டியார் தமது புஜத்தில் அணியும் வங்கியை நான் பார்த்தறியேன், காதில் அணியும் குண்டலங்களையும் பார்த்தறியேன். நாள்தோறும் அவரது திருவடிகளில் விழுந்து சேவித்தமையால், இந்த பாதச் சிலம்புகளை மட்டும் நான் நன்றாக அடையாளம் காண்கிறேன்.”

இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள். பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை கவனமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை; மாறாக, என்றென்றும் அவளது தாமரைத் திருவடிகளை தமது தியானத்தில் அமர்த்தியிருந்தார். அவருடைய பக்தியையும் பணிவையும் ஒழுக்கத்தையும் என்னவென்று சொல்வது! நினைத்துப் பூரித்தலே ஆனந்தமளிப்பதாக உள்ளது.

ஆதாரம்: ஸ்ரீ வால்மீகி இராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், ஸர்க்கம் ஆறு