ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

Must read

ஆகஸ்ட் இதழில், ஹரிதாஸ தாகூரின் மறைவையும் ஜகதானந்தரின் தெய்வீக கோபத்தையும் பற்றி கண்டோம். இந்த இதழில், ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்களைப் பற்றிக் காண்போம்.

பிரேமையின் உயர்நிலை

தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும்.

அக்காலக் கட்டத்தில், சில நேரங்களில் பகவான் வெளிப்புற உணர்வை வெளிப்படுத்தி, உலக நடைமுறைக்கு ஏற்ப மக்களிடம் பேசவும் பழகவும் செய்வார்; மற்ற நேரங்களில் பகலா இரவா என்பதைக்கூட அறியாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி சற்றும் அறியாத அளவிற்கு கிருஷ்ணரின் நினைவில் மூழ்கியிருப்பார்; சில சமயங்களில் இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட உணர்வில் இருந்தார். ஸ்வரூப தாமோதரர், இராமானந்த ராயர், கோவிந்தர் ஆகிய மூவரும் அவரது நிலையான தோழர்கள். இரவில் இராமானந்த ராயர் அல்லது ஸ்வரூப தாமோதரரின் கழுத்தைப் பிடித்தபடி, “ஐயகோ! எனதருமை நண்பனான ஸ்ரீ கிருஷ்ணன் துன்பப் பெருங்கடலினுள் என்னை ஆழ்த்திவிட்டு மதுராவிற்குச் சென்று விட்டான். அவனின்றி எவ்வாறு என்னால் வாழ இயலும்? எனது அன்பிற்குரிய கிருஷ்ணனைக் கண்டுபிடிக்க நான் எங்கு செல்வேன்?” என்று ராதாராணியின் மனோபாவத்துடன் அவர் ஏங்குவார். ஸ்வரூப தாமோதரரும் இராமானந்த ராயரும் கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களைப் பாடி பகவானின் பக்தியின் உணர்ச்சிகளை அதிகரிப்பர்.

மணல்மேட்டினைக் கண்டு ஓடுதல்

ஒருநாள் மஹாபிரபு தமது மதிய குளியலுக்காக கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மணல்மேட்டினைக் கண்டார். அதனை கோவர்தன மலை என்று தவறாக எண்ணி, தெய்வீக பைத்தியக்காரத்தனத்துடன் அதனை நோக்கி ஓடினார். கோவர்தனத்தைப் புகழ்ந்து கோபியர்கள் பாடிய பாடலை உச்சரித்த வண்ணம் அவர் அதனை நோக்கி மின்னலைப் போன்று ஓடினார்.

அவரது குரல் அடைபட்டது, கண்ணீர் கன்னங்களின் வழியே பெருக்கெடுத்து ஓடியது. காற்றைப் போன்ற வேகத்துடன் சைதன்ய மஹாபிரபு விரைந்து ஓட, அவரது பக்தர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது துவாரங்களிலிருந்து இரத்தம் வெளியேறியது, உடல் வெண்ணிறமாக மாறியது. கடல் அலைகளைப் போல நடுங்கியபடி, அவர் நிலத்தில் உணர்வற்று வீழ்ந்தார். பக்தர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கினர்.

கோவிந்தர் தமது குடுவையிலிருந்த நீரினை மஹாபிரபுவின் உடலில் தெளிக்க, ஸ்வரூப தாமோதரரும் மற்ற பக்தர்களும் “கிருஷ்ண! கிருஷ்ண!” என்று அவரது காதில் பலமாக உச்சரித்தனர். சற்று நேரத்தில் “ஹரி! ஹரி!” என்று முழங்கியபடி கௌராங்கர் குதித்து எழுந்தார். அவர் வெளிப்புற உணர்விற்குத் திரும்பியதைக் கண்ட பக்தர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு மிக்க மகிழ்ச்சியுற்றனர். ஆனால் பாதி உணர்விற்கு மட்டுமே திரும்பிய சைதன்ய மஹாபிரபு, கிருஷ்ணரின் பிரிவினால் மிகுந்த மன வருத்தத்துடன் கதறி அழுதபடி, “என்னை ஏன் மீண்டும் இங்கு கொண்டு வந்தீர்? நான் கிருஷ்ணரை ராதாராணியுடனும் கோபியர்களுடனும் கோவர்தன மலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து என்னை வெளியேற்றி இங்கு ஏன் கொண்டு வந்தீர்கள்?” என்று துன்பத்துடன் ஸ்வரூப தாமோதரரிடம் வினவினார்.

மஹாபிரபு மணல்மேட்டினை கோவர்தன மலை என்று எண்ணி ஒடுதல்

கடலினுள் குதித்தல்

ஒருநாள் இரவில் நிலவின் பிம்பத்தை கடலில் கண்ட மஹாபிரபு, அதனை யமுனை என்று தவறாக எண்ணி, ஓடிச் சென்று அதனுள் குதித்தார். பல கிலோமீட்டர் தூரம் வடக்கே மிதந்து சென்று, கோனார்க் என்னும் இடத்தை அடைந்தார். பகவான் சைதன்யரைக் காணவில்லை என்பதை பக்தர்கள் அறிந்தபோது, கடற்கரையில் அவரை அங்குமிங்கும் தேடினர். ஆனால் விடியும் வரை அவரைக் கண்டறிய இயலாததால், அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாரோ என்று அச்சப்பட ஆரம்பித்தனர். அதிகாலையில் அவர்கள் கோனார்க் பகுதியை வந்தடைந்தபோது, மிரண்ட தோற்றத்துடன் நரசிம்மதேவரின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த மீனவனைக் கண்டனர். மஹாபிரபுவைப் பற்றிய சில தகவல்களை அம்மீனவன் அறிந்திருக்கலாம் என்று உணர்ந்ததால், அவன் இவ்வளவு பயந்தபடி காணப்படுவதன் காரணத்தை ஸ்வரூப தாமோதரர் வினவினார்.

மீனவனின் வலையில் மஹாபிரபு

மீனவன் பதிலளித்தான், “நேற்றிரவு எனது வலையில் நான் ஒரு விசித்திரமான பேயினைப் பிடித்தேன். அதன் அங்கங்கள் உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தன. இரவில் மீன்பிடிக்கச் செல்லும்போது பேய்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நான் நரசிம்மதேவரின் நாமத்தை உச்சரிப்பது வழக்கம். ஆனால் இம்முறை நரசிம்மதேவரின் நாமத்தை நான் அதிகமாக உச்சரித்தபோது, இப்பேய் மிகவும் சக்தியுடையதாக மாறியது எனக்கு விசித்திரமாக இருந்தது.” முழு சூழ்நிலையை உணர்ந்து கொண்ட ஸ்வரூப தாமோதரர், “கவலைப்படாதீர். பேய்களிடமிருந்து விடுபடுவதற்கான வழி எனக்குத் தெரியும்,” என்று கூறி, சில மந்திரங்களை உச்சரித்து, மீனவனின் தலையில் தனது கையை வைத்து மூன்று முறை அவனை அறைந்துவிட்டு, “இப்போது பேய் சென்று விட்டது, பயப்பட வேண்டாம்” என்று உரைத்தார்.

இவ்வாறு மீனவனை சாந்தப்படுத்திய ஸ்வரூப தாமோதரர் அவரிடம் கூறினார், “நீங்கள் பேய் என்று நினைக்கும் நபர் உண்மையில் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு. இப்பொழுது உங்களது பயம் நீங்கி மனம் அமைதியடைந்துவிட்டது. அவர் எங்குள்ளார் என்று தயவுசெய்து எனக்குக் காட்டுவீராக!” தனது வலைகளை விரித்து வைத்திருந்த இடத்திற்கு பக்தர்களை மீனவன் அழைத்துச் செல்ல, அங்கே அவர்கள் தங்களது எஜமானர் உணர்வற்ற நிலையில் மணலால் மூடப்பட்டு படுத்திருப்பதைக் கண்டனர். பகவானின் உடல் நீண்டிருந்தது, அவரது எலும்புகள் இடம் பெயர்ந்திருந்தன; மேலும், அவரது தோல் வலுவின்றி தொங்கியது. பக்தர்கள் அவரது நனைந்த கோவணத்தை மாற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி உலர்த்தினர். அவரை ஒரு விரிப்பில் படுக்க வைத்து, அவரது காதுகளில் நீண்டநேரம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தனர். திடீரென்று கௌராங்கர் தமது கம்பீரத்துடன் எழ, அவரது அங்கங்கள் வழக்கமான நிலைக்குத் திரும்பின.

அப்போதும் அங்கு நடந்து கொண்டிருப்பதை உணராத மஹாபிரபு கூறினார், “பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ராதையுடனும் கோபியர்களுடனும் யமுனையின் நீரில் விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இன்பமயமான காட்சியினால் எனது இதயம் பரவசத்தினால் நிரம்பியிருந்தது. ஆனால் நீங்கள் என்னை அங்கிருந்து இங்கே கொண்டு வந்துவீட்டீர்கள். யமுனை எங்கே? விருந்தாவனம் எங்கே? கிருஷ்ணர் எங்கே? ராதையும் கோபியர்களும் எங்கே?”

ஸ்வரூப தாமோதரர் நளினமான முறையில் மஹாபிரபுவை புரியிலுள்ள அவரது இல்லத்திற்கு மீண்டும் அழைத்து வந்து ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தார். கௌராங்கரின் மனம் கிருஷ்ணரைப் பற்றிய எண்ணங்களில் தொலைந்துவிட்டதாலும், அவர் அடுத்ததாக என்ன செய்வார் என்பதைக் கணிக்க இயலாததாலும், பக்தர்கள் அனைவரும் மிகுந்த கவலைக்கு உள்ளாகினர்.

மீனவனின் வலையில் ஸ்ரீ சைதன்யர்

ஸ்ரீ சைதன்யரின் மறைவு

ஒருநாள் ஸ்வரூப தாமோதரர் அத்வைத ஆச்சாரியரிடமிருந்து, “ஒவ்வொருவரும் அவரைப் போலவே பைத்தியமாகிவிட்டதாக அந்த பைத்தியக்காரரிடம் தெரிவிக்கவும். இனிமேல் சந்தையில் அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை,” என்னும் புதிரான செய்தி ஒன்றைப் பெற்றார். பகவான் சைதன்யரின் அவதாரம் பூர்த்தியாகி விட்டது, அவர் விரைவில் இவ்வுலகிலிருந்து புறப்பட்டு விடுவார் என்னும் உட்பொருள் கொண்ட அச்செய்தியினை சைதன்ய மஹாபிரபுவும் ஸ்வரூப தாமோதரரும் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. ஸ்வரூப தாமோதரர் வருத்தம் தோய்ந்தவரானார்.

அன்றுமுதல் கௌராங்கரின் பரவசம் ஒவ்வொரு விநாடியும் இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்தது. கிருஷ்ணரின் பிரிவினால் ஏற்பட்ட பைத்தியக்காரத்தனத்தில் மூழ்கடிக்கப்பட்டு, மஹாபிரபு தமது வாழ்வை மிகுந்த சிரமத்துடன் தக்க வைத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் புரியின் கடற்கரைக்கு அருகிலுள்ள டோடா கோபிநாதர் கோயிலுக்கு அருகில் தமது பக்தர்களுடன் ஸங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்த பகவான், திடீரென்று கோயிலினுள் விரைவாக ஓடி கோபிநாத விக்ரஹத்தினுள் ஒன்றாகக் கலந்து, இவ்வுலகிலிருந்து புறப்பட்டார்.

மஹாபிரபுவின் பிரிவைத் தாங்கவியலாமல், அவரது சகாக்களில் பெரும்பாலானோர் விரைவிலேயே இம்மண்ணுலகை விட்டுச் சென்றனர். இருப்பினும், விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகள் அவர் சென்ற பின்னரும் வாழ்ந்து, கிருஷ்ண உணர்வை நிலைநிறுத்தும் அவரது பணியைத் தொடர்ந்தனர்.

தமது இயக்கம் உலகின் ஒவ்வொரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் பரவும் என்ற ஸ்ரீ சைதன்யரின் தீர்க்க தரிசனத்தினை இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார். மனித சமுதாயத்தை உய்விக்கும்பொருட்டு, ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ சைதன்யரின் எளிய உபதேசங்களை அனைவருக்கும் உகந்தபடி உலகெங்கிலும் வழங்கியுள்ளார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் ஸ்ரீ சைதன்யரின் இயக்கத்தில் இணைவோமாக.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives