ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கை

Must read

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில், அரசியல், பண்பாடு மற்றும் சமய சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

 

காந்திக்கு சுமார் 450 வருடங்களுக்கு முன்பே, அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை மிகப்பெரிய அளவில் தொடங்கியவர் அவர். பிறப்பின் அடிப்படையிலான ஜாதி, மதத் தடைகளை மீறி, பலதரப்பட்ட நிலையிலுள்ள எல்லா மக்களும் ஆன்மீக விழிப்புணர்வு பெற வழிவகுத்தார். தற்பெருமை கொண்ட உயர்குல மக்களின் முயற்சிகளைத் தகர்த்தெறிந்தார். அவரால் தொடங்கப்பட்ட புரட்சிகரமான ஆன்மீக இயக்கம் விரைவில் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றோ உலகம் முழுவதும் பரவியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த சீர்திருத்தவாதியின் பெயர் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, இன்று உலகமெங்கும் பரவியுள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனர் அவரே.

இன்றைய மேற்கு வங்காளத்தின் நவத்வீப பகுதியில் அமைந்துள்ள மாயாபூரில், 1486ஆம் ஆண்டில் தோன்றிய அவரைப் பற்றிய குறிப்புகள் வேத சாஸ்திரங்களில் ஏற்கனவே உள்ளன. சாஸ்திரங்கள் மட்டுமின்றி, மிகச்சிறந்த சாதுக்களும் பண்டிதர்களும், அவர் சாதாரண மனிதர் அல்ல என்றும், சாக்ஷாத் பகவானே தனது பக்தராக அவதரித்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது வாழ்வின் தொடக்கத்தில், பகவான் ஸ்ரீ சைதன்யர் சமய சடங்குகளில் சற்று பொறுமை காண்பித்தார். இருப்பினும், அவர் தனது இளமைப் பருவத்தில் உயர்ந்த நோக்கத்தினை செயல்படுத்த ஆரம்பித்தார். எல்லா தரப்பட்ட மக்களும் இறையன்பைப் பெறுவதற்கு உதவியதன் மூலமாக, அவர் அனைவருக்கும் மிகவுயர்ந்த ஆன்மீக ஆனந்தத்தினை வழங்கினார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஸங்கீர்த்தனம் செய்வதன் மூலமாக ஸ்ரீ சைதன்யர் இந்த உயர்நிலையை அனைவருக்கும் வழங்கினார்.

ஸ்ரீ சைதன்யர் ஸங்கீர்த்தன இயக்கத்தை ஆரம்பித்த குறுகிய காலத்தில், பலரும் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்; நவத்வீபத்தின் வீடுகளிலும் வீதிகளிலும் கீர்த்தனம் காட்டுத் தீயைப் போலப் பரவியது. அந்த சங்கீர்த்தன இயக்கம் வங்காளத்தை ஆண்டு வந்த இஸ்லாமியர்களையும், ஜாதியின் அடிப்படையில் புரோகிதர்களாக இருந்த இந்துக்களையும் அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து வங்காளத்தை அப்போது 16 பகவத் தரிசனம் மார்ச் 2012 ஆண்டு வந்த சந்த் காஜி என்ற இஸ்லாமிய மன்னரிடம் அவர்கள் புகார் கொடுத்தனர்.

அவர்களின் புகாரைக் கேட்ட காஜி, வளர்ந்து வரும் ஸங்கீர்த்தன இயக்கத்தினைத் தடுக்க முயன்றார். அவரது கட்டளையின் பேரில், ஸ்ரீ சைதன்யரைப் பின்பற்றுவோர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற காவலர்கள் அவர்களின் மிருதங்கத்தினை உடைத்தனர். ஹரி நாம ஸங்கீர்த்தனம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், யாராவது தொடர்ந்தால் அவர்கள் பராபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காஜி கட்டளையிட்டார்.

இதனை அறிந்த ஸ்ரீ சைதன்யர் உடனடியாக ஓர் ஒத்துழையாமை இயக்கத்தினை ஆரம்பித்தார். அமைதியான முறையில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இப்புரட்சி இந்திய வரலாற்றில் முதலாவதாகும். ஸ்ரீ சைதன்யரும் அவரைப் பின்பற்றிய இலட்சக்கணக்கான பக்தர்களும், நவத்வீபத்தின் வீதிகளில் தோன்றி பல கீர்த்தனக் குழுக்களாகப் பிரிந்தனர். நகரம் முழுவதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடியபடி அனைவரும் காஜியின் வீட்டின் முன்பாகக் கூடினர்.

கூட்டத்தினைக் கண்டு பயந்தபடி உள்ளேயே இருந்த காஜியினை பகவான் அன்புடன் அழைக்க, வெளியே வந்த காஜி அவருடன் சமயப் பயிற்சிகள் குறித்து நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் காஜியும் சைதன்யரைப் பின்பற்றுபவராக மாறி, ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பாதுகாத்து பரப்பத் தொடங்கினார். இன்றும்கூட பக்தர்கள் சந்த் காஜியின் சமாதிக்குச் சென்று தங்களுடைய மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். காஜி வாழ்ந்த காலத்திலிருந்து இன்றுவரை நவத்வீபத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் ஹரி நாம ஸங்கீர்த்தனத்திற்கு ஆதரவளிப்பவர்களாக உள்ளனர்.

இஸ்லாமிய மன்னரான காஜியிடம் சைதன்ய மஹாபிரபு உரையாடுதல்

பின்னர், தனது இருபத்தி நான்காம் வயதில் சந்நியாசம் ஏற்ற ஸ்ரீ சைதன்யர், இந்தியா முழுவதும் பயணம் செய்து நாம ஸங்கீர்த்தனத்தினை பரவச் செய்தார். ஆறு வருடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தின் மூலமாக பகவானின் மீதான தூய அன்பினை பரவச் செய்தார். பெரும்பாலான இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீர்த்தனையில் கலந்து கொண்டனர்.

கடவுளுக்கு உருவம் இல்லை என்று நினைத்து, அதனை நிரூபிப்பதற்கான வீண் முயற்சியில் ஈடுபட்டு, வேதங்களின் அர்த்தங்களை திரித்துக் கூறக்கூடிய மாயாவாதிகள் (அத்வைதிகள்) பலரையும் ஸ்ரீ சைதன்யர் தனது பயணத்தின்போது எதிர்கொண்டு வென்றார். ஆன்மீகத் தன்னுணர்வினை அடைய சமஸ்கிருத மொழியில் வேதாந்த சூத்திரத்தினைப் படிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த அவர்களைத் தனது பிரசாரத்தின் வலிமையால் பக்தித் தொண்டை ஏற்கச் செய்தார். ஸார்வபௌம பட்டாசாரியர் என்ற பிரசித்தி பெற்ற மாயாவாதியினை சாஸ்திர வாதத்தினால் ஸ்ரீ சைதன்யர் வென்றார். ஸ்ரீ சைதன்யர் தனது காரணமற்ற கருணையால், ஸார்வபௌம பட்டாசாரியரின் முன்பு தனது ஆறு கரங்களைக் கொண்ட உருவை வெளிப்படுத்தினார். இரு கரங்களில் இராமரின் வில் மற்றும் அம்பினையும், இரு கரங்களில் கிருஷ்ணரின் புல்லாங்குழலையும், இரு கரங்களில் சைதன்யரின் கமண்டலம் மற்றும் தண்டத்தையும் ஏந்தியபடி, தான் முழுமுதற் கடவுள் என்பதை வெளிப்படுத்தினார். அதுவரை மிகப்பெரிய மாயாவாதியாக இருந்த ஸார்வபௌமர் அப்போது ஸ்ரீ சைதன்யரின் தாமரைத் திருவடிகளில் சரணடைந்து, மிகப்பெரிய பக்தராக மாறினார்.

நூற்றுக்கணக்கான வருடங்களாக மாயாவாதிகளின் முக்கிய நகரமாகத் திகழ்ந்த வாரணாசியில் (காசியில்), தனது சகாக்கள் சிலருடன் தங்கிய ஸ்ரீ சைதன்யர் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தார். இவற்றைக் கேள்விப்பட்ட மாயாவாதிகளின் தலைவரான பிரகாசானந்த சரஸ்வதி, “ஓர் உண்மையான சந்நியாசி, இதுபோல எல்லா தரப்பட்ட மக்களுடனும் இணைந்து பாடி ஆடுவது தவறு,” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் முக்கியத்துவத்தை உணராத மாயாவாதிகளின் குற்றச்சாட்டுகளின் காரணத்தினால், மிகவும் வேதனைப்பட்ட ஸ்ரீ சைதன்யரின் சீடர்கள், ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.

அதில் கலந்துகொள்ள வந்த ஸ்ரீ சைதன்யர், வாசலில் மக்கள் கால் கழுவும் இடத்தின் அருகில் அமர்ந்தார். தனது சக்தியினால் உடலிலிருந்து சூரியனைக் காட்டிலும் பிரகாசமான ஆன்மீக ஒளியினை வெளிப்படுத்தினார். அதனைக் கண்ட மாயாவாதிகள் உடனடியாக அவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கியபோதிலும், பிரகாசானந்த சரஸ்வதி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம், “வேதாந்தத்தைப் படிக்காமல் வீதிகளில் இவ்வாறு பாடி ஆடுவது ஏன்?” என்று வினவினார். வேதங்களை இயற்றியவரும் அவற்றை முழுமையாக அறிந்தவருமான பகவான் ஸ்ரீ சைதன்யர், “நான் ஒரு மிகப்பெரிய முட்டாள் என்பதால், வேதாந்தத்தைப் படிக்காமல் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடும்படி எனது குரு எனக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று பதிலளித்தார். வேதங்களைப் படித்து தற்பெருமையுடன் விளங்கும் மாயாவாதிகளை பகவான் மறைமுகமாகத் தாக்கினார். மேலும், தனது ஆன்மீக குரு தன்னைப் பின்வரும் ஸ்லோகத்தை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும் என்று கூறியதாக எடுத்துரைத்தார்.

ஹரேர் நாம ஹரேர் நாம  ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ கதிர் அன்யதா

“சண்டையும் சச்சரவும் நிறைந்த கலி யுகத்தில், ஆன்மீக முன்னேற்றமடைய ஹரி நாமத்தைத் தவிர, ஹரி நாமத்தை தவிர, ஹரி நாமத்தை தவிர, வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.” (பிருஹன் நாரதீய புராணம்)

பல்வேறு வாதங்களின் இறுதியில், மிகப்பெரிய பண்டிதரான பிரகாசானந்த சரஸ்வதியும் அவரது சீடர்களும் ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைந்து மிகுந்த உற்சாகத்துடன் ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடத் தொடங்கினர். இந்த மாபெரும் மாற்றத்தைக் கண்ட வாரணாசி மக்கள் முன்பை விட அதிகமாக ஸ்ரீ சைதன்யரின் ஸங்கீர்த்தன இயக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

மிகவுயர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், பகவான் ஸ்ரீ சைதன்யர், அத்தகைய வெளிப்புற அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சமூக அந்தஸ்தைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், ஒருவர் பக்தராக இருந்தால் போதும், அவர் தாழ்ந்த பிரிவினராக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், அவர்களின் வீட்டில் தங்கி உணவும் அருந்தினார். அதுமட்டுமின்றி இறையன்பின் மிகவுயர்ந்த உபதேசங்களை தாழ்ந்த குடியின் உறுப்பினரான இராமானந்த ராயரிடம் வெளிப்படுத்தினார். ஸ்ரீ சைதன்யரின் மற்றுமொரு சீடரான ஹரிதாஸ் தாகூர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்; இருப்பினும், அவரை “கிருஷ்ணரின் திருநாமத்தை வழங்கும் ஆன்மீக குரு,” அல்லது நாமாசாரியர் என்னும் மிகவுயர்ந்த நிலைக்கு உயர்த்தினார். சமூக நிலை முக்கியமல்ல, ஆன்மீக முன்னேற்றமே முக்கியம் என்பதை சைதன்யர் நிலைநாட்டினார்.

இன்று உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானப்பூர்வமான அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி இயக்கமானது எல்லா தரப்பட்ட மக்களும் எளிதில் பின்பற்றக்கூடியதாகும். எல்லைகளைக் கடந்து ஆன்மீக அனுபவம் பெற மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அவர்களின் ஆவலை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் நிறைவேற்றி வருகிறது, இதன் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர்.

பகவான் ஸ்ரீ சைதன்யர் நாம ஸங்கீர்த்தனம் குறித்து, தனது சிக்ஷாஷ்டகத்தில் கூறுவது யாதெனில், “இந்த ஸங்கீர்த்தன இயக்கம் காலங்காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள எல்லா அழுக்கையும் சுத்தப்படுத்தி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு, இறப்பு என்னும் தீயை அணைக்கிறது. நிலவு தன் குளிர்ந்த ஒளியினால் எல்லாருக்கும் நன்மையளிப்பதைப் போல, இந்த சங்கீர்த்தன இயக்கம் மனித குலத்திற்கு மாபெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு உயிரூட்டுகிறது, பேரானந்தப் பெருங்கடலைப் பெருகச் செய்கிறது, எப்பொழுதும் நாம் விரும்பும் அமிர்தத்தை முழுமையாகச் சுவைக்கச் செய்கிறது.”

பலருடன் இணைந்து நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives