மனிதனாக வாழ்வோம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷுகஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:

ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவ மடைந்தவர்களில்கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.” (பகவத் கீதை 7.3) 

மிருகத்திற்கு சமமான மனிதன்

கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல. மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு, பல்லாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவனே பக்குவமடைய முயற்சி செய்யலாம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். யாரால் பக்குவமடைய முடியும்- அதுவும் இந்த கலி யுகத்தில்? மக்கள் அனைவரும் நாய்களையும் பூனைகளையும் போன்று உண்ணுதல், உறங்குதல், பாலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் ஆகியவற்றிற்காகவே நாள் முழுவதும் உழைக்கிறார்கள். மனிதர்கள் மனிதர்களைப் போல வாழ்வதில்லை.

ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச

ஸாமான்யம் ஏதத் பஷுபிர் நராணாம்

தர்மோ ஹி தேஷாம் அதிகோ விஷேஷோ

தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா: 

உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு ஆகிய செயல்கள் விலங்குகள், மனிதர்கள் என இருவருக்கும் பொதுவானவை. ஆனால் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்பு மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே, ஆன்மீக வாழ்க்கை இல்லை என்றால், மனிதன் விலங்குகளுக்கு சமமானவன்,” என்று ஹிதோபதேஷம் கூறுகிறது.

உண்ணுதல் என்பதைப் பொறுத்தவரை நாய்க்கும் எனக்கும் என்ன வேறுபாடு? நான் என்னுடைய சுவைக்கு ஏற்றாற் போல உண்கிறேன், நாய் அதனுடைய சுவைக்கு ஏற்றாற் போல உண்கின்றது. நான் விதவிதமான சுவையான உணவுகளை மேஜைமீது தட்டில் வைத்து நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டால்கூட, உண்ணுதல் என்னும் செயல் மாறப் போவதில்லை. உணவிலும் உண்ணும் முறையிலும் வேற்றுமை உள்ளபோதிலும் உண்ணுதல் என்னும் செயலானது எனக்கும் நாய்க்கும் பொதுவானதாக இருப்பதால், மேஜையில் வைத்து உண்பதால் மட்டும் மக்கள் நாகரிகமானவர்களாக மாறிவிட முடியாது என்று சாஸ்திரம் கூறுகின்றது. எந்தவொரு கவலையும் இன்றி நாயினால் தெருக்களில் உறங்க முடியும், ஆனால் சொகுசான படுக்கையறை இல்லாமல் நம்மால் உறங்க முடியாது-இருப்பினும், உறங்குதல் என்னும் செயல் பொதுவானதே. காமத்தைப் பொறுத்தவரை எந்த வெட்கமும் இன்றி நாய் தெருவில் அனுபவிக்கின்றது, ஆனால் மனிதர்களுக்கோ சில கட்டுப்பாடுகள் உள்ளன-இருப்பினும், காமம் என்பதும் பொதுவானதே. அதுபோல, தற்காத்துக் கொள்ளுதல் என்பதும் நாயிடம் உள்ளது. நம்மைப் பாதுகாக்க நாம் அணுகுண்டை தயாரித்துவிட்ட காரணத்தினால், நாம் நாயைக் காட்டிலும் எவ்விதத்திலும் சிறந்தவர்களாகிவிட முடியாது.

மனித வாழ்வின் சிறப்பு

அப்படியெனில், மனித வாழ்வின் சிறப்பு என்ன? அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ, மனிதன் பரம்பொருளைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொள்ள வேண்டும், வாழ்வின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நாயினால் அதனை உணர முடியாது. இதுவே மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள வேறுபாடு. மனித வாழ்வில் பிரம்மனையும் பரபிரம்மனையும் பற்றி, அஃதாவது ஆத்மாவையும் பரமாத்மாவையும் பற்றி ஆவலுடன் வினவ வேண்டும். பரம்பொருளைப் பற்றிய ஞானத்தை அடைவதே வாழ்வின் பக்குவநிலை. அதை விட்டுவிட்டு உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காத்தல் என்று நாயிடம் போட்டியிடுவது நாகரிகமல்ல, வாழ்வின் பக்குவநிலையுமல்ல. நாய் அல்லது பூனையைப் போன்ற மிருக புத்தியுள்ள மனிதர்களால் வாழ்வின் குறிக்கோளை உணர முடியாது.

உண்ணுதல் என்ற செயல்பாடு மனிதனுக்கும் நாய்க்கும் ஒன்றே, மனிதனால் வாழ்வின் முக்கியத்துவத்தை உணர முடியும், நாயால் முடியாது

குருடர்களால் வழிநடத்தப்படும் சமுதாயம்

ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும்

துராஷயா யே பஹிர்-அர்த-மானின:

அந்தா யதான்தைர் உபனீயமானாஸ்

தே  உரு-தாம்னி பத்தா:

புலனின்பத்தில் பற்றுதல் கொண்டுள்ள குருடனைத் தங்களது தலைவனாக அல்லது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களும் பௌதிக வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்களும், ஆன்மீக உலகிற்கு திரும்பிச் சென்று பகவான் விஷ்ணுவின் சேவையில் ஈடுபடுவதே வாழ்வின் குறிக்கோள் என்பதைப் புரிந்துகொள்ள இயலாது. குருடனால் வழிகாட்டப்படும் மற்ற குருடர்கள் சரியான பாதையை விட்டு விலகிச் சென்று சாக்கடையில் விழுவதுபோல், பௌதிகப் பற்றுடைய நபரால் வழிகாட்டப்படும் பௌதிகப் பற்றுடைய இதர நபர்கள் பலன்நோக்குச் செயல்களின் பலமான கயிறுகளால் பிணைக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் மூவகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு பௌதிக வாழ்வைத் தொடர்கின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31)

முழுமுதற் கடவுளான விஷ்ணுவைப் புரிந்துகொள்வதே வாழ்வின் இலட்சியம். ஆனால் மக்களோ அவரின் வெளிப்புற சக்தியான ஜட சக்தியில் இன்பமடைய முயற்சி செய்கிறார்கள். அரசியல்வாதிகள், தலைவர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று கூறிக்கொள்பவர்களால் இச்சமுதாயம் வழிநடத்தப்படுகிறது)—ஆனால், வாழ்வின் குறிக்கோளை அறியாமல், இவர்கள் அனைவரும் குருடர்களாக உள்ளனர்.

அடுக்குமாடி வீடும் மூன்று ரோல்ஸ்ராய்ஸ் காரும் வைத்திருந்தால் வாழ்வின் பக்குவநிலையை அடைந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். ஆனால், அடுக்குமாடி கட்டிடம் எத்தனை நாள்கள் என்னிடம் நிலைத்திருக்கும்? இதுவா எனது முக்கியக் கடமை?”-இச்சிந்தனைகள் அவர்களிடம் இல்லை. அடுக்குமாடி கட்டிடத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, நாய்கள், பூனைகள், புழுக்கள், எலிகள் என இதர உயிரினங்களும் வாழ்கின்றன. அவ்வாறு இருக்கையில் மனிதனுக்கும் இதர உயிர்வாழிகளுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனால் வாழ்வின் பக்குவநிலையை அடைய முடியும்—இதுவே வித்தியாசம். நான் யார்? நான் இந்த உடலா? போன்ற கேள்விகளை எழுப்ப முடியும்—இதுவே வித்தியாசம்.

உண்மையான தன்னுணர்வு

ஜட இயற்கையை அடக்கியாள நாம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தாலும், மீண்டும்மீண்டும் தோற்கடிக்கப்படுவது ஏன்? ஒருவன் கடுமையாக உழைத்து ஒரு மாநிலத்தின் தலைவனானால், அதன் பின்னர் அவன் இறக்க விரும்புவதில்லை. இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில், மரணம் என்ற காலன், அவனுடைய அரசியல், பதவி, சொத்து, குடும்பம் என அனைத்தையும் பறித்துக் கொள்கின்றது. ம்ருத்யு: ஸர்வ ஹரஷ் சாஹம், என்கிறது பகவத் கீதை (10.34). யார் பறித்துக் கொள்வார்? மரண ரூபத்தில் வரும் கிருஷ்ணர் அனைத்தையும் பறித்துக் கொள்வார்.

நாம் எவ்வளவு சொத்துக்களை சேகரித்தாலும், ஒரு காலக்கட்டத்தில் கிருஷ்ணர் அவையனைத்தையும் பறித்துக் கொள்வார். இதை உணர்ந்து, கிருஷ்ணரிடம் சரணடைந்தால், நாம் எதையும் இழக்க மாட்டோம். நான் சுதந்திரமானவன் அல்ல, சுதந்திரமாக இருக்க முயற்சித்தால் முடியாத காரியம். நான் கட்டுப்பட்டவன், கிருஷ்ணரின் நித்திய சேவகன்”—இதை உணர்வதே உண்மையான தன்னுணர்வாகும். ஜீவேர ஸ்வரூப ஹய கிருஷ்ணேர நித்ய-தாஸ் (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 20.108). கிருஷ்ணரின் நித்தியமான சேவகனாக இருப்பதே ஜீவனின் ஸ்வரூப (உண்மையான) நிலை என்று சைதன்ய மஹாபிரபு உபதேசித்துள்ளார். பிரம்மன் உணர்வு, அஹம் ப்ரஹ்மாஸ்மி, என்பது உடல் சார்ந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கும். நான் இந்த ஜடவுடல் அல்ல, ஆன்மீக ஆத்மா,” என்பதை உணர்தல் தன்னுணர்வின் முதற்படியாகும். நான் கிருஷ்ணரின் நிரந்தர சேவகன்,” என்பதை உணர்வதே தன்னுணர்வின் இறுதி நிலையாகும். இந்த இறுதியான ஸ்வரூப நிலையை ஜீவாத்மா அடையும்போதுதான் ஞானம் முதிர்ச்சியடைந்ததாகக் கருதப்படுகிறது, அரைகுறை ஞானத்துடன் பக்குவமடைய முடியாது.

எனவே, உண்மையான தன்னுணர்வை பெற்றவன் பூரண அறிவுடன் வாஸுதேவனான கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் (பகவத் கீதை 7.19) என்பதைப் புரிந்துகொள்கிறான். அவருடைய அம்சமாகிய நான் அவரது நிரந்தர சேவகன்,” என்பதை உணர்ந்தவன் மஹாத்மா எனப்படுகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அரிதானவன்,

ஸ மஹாத்மா ஸு துர்லப:.

நாம் அனைவரும் கிருஷ்ணரின் நித்திய சேவகர்கள் என்பதால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே நமது வாழ்வின் இலட்சியமாகும்.

கிருஷ்ணருக்குத் தொண்டு செய்தல்

கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதே நமது கடமை. கிருஷ்ணர் நம்முடைய உதவியை எதிர்பார்த்து கொண்டிருப்பதில்லை, இருப்பினும் தன்னிடம் சரணடையும்படி அவர் ஏன் கட்டளையிடுகிறார்? அது நமது நன்மைக்காகவே. நான் எதற்காக கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்?” என்று மூடத்தனமாக நினைத்தல் பக்குவமின்மையைக் காட்டுகிறது.

கிருஷ்ணரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரிடம் சரணடைவதே வாழ்வின் பக்குவநிலை. ஆனால் பெரும்பாலான மக்கள் அவ்வாறு சரணடைவதில்லை. ஏன்?

ந மாம் துஷ்க்ருதினோ மூடா:ப்ரபத்யந்தே நராதமா:

மாயயாபஹ்ருத-ஜ்ஞானஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:

சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவரும் என்னிடம் சரணடைவதில்லை.” (பகவத் கீதை 7.15) 

துஷ்க்ருதினோ, அவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவதால் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. அவர்கள் தங்களது சொந்த நலனைப் பற்றி அறியாத மூடர்களாகவும் (மூடா), மனிதரில் கடைநிலையோராகவும் (நராதமா) உள்ளனர். கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளவும் கிருஷ்ணரிடம் சரணடையவும்தான் இவ்வுடல் கொடுக்கப்பட்டுள்ளதுஅவர்கள் அவ்வாறு செய்யாததால், கிருஷ்ணர் அவர்களை, நராதமா, மனிதரில் கடைநிலையோர் என்று அழைக்கிறார்.

சிலர் இதனை மறுத்து தம்மை சிறந்த கல்விமானாக நினைக்கலாம். ஆனால் அஃது ஏற்கத்தக்கதல்ல; ஒருவன் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளவில்லையெனில், அவன் பெற்ற கல்விக்கு அர்த்தமே இல்லை. மாயயாபஹ்ருத-ஜ்ஞான, அவனுடைய அறிவு மாயையால் கவரப்பட்டுள்ளதால், அவன் கிருஷ்ணரை எதிர்க்கின்றான், கடவுளை மறுக்கின்றான், தன்னையே கடவுளாக நினைக்கிறான். இந்த ஜடவுலகிலுள்ள அனைவரும், குறிப்பாக கலி யுகத்தில் வசிப்பவர்கள் தம்மையே கடவுளாக நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முதல் தர முட்டாள்கள் என்று பாகவதம் (1.1.10) கூறுகின்றது.

ப்ராயேணால்பாயுஷ: ஸப்யகலாவஸ்மின் யுகே ஜனா:

மந்தா: ஸுமந்த-மதயோமந்த-பாக்யா ஹ்யுபத்ருதா:

இரும்பு யுகமான கலி யுகத்தில் பெரும்பாலான மக்கள், அற்ப ஆயுள் கொண்டவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும் இருப்பதோடு மட்டுமின்றி, எப்போதும் அமைதியற்றவர்களாகவும் இருப்பர்.”

கலி யுகத்தின் தீமைகள்

கலி என்றால் சண்டை” என்று பொருள். மக்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு அறியாமையில் இருப்பதால், இது கலி யுகம் எனப்படுகிறது. கலி யுகத்தில் இருப்பவர்கள் மந்தமானவர்களாக உள்ளனர், யாரும் நல்லவர்களாக இல்லை. மக்களுடைய தேவைகள் அதிகமாக இருப்பதால், உலகம் முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது, அடுத்த வேளை உணவிற்கு உத்தரவாதம் இல்லை, அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். கலி யுகம் வளரவளர கடுமையான வரி விதிப்பினாலும் உணவுப் பற்றாக்குறையினாலும் மக்கள் துன்புறுவர் என்று பாகவதம் (12.2.9) கூறுகின்றது. வாழ்வின் துயரங்களை சமாளிக்க இயலாமல், வீடு, மனைவி, மக்கள் என அனைவரையும் துறந்து காட்டிற்குச் செல்லும் அளவிற்கு மக்கள் விரக்தியடைவர். இதுவே கலி யுகத்தின் நிலை.

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் பகவத் கீதையை உரைத்தபோது, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு, ஆயிரத்தில் ஒருவனே பக்குவமடைய முயற்சிப்பான் என்றார். ஆனால் இந்தக் கலி யுகத்தில் இலட்சத்தில் ஒருவனே பக்குவமடைய முயற்சிக்கின்றான்.

அத்தகைய நபர்களுக்கு, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் உன்னதமான பக்குவநிலையை அடைவதற்கான வழியை கற்றுத் தருகிறோம். இருப்பினும் பெரும்பாலான மக்கள் இதில் ஆர்வம் காட்டத் தயாராக இல்லை. நாய் அல்லது பூனையைப் போன்று வாழ்ந்து, தொடர்ந்து துன்பத்தை அனுபவிப்பதிலேயே அவர்கள் தங்களது காலத்தைக் கழிக்கிறார்கள்.

 

நான்கு வகையான மனிதர்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.

கலி யுகத்தின் மிகச்சிறந்த நன்மை

இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை புரிந்துகொள்வது கடினம் என்றபோதிலும், கிருஷ்ணரின் கருணை யினால் மிகவும் எளிதான முறையில் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியும். கலேர் தோஷ-நிதே ராஜன் அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:, (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51) கலி யுகத்தில் கடலளவு குற்றங்கள் இருந்தாலும் இதில் மிகச்சிறந்த நன்மை ஒன்று உள்ளது. கீர்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய முக்த ஸங்க: பரம் வ்ரஜேத்: எளிமையான முறையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் போதும், கலி யுகத்தின் எல்லா தொல்லைகளிலிருந்தும் விடுபட்டு, முக்தி பெற்று இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். எனவே, கிருஷ்ண உணர்வில் இருங்கள்! வாழ்வில் பக்குவமடையுங்கள்! மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives