எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையிலான இந்த உரையாடல் உயர்ந்த சிந்தனையுடன் எளிமையாக வாழ்வதைப் பற்றி எடுத்துரைக்கிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: வாழ்வின் தேவைகளை செயற்கையாக அதிகரிக்கும் மேற்கத்திய நாகரிகம் ஒரு வெறுக்கத்தக்க நாகரிகமாகும். உதாரணத்திற்கு, மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மின்சாரத்திற்கு ஜெனரேட்டர் தேவைப்படுகிறது, ஜெனரேட்டரை இயக்க பெட்ரோல் தேவைப்படுகிறது. பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டவுடன் அனைத்தும் நின்றுவிடும். பெட்ரோல் இருக்கும் இடத்தை கடும் சிரமத்துடன் தேடிக் கண்டுபிடித்து பூமிக்கு அடியிலும் நடுக்கடலுக்கு அடியிலும், ஆழ் துளையிட்டு பெட்ரோலைப் பெற வேண்டியுள்ளது.

இது உக்ர-கர்மா, கோரமான வேலை. ஆமணக்கு பயிரிட்டு அதன் விதைகளிலிருந்து எண்ணெயை எடுத்து விளக்கேற்றி அதே தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவியலும். மின்சாரத்தின் மூலம் நீங்கள் விளக்கின் தேவையை பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் ஆமணக்கு எண்ணெய் விளக்கிலிருந்து மின்விளக்கிற்கு வருவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. நடுக்கடலுக்குச் சென்று துளையிட்டு பெட்ரோல் எடுக்க வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளைத் தவற விடுகிறீர்கள்.

நீங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளீர்கள் பல்வேறு உயிரினங்களில் உங்களது பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நிகழ்கிறது. பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதே உங்களது உண்மையான பிரச்சனை, அதனைத் தீர்ப்பதே மனித வாழ்க்கை. நீங்கள் தன்னுணர்விற்கான உயர்ந்த புத்தியைப் பெற்றுள்ளீர்கள், ஆனால் அந்த உயர்ந்த புத்தியை தன்னுணர்விற்கு பயன்படுத்தாமல், எண்ணெய் விளக்கிலிருந்து மின் விளக்கிற்கு முன்னேறுவதற்காக பயன்படுத்துகிறீர்கள்.

சீடர் 1: மக்கள் உங்களது அறிவுரை நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பர். வெளிச்சம் தருவது மட்டுமின்றி பல வேலைகளையும் மின்சாரம் செய்கிறது. நாகரிக வசதிகள் பெரும்பாலும் மின்சாரத்தைச் சார்ந்துள்ளன.

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த வாழ்க்கையில் நீங்கள் மிகவும் வசதியாக வாழலாம், ஆனால் அடுத்த வாழ்வில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிடலாம்.

சீடர் 2: மக்கள் அதனை நம்ப மாட்டார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுவே உண்மை. ஒரு சிறுவன் தான் வளர்ந்து இளைஞனாவேன் என்பதை அறியாமல் இருக்கலாம், ஆனால் அவனது தாய் தந்தையர் அதனை அறிவர். அவன், நான் வளர்ந்து இளைஞனாக மாட்டேன்,” எனக் கூறினால், அஃது அவனது குழந்தைத்தனம். அவன் வளர்ந்து இளைஞனாவான் என்பதால், அவன் நல்ல நிலையில் வாழ்வதற்குக் கல்வி அவசியம் என தாய் தந்தையர் அறிவர். இது காப்பாளரின் கடமை. அதுபோலவே, ஆத்மாவின் மறுவுடல் மாற்றம் குறித்து நாம் பேசும்போது, அயோக்கியன் ஒருவன், எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை,” என்று கூறலாம், ஆனால் அதுதான் உண்மை.

உடல் மாற்றம் உண்மையில்லை என்று ஓர் அயோக்கியன் அல்லது பைத்தியக்காரன் கூறலாம். ஆனால் இப்பிறவியில் அவனது வாழ்க்கைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவன் உடலைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

சீடர் 2: ஆமணக்கு பயிரிடுதல், விவசாயம் செய்தல் போன்றவை மிகவும் கடினமானவை. தொழிற் சாலைக்கு சென்று எட்டு மணி நேரம் உழைத்து, கையில் பணத்துடன் வீடு திரும்பி மகிழ்வது எளிது,” என ஒருவன் கூறினால்?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே!  அது புத்திசாலித்தனமா? உயர்ந்த பிறவியை அடைவதற்காக மனித உடல் வழங்கப் பட்டுள்ளது. ஒருவேளை அடுத்த பிறவியில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிட்டால், அது வெற்றியாகுமா? கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் நாயாவதற்கு பதில் தெய்வீக நபராகலாம்.

சீடர் 1: கிராம வாழ்க்கை எளிமையானது, அமைதியானது, ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஏதுவானது. இந்த டிராக்டர்கள் எல்லா வாலிபர்களின் வேலையையும் எடுத்துக்கொள்வதால், அவர்கள் வேலை தேடி நகரத்திற்குச் செல்ல வற்புறுத்தப் படுகிறார்கள், புலனின்பத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இவ்வாறாக, டிராக்டர் பல்வேறு பிரச்சனைகளைத் தருகிறது என நீங்கள் ஜான் லெனனின் எஸ்டேட்டில் இருந்தபோது ஒருமுறை கூறினீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், நாட்டுப்புறத்தில் தொல்லைகள் குறைவு, மூளைக்கு வேலை குறைவு. உணவிற்காக சிறிது நேரம் வேலை செய்து மீதி நேரத்தை கிருஷ்ண உணர்வில் செலவிடுவதே சிறந்த வாழ்க்கையாகும். (ஸ்ரீல பிரபுபாதர் ஒரு மலரை எடுக்கிறார்.) இந்த மலரின் மெல்லிய இதழ்களைப் பாருங்கள். இத்தகு மெல்லிய இதழ்களை தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய இயலுமா?… ஆனால் இதை வடிவமைத்தவர் யார்?

சீடர் 1: மலர்கள் பகவானால் சிந்தித்து வடிக்கப்பட்டவை என்று இலண்டனில் நீங்கள் கூறினீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். ஒரு கலைஞன் இன்றி இந்த மலர்கள் மிக அழகாக வந்துள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா? அவ்வாறு நினைப்பது முட்டாள்தனம். இயற்கை என்பது என்ன? அது கிருஷ்ணருடைய இயந்திரம். அனைத்தும் கிருஷ்ணரது இயந்திரத்தினால் செய்யப்படுகின்றன.

எனவே, நியூ விருந்தாவனில் (இஸ்கானின் பண்ணை நிலத்தில்) நீங்கள் உங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்துங்கள். நிலத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்களுக்குத் தேவையான உணவு, பால் போன்றவற்றை உற்பத்தி செய்யுங்கள். நேரத்தை மிச்சம் செய்து ஹரே கிருஷ்ண ஜபம் செய்யுங்கள். எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனைஶீஇதுவே சிறந்த வாழ்க்கையாகும்.

பெயரளவு வசதியான வாழ்விற்காக வாழ்க்கைத் தேவைகளை செயற்கையாக அதிகரித்து கிருஷ்ண உணர்வெனும் உண்மை வாழ்வினை நீங்கள் மறந்தால், அது தற்கொலைக்கு சமமாகும். இந்த தற்கொலைக் கொள்கையை நாம் நிறுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்துங்கள் என நாம் வற்புறுத்தவில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் வழங்கப்பட்ட எளிய வழிமுறையான ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதிலென்ன கஷ்டம்? நீங்கள் உங்கள் இயந்திரத்தை இயக்கிக் கொண்டே ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபிக்கலாம்.

சீடர் 2: மக்கள் ஜபத்தை மேற்கொண்டால், சிறிது சிறிதாக தொழில்நுட்பத்தைக் கைவிடுவார்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக.

சீடர் 2: அவர்களது அழிவிற்கு நீங்கள் விதை விதைக்கிறீர்கள் என்பர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அழிவிற்கு அல்ல, வாழ்விற்கு விதை விதைக்கிறேன். உடல் மாற்றம் என்னும் தொடர்ந்த பிறப்பு இறப்பு சுழற்சியே அழிவை நோக்கி அழைத்துச் செல்லக் கூடியது. ஆனால் நமது வழிமுறை அச்சுழற்சியிலிருந்து உங்களை விடுவிக்கவல்லது. த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி, நீங்கள் மற்றொரு உடலை எடுக்க வேண்டிய அவசியமில்லை. கிருஷ்ண உணர்வு இல்லையெனில், நீங்கள் மீண்டும் உடலைப் பெற்றாக வேண்டும், மீண்டும்மீண்டும் துன்பப்பட வேண்டும். இதில் எது சிறந்தது? இந்த உடலோடு துன்பங்களை முடித்துக்கொள்வதே புத்திசாலித்தனம். மேன்மேலும் துன்பங்களை அனுபவிக்க அடுத்த உடலைப் பெறுவது என்பது மூடத்தனம். கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளாத வரை நீங்கள் அடுத்த உடலைப் பெற்றாக வேண்டும். வேறு வழியில்லை.

 

தேவையான உணவை உற்பத்தி செய்து ஹரே கிருஷ்ண ஜபம் செய்யும் கிராம வாழ்க்கை சிறந்தது

2017-02-27T10:45:36+00:00February, 2017|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|Comments Off on எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!
mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.