வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மஹாபாரதத்தில் மக்களால் சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று. பலராமர் ஏன் துரியோதனனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்?

முன்வைக்கப்படும் வாதங்கள்

துரியோதனன் ஓர் அசுரன், கிருஷ்ண பக்தன் அல்ல, கிருஷ்ணரின் தூய பக்தர்களான பாண்டவர்களை சிறு வயதிலிருந்தே கொலை செய்ய முயன்றவன், தூதராக வந்த கிருஷ்ணரைக் கைது செய்ய முயன்றவன். இருந்தும், பலராமர் ஏன் சில நேரங்களில் துரியோதனனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்?

பலராமர் துரியோதனனுக்கு கதாயுதத்தில் பயிற்சி கொடுப்பதற்காக பல வருடங்கள் மிதிலையில் தங்கினார் (ஸ்ரீமத் பாகவதம் 10.57.26). அவர் தமது தங்கை சுபத்ரையை துரியோதனனுக்கு மணமுடிக்க விரும்பினார் (ஸ்ரீமத் பாகவதம் 10.86.23). துரியோதனனை பீமன் வதம் செய்தபோது பலராமர் கடும் கோபம் கொண்டார் (மஹாபாரதம்). துரியோதனன் பலராமரை வழிபடுவதற்கான வழிமுறைகளை பிரத்விபக் முனிவரிடம் வேண்டினான் (கர்க சம்ஹிதை 8.9.1). இவற்றை வைத்துப் பார்க்கும்போது பல வினாக்கள் மனதில் எழுவது இயற்கையே.

ஆயினும், பலராமரும் துரியோதனனும் நெருக்கமாக இருந்ததுபோலத் தோன்றினாலும். இறுதியாகப் பார்த்தால் துரியோதனன் பலராமருக்கு பிரியமானவன் அல்ல. எவ்வாறு? தொடர்ந்து படியுங்கள்.

பலராமர் யார்?

பலராமரின் நடத்தையில் மேலோட்டமாகத் தெரியக்கூடிய முரண்பாட்டினை ஆராய்வதற்கு முன்பாக, பலராமர் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம். பலராமர் ஒரு சாதாரண ஜீவன் அல்லர், விசேஷமான ஜீவனும் அல்லர், ஸ்வர்க லோகத்தில் வாழும் தேவனும் அல்லர்; அவர் எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் அனைத்திற்கும் ஆதியான முழுமுதற் கடவுளாவார். கிருஷ்ணரின் முதல் விரிவாகிய பலராமர் கிருஷ்ணரிலிருந்து வேறுபடாதவர். அவர் கிருஷ்ணரைப் போலவே ஸச்சிதானந்த திருமேனியுடன் ஆன்மீக உலகில் நித்திய வாசம் புரிபவர். கிருஷ்ணரிடம் உள்ள அனைத்து சக்திகளும் பலராமருக்கும் உண்டு. பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் இரண்டு வேற்றுமை மட்டுமே உள்ளன. (1) கிருஷ்ணர் கருமை நிறத் திருமேனி கொண்டவர், பலராமர் வெண்மை நிறத் திருமேனி கொண்டவர். (2) கிருஷ்ணர் அனைவராலும் சேவிக்கப்படும் முழுமுதற் கடவுளாக வீற்றுள்ளார், பலராமரோ அந்த கிருஷ்ணருக்கு சேவை செய்யும் முழுமுதற் கடவுளாக வீற்றுள்ளார். அதாவது, கிருஷ்ணரும் பலராமரும் இரண்டு ரூபங்களுடனும் இரண்டு வேறுபட்ட பா4வங்களுடனும் வீற்றுள்ள ஒரே முழுமுதற் கடவுள்.

பலராமர் கிருஷ்ணரின் சேவையில் அவருக்குத் தேவையான அனைத்தையும் வழங்குபவராக உள்ளார். கிருஷ்ணருடைய வசிப்பிடம், ஆசனம், படுக்கை, பாதுகை, ஆபரணங்கள் முதலியவை அனைத்தும் பலராமரின் தோற்றங்களே. எனவே, பலராமரின் செயல்களை ஒருபோதும் தவறாக எண்ணிவிடக் கூடாது.

அபத்தமான கருத்துகள்

பலராமரின் உண்மை நிலையை அறியாத வர்களிடம் யாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எழுப்பியுள்ள வினாக்களை யாரேனும் எழுப்பினால், அவர்கள் நிச்சயமாக குழப்பம் தரும் விடைகளையே வழங்குவர். அந்த மனக்கற்பனையாளர்களில் சிலர், துரியோதனன் எவ்வாறு தனது சகோதரர்களான பாண்டவர்களுக்குக் கிடைத்த உயரிய மதிப்பு மரியாதையை எண்ணி பகைமையும் பொறாமையும் கொண்டானோ, அவ்வாறே பலராமர் தமது சகோதரரான கிருஷ்ணருக்கு தம்மைக் காட்டிலும் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்ததை எண்ணி பொறாமை கொண்டார் என்றும், அதன் காரணத்தினால், அவருக்கு துரியோதனனின் மீது சற்று கரிசனம் இருந்தது என்றும் அபத்தமாக உளறி தங்களது முட்டாள்தனத்தை வெளிப்படுத்துகின்றனர். வேறு சிலரோ, பலராமர் கிருஷ்ணரைப் போன்று புத்திசாலி அல்லர் என்றும், அதனால் தீயவனையும் ஆதரித்தார் என்றும் உளறுகின்றனர்.

இத்தகு அயோக்கியத்தனமான கருத்துகளைப் புறக்கணித்து உண்மையைத் தேடுவோமாக.

கிருஷ்ண-பலராமர்-இரண்டு வேறுபட்ட மனோபாவங்களுடன் வீற்றுள்ள ஒரே முழுமுதற் கடவுள்.

வரலாற்றுப் பார்வை

முதலில், பலராமர் எவ்வழியில் துரியோதனனுக்கு சாதகமாக இருந்தார் என்பதை வரலாற்று ரீதியாகப் பார்ப்போம்.

(1) பலராமர் துரியோதனனுக்கு கதாயுதம் கற்றுக் கொடுத்தார். ஆம், அஃது உண்மையே. வேத கலாசாரத்தில் யுத்த கலையைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு குருவிடம் அவரது எதிரியே வந்தால்கூட, அந்த குருவானவர் பாடம் கற்றுக் கொடுப்பது வழக்கம். சீடனாகச் செயல்படுபவனும் குறைந்தபட்சம் அந்தத் தருணத்தில் குருவிற்குரிய அனைத்து மரியாதைகளையும் அவருக்கு வழங்கி பணிவுடன் கலையைக் கற்க வேண்டும். திருஷ்டத்யும்னனுக்கு பாடம் கற்றுக் கொடுத்த துரோணர் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாவார். துரியோதனனுக்கு பலராமர் கலை கற்பித்தார் என்பதைக் காணும்போது, அதன் பின்னணியிலுள்ள வேத வழக்கத்தையும் கவனித்தல் அவசியம். எனவே, பலராமரை அணுகிய துரியோதனனுக்கு அவர் கலை கற்றுக் கொடுத்ததில் எந்த சிக்கலும் இல்லை. உண்மையில், பலராமர் பீமனுக்கும் கலையை கற்றுக் கொடுத்தார். அவர் பீமன், துரியோதனன் இருவருக்குமே குருவாகச் செயல்பட்டார். தமது மாணவர்கள் சிறப்பான வீரர்களாகச் செயல்படும்போது அதில் திருப்தியடைவது இயற்கை. அதன் அடிப்படையில், பலராமர் துரியோதனனிடம் திருப்தியடைந்திருந்தார். அதற்காக, அவர் துரியோதனனை முற்றிலுமாக விரும்பினார் என்று கூறி விட முடியாது.

(2) பலராமர் துரியோதனனுக்கு சுபத்ரையை மணமுடிக்க விரும்பினார். துரியோதனனும் (அர்ஜுனனைப் போலவே) சுபத்ரையின் அத்தை மகன் உறவு என்பதால், அதில் பிழை ஏதுமில்லை. அந்த தெய்வீக லீலையின் சமயத்தில், சுபத்ரை அர்ஜுனனை விரும்புகிறாள் என்பதை பலராமர் அறிந்திருக்கவில்லை. எனவே, இதில் துரியோதனனின் பக்கம் என்று சொல்வதற்கு ஏதுமில்லை.

இந்த இரண்டு சம்பவங்களும் திரௌபதியை கௌரவர்கள் அவமானப்படுத்துவதற்கு முன்பாக நடந்தவை என்பதையும் கவனித்தல் அவசியம்.

(3) பலராமர் உண்மையிலேயே துரியோதனனின் பக்கம் இருந்திருந்தால், அவர் நிச்சயம் குருக்ஷேத்திரப் போரில் துரியோதனனுக்கு சாதகமாக நின்றிருப்பாரே. அல்லது குறைந்தபட்சம் கிருஷ்ணரைப் போல ஆயுதம் ஏந்தாமல் துரியோதனனின் பக்கம் இருந்திருக்கலாமே.

(4) துரியோதனனின் மகள் இலக்ஷ்மணாவை சாம்பன் மணமுடிக்க விரும்பிய சம்பவத்தில் பலராமர் துரியோதனனின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி, மொத்த அஸ்தினாபுரத்தையும் யமுனையில் மூழ்கடித்துவிட முடிவு செய்தார். துரியோதனனின் மீது பலராமருக்கு பிரியம் இருந்தது உண்மையாக இருந்தால், அவ்வாறு மூழ்கடிக்க முடிவு செய்திருப்பாரா?

பீமனுக்கும் துரியோதனனுக்கும் போரிடுவதை பலராமர் கவனித்தல்

நீதிப் பார்வை

மஹாபாரதத்தை யாரேனும் உற்று நோக்கினால், துரியோதனனிடமும் பல நற்குணங்கள் இருப்பதைக் காண முடியும். துரியோதனன் இதர அசுரர்களைப் போல பிராமணர்களை மதிக்காது மக்களை வஞ்சித்து கொலை செய்த அசுரன் அல்ல. உண்மையில், இன்றைய காலக்கட்டத்தின் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளைக் காட்டிலும் துரியோதனன் பல்லாயிரம் மடங்கு சிறப்பான அரசனாகச் செயல்பட்டான். ஆயினும், அவனிடமிருந்த மிகப்பெரிய கெட்ட குணம் பொறாமை. பாண்டவர்களின் மீது அவன் கொண்டிருந்த பொறாமையே அவனது எல்லா நற்குணங்களையும் மறைத்து விட்டது.

ஒரு சத்திரியன் தன்னைவிட செழிப்பாகவும் பலமாகவும் இருப்பவனைக் காணும்போது, பொறாமைகொள்வது இயற்கையானதுதானே என்று நினைக்கலாம். ஆனால், துரியோதனனின் விஷயத்தில், பாண்டவர்கள் சாதாரண சத்திரியர்கள் அல்லர். மாறாக, பாண்டவர்கள் கிருஷ்ணரின் தூய பக்தர்கள். ஒரு பக்தன் மற்றொரு பக்தனைக் காட்டிலும் சில சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும்போது, அதைக் காணும் பக்தன் அந்த சக பக்தனைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும், பெருமையடைய வேண்டும், பொறாமைகொள்ளுதல் கூடாது. அவ்வாறு பக்தர்களின் மீது யாரேனும் பொறாமையினை வெளிப்படுத்தினால், அந்தப் பொறாமையே அவனை அழித்துவிடும். இதுவே துரியோதனனின் வாழ்வில் நிகழ்ந்தது.

தத்துவப் பார்வை

பொறாமையுடையவனை பலராமர் ஆதரித்தாரா? நிச்சயம் இல்லை. பக்தர்கள் கிருஷ்ணரை அறிவதற்கு உதவும் ஆதி குருவாக இருப்பவர் பலராமரே. அவருக்கு நெருக்கமானவர் யார் என்பதை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. பாணாசுரனும் இராவணனும்கூட சிவபெருமானுடன் நெருக்கமானவர்களாக இருந்தவர்களைப் போலவும் அவரது கருணையைப் பெற்றவர்களைப் போலவும் தோன்றலாம். ஆனால் அத்தகைய கருணையும் நெருக்கமும் உண்மையான கருணையோ நெருக்கமோ அல்ல. ஓர் ஆன்மீக குருவின் உண்மையான கருணை என்பது சீடனுக்கு கிருஷ்ணரின் மீதான தூய அன்பினை வழங்குவதே ஆகும். ஒரு சீடன் அந்தத் தூய அன்பினை விடுத்து செல்வத்திற்காகவும் வலிமைக்காகவும் இதர பௌதிக நன்மைக்காகவும் குருவை அணுகும்போது, அந்த சீடன் குருவின் உண்மையான கருணையைப் பெறுவதில்லை. மாறாக, கபடமான கருணையைப் பெறுகிறான். இதுவே துரியோதனனின் வாழ்விலும் நிகழ்ந்தது.

கருணை இருவகைப்படும்: (1) ஸகபட க்ருபா என்னும் போலிக் கருணை மேற்கூறிய பௌதிக நன்மைகளை வழங்கும். (2) நிஷ்கபட க்ருபா என்னும் உண்மையான கருணை கிருஷ்ண பிரேமையை (கிருஷ்ணரின் மீதான தூய அன்பினை) வழங்குவதாகும். துரியோதனன் மேலோட்டமாக பலராமரின் கருணையை பெற்றதைப் போல தோன்றினாலும், உண்மையில் அவன் பலராமரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தான்.

பலராமருக்கும் துரியோதனனுக்கும் இடையிலான உறவை அறிவதற்கு துரியோதனன் யார் என்பதையும் உணர்தல் அவசியம். துரியோதனன் கலியின் ஓர் அம்சமாகக் கூறப்பட்டுள்ளான் (கர்க சம்ஹிதை 1.5.30). எனவே, துரியோதனன் வெளிப்புறத்தில் ஒரு குரு பக்தனைப் போல தோன்றினாலும், உண்மையில் அவன் கலியின் சீடனாகவும் கலியின் சேவகனாகவுமே இருந்தான். பலராமருக்கு சேவை செய்வது அவனது நாட்டமல்ல. கோடிக்கணக்கான மக்களுக்கு துன்பத்தைக் கொடுப்பதே அவனது நோக்கம்.

பலராமர் துரியோதனின் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடாக மொத்த அஸ்தினாபுரத்தை யமுனையில் மூழ்கடிக்க முடிவு செய்தல்.

லீலையின் பார்வை

பலராமர் ஏன் அவ்வாறு செய்தார்? ஏன் இவ்வாறு செய்தார்?” முதலிய கேள்விகளைக் கேட்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. இறுதியாகப் பார்த்தால், அவர் பூரண சுதந்திரம் வாய்ந்த முழுமுதற் கடவுள். அதன்படி, அவரது எல்லா செயல்களும் அவரது லீலைகளுக்காக பல்வேறு நுணுக்கங்களுடனும் காரணங்களுடனும் நிகழ்த்தப்படுகின்றன. எல்லா அசுரர்களையும் கிருஷ்ண பலராமர் அவதரித்தவுடன் கொன்றுவிட்டால், அங்கே பகவானின் லீலைகளுக்கு இடமிருக்காது. மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்கள் இவ்வளவு விரிவாக நமக்குக் கிடைத்திருக்காது. மஹாபாரதம் என்னும் நாடகம் பகவான் கிருஷ்ணராலும் பகவான் பலராமராலும் எல்லா மக்களின் கற்பனைக்கெட்டா வகையில் நிகழ்த்தப்பட்டது.

ஒரு தந்தை தன் பேச்சைக் கேட்கும் மகனிடமும் கருணை காட்டுகிறார், பேச்சைக் கேட்காத மகனிடமும் கருணை காட்டுகிறார். அதே போல, அனைவருக்கும் தந்தையான பலராமர் அனைவரின் மீதும் கருணை கொண்டவர். ஆயினும், அந்த கருணையின் தன்மை வெவ்வேறு மனிதர்களிடம் அவரவரின் அணுகுமுறையைப் பொருத்து வேறுபடுகிறது. எனவே, உண்மையான பக்தனாக கிருஷ்ண சேவையையும் வைஷ்ணவ சேவையையும் விரும்புபவன் மட்டுமே தெய்வீக அறிவையும் உண்மையான கருணையையும் பெற முடியும். துரியோதனனைப் போன்ற ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் பலராமருக்கு பிரியமானவராக இருக்க முடியாது.

பலராமர் என்றென்றும் கிருஷ்ணரின் பக்கமே, கிருஷ்ண பக்தர்களின் பக்கமே. அவர் ஒருபோதும் துரியோதனனைப் போன்ற அசுரர்களின் பக்கத்தில் இருப்பதில்லை.