பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்த விதம்

வழங்கியவர்: திருமதி. தாரிணி ராதா தேவி தாஸி

ஸ்ரீமத் பாகவதத்திலும் இதர புராணங்களிலும் பரம புருஷ பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் எங்கு பிறந்தார் (பிறப்பார்), அவருடைய பெற்றோர் யார், அவர் நிகழ்த்திய அசாத்தியமான செயல்கள் யாவை போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவருடைய மறைவு பற்றி மிகக் குறைந்த தகவல்களே கொடுக்கப்பட்டுள்ளன. பகவான் இராமரும் இலக்ஷ்மணரும் சராயு நதியில் இறங்கி இவ்வுலக மக்களின் பார்வையிலிருந்து மறைந்ததாக இராமாயணம் விளக்குகின்றது. பகவான் சைதன்யரோ பூரியின் கோபிநாதர் கோவிலுள்ள கிருஷ்ண விக்ரஹத்தினுள் மறைந்ததாகக் கூறப்படுகிறது.

பகவான் இவ்வுலகிற்கு வருகையில், பல்வேறு லோகங்களைச் சார்ந்த தேவர்களும் இங்கு வந்து அவரது திருவிளையாடல்களில் ஈடுபட்டு அவரது நேரடி உறவினை அனுபவிக்கின்றனர். பகவான் கிருஷ்ணர் இவ்வுலகினை விட்டுச் செல்ல முடிவெடுத்தவுடன், முதலில் தன் குடும்ப உறுப்பினர்களான யாதவர்கள் அனைவரையும் அவர்களுடைய உயர் லோகங்களுக்குச் செல்ல வழிசெய்தார். பகவான் கிருஷ்ணரின் மறைவினை ஸ்ரீமத் பாகவதம் பின்வருமாறு விளக்குகின்றது.

உத்தவர் பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றபின், தனது லீலைகளை முடித்துக் கொள்ள விரும்பிய கிருஷ்ணர், யாதவர்களை துவாரகையிலிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைப் பல்வேறு சடங்குகளில் ஈடுபடுத்தினார். தனக்கு முன்பாக தனது உறவினர்கள் இவ்வுலகிலிருந்து செல்ல வேண்டும் என்று விரும்பிய கிருஷ்ணர், அவர்களை தனது மாயச் சக்தியினால் கவர, அவர்கள் மதுவருந்தி போதையில் மூழ்கினர். அவர்களின் அறிவு மயக்கப்பட்டதால் தங்களுக்குள் சண்டையிட்டு, கிருஷ்ண பலராமரைத் தவிர மற்ற அனைவரும் மடிந்தனர்.

அதன் பின்னர், கடற்கரைக்குச் சென்ற பலதேவர், அங்கிருந்தபடி இவ்வுலகிலிருந்து மறைந்தார். பலராமர் மறைந்ததைக் கண்ட கிருஷ்ணர் ஓர் அரச மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்தார். பின்னர், பிரகாசமான தனது நான்கு கரங்களைக் கொண்ட ரூபத்தினை வெளிப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட பிரகாசம் சுற்றியிருந்த இருளை நீக்கியது. கருநீல மேகம் போன்ற மேனியுடனும், உருக்கிய பொன்னிற பிரகாசத்துடனும் திகழ்ந்த அவரது திருமேனி ஸ்ரீவத்ஸக் குறியினைத் தாங்கியிருந்தது. அழகிய புன்னகை அவரது முகத்தில் அரும்பியிருக்க, சுருளான கருநீல முடி அவரது தலையை அலங்கரித்தது. அவரின் தாமரைக் கண்கள் வசீகரமாக இருந்தன, மகர குண்டலம் மின்னியது, பட்டுத் துணிகளை உடுத்தியிருந்தார். அலங்கார ஒட்டியாணம், புனித நூல், வளையல்கள், இதர கையாபரணங்கள், தலையில் கிரீடம், கௌஸ்துப மணி, கழுத்தணி, என பல உயர்ந்த ஆபரணங்களை அணிந்திருந்தார். அவரது உடலை மலர் மாலைகளும் ஆயுதங்களும் அலங்கரித்தன. அவர் தனது இடதுகாலின் அடிப்பாதங்கள் தெரியும்படி, இடது காலை வலது தொடையின் மீது வைத்தபடி அமர்ந்திருந்தார்.

அப்பொழுது ஜரா என்னும் வேடன், பகவானின் அடிப்பாதத்தினை மான் என்று நினைத்து அம்பு தொடுத்தான். நான்கு கரங்களுடன் இருந்த கிருஷ்ணரைக் கண்டவுடன், வேடன் தனது தவறை எண்ணி நடுங்கினான். அசுரர்களின் எதிரியான இறைவனின் பாதங்களில் தனது தலைபடும்படி விழுந்து வணங்கினான். தன் தவறினை உடனடியாக உணர்ந்த வேடன், தன்னை மன்னிக்கும்படி சரணடைந்து வேண்டினான். “எனதன்புள்ள ஜரா, பயப்படாதே, எழுந்திரு. தற்போது நடந்த செயல் எனது விருப்பத்தின்படியே நடந்தது. கவலைப்படாதே, உன்னை நான் ஆன்மீக உலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்,” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எந்தவொரு சலனமும் இன்றி பதிலளித்தார். பகவானின் கட்டளையை ஏற்ற ஜரா, அவரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினான். அப்போது அங்கு தோன்றிய விமானத்தில் ஏறிய வேடன், அங்கிருந்து ஆன்மீக உலகத்திற்குப் புறப்பட்டான்.

அப்போது தனது எஜமானரைத் தேடிய தாருகன் அங்கு வந்தான். கிருஷ்ணர் இருந்த இடத்தின் அருகில் வந்தவுடன், துளசியின் மணம் வந்த திசையினை நோக்கிச் சென்றான். சுற்றிலும் தன் ஆயுதங்கள் இருக்க, அரச மரத்தினடியில் இருந்த கிருஷ்ணரைக் கண்டவுடன், அவர் மேல் பொங்கிய அன்பினை தாருகனால் கட்டுப்படுத்த இயலவில்லை. தேரிலிருந்து இறங்கி பகவானை நோக்கி ஆனந்தக் கண்ணீருடன் விரைந்து வந்து அவரது பாதங்களில் பணிந்தான். பகவானின் சாரதியான தாருகன் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கையில், பகவானின் தேர் அங்கிருந்து எழுந்து மேலே சென்றதை தாருகன் தன் இரு கண்களால் கண்டான். கருடனின் கொடியைத் தாங்கிய அத்தேருடன் குதிரைகளும் சென்றன. விஷ்ணுவின் திவ்ய அஸ்திரங்களும் மேலெழுந்து, தேரினைப் பின்தொடர்ந்தன. விண்வெளியிலிருந்து வாத்தியங்கள் முழங்க மலர் மாரி தூவப்பட்டபோது, கிருஷ்ணரும் அங்கிருந்து புறப்பட்டார்.

குறிப்பு: இறைவனின் தோற்றம் எவ்வாறு ஜட இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதோ, அதுபோன்று அவரது மறைவும் ஆச்சரியமானது என்பதை நாம் காணலாம். வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

 

ஜரா தன் தவறை உணர்ந்து தன்னை மன்னிக்கும்படி பகவானின் தாமரை பாதங்களில் தனது தலைபடும்படி சரணடைதல்

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment