மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

 

ஸ்ரீல பிரபுபாதர்: விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு பொய்யான கோட்பாட்டை நம்பியிருக்கிறார்கள், அனைத்தும் ஜடத்திலிருந்து வருவதாக நினைக்கின்றனர். அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:, “நானே எல்லாவற்றிற்கும் மூலம்” என்று கிருஷ்ணர் கூறுகிறார் (பகவத் கீதை 10.8).

டாக்டர். சிங்க்: அப்படியானால் ஜடப்பொருள் உயிரால் உண்டாக்கப்பட்டதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஜடப்பொருள் உயிரின்மேல் வளர்கிறது. என் உடலானது ஆத்மாவாகிய என்னால் வளர்கிறது. உதாரணமாக, நான் அணிந்திருக்கும் இந்த மேலங்கி என் உடலின் அளவையொட்டி தைக்கப்பட்டுள்ளது. ஆனால் “நான் இந்த மேலங்கி” என்று நான் எண்ணினால் அது முட்டாள்தனம்.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, மலைகள் படிமானம் காரணமாக வளர்கின்றனவென்று புவியியல் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். இந்த வளர்ச்சி உயிராத்மா இருப்பதால் ஏற்படுவதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மலைகள் கடவுளின் எலும்புகளென்றும், புல் அவர் உடலிலுள்ள ரோமம் என்றும் பாகவதம் வர்ணிக்கிறது. இந்த வகையில் கடவுள் மிகப்பெரிய உடலைக் கொண்டிருக்கிறார்.

டாக்டர். சிங்க்: ஸ்ரீல பிரபுபாதரே, மிருக உடல்களில் ஆத்மாக்கள் இடம் பெயர்வதற்கும், மனித உடல்களில் ஆத்மாக்கள் இடம் பெயர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

ஸ்ரீல பிரபுபாதர்: மிருகங்கள் ஒரு திசையில் மட்டுமே, அதாவது மேல் நோக்கியே செல்கின்றன. ஆனால் மனிதர்கள் உயர்ந்த நிலைக்கும் செல்லலாம், தாழ்ந்த நிலைக்கும் செல்லலாம். உயிர்வாழியின் ஆசையைப் பொருத்து உடல் அளிக்கப்படுகிறது. கீழ்நிலை மிருகங்களுக்கு ஒரே விதமான ஆசை மட்டும் உண்டு. ஆனால் மனிதன் இலட்சக்கணக்கான ஆசைகளைக் கொண்டிருக்கிறான். அவை மனித ஆசைகளாகவும் மிருக ஆசைகளாகவும் உள்ளன. இயற்கையின் விதியால் கீழினங்கள் மிருக வடிவிலிருந்து மேல் நிலைக்கு வருகின்றன. ஆனால் மனித வடிவை அடைந்தபின் கிருஷ்ண உணர்வை வளர்த்துக்கொள்ளாவிட்டால் மீண்டும் பூனை அல்லது நாயாக பிறக்க நேரிடும்.

டாக்டர். சிங்க்: மனித தளத்திலிருந்து உயர்வும் பெறலாம், தாழ்வும் பெறலாம் என்பதை விஞ்ஞானிகள் அறியாமல் இருக்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: இதனால்தான் நான் அவர்களை அயோக்கியர்கள் என்று கூறுகிறேன். அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, ஆனால் தங்களை விஞ்ஞானிகள் என்று காட்டிக்கொள்கின்றனர்.

சீடர்: ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல ஆத்மாக்கள் உள்ளனவென்று சில விஞ்ஞானிகள் வாதிக்கிறார்கள். மண்புழுவை அவர்கள் உதாரணமாகக் கூறுகிறார்கள்: அதை இரண்டாக வெட்டினால் இரண்டும் உயிரோடிருக்கின்றன, மூலப் புழுவின் உடலில் இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை இது நிரூபிக்கிறது என்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. அந்தப் புழுவின் மற்றொரு பாகத்தில் வேறொரு ஆத்மா குடிகொள்ள வந்திருக்கிறது.

டாக்டர். சிங்க்: ஆத்மாவிற்கு ஜடமான அல்லது ஆன்மீகமான உடல் கண்டிப்பாக தேவையா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆத்மாவிற்கு ஆன்மீக உடல் ஏற்கனவே இருக்கிறது. அதை ஜடவுடல் மூடிக் கொண்டிருக்கிறது. எனது ஜடவுடல் எனது ஆன்மீக உடலின்மேல் வளர்கிறது. ஆனால் எனது ஜடவுடல் செயற்கையானது, உண்மையான உடல் ஆன்மீகமானது. எனது ஸ்வரூபத்திற்கு முரணான பல உடல்களை நான் ஏற்கிறேன். என் ஸ்வரூபத்தின் உண்மையான நிலை கிருஷ்ணருக்கு சேவை செய்வது, அவரின் சேவகனாக இருப்பது. அந்த நிலைக்கு நான் வராத வரை, நான் ஜடத்தின் சேவகனாக இருந்து ஜட சக்தியின் விதிகளின்படி பல ஜடவுடல்களைப் பெறுகிறேன். ஓர் உடலைப் பெற்று, பின் அதனை கைவிட்டு விடுகிறேன். வேறு எதற்கோ ஆசைப்பட்டு வேறு உடலைப் பெறுகிறேன். ஜட இயற்கையின் கண்டிப்பான விதிகளின்படி இது தொடர்ந்து நடைபெறுகிறது. தமது விதியைத் தாமே நிர்ணயித்துக்கொள்வதாக மக்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் கர்மாவின் விதிகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

ப்ரக்ருதே: க்ரியமாணானிகுணை: கர்மாணி ஸர்வஷ:

அஹங்காரவிமூடாத்மாகர்தாஹம் இதி மன்யதே

“ஜட இயற்கையின் முக்குணங்களால் பாதிக்கப்பட்ட ஆத்மா, இயற்கையால் நடைபெறும் செயல்களுக்குத் நானே கர்த்தா என்று தவறாக எண்ணுகிறது.” (பகவத் கீதை 3.27) நான் எனது உடல்” என்ற தவறான எண்ணமே உயிர்வாழியின் கர்மாவிற்கு காரணமாக அமைகிறது.

ஈஷ்வர : ஸர்வ பூதானாம்ஹ்ருத்தேஷே  திஷ்டதி

ப்ராமயன் ஸர்வ பூதானியந்த்ராரூடானி மாயயா 

இங்கே யந்த்ர என்பது, நாம் எந்த உயிரினத்தை அடைந்தாலும், ஜட இயற்கையால் தரப்பட்டுள்ள இயந்திரம் போன்ற உடல்களில் பயணம் செய்கிறோம் என்பதைக் குறிக்கின்றது. சில சமயம் மேல்நிலை உயிரினங்களை அடைகிறோம், சில சமயம் கீழ்நிலை இனத்தை அடைகிறோம். ஆனால், ஆன்மீக குருவான கிருஷ்ணரின் கருணையால் ஒருவன் பக்தித் தொண்டெனும் விதையைப் பெற்று அதை வளர்ப்பானானால், பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து விடுபடலாம். அப்போது அவன் வாழ்வில் வெற்றி பெற்றவனாகிறான். இல்லாவிடில், பல்வகையான உயிரினங்களுக்கிடையில் மேலும் கீழும் உழன்று, ஒரு சமயம் புல்லாக, ஒரு சமயம் சிங்கமாக, என பலவாறாக அல்லல்படுவான்.

 

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment