வழங்கியவர்:  திரு. தயாள கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் லீலைகள் புரிந்த இடம் விருந்தாவனம். இவ்விடம் பக்தர்களின் தியானத்திற்கும் வாழ்விற்கும் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. விருந்தாவனத்தில் கிருஷ்ண லீலைகள் நடைபெற்ற முக்கிய இடங்களை நினைவுகூர்ந்து இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் விருந்தாவன நினைவில் அதிகமாக மூழ்கக்கூடிய தாமோதர மாதத்திற்காக இப்பாடல் பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாடல்  வகை: தரவு கொச்சகக் கலிப்பா

(1)

மண்ணெல்லாம் கதைசொல்லும் மதுராபுரி நகரம்

கண்ணாஉன் காலடியால் காண்பதெல்லாம் மதுரம்

எண்ணமெல் லாம்உன்கை ஏந்தும்கோ வர்தனம்

கண்கள்கொள் ளைபோகும் காட்சிவிருந் தாவனம்

கிருஷ்ணரே, மதுராபுரியில் உள்ள ஒவ்வொரு மண் துகளும் உங்களது உன்னதமான கதைகளைச் சொல்லும். உங்களது காலடிபட்டதால், இங்கே காணும் இடமெல்லாம் இனிமையாக உள்ளன. என்னுடைய எண்ணம் எல்லாம் நீங்கள் தூக்கிய கோவர்தன மலையின் மீது உள்ளது, உங்களது விருந்தாவனத்தின் காட்சியானது எனது கண்கள் கொள்ளை போகும் வண்ணம் உள்ளது.

(2)

யாதவநீ மகிழ்ந்தோடும் யமுனா நதிதீரம்

காதலினால் களிக்கும்நற் கன்றுகளின் சாரம்

ஏதுமறி யாமல் இதயங்கள் பறிகொள்ளும்

மாதவனே உந்தன் மதனமோ கனரூபம்

யாதவரே (கிருஷ்ணரே), நீங்கள் மகிழ்ச்சியுடன் ஓடும் யமுனை நதிக்கரையைப் பார்க்கிறேன். உங்களின் மீது உள்ள காதலால் துள்ளிமகிழும்  நற்பசுக் கன்றுகளின் வரிசையைப் பார்க்கின்றேன். மாதவரே! உங்களது மதன-மோஹன உருவமானது எப்படி என்றே தெரியாமல் எங்கள் உள்ளங்களைத் திருடிக் கொண்டு விடுகின்றது.

(3)

கோவிந்தா தாமோதரா கோபியரின் அழகா

மேவித் தொழும்முகுந்தா மெய்மறந்தோம் இரமணா

ஆவிக்கோர் பற்றுக்கொம் பாகிநிற்கும் சியாமா

கூவி அழைக்கின்றோம் குற்றேவல் ஆவோமா?

கோவிந்தா, தாமோதரா, கோபியரின் அழகே, விரும்பி வணங்கப்படும் முகுந்தா, இராதா-ரமணா, உம்மைக் கண்டு மெய்மறந்தோம். ஆத்மாவுக்குப் பற்றுக்கொம்பாக நிற்கின்ற சியாமசுந்தரா, உங்களைக் கூவி அழைக்கின்றோம், இறைஞ்சுகிறோம், குற்றேவல் (பணிவிடை) புரியும் சேவகர்களாக எங்களை ஏற்றுக்கொள்வீர்களா?

(4)

காளிய னைவென்ற காளிந்தியிற் கடம்பம்

மாளிகை வானளக்கும் மதனமோகன் அரங்கம்

கேளிக்கை போல்முன்னம் கேசிமுடிந் தகட்டம்

தோழிகள் சூழ்ந்தாடத் தோன்றும்சே வாகுஞ்சம்

காளிய நாகத்தை விரட்ட யமுனை நதிக்கரையில் உள்ள கடம்ப மரத்தில் ஏறிக் குதித்தீர். மதன-மோஹன வளாகத்தில் உங்கள் கோயிலின் கோபுரம் வானத்தை அளக்கின்றது. குதிரைபோல் வந்த கேசி என்னும் அரக்கனை விளையாட்டாகக் கொன்ற இடத்தை யமுனைக் கரையில் காண்கின்றோம். தோழிகள் சூழ நீங்கள் ராஸ நடனம் ஆடிய சேவாகுஞ்சத்தைக் காண்கின்றோம்.

(5)

தூவித் தொழும்மலர்சூழ் தொல்ஹரி தேவர்க்கு

ஏவல்செய் வோர்ஏத்தும் எழில்மா னசகங்கை

கோவர்த் தனகிரியைக் கொண்டாடி வலம்வந்து

கோவிந்த குண்டமதில் குளித்தெழக் குறைதீரும்

தூவித் தொழுகின்ற மலர்கள் சூழ்ந்த பழமையான ஹரி தேவருக்குத் தொண்டு செய்யும் பக்தர்கள் புகழும்படியாக எழில் பொருந்திய மானச கங்கை உள்ளது. கோவர்தன மலையைப் பாடி ஆடி வலம்வரும் பக்தர்கள் கோவிந்த குண்டத்தில் நீராடினால் எல்லாக் குறைகளும் தீரும்.

(6)

நேரில்சென் றிருந்தாலும் நினைவினில்வாழ்ந் தாலும்

மூரிவண்ணன் செயல்கள் முடிவிலதாய்த் தோன்றும்

பேரிடியாய்க் கம்சன் பிரிந்திடவீழ்த் தும்முன்

பாரினில் பசுமேயப் பார்த்தவிருந் தாவனம்

நேராகச் சென்று விருந்தாவனத்தில் வாழ்ந்தாலும் அல்லது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு  விருந்தாவனத்தை நினைத்துக் கொண்டிருந்தாலும் நீலவண்ண கிருஷ்ணரின் திவ்ய லீலைகள் முடிவில்லாமல் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பேரிடியாகக் கம்சனை அடித்துக் கொல்லும் முன்பு, பசுக்கள் மேய்வதை கிருஷ்ணர் இந்த உலகத்தில் பார்த்துக் கொண்டிருந்த இடம் விருந்தாவனம் (அதாவது பசுக்கள் மேய்ந்த இடம்).

(7)

பக்திவளம் பெருக்கும் பழம்புகழ் வர்சானா

அக்ரூரர் விழுந்துருண்ட அழகுநந்த கிராமம்

கத்திக் களம்புகுந்த கண்ணன்வன் காம்யவனம்

புக்கில் எமக்கிதுவே பொழில்சூழ்விருந் தாகுண்டம்

பழமையான புகழை உடைய வர்சானா கிராமம் பக்தி வளத்தைப் பெருக்குகின்றது. மதுராவிலிருந்து தேரில் வந்த அக்ரூரர் கிருஷ்ணருடைய பாதச் சுவடுகளைக் கண்டதும் கீழே விழுந்து உருண்டு கண்ணீர் சிந்தினார். அத்தகு அழகு வாய்ந்த கிராமம் நந்த கிராமம். சப்தம் செய்து கொண்டு கோபர்களுடன் புகுந்து விளையாடிய காம்யவனம் கிருஷ்ணருடையது. எமக்குப் புகுந்து வாழும் வீடாக சோலைகள் சூழ்ந்த விருந்தாகுண்டம் உள்ளது.

(8)

சிந்தையெல் லாம்நனைக்கும் சியாமகுண்டம் அதனை

வந்தணையும் வண்ண இராதா குண்டம்

முந்தய பெரியோர்கள் முனிக்கணங்கள் விரும்ப

வந்தவர்க் கெல்லாம் வழங்கும் பிரேமதனம்

சியாம குண்டம் நமது சிந்தனையை நனைக்கும்படி உள்ளது. அந்த சியாமகுண்டத்தில் வந்து அணையும்படி (சேரும்படி) ராதா குண்டம் உள்ளது. நீரலை எழும்போது இதைப் பார்க்கலாம். முந்தைய ஆச்சாரியர்களும் முனிவர்களும் ராதா குண்டத்தை மிகவும் விரும்பினார்கள். ராதா குண்டம் தன்னிடத்தில் வந்தவர்களுக்கு எல்லாம் கிருஷ்ண பிரேமை என்னும் செல்வத்தை அள்ளிக் கொடுப்பதாக உள்ளது.