வழங்கியவர்: சக்ரபாணி தாஸ்

மஹாபாரதம்” என்றவுடன் பொதுவாக குருக்ஷேத்திரம், பாண்டவர்கள், துரியோதனன், பகவத் கீதை முதலிய விஷயங்கள் நம் நினைவிற்கு வரலாம். ஆனால் அண்டவியல், புவியியல், வானவியல் முதலிய பல பிரிவுகளின் ஞானமும் மஹாபாரதத்தில் அடங்கியுள்ளது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

மஹாபாரதம் ஒரு கட்டுக்கதை என்று ஆதாரமின்றி சிலர் அபத்தமாகக் கூறுகின்றனர். ஆனால் மஹாபாரதம் என்பது உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஓர் இதிகாசம். இதில் நாம் வாழும் உலக வரைபடம் உட்பட மிகவுயர்ந்த ஸநாதன தர்மத்தின் தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமாக துல்லிய விவரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களில் வாழ்பவர்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் உள்ளனர், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பின்தங்கியவர்கள்,” என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு மாற்று கருத்தைத் தரவல்லது.

மஹாபாரதம், சிறிய அறிமுகம்

இந்தியர்களுக்கு மஹாபாரதத்தைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லை என்றபோதிலும், விமான தொழில்நுட்பம், அணுகுண்டு ஆயுதங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், சோதனை குழாய் குழந்தைகள் போன்ற பல வியக்கத்தக்க விஷயங்களைப் பற்றிய குறிப்புகள் மஹாபாரதத்தில் அடங்கியுள்ளன என்பது பலர் அறிந்திலர். மஹாபாரதத்தில் உலக வரைபடத்தைப் பற்றிய துல்லிய வர்ணனையுள்ளது என்பது அத்தகு வியக்கவைக்கும் தகவல்களுள் ஒன்று.

5,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட மஹாபாரதம் உலகின் மிகப்பெரிய இதிகாசமாகும். ஒரு இலட்சம் ஸ்லோகங்களை 18 பர்வங்களில் வேத வியாஸர் தொகுத்து வழங்கியுள்ளார். மஹாபாரதம் என்றால் மிகப்பெரிய பாரதம் அல்லது பெரிய பாரதத்தின் வரலாறு என்று பொருள். அக்காலத்தில் முழு உலகமும் பாரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதனால்தான் மஹாபாரதப் போரில் பங்குபெறுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மன்னர்கள் குருக்ஷேத்திரத்திற்கு வந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களும் மஹாபாரதப் போரில் பங்கேற்றதாக வரலாறு கூறுகிறது. உலகத்தின் அனைத்து மன்னர்களும் பாண்டவர்கள் அல்லது கௌரவர்களின் தரப்பில் சேர்ந்து போரிட்டனர்.

உலக வரைபடம்

வரலாற்றில் பலரும் உலக வரைபடத்தைக் கொடுக்க முயன்றுள்ளனர். அவர்களில் பலருடைய முயற்சி தோல்வியைத் தழுவியது. சிலர் பூமியை வட்டம் என்றும், சிலர் தட்டை என்றும், சிலர் உருண்டை என்றும் சித்தரித்தனர்; ஆனால் அவர்களுள் எவராலும் துல்லியமான வரைபடத்தை வழங்க இயலவில்லை.

உலக அமைப்பைப் பற்றி மக்களிடையே இருந்த குழப்பத்தை 15ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து புரிந்துகொள்ளலாம். கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதையை பலரும் அறிவர். பூமி தட்டையானது, மேற்கு நோக்கிச் சென்றால் ஆழமான குழியில் வீழ்ந்து விடுவீர்கள். ஆகையால், அத்திசையில் செல்ல வேண்டாம்!” என்று பலர் அவரை எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி அவர் மேற்கு நோக்கிச் சென்று அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று வரலாறு கூறுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி வால்டசீ முல்லர் உலகின் வரைபடத்தைக் கொடுக்கும் வரை உலகம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று எவரும் சரியாக தெரிந்திலர். ஆனால், 5,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட மஹாபாரதத்தின் சில ஸ்லோகங்களில் உலகின் துல்லியமான வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தைத் தந்தாலும் அதுவே உண்மை!

இந்த வரைபடம் மஹாபாரதத்தின்படி முயலையும் அரச மர இலையையும் வைத்து வரையப்பட்டதாகும். இதனை அப்படியே திருப்பிப் பார்த்தால், இன்று பொதுவாக நாம் காணும் உலக வரைபடத்தைக் காணலாம்.

மஹாபாரதத்தில் உலக வரைபடம்

மஹாபாரதத்தில் சஞ்ஜயன் கூறுகிறார், பார்வையாளர்களின் கண்களுக்கு அழகாகப் புலப்படுவதால் இந்த பாரத கண்டமானது சுதர்ஷன தீவு என்று அழைக்கப்படுகிறது. இது பகவான் விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரத்தைப் போலவே சுற்று வடிவத்தில் காட்சியளிக்கிறது. அழகான ஒரு விளாம் பழத்தைப் போல காட்சியளிக்கும் இத்தீவு வட்டமானதாகும்; நிலாவிலிருந்து பார்க்கும்போது அதன் முதல் பாதி ஒரு முயலுக்கு அருகில் சிறிய அரச மர இலை இருப்பதைப் போன்று காட்சியளிக்கிறது; இரண்டாம் பகுதியானது ஒரு பெரிய அரச மர இலையும், அதனைச் சுற்றி இதர இலைகளும் இருப்பதைப் போல காட்சியளிக்கிறது. இந்த இரு பகுதிகளிலும், மீதமுள்ள இடமானது உப்புத் தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது.” (மஹாபாரதம் 6.5.32-36)

உலக வரைபடத்திற்கும் முயல், அரச மர இலைகளின் உருவ அமைப்பிற்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் எழலாம். 19ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தோன்றிய திருவேங்கட ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தின் ஓர் ஆச்சாரியராகவும் குருவாகவும் திகழ்ந்தவர். மஹாபாரதத்தின் இந்த ஸ்லோகங்களைக் கண்டு அவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

இது மனித சிந்தனைக்கு அப்பால் உள்ள விஷயம் என்பதை உணர்ந்த அவர், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார். இந்த ஸ்லோகங்களின் அர்த்தத்தை வெளிப்படுத்துமாறு பகவானிடம் வேண்டினார். பகவானின் விசேஷ கருணையினால் அவருக்கு அந்த ஸ்லோகங்களின் உள்ளர்த்தம் வெளிப்பட்டது.

அந்த ஸ்லோகங்களை வைத்து அவர் ஓர் உலக வரைபடத்தை வரைந்தார். ஆனால், தாம் வரைந்த வரைபடத்திற்கும், பூமியின் உண்மையான வரைபடத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை அவர் உணர்ந்தார். இருப்பினும், அவருக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. அந்த வரைபடத்தை தலைகீழாகத் திருப்பினார். என்னே ஆச்சரியம்! தற்போதைய உலக வரைபடம் தென்பட்டது. அதாவது, முயலானது  ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவைக் குறிக்கிறது, முயலுக்குக் கீழே இருக்கக்கூடிய இலை ஆஸ்திரேலியாவைக் குறிக்கிறது. பூமியின் இரண்டாம் பகுதியில் உள்ள இலைகள் வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் குறிக்கின்றன என்று அவருக்கு விளங்கியது.

சில பாடங்கள்

இந்த உண்மை சம்பவத்தை வைத்து சில பாடங்களை நாம் அறியலாம்.

  1. பகவான் விஷ்ணுவின் மீதும் வேதங்களின் மீதும் ஜீயர் சுவாமிக்கு இருந்த அபார நம்பிக்கையே இந்த ஞானம் புலப்படுவதற்கான காரணம்.
  2. சாஸ்திரங்களைப் படித்து புரிந்துகொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஸம்பிரதாயத்தில் அதனை அணுகுவதே சாலச் சிறந்ததாகும்.
  3. ஒருவன் நிலாவிலிருந்து பூமியைக் கண்டால் இப்படித்தான் இருக்கும் என்று ஸஞ்ஜயன் கூறுகிறார். அப்படியெனில், சிலர் அக்காலத்திலேயே பூமியிலிருந்து நிலவிற்குச் சென்று பூமியைப் பார்த்திருக்க வேண்டும், அல்லது நிலவிலிருந்து வந்து ஸஞ்ஜயனுக்கு இந்த ஞானத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
  4. மஹாபாரதத்தில் வழங்கப்பட்டுள்ள உலக வரைபடமும் நவீன கால உலக வரைபடமும் கிட்டத்தட்ட ஒத்திருப்பதால் மஹாபாரதம் போன்ற சாஸ்திரங்களை வெறும் கற்பனை என்று நிராகரிப்பது சிறுபிள்ளைத்தனம் மட்டுமல்லாமல், அது வாழ்வின் மிகக் கொடூரமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் பொக்கிஷத்தை நிராகரிப்பதாக ஆகி விடும்.
  5. வெறும் ஐந்தே ஸ்லோகங்களில் இவ்வளவு ஆழ்ந்த ஞானம் இருக்கிறது என்றால், ஒரு இலட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இந்த இதிகாசத்தில் எவ்வளவு ஞானம் புதைந்திருக்க வேண்டும்? இதை நிராகரிப்பவர்கள், கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை,” என்கிற பழமொழியை மெய்யாக்குபவர்கள் அன்றோ?

19ஆம் நூற்றாண்டில் ஸ்ரீபெரும்புதூரில் தோன்றிய திருவேங்கட ராமானுஜ ஜீயர் சுவாமிகள்

மஹாபாரதத்தின் மணிமகுடம், பகவத் கீதை

இதே போன்று பூமியின் சுற்றளவு 12,875 கிலோமீட்டர் என்று விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது. நவீன விஞ்ஞானிகள் 12,742 கிலோமீட்டர் என்று தெரிவிக்கிறார்கள். நவீன மனிதனே புத்திசாலி, பழங்காலத்து மக்களுக்கு அதிகமான அறிவு கிடையாது,” என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மக்களைக் குழப்பி வேதங்களின் மீதும் வேத கலாச்சாரத்தின் மீதும் பகவானின் மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்பவர்களாக உள்ளனர். ஆனால், அறிவியல், இரசாயனம், மருத்துவம், வானவியல் முதலிய பல்வேறு துறைகளைப் பற்றிய விவரங்களை நமது பழங்கால சாஸ்திரங்களில் காணலாம்.

இருப்பினும், ஆன்மீக கருத்துகளைத் துல்லியமாக அறிய அனைவரும் நாட வேண்டிய மிக முக்கியமான நூல் மஹாபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் அத்தியாயம் 25 முதல் 43 வரையுள்ள பகவத் கீதையாகும். 18 அத்தியாயங்களின் 700 ஸ்லோகங்களில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது நெருங்கிய தோழனும் பக்தனுமான அர்ஜுனனின் மூலமாக அனைத்து ஆன்மீக ஞானத்தின் சாரத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார்.

பகவான் ஸ்ரீ சைதன்யரின் கௌடீய வைஷ்ணவ பரம்பரையில் வரும் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் விளக்கப்பட்ட பகவத் கீதை உண்மையுருவில்” எனும் நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில், உலகம் முழுவதும் பாமரன் முதல் ஞானி வரை பலரின் வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இந்நூலை அனைவரும் பெற்று படித்து பயன்பெறுமாறு பரிந்துரைக்கின்றோம்.

வேதங்களும் புராணங்களும் காட்டுவாசியால் எழுதப்பட்டவை, அவை கற்பனை கதைகள், நாகரிகத்தில் பின்தங்கிய மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்க ஏற்படுத்தப்பட்டவை,” என்பன போன்ற பல கூற்றுகள் இன்றைய உலகில் நிலவுகின்றன. அவை அனைத்தும் வெற்று வதந்திகளே என்பதை நிலைநாட்டும் பெருமுயற்சியில் இக்கட்டுரை ஒரு சிறிய துவக்கமே.

ஆன்மீகக் களஞ்சியங்களான நமது சாஸ்திரங்களைப் பற்றிய கடுகளவு அறிவும்கூட மக்களிடையே பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம். மேலும் விவரங்களுக்கு, mantra.dhyana@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

 

மஹாபாரதத்தின் மணிமகுடமான பகவத் கீதையை அனைவரும் ஏற்று பயனடைய வேண்டும்.