மஹாபிரபுவின் விருந்தாவன யாத்திரை

வழங்கியவர்: திரு. ஜெய கிருஷ்ண தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விருந்தாவனத்தில் தம்முடைய இளமைப் பருவத்தில் மனதை மயக்கும் பல லீலைகளில் ஈடுபட்டார். தன்னுணர்வு பெற்ற யோகிகள்கூட பகவானின் அந்த லீலைகளில் மயங்குவதாக ஸ்ரீமத் பாகவதம் (1.7.10) கூறுகின்றது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களில் (நாலாயிர திவ்ய பிரபந்தங்களில்) நூற்றுக்கணக்கான பாடல்களில் பகவானின் விருந்தாவன லீலைகளைக் காணலாம். அதே பகவான் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக மீண்டும் 531 வருடங்களுக்கு முன்பு பக்த ரூபத்தில் அவதரித்தபோது, ஒருமுறை விருந்தாவனத்திற்கு வருகை புரிந்தார். அந்த லீலைகளை இக்கட்டுரையில் சுருக்கமாகக் காணலாம்.

மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.

முதல் பயண முயற்சி

மஹாபிரபு சந்நியாசம் ஏற்றபோது, அவரது மனம் விருந்தாவனத்திற்குச் செல்வதில் தீவிரமாக இருந்தது. ஆயினும், அச்சமயத்தில் நித்யானந்த பிரபுவின் தந்திரத்தினால் அவரது பயணம் மூன்று நாள்களில் நின்றுவிட்டது. மஹாபிரபு அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் சில நாள்கள் தங்கினார். அங்கே அவர் தமது தாயின் வேண்டுகோளுக்கு உட்பட்டு, ஜகந்நாத புரியில் தங்குவது என்று முடிவு செய்தார். விருந்தாவனம் செல்லாமல் ஜகந்நாத புரிக்குச் சென்றார்.

 

இரண்டாவது பயண முயற்சி

ஜகந்நாத புரியில் தங்கியிருந்த மஹாபிரபு அங்கிருந்து விருந்தாவனத்திற்கு ஒரு யாத்திரையாவது செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆயினும், அவரது பக்தர்கள் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி தடுத்துக் கொண்டிருந்தனர். மஹாபிரபுவும் பக்தர்களின் அனுமதியின்றி விருந்தாவனம் செல்வதற்குத் தயாராக இல்லை. அதற்கான அனுமதியை அவர் தமது அந்தரங்க பக்தர்களிடம் மீண்டும்மீண்டும் வேண்டிக் கொண்டிருந்தார். இறுதியில், ஒருமுறை அனைத்து பக்தர்களின் விருப்பத்துடன் அவர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனம் செல்ல முடிவு செய்தார்.

அவரது நெருங்கிய சகாக்களான இராமானந்த ராயர், கதாதர பண்டிதர் முதலியோர் அவருடன் சிறிது தூரம் பயணம் செய்தனர். மன்னர் பிரதாபருத்ரர் வெகுதூரப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். மஹாபிரபு தாம் சென்ற எல்லா இடங்களிலும் ஹரி நாமத்தைப் பரப்ப, அவரது பயணத்தில் ஒரு பெரும் கூட்டமே அவருடன் பயணித்தது. வங்காளத்தின் இராமகேலி கிராமத்தை அடைந்தபோது, மஹாபிரபு அங்கே ஸ்ரீல ரூப கோஸ்வாமியையும் ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியையும் சந்தித்தார். ஸநாதனருடைய ஆலோசனையின்படி, மஹாபிரபு விருந்தாவனத்திற்கு பெரும் கூட்டத்துடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, ஜகந்நாத புரிக்குத் திரும்பினார்.

உண்மையில் மஹாபிரபுவின் அந்தப் பயணம் ரூபரையும் ஸநாதனரையும் விடுவிப்பதற்காகவே அமைந்தது. அவர்கள் பின்னாளில் மஹாபிரபுவின் தத்துவங்களை பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நூல்களை இயற்றினர், பிரம்ம-மாத்வ-கௌடீய சம்பிரதாயத்தின் பெரும் ஆச்சாரியர்களாக மாறினர்.

மஹாபிரபு விருந்தாவனத்திருக்குப் புறப்படபக்தர்கள் பிரிவினால் மயங்கி விழுதல்.

விருந்தாவனப் பயணம்

ஜகந்நாத புரிக்குத் திரும்பியபோதிலும், எப்படியும் விருந்தாவனம் செல்வது என்பதில் மஹாபிரபு மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது ஆர்வம் ஒவ்வொரு நாளும் பன்மடங்கு அதிகரித்தது. இம்முறை விருந்தாவனத்திற்கு தனியாகச் செல்வது என்று முடிவு செய்தார். இருப்பினும், அவரது பக்தர்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை, யாரேனும் ஒருவரை உதவிக்கு உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்தரங்க சகாக்களில் எவரேனும் ஒருவரை மட்டும் தம்முடன் அழைத்துச் சென்றால் மற்றவர்கள் வருத்தப்படலாம் என்பதால், அதிகம் பரிச்சயம் இல்லாத மிகச்சிறந்த பக்தரான பலபத்ர பட்டாசாரியரையும் மேலும் ஓர் உதவியாளரையும்  அழைத்துக் கொண்டு விருந்தாவனம் நோக்கி புறப்பட்டார். இம்முறை மக்கள் தொடர்பைத் தவிர்ப்பதற்காக, வங்காளத்தின் வழியாகச் செல்லாமல் ஜாரிகண்ட் காட்டின் வழியாகச் செல்வதற்கு முடிவு செய்தார்.

காட்டின் வழியில்

ஜாரிகண்ட் என்னும் அடர்ந்த காட்டின் வழியாகச் செல்கையில், பலபத்ர பட்டாசாரியர் அங்கிருந்த பல்வேறு மிருகங்களைக் கண்டு அஞ்சினார். இருப்பினும், மஹாபிரபுவோ விருந்தாவனம் செல்லும் ஆர்வத்தில் அதீத பிரேமையுடன் எதையும் கண்டு கொள்ளாமல் பயணித்தார், அவருக்காக கொடிய மிருகங்களும் வழிவிட்டன.

ஒருநாள் பிரேமையுடன் பயணிக்கையில் மஹாபிரபுவின் திருவடிகள் உறங்கிக் கொண்டிருந்த புலியின் மீது பட்டு, புலி விழித்துக் கொண்டது. ஒழிந்தோம்,” என்று பலபத்ரர் நினைக்க, மஹாபிரபுவோ அந்தப் புலியிடம், கிருஷ்ணரின் புனித நாமங்களைச் சொல்” என்று கூறினார். புலியும் எழுந்து, கிருஷ்ண! கிருஷ்ண!” என்று கூறி பரவசத்தில் கண்ணீர் விட்டது.

மற்றொரு நாள், ஒரு சிறு நதியில் இறங்கி, மஹாபிரபு காயத்ரி மந்திரம் உச்சரிக்கையில், அங்கு நீர் அருந்த வந்த பல யானைகள் அவரைச் சுற்றி நின்று கொண்டன. மஹாபிரபு அவற்றின் மீது தண்ணீரைத் தெளித்து கிருஷ்ணரின் நாமத்தினை சொல்லச் சொன்னார், உடனே அவை அனைத்தும் ஆனந்தத்தில் பாடி ஆடின. மஹாபிரபுவின் பலத்த உச்சாடன குரலினைக் கேட்டு மான்களும் அவர் பக்கம் வந்தன. உடனடியாக அங்கே ஐந்து-ஏழு புலிகளும் அந்த மான்களுடன் இணைந்து கொண்டன. விலங்குகள் மட்டுமின்றி பறவைகள், மரங்கள் என அனைத்து உயிர்களும் மஹாபிரபுவின் கீர்த்தனத்தில் இணைந்தன. காட்டு விலங்குகள் தத்தமது இயற்கையான சுபாவத்தைக் கைவிட்டு கீர்த்தனத்தின் இன்பத்தில் திளைத்தன.

இவ்விதமாக, மஹாபிரபு ஜாரிகண்ட் காட்டைக் கடந்து காசியை அடைந்தார்.

ஜாரிகண்ட் காட்டில் மஹாபிரபுவின் கீர்த்தனத்திற்கு விலங்குகள் நடனமாடுதல்.

காசி, பிரயாகை

மஹாபிரபு காசியின் மணிகர்ணிகா படித்துறையில் நீராடுகையில், தபன மிஸ்ரர் என்ற பக்தர் அவரைக் கண்டார். அவர், சந்திரசேகரர் என்ற மற்றொரு பக்தருடன் இணைந்து மஹாபிரபுவிற்கு பணிவிடைகள் செய்தார். விருந்தாவனத்தினைக் காணும் ஆவலில் அங்கிருந்து விரைந்து புறப்பட்டு, பிரயாகை சென்று அங்கே மூன்று நாள்கள் மட்டும் இருந்துவிட்டு, அங்கிருந்து மதுராவிற்குப் புறப்பட்டார். மதுராவினை அடையும் முன்னர் எங்கெல்லாம் மஹாபிரபுவின் கண்கள் யமுனை ஆற்றினைக் கண்டதோ, அங்கெல்லாம் அவர் யமுனையில் குதித்து பரவசத்தில் மூழ்கினார்.

மதுராவில்

மதுராவை அடைந்த மஹாபிரபு முதலில் விஷ்ராம்காட் என்னும் படித்துறையில் நீராடிவிட்டு, பகவான் கிருஷ்ணரின் அவதார இடத்தையும் (ஜன்மஸ்தானத்தையும்) அங்கிருந்த கேசவரின் கோயிலையும் தரிசித்தார். மஹாபிரபுவின் கீர்த்தனமும் நடனமும் அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தது. பகவான் கிருஷ்ணரே மீண்டும் தம்மை விடுவிக்க வந்திருப்பதை அவர்களால் உணர முடிந்தது. அதன் பின்னர், மஹாபிரபு தம்முடன் இணைந்து நடனமாடிய தமது குருவின் ஆன்மீக சகோதரரான ஸனோடியா பிராமணரின் இல்லத்திற்குச் சென்று பிரசாதம் ஏற்றார். அடுத்ததாக, யமுனைக் கரையில் இருந்த 24 வெவ்வேறு படித்துறைகளில் நீராடினார். ஸ்வயம்பு, விஷ்ராம-காட், தீர்க விஷ்ணு, பூதேஷ்வர, மஹாவித்யா, கோகர்ண முதலிய இடங்களைத் தரிசித்தார்.

விருந்தாவனத்தில் மஹாபிரபுவிடம் அனைத்து ஜீவராசிகளும் அன்பினை வெளிப்படுத்துதல்.

விருந்தாவனத்தில்

மதுவனம், தாலவனம், குமுதவனம், பஹுலாவனம் ஆகியவற்றை தரிசித்து விட்டு, மஹாபிரபு விருந்தாவனத்திற்குள் நுழைந்தார். அவரின் வருகையினைக் கண்ட அங்கிருந்த பசுக்கள் எல்லாம் அவரை உடனடியாக சூழ்ந்து கொண்டு உரக்கக் கத்தின. அவற்றைக் கண்டு மஹாபிரபு ஆனந்தத்தில் உறைந்தார், பசுக்கள் அவரது திருமேனியினை அன்புடன் நக்கின. அவரின் குரல் கேட்டு ஆண், பெண் மான்கள் அருகில் வந்து அவரது மேனியை நக்கத் தொடங்கின. பறவைகள் பாட, மயில்கள் ஆடின. மரங்களும் கொடிகளும் குதூகலமடைந்தன. பழைய நண்பனைப் பார்த்த நண்பர்கள்போன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களது அன்பினை வெளிப்படுத்தின. இதனால், மஹாபிரபு பேரானந்தத்தில் மூழ்கி அனைத்து ஜீவராசிகளையும் கிருஷ்ணரின் பெயரினை உச்சரிக்கச் சொல்லி, அவர்களுடன் இணைந்து தாமும் உச்சரித்தார்.

பின்னர், ஓர் ஆண் கிளியும் ஒரு பெண் கிளியும் மஹாபிரபுவின் கைகளில் வந்தமர்ந்து கிருஷ்ணர் மற்றும் ராதாராணியின் பெருமைகளை வர்ணித்தன. அப்பொழுது நீல நிற மயிலினைக் கண்ட மஹாபிரபு கிருஷ்ணரின் நினைவில் மயக்கமடைந்தார்.

ஆண் கிளியும் பெண் கிளியும் மஹாபிரபுவிடம் ராதா-கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணித்தல்.

ராதா குண்டத்தில்

கிருஷ்ண லீலைகளில் முக்கிய பங்கு வகித்த ராதா குண்டத்தினைப் பற்றி மஹாபிரபு உள்ளூர்வாசிகளிடம் விசாரித்தார். ஆனால் அச்சமயத்தில் அதனை யாருமே அறியவில்லை, அஃது எங்கே இருந்தது என்பதைக்கூட யாராலும் கூற முடியவில்லை. அச்சமயத்தில், ஒரு வயலினுள் இருந்த இரண்டு சிறு குட்டைகளைக் கண்ட மஹாபிரபு அதில் நீராடினார். நீராடியவுடன் அதுவே ராதா குண்டம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும், அதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்து வந்தனங்களைச் செலுத்தினார்.

மஹாபிரபு கோவர்தன மலையிலுள்ள ஒரு பாறையினைக் கட்டியணைத்து கண்ணீர் விடுதல்.

கோவர்தனத்தில்

அந்த பரவசத்திலேயே மஹாபிரபு கோவர்தன மலையைக் கண்டார். உடனடியாக கோவர்தனத்திற்கு வந்தனங்களைச் செலுத்தி ஒரு பாறையினைக் கட்டியணைத்து கண்ணீர் சொரிந்தார். கோவர்தன கிராமத்தில் இருந்த ஹரிதேவரின் கோயிலுக்குச் சென்று அவரை தரிசித்து, அங்கேயே அந்த இரவினைக் கழித்தார்.

கோவர்தன மலைமீது மாதவேந்திர புரியினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோபாலரைத் தரிசிக்க மஹாபிரபு பெரிதும் விரும்பினார். ஆயினும், கோவர்தன மலையின் மீது ஏறுவதற்கு அவர் மனம் உடன்படவில்லை. எவ்வாறு கோபாலரை வணங்குவது என்று மஹாபிரபு சிந்திக்கத் தொடங்கினார். இதனை அறிந்த பகவான் கோபாலர் ஓர் உபாயம் செய்தார். முஸ்லிம்கள் கிராமத்தைக் கொள்ளையடிக்க வருவதாக ஒரு புரளி கிளம்பியது. பக்தர்கள் கோபாலரைப் பாதுகாக்க அவரை காண்டுலி கிராமத்திற்குக் கொண்டு வந்து ஒரு பிராமணரின் வீட்டில் வைத்தனர்.

இதனை அறிந்த மஹாபிரபு அந்த கிராமத்திற்குச் சென்று கோபாலரைத் தரிசித்து, பேரானந்தம் கொண்டார். மூன்று நாள்கள் காண்டுலி கிராமத்தில் இருந்து விட்டு கோபாலர் மீண்டும் மலை உச்சிக்குச் சென்றார். மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரூப, ஸநாதன கோஸ்வாமிகளும் கோவர்தன மலைமீது ஏறியதில்லை. அவர்களுக்கும் கோபாலர் இதுபோன்றதொரு நிகழ்வினால் காட்சி கொடுத்தார். (தற்போது அந்த கோபாலர் ராஜஸ்தானில் உள்ள நாத்வாரா என்னும் ஊரில் ஸ்ரீநாத்ஜி என்னும் பெயரில் வீற்றுள்ளார்.)

கோபாலரைத் தரிசித்த மாத்திரத்தில் பேரானந்தம் அடைதல்.

கிராமத்தில் மறைந்திருந்த நந்த மஹாராஜர், யசோதை மற்றும் கிருஷ்ணர் விக்ரஹங்களை மஹாபிரபு கண்டெடுத்தல்.

நந்தீஸ்வரம் மற்றும் இதர வனங்கள்

அங்கிருந்து புறப்பட்ட மஹாபிரபு நந்தீஸ்வர என்னும் இடத்திற்கு வந்தடைந்தார். அங்கு பொதுமக்களிடம் விசாரித்து, நந்த மஹாராஜர் வாழ்ந்த அவரது இல்லத்தினைக் கண்டு அங்கு மறைந்திருந்த நந்த மஹாராஜர், தாய் யசோதை, அவர்களின் குழந்தை கிருஷ்ணர் ஆகியோரின் விக்ரஹங்களைக் கண்டறிந்து புளகாங்கிதமடைந்தார். அதைத் தொடர்ந்து, பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய கதிரவனம், பாண்டீரவனம், பத்ரவனம், ஸ்ரீவனம், லோகவனம் ஆகிய வனங்களைத் தரிசித்தார். இறுதியாக, கோகுலம் இருக்கின்ற மஹாவனத்திற்கு வருகை புரிந்தார். பகவான் கிருஷ்ணரால் உடைக்கப்பட்ட இரட்டை அர்ஜுன மரங்களைக் கண்டு மஹாபிரபு ஆனந்தமடைந்து, பின்னர் மீண்டும் மதுராவினை அடைந்தார். மதுராவில் வசித்தபடி, மஹாபிரபு தினமும் விருந்தாவனத்தின் பல இடங்களைத் தரிசித்தார்.

விருந்தாவனத்தில் தரிசித்த இடங்கள்

அக்ரூர காட் என்னும் படித்துறையில் தங்கியிருந்த மஹாபிரபு தினமும் விருந்தாவனத்தின் பல இடங்களுக்குச் சென்று பகவான் கிருஷ்ணரின் லீலைகளில் மூழ்கினார். பிரஸ்கந்தன, கேசி-தீர்த்தம், ஸீர-காட், தேங்துலீ-தலா முதலிய இடங்களையும் தரிசித்தார்.

அச்சமயத்தில், அங்கிருந்த மக்கள் இரவு நேரத்தில் பகவான் கிருஷ்ணர் யமுனையில் காளியனின் மீது நடனமாடுவதாகக் கூறி அதைக் காண தினமும் சென்று வந்தனர். ஆனால் அவர்கள் உண்மையில் கண்டது இரவில் மீன் பிடிக்கும் மீனவன், அவனது படகு, அதிலிருந்த தீப்பந்தம்; ஆனால் அது அவர்களின் கண்களுக்குத் தவறாக கிருஷ்ணர் காளியனின் தலையில் நடனமாடுவதாகத் தெரிந்தது. மஹாபிரபுவின் உதவியாளரான பலபத்ரரும் மக்களின் கூற்றுகளில் மயங்கி, கிருஷ்ணரைக் கண்டு வருகிறேன்,” என்று மஹாபிரபுவிடம் அனுமதி கேட்க, மஹாபிரபு இதுபோன்ற அபத்தங்களை எவ்வாறு நம்புகிறீர்கள் என்று உடனடியாகக் கண்டித்தார். மஹாபிரபு கண்டித்த அதே தருணத்தில், அந்த மீனவனைப் பற்றிய உண்மையை மக்கள் உணர்ந்தனர்.

நீலாசலத்திற்குத் திரும்புதல்

இவ்வாறாக, சைதன்ய மஹாபிரபு ஒரு மாத காலம் விருந்தாவனத்தினைக் கண்டு பரவசமுற்றார். அவரைக் காண வரும் மக்களின் கூட்டம் தினமும் அதிகரித்துக் கொண்டே இருந்ததால், பலபத்ர பட்டாச்சாரியர் அச்சமுற்றார். மேலும், ஒருமுறை யமுனையினுள் நீராடச் சென்ற மஹாபிரபு, பிரேமையின் பரவசத்தில் அதிலிருந்து வராமல் உள்ளேயே இருந்தார். பலபத்ரர் அவரை மிகுந்த சிரமத்துடன் வெளிக்கொணர்ந்தார்.

அச்சம்பவத்தினால் பலபத்ரர் மேலும் அச்சமுற்றார். அதன் பிறகு அவரது வேண்டுகோளினை ஏற்று, மஹாபிரபு ஜகந்நாத புரிக்குத் திரும்ப ஒப்புக் கொண்டார். மீண்டும் பிரயாகை வழியாக நீலாசலத்தை (புரியை) வந்தடைந்தார்.

மஹாபிரபுவின் விருந்தாவன பயணம்குறித்து கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி கூறும் சில வரிகள்:

ஜகந்நாத புரியில் இருந்தபோது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மனம் பிரேமையின் பரவசத்தில் மூழ்கியிருந்தது, ஆயினும், விருந்தாவனத்திற்கான பாதையில் பயணித்தபோது அந்த பிரேமை நூறு மடங்கு அதிகரித்தது.

மஹாபிரபுவின் பிரேமை அவர் மதுராவை தரிசித்தபோது ஆயிரம் மடங்கு அதிகரித்தது, ஆயினும், விருந்தாவனக் காடுகளில் உலாவியபோது அந்த பிரேமை இலட்சம் மடங்கு அதிகரித்தது.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்ற இடங்களில் இருந்தபோது, அவரது பிரேமையினை அதிகரிப்பதற்கு விருந்தாவனம் என்னும் பெயரே போதுமானதாக இருந்தது. தற்போது, அவர் உண்மையிலேயே அந்த விருந்தாவனக் காடுகளில் பயணம் செய்கிறார். எனவே, அவரது மனம் மாபெரும் பிரேமையில் இரவுபகலாக மூழ்கியுள்ளது. உண்ணுதல், நீராடுதல் போன்ற செயல்களை அவர் வெறும் பழக்கத்தினாலேயே செய்தார்.” (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 19.226-29)

இவ்விதமாக, மஹாபிரபு தமது பூமியான விருந்தாவனத்தினைக் கண்டு களித்தார். பக்தர்கள் இதனை இன்னும் விளக்கமாக அறிய, விரைவில் தமிழில் வெளிவரவுள்ள ஸ்ரீல பிரபுபாதரின் சைதன்ய சரிதாம்ருதத்தினைப் படிக்குமாறு வேண்டுகிறோம்.

விருந்தாவனத்தில் மஹாபிரபு பிரேமையின் பரவசத்தில் நடனமாடுதல்.

About the Author:

திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment