ஜட இயற்கையின் அடிப்படை தத்துவங்கள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இருபத்தாறாம் அத்தியாயம்

சென்ற இதழில் பக்தித் தொண்டின் மகிமைகளைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் ஜட இயற்கையின் அடிப்படை தத்துவங்களை தெரிந்துகொள்வோம்.

படைப்பின் காரணம்

பரம புருஷ பகவான் கபிலர் தொடர்ந்தார்: “எனதன்பு அன்னையே பூரண உண்மையின் பல்வேறு நிலைகளைப் பற்றி நான் இப்போது உங்களுக்கு விளக்கப் போகிறேன். இதன்மூலம் ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். மண்ணுலகின் மீதுள்ள பற்றின் முடிச்சுகளை அறுக்கும் தன்னையறியும் விஞ்ஞானமே வாழ்வின் இறுதியான குறிக்கோளாகும்.

“பரம புருஷ பகவானே பரமாத்மாவாக எல்லாரது இதயத்திலும் வீற்றிருக்கிறார். அவர் சுய பிரகாசம் உடையவர். ஜட குணங்களைக் கடந்த திவ்யமானவர். இயற்கையின் முக்குணங்களாலான ஜட சக்தி, பகவான் விஷ்ணுவுடன் தொடர்புடையதால் தைவீ  என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜட சக்தியின் மூலம் பலவகையான உயிரினங்கள் படைக்கப்படுகின்றன. மேலும், இஃது உயிரினங்களின் உண்மையான அறிவை மூடிவிடுகிறது.

“இந்த ஜட உணர்வுநிலையே ஒருவனது கட்டுண்ட வாழ்விற்கு காரணமாகும். ஜட சக்தியானது ஜீவனின்மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆத்மா, ஜடவுலக செயல்பாடுகளுக்கு நேரடி காரணமாக இல்லாதபோதிலும் கட்டுண்ட வாழ்வால் பாதிக்கப்படுகிறான். ஜட இயற்கையே கட்டுண்ட ஆத்மாவின் உடல், புலன்கள், உடலை அடக்கியாளும் தேவர்கள் ஆகியவற்றிற்கான காரணமாகும். ஆத்மா தனது சுதந்திரத்தை தவறாக பிரயோகிப்பதால் ஜடவுடலை ஏற்றுக் கொண்டு இன்ப துன்பங்களை உணர்கிறான்.”

ஜட சக்தி

அன்னை தேவஹூதி வினவினாள்: “பகவானே, வெளிப்பட்டும் வெளிப்படாமலும் இருக்கும் படைப்பின் காரணங்களாக விளங்கும் பரம புருஷ பகவான் மற்றும் அவரது சக்திகளின் குணநலன்களை தயவுசெய்து விளக்கியருளுங்கள்.” பகவான் கபிலர் அதற்கு ஜட சக்தியின் படைப்பினை விரிவாக எடுத்துரைத்தார்.

வெளிப்படுத்தப்பட்டுள்ள படைப்பு ப்ரக்ருதி என்றும், அதற்கு காரணமான வெளிப்படாத (சூட்சுமமான) நிலையின் இருப்பு பிரதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களை சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பஞ்ச பூதங்கள்) மணம், சுவை, உருவம், தொடுவுணர்ச்சி, சப்தம் (புலனுகர்ச்சி பொருட்கள்), மூக்கு, நாக்கு, கண், தோல், காது (ஐந்து ஞான இந்திரியங்கள்), கை, கால், வாய், ஆசனவாய், பாலுறுப்பு (ஐந்து செயல்புலன்கள் எனப்படும் கர்ம இந்திரியங்கள்) மனம், புத்தி, அஹங்காரம், மற்றும் மாசடைந்த உணர்வு.

காலம்

காலம் என்பது இதன் இருபத்துஐந்தாம் மூலக்கூறாகும், சகுண பிரம்மன் என்பது இந்த ƒ25 மூலப்பொருட்களை உள்ளடக்கியதாகும்.

ஜட இயற்கையில் தொடர்பு கொண்டுள்ளதால் மயங்கிய ஆத்மா, பொய் அஹங்காரத்தால் காலத்தின் விளைவை மரண பயமாக உணர்கிறது.  இந்த காலக்கூறு, பகவானைப் பிரதிநிதிக்கிறது. அவரால் தூண்டப்பட்டு இயற்கை படைப்பைத் தொடங்குகிறது. ஒரே சமயத்தில் பரம புருஷ பகவான் உள்ளே பரமாத்மாவாகவும் வெளியில் காலமாகவும் இவ்வெல்லா வேறுபட்ட மூலக்கூறுகளை சரி செய்கிறார்.

வாஸுதேவ உணர்வு

பரம புருஷ பகவான் தன் அந்தரங்க சக்தியால் இயற்கையை கருவுற செய்த பிறகு, ஜட இயற்கை கட்டுண்ட ஆத்மாக்களின் கர்ம விதிகளால் தூண்டப்படுவதால், ஹிரண்மய எனப்படும் புத்திக்கூர்மையின் மொத்த வடிவத்தைப் பெற்றெடுக்கிறது. தெய்வீக வெளிப்பாட்டை மூடியிருக்கும் இருளை ஒளி பொருந்திய மஹத் தத்துவம் அகற்றுகிறது.

வாஸுதேவ உணர்வு எனும் தூய உணர்வு அமைதி, தெளிவு, மாறுபடாத சிந்தனை ஆகிய இயல்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுத்த ஸத்வ குணத்தினாலான இந்த உணர்வு பகவானைப் புரிந்து கொள்ளும் தெளிவான அமைதியான நிலையாகும். இது மஹத் தத்துவத்திலிருந்து வெளிப்படுகிறது.

அதன்பிறகு பொய் அஹங்காரம், பகவானின் சக்தியிலிருந்து  மலர்ந்த மஹத்தத்துவத்திலிருந்து ஊற்றெடுத்தது, இந்த பொய் அஹங்காரமே தேஹ அபிமானத்திற்கு (இந்த ஜடவுடல் எனும் உணர்வு) மூல காரணமாகும். இதிலிருந்து விடுபட ஒருவர் சங்கர்ஷணரை வழிபட வேண்டும்.

இப்பொய் அஹங்காரமே குணங்களின் தொடர்பால் மனம் மற்றும் புலன்களை உற்பத்தி செய்கிறது.

மனமும், புத்தியும்

ஸத்வ குணத்தின் தொடர்பினால் பொய் அஹங்காரம் மனதை உற்பத்தி செய்கிறது. பல்வேறு ஆசைகளுக்கு காரணமாக இந்த மனதின் செயல்கள் ஏற்பது மற்றும் மறுப்பதாகும். மனதைக் கட்டுப்படுத்த யோகிகள் அநிருத்தரை தியானம் செய்கின்றனர். ரஜோ குணத்தின் தொடர்பால் பொய் அஹங்காரம், புத்தி மற்றும் கர்ம, ஞான இந்திரியங்களை உற்பத்தி செய்கிறது. சந்தேகம், தவறாகப் புரிந்துகொள்ளுதல், சரியாக புரிந்துகொள்ளுதல், நினைவாற்றல், உறக்கம் ஆகிய அனைத்தும் அறிவுக் கூர்மையின் குறிப்பிட்ட பண்புகளாகக் கூறப்படுகின்றன, புத்திக்கூர்மை பெற ஒருவன் பிரத்யும்னரை வழிபட வேண்டும்.

பஞ்ச பூதங்கள்

தமோ குணத்தின் தொடர்பால் பொய் அஹங்காரம் பஞ்ச பூதங்களை ஒன்றன்பின் ஒன்றாக உற்பத்தி செய்கிறது. முதலில் ஒலியும் ஆகாயமும் கேட்கும் புலனும் உண்டாகின்றன. அதன்பிறகு நுட்பமான மூலப்பொருளான தொடு உணர்ச்சி, காற்று, தொடு புலனும் உண்டாகின்றன.

மென்மை, கடினத்தன்மை, குளிர்ச்சி, வெப்பம் ஆகியவை தொடு உணர்ச்சியின் தனிக்குணங்களாகும். காற்று கர்ம, ஞான இந்திரியங்கள் சரிவர வேலை செய்வதற்கு உதவுகின்றது. அதன்பின் உருவம், நெருப்பு, மற்றும் பார்க்கும் புலன் ஆகியவை உண்டாகின்றன. ஒளியையும் வெப்பத்தையும் வழங்குவதால் நெருப்பினை இனம் கண்டு கொள்கிறோம்.

பிறகு சுவை, நீர் மற்றும் சுவையை அறியும் புலனான நாக்கு முதலானவை உண்டாகின்றன. சுவையானது பிற பொருட்களின் தொடர்பினால் துவர்ப்பு, இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, உவர்ப்பு என அறுசுவையாகிறது. பின்னர் நறுமணம், நிலம் மற்றும் முகரும் புலன் ஆகியவை தோன்றுகின்றன. மணமானது மற்ற பொருட்களின் கலவையால் துர்நாற்றமாக, நறுமணமாக, மென்மையானதாக, காரசாரமாக, அமிலத் தன்மை உடையதாக என பலவகையாகிறது.

விக்ரஹங்களை வடிவமைக்கவும், கட்டிடங்கள் கட்டவும் பானைகளை தயாரிக்கவும் பயன்படுதல் பூமியின் சிறப்பம்சங்களாகும். ஆகாயத்தில் ஒலியும், காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்ச்சியும், நெருப்பில் ஒலி, தொடு உணர்ச்சி மற்றும் உருவமும், நீரில் ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், மற்றும் சுவையும் நிலத்தில் ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை மற்றும்  மணமும் இருக்கின்றன. இதனால் நிலமானது, எல்லா மூலப் பொருட்களின் ஒட்டுமொத்த வடிவமாகும்.

விராட ரூபம்

படைப்பிற்கு மூல காரணமாகிய  பரம புருஷ பகவான் பஞ்ச பூதங்கள், மஹத் தத்துவம், பொய் அஹங்காரம் ஆகிய ஏழு பிரிவுகளைக் கொண்ட ஜட சக்தியுடன் அண்டத்திற்குள் நுழைந்தார். இந்த நுழைவு ஜடவுலகின் ஒவ்வோர் அணுவிலும் அவர் நுழைந்துள்ளார் என்பதைக்  குறிக்கிறது.

செயல்புரியத் தூண்டப் பெற்று, பகவானின் முன்னிலையில் ஏழு தத்துவங்களும் இணைந்து புகழ்வாய்ந்த விராட ரூபம் தோன்றியது.

இந்த அண்டம் (பிரபஞ்சம்) அல்லது எண்ணிலடங்காத கோள்களுடன் நாம் காண்கின்ற பிரபஞ்ச வானம் ஒரு முட்டை வடிவில் உள்ளது. முட்டையானது ஓடால் மூடப்பட்டிருப்பது போல, இந்த அண்டமும் பல்வேறு அடுக்குகளால் மூடப்பட்டுள்ளது. முதல் அடுக்கு நீர், அடுத்ததாக நெருப்பு, காற்று, ஆகாயம், பொய் அஹங்காரம் மற்றும் மஹத்தத்துவம் ஆகிய அடுக்குகள் உள்ளன. ஒவ்வோர் அடுக்கும் முந்தையதை விட பத்து மடங்கு பெரியதாக உள்ளது.  இறுதியான அடுக்கு பிரதானமாகும்.

இந்த முட்டைக்குள் பகவான் ஹ›ரியின் விராட ரூபம் உள்ளது. பதினான்கு உலகங்கள் அவரது உடலின் அங்கங்களாக உள்ளன, அதன்பின் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன.

அவரிடம் முதலில் வாய், பேச்சு, அக்னி தேவன் தோன்றின, அடுத்ததாக மூக்கு, நுகருதல் மற்றும் வாயு தேவன் வந்தன. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு புலன்களும் அதற்குரிய தேவர்களும் தோன்றினர்.

(குறிப்பு: நதிகளில் குளிப்பதால் நரம்புதளர்ச்சி நோய் களும் சமுத்திரத்தில் குளிப்பதால் வயிறு சம்பந்தமான நோய்களும் குணமடைவதாக ஆயுர்வேதம் கூறுகிறது,)

விராட புருஷரை துயிலெழுப்புதல்

வெளியிலிருந்து விராட புருஷரை துயிலெழுப்ப இயலாததால் ஒவ்வொரு தேவரும் அவரது உடலுக்குள் மீண்டும் நுழைந்து அவரை எழுப்ப முயன்றனர். முதலில் அக்னி தேவன் பேச்சு பொறியுடன் அவரது வாயில் நுழைந்தார். பின் ஒவ்வொரு தேவரும் தத்தமது ஆற்றலுடன் வெவ்வேறு பகுதிகளில் நுழைந்தனர். இவ்வெல்லா முயற்சிகளாலும் விராட புருஷரை துயிலெழுப்ப முடியவில்லை. அதன்பின் பரமாத்மாவான உணர்வின் அதிபதி அவரது இதயத்தில் நுழைந்தவுடன் விராட புருஷர் துயிலெழுந்தார்.

ஒரு மனிதன் உறங்கும் பொழுது அவனது இயல்பான உடைமைகளான உயிர்சக்தி, ஞான, கர்ம இந்திரியங்கள்,  மனம் மற்றும் புத்தியால் அவனை எழுப்ப முடியாது. பரமாத்மா அவனுக்கு உதவினால் மட்டுமே அவனை எழுப்ப முடியும்.

ஒருமுனைப்பட்ட பக்தித் தொண்டால் கிடைக்கும் பற்றின்மை, ஆன்மீக அறிவில் முன்னேற்றம் மற்றும் பக்தி உணர்வின் மூலம் பரமாத்மா ஒவ்வொருவரது உடலில் இருப்பதையும் அதே சமயத்தில் வெளியில் இருப்பதையும் ஒருவர் உணர வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives