மனோவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

மனோவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

டாக்டர் ஃப்ரேஜர்: உங்களுடைய சீடர்கள் உடல் அல்லது மன ரீதியிலான தளத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நான் ஆவலாக உள்ளேன். பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்ட நிலையை அடைய நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், நாங்கள் தெய்வீகத் தளத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறோம், உடல், மனம், அல்லது புத்தியின் தளத்தில் நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் நான்கு தளங்களை அங்கீகரிக்கின்றோம்: உடல் அல்லது புலன்களின் தளம்; அதைக் காட்டிலும் உயர்ந்த மனதின் தளம்; அதைக் காட்டிலும் உயர்ந்த புத்தியின் தளம்; அதைக் காட்டிலும் உயர்ந்த ஆன்மீகத் தளம். நம்முடைய நேரடி அனுபவம் புலன்களின் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, நான் தற்போது உங்களுடைய பதிவு செய்யும் பெட்டியைக் கண்களைக் கொண்டு நேரடியாகக் காண்கிறேன், இது புலன்களின் தளத்தைக் குறிக்கின்றது. ஆனால் அந்த பதிவு செய்யும் பெட்டியைப் பற்றி நீங்கள் எனக்கு விளக்கமளித்தால், அப்போது நான் அதனை மனதின் தளத்தில் காண்கிறேன். புலன்களின் பார்வையும் மனதின் பார்வையும் வேறுபட்டதாகும். ஒரு மின்னியல் வல்லுநர், இதே பதிவு செய்யும் பெட்டியை எவ்வாறு முன்னேற்றலாம் என்று யோசிக்கும்போது, அவர் அதனை புத்தியின் தளத்தில் காண்கிறார். அது மற்றொரு பார்வையாகும். இவ்வாறாக, பௌதிகத் தளத்தில்கூட, மூன்றுவிதமான தளங்களில் மூன்றுவிதமான பார்வைகள் உள்ளன: புலன்கள், மனம், மற்றும் புத்தி. இவ்வெல்லாவற்றிற்கும் அப்பால் ஆன்மீக தளம் உள்ளது. இந்த தளத்தில் ஆத்மா உள்ளது, அந்த ஆத்மாவானது இவ்வுலகினை பௌதிகப் புலன்கள், மனம், மற்றும் புத்தியின் தளத்தில் அனுபவிக்கின்றது.

இவ்வாறாக, நாங்கள் ஆன்மீகத் தளத்தில் பேசுகின்றோம். ஒருவன் ஆன்மீகத்தில் பலம் வாய்ந்தவனாக இருப்பானேயானால், அவனுடைய புத்தி, மனம், உடல் என அனைத்தும் வளமுடையதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இதுவே எங்களுடைய பிரச்சாரம். உங்களிடம் நூறு டாலர்கள் இருக்குமெனில், அப்போது உங்களிடம் ஐம்பது டாலர்கள், இருபத்தைந்து டாலர்கள், பத்து டாலர்கள் ஆகியவையும் இருப்பதாக அர்த்தம். எனவே, நாங்கள் எங்களுடைய மாணவர்களை ஆன்மீக ரீதியில் பயிற்சியளிக்கின்றோம். ஆன்மீகப் புரிந்துணர்விற்காக, அவர்கள் அதிகாலையில் எழ வேண்டும், நீராட வேண்டும், கிருஷ்ண பிரசாதம் மட்டும் ஏற்க வேண்டும், சில குறிப்பிட்ட விஷயங்களிலிருந்து தங்களைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விதமாக அவர்களுடைய உடல் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தானாக தீர்ந்துவிடுகின்றன. நாங்கள் மருத்துவருக்கு அதிகமான தொகைகளை செலவழிப்பதில்லை. கடந்த ஏழு வருடங்களில், நான் ஒருமுறைகூட மருத்துவரைச் சந்தித்ததில்லை. எங்களுடைய மாணவர்களில் பெரும்பாலானோர் உடல்ரீதியான நோயினால் பாதிக்கப்படுவதில்லை.

நல்ல ஆரோக்கியம் என்பது உடலில் உள்ள ஆன்மீக ஆத்மாவின் இருப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த உடலினுள் ஆத்மாவாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். ஆத்மா உடலினுள் இருக்கும் காரணத்தினால், உடல் ஆரோக்கியமானதாக தோன்றுகிறது. உடலிலிருந்து ஆத்மா வெளியேறிய உடன், உடல் உடனடியாக அழுகத் தொடங்கிவிடுகிறது. இதுவே உயிருள்ள உடலுக்கும் மரணமடைந்த உடலுக்கும் உள்ள வேறுபாடாகும். ஆன்மீக ஆத்மா உடலினுள் இருக்கும்போது, அஃது உயிருள்ள உடல் என்று அழைக்கப்படுகிறது; ஆத்மா அங்கிருந்து சென்றவுடன், அது பிணம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, நீங்கள் எப்போதும் உங்களை ஆன்மீகத்தில் பலமுடையவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது இயற்கையாகவே மனம், புத்தி, மற்றும் உடல் ரீதியில் தகுதியுடையவராக இருப்பீர்.

ஆன்மீக ஆத்மாவைப் பற்றி தங்களுக்கு ஏதேனும் தெரியுமா?

டாக்டர் ஃப்ரேஜர்: சில கருத்துக்கள் உண்டு.

ஸ்ரீல பிரபுபாதர்: அது என்ன?

டாக்டர் ஃப்ரேஜர்: என்னுடைய வார்த்தைகள் அதனை முறையாக விவரிக்க இயலாது. அது விவரிக்க இயலாததும் எனக்கும் உங்களுக்கும் சாரமுமான ஒன்றும் ஆகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. இது தெளிவான விளக்கமல்ல. தங்களுடைய கூற்று எதையும் விளக்கவில்லை. ஆன்மீக ஆத்மா என்றால் என்ன என்பதை நாம் அறியாவிடில், ஆன்மீக அறிவு என்ற கேள்விக்கே இடமில்லை.

டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மா என்று நீங்கள் குறிப்பிடும்போது, நான் என்னுடைய உடலின் புலன்களால் உபயோகிக்காத ஏதோ ஒரு பகுதியைப் பற்றி தாங்கள் குறிப்பிடுவதாக உணர்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய உடலின் புலன்கள் ஆன்மீக ஆத்மா இருப்பதாலேயே வேலை செய்கின்றன. உங்களுடைய உடலினுள் ஆத்மா இருப்பதால்தான் தங்களின் கைகள் நகருகின்றன. உடலை விட்டு ஆத்மா அகன்றவுடன், உங்களுடைய உடல் வெறும் ஜடப் பொருட்களின் கலவையாகிவிடுகிறது.

டாக்டர் ஃப்ரேஜர்: அப்படியெனில், ஜடப் பொருள் ஆன்மீக ஆத்மாவிலிருந்து வேறுபட்டதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஆன்மீக ஆத்மா என்பது உயிர்ச்சக்தி, நகரக்கூடிய சக்தி. அஃது உங்களுடைய உடலினுள் உள்ளது, என்னுடைய உடலினுள்ளும் உள்ளது, எறும்பு, யானை என எல்லா உடல்களிலும் உள்ளது.

டாக்டர் ஃப்ரேஜர்: நாம் மரணமடைந்த பின்னரும் அஃது உடலினுள் இருக்குமா?

ஸ்ரீல பிரபுபாதர்: மரணம் என்றால் நீங்கள் உங்களுடைய உடலை விட்டு வெளியேறுகிறீர்கள் என்று பொருள். உங்களுடைய உடலினுள் உங்களைத் தவிர பல்வேறு பூச்சிகள், புழுக்கள் வாழ்கின்றன. உங்களுடைய உடலினுள் எண்ணற்ற தனித்தனி ஆன்மீக ஆத்மாக்கள் உள்ளன.

டாக்டர் ஃப்ரேஜர்: தனிப்பட்ட ஆன்மீக ஆத்மாக்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நீங்கள் ஒரு தனிப்பட்ட ஆத்மா, நான் ஒரு தனிப்பட்ட ஆத்மா, ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள்.

டாக்டர் ஃப்ரேஜர்: எல்லா ஆன்மீக ஆத்மாக்களிலும் பொதுவானது எது?

ஸ்ரீல பிரபுபாதர்: எல்லா ஆத்மாக்களும் தன்மையால் ஒன்றுபட்டவர்கள்.

உதாரணமாக, நீங்களும் இரண்டு கைகளைக் கொண்டுள்ளீர், நானும் இரண்டு கைகளைக் கொண்டுள்ளேன், நீங்களும் இரண்டு கால்களைக் கொண்டுள்ளீர், நானும் இரண்டு கால்களைக் கொண்டுள்ளேன். இதுபோன்று நம் இருவருக்கும் இடையில் ஒற்றுமை உள்ளது. இருப்பினும், நீங்களும் நானும் வேறுபட்டவர்கள். இதுவே தனித்துவம் எனப்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதே கிருஷ்ண உணர்வாகும்.

டாக்டர் ஃப்ரேஜர்: உடல் அல்லது மனதின் தளத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் தங்களை அணுகும்போது அவருக்கு என்ன நிகழ்கிறது? அவரால் ஆன்மீகத் தளத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எடுத்துக்கொள்வோம். அந்த நபர் தன்னுடைய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் அவரை ஆன்மீக தளத்தில் கட்டிவைத்துவிடுவீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். யாராயினும் கிருஷ்ண உணர்வின் தளத்திற்கு வருவார்களேயானால், அவருக்கு உடல், மனம், அல்லது புத்தி என எந்த தளத்திலும் பிரச்சனைகள் ஏதும் இருப்பதில்லை.

டாக்டர் ஃப்ரேஜர்: யாரேனும் ஒருவர் தங்களை அணுகும்போது அவரை நீங்கள் எவ்வாறு கிருஷ்ண உணர்விற்கு கொண்டு வருவீர்கள் என்பதை அறிந்துகொள்ள நான் ஆவல் கொண்டுள்ளேன். உங்களிடம் ஏதேனும் ஹீலிங் வழிமுறை உள்ளதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மன ரீதியிலான பிரச்சனைகளுடன் இருப்பவர்களை நீங்கள் எவ்வாறு குணப்படுத்துகிறீர்களோ, அதுபோல நாங்களும் மக்களை கிருஷ்ண உணர்வினால் குணப்படுத்துகிறோம்.

டாக்டர் ஃப்ரேஜர்: அந்த வழிமுறையைப் பற்றி தாங்கள் சற்று விளக்க முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: இது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதாகும். இது பாம்பினால் கடிக்கப்பட்டவனைக் குணப்படுத்தும் வழிமுறையைப் போன்றதாகும். நீங்கள் இந்தியாவிலுள்ள பாம்பாட்டிகளைப் பார்த்திருக்கிறீர்களா? யாரேனும் பாம்பினால் கடிக்கப்பட்டு உணர்வற்று மயங்கி இருந்தால், இவர்கள் படிப்படியாக சில குறிப்பிட்ட மந்திரங்களைக் கொண்டு அவர்களை எழுப்ப முடியும். அது பௌதிகமான வழிமுறையாகும். அதுபோலவே, ஆன்மீக ஆத்மாக்களான நாம் ஒவ்வொருவரும் மனதின் ரீதியிலோ உடலின் ரீதியிலோ நோய்வாய்ப்பட்டுள்ளோம். எனவே, இந்த ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தின் மூலமாக நாம் நம்முடைய உணர்வினை எழுப்புகிறோம். இது நம்முடைய உடல், மனம், மற்றும் புத்தியின் நோய்களை குணப்படுத்துகிறது.

டாக்டர் ஃப்ரேஜர்: இந்த உச்சாடனம் ஒருவருக்கு நன்மையளிக்க வேண்டுமெனில், அந்த நபர் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையில் இருக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. நாங்கள் இந்த உச்சாடனத்தின் மூலமாகவே ஆரோக்கியமான மனப்பான்மையினை உருவாக்குகின்றோம். நாங்கள் கீர்த்தனம் செய்கிறோம், மற்றவர்களையும் கீர்த்தனத்தில் இணைந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். அப்போது அந்த நபருடைய புத்தி, மனம், உடல் என அனைத்தும் குணமடைகிறது.

டாக்டர் ஃப்ரேஜர்: இதனை எல்லா மக்களாலும் செய்ய இயலாமல் போகலாம். அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை கீர்த்தனத்தின் மூலம் நாடுவதில்லை, வேறு ஒருவரை நாடி நோயை குணப்படுத்த முயற்சிக்கின்றனர், அவர்கள் தங்களுக்குள் தீர்வை நாடுவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அவ்வாறு இருப்பினும், எங்களுடைய மாணவர்கள் பலர் எல்லாவித மனம், உடல், மற்றும் புத்தியின் பிரச்சனைகளிலிருந்து இந்த கீர்த்தனத்தின் மூலமாக குணமடைந்துள்ளனர். இதுபோன்ற சீடர்கள் பலர் உள்ளனர். நீங்கள் அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.

டாக்டர் ஃப்ரேஜர்: கிருஷ்ண உணர்வின் வழிமுறையினை ஏற்றுக் கொண்ட பின்னர், உங்களுடைய சீடர்கள் கோயிலில் தங்குகிறார்களா, அல்லது சமுதாயத்துடன் இணைந்து சாதாரண வேலைகளில் பணிபுரிகிறார்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: சிலர் அவ்வாறு செய்கின்றனர். இந்த சீடன் (ஒரு பக்தரைக் சுட்டிக் காட்டுகிறார்) வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் தன்னுடைய வேலையை செய்து கொண்டுள்ளார், ஆனால் அவர் கிருஷ்ண உணர்விலும் உள்ளார். எங்களுடைய இயக்கத்தில் பல்வேறு பேராசிரியர்களும் பல்வேறு சேவகர்களும் உள்ளனர். ஒருவர் கோயிலில் வசிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் வெளியிலும் வசிக்கலாம், அவர் தன்னுடைய கிருஷ்ண உணர்வினை தக்கவைத்துக் கொண்டால் போதும். இருப்பினும், கோயிலில் வசிப்பது என்பது பக்தர்களுடைய சங்கத்தின் காரணத்தினால், கிருஷ்ண உணர்வினைத் தக்கவைப்பதற்கு எளிமையானதாகும். பக்தர்களின் சங்கம் என்பது மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

டாக்டர் ஃப்ரேஜர்: உடலைக் கட்டுப்படுத்துவதை நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மாமிசப் பொருட்கள் கூடாது, போதைப் பொருட்கள் கூடாது, முறையற்ற பாலுறவு கூடாது, சூதாட்டமும் கூடாது. இவை செய்யக்கூடாத செயல்களில் சிலவாகும். செய்ய வேண்டிய செயல்களும் பல இருக்கின்றன. செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை–இவை உடலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எங்களுடைய மாணவர்கள் சினிமாவிற்கோ உணவகத்திற்கோ செல்வதில்லை, அவர்கள் புகைப்பிடிப்பதில்லை, டீ அல்லது காபி குடிப்பதும் இல்லை. எங்களுக்கு அதுபோன்ற செலவுகள் இல்லை, ஏறக்குறைய மருத்துவரின் செலவும் இல்லை.

டாக்டர் ஃப்ரேஜர்: முறையற்ற பாலுறவு கூடாது என்று கூறினீர்கள். முறையான உடலுறவு என்றால் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: முறையான உடலுறவு என்றால், ஒருவன் தன்னுடைய மனைவியுடன் மட்டும் உடலுறவு கொள்ளலாம் என்பதாகும். அவனுக்கு திருமணமாகியிருக்க வேண்டும். மனைவியின் மாதவிலக்கு காலத்திற்குப் பின்னர், மாதத்திற்கு ஒருமுறை உடலுறவு கொள்ளலாம். மனைவி கருத்தரித்துவிட்டால், அதன் பின்னர் உடலுறவு வாழ்க்கை கூடாது. இதுவே அனுமதிக்கப்படும் பாலுறவாகும்.

டாக்டர் ஃப்ரேஜர்: தகாத பாலுறவிற்கு நீங்கள் ஏதேனும் தண்டனை வழங்குகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: தண்டனை என்பது இயற்கையின் வழியில் தானாக நடைபெறும். இயற்கையின் விதியை நீங்கள் மீறிய மாத்திரத்தில், நீங்கள் தானாக தண்டிக்கப்படுவீர்கள். உதாரணமாக, நீங்கள் உங்களுடைய தேவைக்குச் சற்று அதிகமாக உணவருந்தினால், நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள். இஃது இயற்கையின் விதியாகும். நீங்கள் அதிக அளவில் காமத்தில் ஈடுபட்டால், அதன் பின்னர் வீரியமற்றவராகிவிடுவீர். அளவுக்கு அதிகமான பாலுறவிற்கு இயற்கையினால் வழங்கப்படும் தண்டனை இதுவாகும். தகாத பாலுறவு, போதை வஸ்துக்கள், மாமிச உணவு, சூதாட்டம் ஆகிய தடை செய்யப்பட்ட செயல்களில் நீங்கள் ஈடுபட்டால், அப்போது உங்களால் ஆன்மீக உணர்வுகளை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இதுவே மிகப்பெரிய தண்டனையாகும். நீங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாவிடில், அறியாமையில் மிருகமாகவே இருந்துவிடுவீர்கள். எனவே, மனித உடலின் பெரும் வாய்ப்பை பெற்ற பின்னரும், நீங்கள் மிருகங்களாகவே இருப்பீர்களெனில், அது மிகப்பெரிய தண்டனை இல்லையா?

டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன், ஆனால் இந்த அறியாமைக்கு எவ்வாறு முடிவு காண்பது?

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளை நீங்கள் புரிந்து கொண்ட உடன், உங்களுடைய அறிவு பக்குவமானதாகிவிடுகிறது. நீங்கள் கடவுளை புரிந்துகொள்ளாவிடில், உங்களுடைய அறிவு பக்குவமற்றதாகும். மிருகங்களிடம் கடவுளைப் பற்றி கற்றுத்தர முடியாது, ஆனால் மனிதர்களிடம் முடியும். எனவே, மனித சமுதாயத்தில் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன, நீங்கள் மனித வாழ்க்கையினை கடவுளைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக எடுத்துக்கொள்ளாவிடில், நீங்கள் மிருகமாகவே வாழ்கிறீர்கள்.

டாக்டர் ஃப்ரேஜர்: கடவுளைப் புரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வில் இருந்த நபர்கள் யாரேனும் மீண்டும் தங்களுடைய மனம், உடல், அல்லது புத்தியின் தளத்திற்குத் திரும்பிச் சென்றதை நீங்கள் கண்டுள்ளீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நீங்கள் ஒரு நோயிலிருந்து குணப்படுத்தப்படலாம், ஆனால் மீண்டும் அதே நோயினால் பாதிக்கப்படலாம், அதுபோல, நீங்கள் கிருஷ்ண உணர்வை வளர்த்த பின்னரும், மீண்டும் பௌதிக வாழ்க்கையினுள் வீழ்ச்சியடைய நேரிடலாம். இருப்பினும், நீங்கள் எப்போதும் உங்களை ஆன்மீக ரீதியில் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், வீழ்ச்சியடைவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை.

டாக்டர் ஃப்ரேஜர்: கிருஷ்ண உணர்வின் சாரம் என்ன என்பதை நீங்கள் கூற இயலுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் சாரம், கடவுளைப் புரிந்துகொண்டு அவரிடம் அன்பு செலுத்துவதாகும். இதுவே எங்களுடைய பிரச்சாரம். மனித வாழ்க்கை கடவுளைப் புரிந்து கொண்டு அவரிடம் அன்பு செலுத்துவதற்கானது.

டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கூறுவதை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. கிருஷ்ண உணர்வு என்பது மிகவும் இயற்கையான ஒன்றை பின்பற்றுவதாக தோன்றுகிறது. அதிகமாக சாப்பிடுதல், அதிகமாக பாலுறவில் ஈடுபடுதல், அதிகமாக எதைச் செய்தாலும் அது இயற்கையானதல்ல.

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில், நீங்கள் ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த உடல் அல்ல என்பதே அடிப்படைக் கொள்கையாகும். ஆனால் நீங்கள் இந்த உடலை ஏற்றிருப்பதால், உடலினால் எழும் பலவிதமான துன்பங்களினால் பாதிக்கப்படுகிறீர்கள். நம்முடைய துன்பங்கள் அனைத்தும் இந்த ஜடவுடலைச் சார்ந்ததாகும். எனவே, இந்த பௌதிக உடலே நம்முடைய பிரச்சனையாகும்.

டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மாவும் உடலும் எப்போதும் வேறுபட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பக்குவ உணர்வு பெற்ற ஆத்மா உடலின் வலிகளை உணர்கிறதா? வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியிலான நோய்கள் வருமா?

கிருஷ்ண நாம உச்சாடனத்தின் மூலமாக ஆரோக்கியமான மனப்பான்மை தானாக உருவாக்கப்படுகிறது

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment