வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்ரீ பகவான் உவாச

இதம் து தே குஹ்யதமம்

ப்ரவக்ஷ்யாம் யனஸூயவே

ஜ்ஞானம்  விஜ்ஞான-ஸஹிதம்

யஜ்-ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே ’ஷுபாத்

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, நீ என்றுமே என்னிடம் பொறாமை கொள்ளாதவன் என்பதால், எதனை அறிவதால் ஜடவுலகின் துன்பங்களிலிருந்து விடுதலை அடைவாயோ, அந்த மிகமிக இரகசியமான ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன்.” (பகவத் கீதை 9.1)

பகவான், ஒரு விளக்கம்

ஸ்ரீ பகவான் உவாச. பகவான் எனும் இந்த வார்த்தையை நான் பலமுறை விளக்கியுள்ளேன், இதற்கு உன்னத அதிகாரி” என்று பொருள். வேத இலக்கியங்கள் பகவான் எனும் சொல்லை பிறருக்கும் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். இருப்பினும், அதனால் அவர்கள் பகவான் கிருஷ்ணருடன் சமநிலையில் உள்ளனர் என்பதாகாது. சில சமயங்களில் நாரத முனிவரும் பகவான்” என்று அழைக்கப்படுகிறார், சிவபெருமானுக்கும் பகவான்” எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது, விஷ்ணு தத்துவங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரைப் பற்றி கூறும்போது ஸ்ரீமத் பாகவதம், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்று கூறுகிறது.

பகவானுக்குரிய அனைத்து குணங்களையும் கிருஷ்ணர் பூரணமாகக் கொண்டுள்ளதால் அவர் பகவான்” எனப்படுகிறார். இது சைதன்ய சரிதாம்ருதத்தில் விளக்கப்பட்டுள்ளது. பகவான் எனும் சொல்லுக்கு ஷட்-ஐஷ்வர்ய பூர்ண:, அழகு, அறிவு, செல்வம், பலம், புகழ், துறவு எனும் ஆறு ஐஸ்வர்யங்களை பூரணமாகக் கொண்டவர் என்று பொருள். பகவான் கிருஷ்ணர் மேற்கண்ட ஆறு செல்வங்களையும் பூரணமாக வெளிப்படுத்துகிறார். கிருஷ்ணரது விரிவாங்கங்கள் தங்களது ஐஸ்வர்யங்களை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.

ராமாதி மூர்த்திஷு கலா நியமேன திஷ்டன். ஒரே முழுமுதற் கடவுள் புருஷோத்தமரான பகவான் கிருஷ்ணராகவும், இராமர், நரசிம்மர், வராஹர் முதலிய ஆயிரக்கணக்கான அவதாரங்களாகவும் இருக்கிறார். அவர்களும் கிருஷ்ணரே. கிருஷ்ணர் ஒரே சமயத்தில் கிருஷ்ணராக மட்டுமல்லாது தமது அவதாரங்களாகவும் இருக்கின்றார். ஆகவே, நாம் கிருஷ்ணரைப் பற்றி பேசும்போது, அவரது மற்ற அவதாரங்கள், விரிவாங்கங்கள் ஆகியோரைப் பற்றியும் கூறுகிறோம்.

ஆகவே, ராமாதி மூர்த்திஷு கலா. கலா என்பதற்கு பகுதி விரிவாங்கம்” என்று பொருள், முழு விரிவாங்கம் அல்ல. முழு விரிவாங்கங்கள் பூர்ண என்று அழைக்கப்படுகின்றன. அவர்களும் பகவானே. ஆனால், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்பது கிருஷ்ணரே எல்லா ஐஸ்வர்யங்களையும் முழுமையான அளவில் வெளிப்படுத்துகிறார் என்பதைக் குறிக்கின்றது. ஸ்ரீமத் பாகவதம் அனைத்து அவதாரங்களையும் வரிசைக் கிரமமாக கூறிய பிறகு, ஏதே சாம்ஷ-கலா: பும்ஸ: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்கிறது. அதாவது, இதுவரை குறிப்பிட்ட அவதாரங்கள் அனைவரும் பகவானின் விரிவுகள், பகுதி விரிவுகள் அல்லது கிருஷ்ணரது சக்தி அவதாரங்களே ஆவர்; ஆனால் கிருஷ்ணரே அவர்கள் அனைவருக்கும் ஆதிமூலம்.

பகவத் கீதை கிருஷ்ணரால் பேசப்படுவதால், ஸ்ரீ பகவான் உவாச என்று வியாஸதேவர் எழுதியுள்ளார். அவர் க்ருஷ்ண உவாச என்று கூறவில்லை. ஏனெனில், கிருஷ்ணரே பகவான் என்பதை அவர் சுட்டிக்காட்ட விரும்பினார்.

பகவானிடமிருந்து பெறப்படும் அறிவு

முழுமுதற் கடவுள் பகவான் கிருஷ்ணரிடமிருந்து நாம் அறிவைப் பெறுகிறோம். இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அனஸூயவே. குஹ்ய என்றால் இரகசியமானது” என்றும், குஹ்யதர என்றால் மிக இரகசியமானது” என்றும், குஹ்யதமம் என்றால் மிகமிக இரகசியமானது” என்றும் பொருள்.

ஆத்மாவை உணர்தல் என்பது இரகசியமான அறிவு. அடுத்த நிலையான பரமாத்மாவை உணர்தல் மிக இரகசியமானது. பகவானை உணர்தலோ மிகமிக இரகசியமானது.

ஆத்ம-தத்த்வ, பிரம்மத்தை உணர்தல் அல்லது தன்னை உணர்தல் என்பதும் இரகசியமானது. அது சாதாரண அறிவல்ல. ஆகவே அது குஹ்ய என்று அழைக்கப்படுகிறது. மக்கள் ஆத்ம தத்துவத்தை அறிவதில்லை. இவர்கள் செய்தித்தாள்களுக்குக் காட்டும் ஆர்வத்தினை பகவத் கீதை, பாகவதம் போன்றவற்றிற்கு ஏன் காட்டுவதில்லை? அதற்கு காரணம், வாழ்வின் உண்மையான நோக்கம், ஆத்ம தத்துவத்தை உணர்வதே என்பதை அவர்கள் அறிவதில்லை.

இந்த பௌதிக உலகில் சமுதாயம், குடும்பம், நண்பர்கள், காதல் முதலியவற்றின் மூலம் மகிழ்ச்சியைப் பெற நாம் முயல்கிறோம். ஆனால் நமக்குக் கிடைக்கும் இன்பமோ பாலைவனத்தின் ஒரு துளி நீருடன் ஒப்பிடப்படுகிறது. பாலைவனத்தில் நாம் மிகுந்த தாகத்துடன் இருக்கும்போது ஒரு துளி நீரை ஒருவர் நமக்குக் கொடுத்தால், அதில் பிரயோஜனம் உண்டா? அதுபோலவே, நமது இதயமானது உண்மையான ஆன்மீக ஆனந்தத்தை விரும்புகிறது. ஆனால் நாமோ குடும்பம், சமுதாயம் என ஒரு துளி இன்பத்தைப் பெற முயல்கிறோம். அவை என்றும் நமக்கு திருப்தியைத் தராது. ஏனெனில், நாம் நித்தியமானவர்கள், நாம் நித்திய இன்பத்தைப் பெறவே விரும்புகிறோம். ஆத்மாக்களாகிய நாம் கிருஷ்ணரையே தேடுகிறோம். அதுவே நமது உள்ளார்ந்த விருப்பம்.

எண்ணற்ற அவதாரங்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஆதிமூலமாக உள்ளார்.

பொறாமையற்றவருக்கானது

கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில், இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி யனஸூயவே,

என்று கூறுகிறார். அனஸூய என்றால் பொறாமையற்றவர்கள் என்று பொருள். இவ்வுலகிலுள்ள அனைவரும் கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்டுள்ளனர். இஃது அசுரத்தனமானது. கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்ட கம்சன் தனது சேவகனிடம், கிருஷ்ணன் பிறந்தவுடன் என்னிடம் கொண்டு வாருங்கள், அவனை நான் கொன்றுவிடுகிறேன்,”  என்று கூறினான். இதுவே பொறாமை எனப்படுகிறது.

தற்சமயத்தில் முழு உலகமும் கடவுளை மறுக்கின்றது. கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்கு அனைவரும் முயல்கின்றனர். இந்த எண்ணத்தை குறிப்பாக நாம் கம்யூனிச நாடுகளில் காணலாம். நீங்கள் அசுரனாக, கம்யூனிச கொள்கையை உடையவனாக அல்லது அவர்களுக்கு ஆதரவாக மாறினால், நீங்களும் கிருஷ்ணரை வெறுப்பவர்களாக ஆவீர். பின்னர், உங்களால் கிருஷ்ணரை அறிந்துகொள்ள இயலாது.

கருணை வாய்ந்த பக்தர்கள்

கிருஷ்ணர் மிகவும் கண்டிப்பானவர், ஆனால் அவரது பக்தர்களோ மிகவும் கருணை வாய்ந்தவர்கள். கிருஷ்ணர் அசுரர்களிடம் பேசுவதற்கு விரும்புவதில்லை. ஆனால் அவரது பக்தர்களோ மிகவும் கருணையுடன் அசுரர்களிடம் சென்று, தயவுசெய்து கிருஷ்ணரைப் பற்றி கேளுங்கள்,” என்று வேண்டுகின்றனர்.

இவ்வாறாக, கிருஷ்ணரைவிட கிருஷ்ண பக்தன் கருணையானவன். கிருஷ்ணர் அசுரர்களிடம் உரையாடுவதில்லை. பகவத் கீதை அர்ஜுனனுக்கு போதிக்கப்பட்டது. அர்ஜுனன் தமது நண்பனும் பக்தனுமாதலால் கிருஷ்ணர் அதனை அவனுக்கு உபதேசித்தார். மேலும், கிருஷ்ணர் இந்த பரம இரகசியத்தைத் தமது பக்தர்களிடம் உரைக்கும்படி பரிந்துரைக்கிறார். ஆனால் பக்தர்களோ கிருஷ்ணரின் கட்டளையை மீறி பக்தரல்லாத அசுரர்களிடமும் செல்கின்றனர். இவ்வாறாக, பக்தர்கள் மிகவும் கருணையானவர்கள். பக்தன், சரி, கிருஷ்ணரே இவனை நிராகரித்து விட்டார், நாம் சென்று சற்று முயற்சிக்கலாமே”  என்று எண்ணுகிறான். இதுவே பக்தனுடைய நிலை. பக்தர்கள் அனைவரிடமும் வெறுப்பற்று இருக்கின்றனர்.

ஆகவே, பக்தர்கள் காருணிகா, மிகவும் கருணை வாய்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பக்தர்கள் எப்போதும் அசுரர்களால் தொந்தரவிற்கு உள்ளாகின்றனர். அசுரர்கள் முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரைத் துன்புறுத்த முயல்கின்றனர், பக்தர்கள் இவ்வனைத்து தொந்தரவுகளையும் சகித்துக்கொள்கின்றனர். ஆகவே, அவர்கள் திதிக்ஷவா பொறுமையுடையோர் என்று அழைக்கப்படுகின்றனர். சைதன்ய மஹாபிரபு, த்ருணாத் அபி ஸுநீசேன தரோரபி ஸஹிஷ்னுனா, பக்தனானவன் மரத்தைவிட பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறாக, பக்தர்கள் அசுரர்களிடம் பிரச்சாரம் செய்தல் எனும் அபாயத்தை ஏற்கின்றனர்.

கிருஷ்ணரே நிராகரித்தாலும் பக்தர்கள் அனைவரிடமும் கருணை கொண்டுள்ளனர் என்பதை நிருபிக்கும் விதத்தில் ஸ்ரீசைதன்யரே நிராகரித்தாலும் நித்யானந்த பிரபு அனைவரிடமும் கருணை கொண்டிருந்தார்.

பக்தர்களே பொறாமையற்றவர்கள்

கிருஷ்ணர், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, அனைத்து தர்மங்களையும் கைவிட்டு, என்னிடம் சரணடையுங்கள்,” என்று கூறுகிறார். இதனை பக்தரைத் தவிர வேறு யாரால் ஏற்க இயலும்? மாயாவாதிகள், கர்மிகள் (பலனில் பற்றுள்ளவர்கள்), ஞானிகள், யோகிகள் ஆகியோரால் இதனை ஏற்க இயலாது. அவர்கள் கிருஷ்ணரிடம் பொறாமை கொண்டவர்கள். நானே கிருஷ்ணர், நானே கடவுள்,” என்றும், நான் ஏன் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்?” என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

பௌதிக இன்பம், அருவமான முக்தி, யோக சக்தி ஆகியவற்றை விரும்புவோரின் நிலை இதுவே. வார்த்தை ஜாலங்களுடன் யோக சக்திகளைப் பயன்படுத்தும் பல யோகிகளை நீங்கள் காணலாம், ஆனால் அவர்கள் யாரும் பக்தர்களல்ல. அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. அத்தகைய நபர்களால் கிருஷ்ணரை அறிந்துகொள்ள இயலாது. ஏனெனில், பக்தரல்லாதவருக்கு கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே, ஒருவன் பெரிய யோகியாக, ஞானியாக, கர்மியாக இருக்கலாம், அவனால் தனது சொந்த முயற்சியைக் கொண்டு கிருஷ்ணரை அறிந்துகொள்ள இயலாது. பொறாமையற்றவருக்கே கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்துகிறார். பக்தர்களே பொறாமையற்றவர்கள். மற்றவர்கள் அனைவரும்ஶீகர்மிகள், ஞானிகள், யோகிகள்ஶீபொறாமை உடையவர்களே.

அடியார்க்கு அடியார்

கிருஷ்ண பக்தி தத்துவம் ஒருபோதும் அபக்தர்களுக்கு (பக்தரல்லாதவர்களுக்கு) வெளிப்படுத்தப்படுவதில்லை, அர்ஜுனனைப் போன்ற பக்தர்களால் மட்டுமே இந்த தத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். ஆகவே, நாம் ஒருபோதும் கிருஷ்ண பக்தர்களை வெறுக்கக்கூடாது. நான் கிருஷ்ணரை வெறுக்கவில்லை, பக்தர்களை வெறுக்கிறேன்,” என்று நீங்கள் நினைக்கவியலாது. கிருஷ்ணர் இதுபோன்ற செய்கைகளை ஏற்பதில்லை. கிருஷ்ண பக்தர்களின் மீது பொறாமை கொள்வதோ அவர்களை வெறுப்பதோ கூடாது.

கிருஷ்ணரின் நேரடி பக்தன் பக்தனல்ல என்றும், கிருஷ்ணருடைய பக்தனுடைய பக்தனே உண்மையான பக்தன் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, நான் ஏன் குரு அல்லது வைஷ்ணவரின் மூலம் கிருஷ்ணரிடம் செல்ல வேண்டும்? எனக்கு தகுதிகள் உள்ளன, கிருஷ்ணரை நேரடியாக அணுகுவேன்,” என்று எவரும் நினைக்க இயலாது. உங்களால் கிருஷ்ணரை நேரடியாக அணுக இயலாது. அஃது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, தத்-விஜ்ஞானார்தம் ஸ குரூம் ஏவாபிகச்சேத், கிருஷ்ணரைப் பற்றி அறிய ஒருவன் முதலில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுக வேண்டும். கிருஷ்ணரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், கிருஷ்ணரிடமும் அவரது பக்தர்களிடமும் பணிவுடனும் அடக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்பதை கீதையிலிருந்து கற்று, பக்தர்கள் அதனை செயல்முறையில் நிறைவேற்ற வேண்டும்

செயல்முறை அறிவு

கிருஷ்ணர் ஜ்ஞானம் விஜ்ஞானம்-ஸஹிதம் என்கிறார். இந்த ஞானம், மிகமிக இரகசியமானது, இது வெறும் உணர்ச்சிபூர்வமானதல்ல, இஃது ஒரு விஞ்ஞானம். எந்தவோர் அறிவு ஏட்டளவில் மட்டுமின்றி செயல்முறையிலும் அறியப்படுகிறதோ, அதுவே விஞ்ஞானம். ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் கலந்தால் நீர் வரும் என்பது ஏட்டறிவு; இவற்றைக் கலந்து நீரைப் பெறுவது செயல்முறை அறிவு. பல்கலைக்கழகத் தேர்வுகளில் ஒருவனது ஏட்டறிவிற்கு மட்டுமின்றி செயல்முறை அறிவிற்கும் தேர்வு நடைபெறுகிறது.

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ என்பது கீதையின் ஏட்டறிவு, அனைத்து தர்மங்களையும் விடுத்து என்னிடம் சரணடை,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆனால் நீங்கள் உண்மையில் சரணடையும்போது அது செயல்முறையாகிறது. சரணடைவதற்காக நீங்கள் செய்யும் முயற்சி செயல்முறை அறிவாகும். இதுவே விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. ஞானம் என்றால் ஏட்டறிவு. விஞ்ஞானம் என்றால் செயல்முறை அறிவு.

எனவே, கீதையில் கற்பதை நாம் வாழ்வில் செயல்முறைப்படுத்த வேண்டும். நான் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களைப் படித்து விட்டேன், ஆகவே பக்தனாகி விட்டேன்” என்று கூறுதல் முறையல்ல. படித்தவற்றை நடைமுறையில் செயல்படுத்தும்போது மட்டுமே நீங்கள் பக்தராகிறீர்கள். இதையே கிருஷ்ணர் இங்கே விஜ்ஞான-ஸஹிதம் என்று கூறுகிறார்.

மங்கலம் பெறுவீர்

இந்த விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, கிருஷ்ணர் கூறுகிறார், யஜ் ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே  நீங்கள் அமங்கலமானவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

அமங்கலமான வாழ்க்கை என்பது என்ன? இந்த பௌதிக வாழ்வே அமங்கலமானது. மக்கள், நாங்கள் இதனை மங்கலகரமானதாக மாற்றுவோம்,” என்று நினைக்கின்றனர். சிறந்த கார், சிறந்த சாலை, வானுயர்ந்த கட்டிடங்கள், பல்வேறு இயந்திரங்கள், உடலுக்கு சௌகரியம் தரும் பொருட்கள் முதலியவற்றைக் கொண்டு வாழ்வை மங்கலமானதாக மாற்ற அவர்கள் முயல்கின்றனர். ஆனால் அது நிகழ்வதே இல்லை.

இந்த அமங்கலமான வாழ்விலிருந்து விடுபடுவதற்கு ஒருவன் கிருஷ்ணரது உபதேசங்களைக் கற்க வேண்டும். பௌதிக விஞ்ஞானத்தால் மங்கலமான வாழ்வு சாத்தியமல்ல. கிருஷ்ணரிடம் நீங்கள் எவ்வாறு சரணடைவது? கிருஷ்ணரை எவ்வாறு வெறுக்காமல் இருத்தல் முதலிய உயர்ந்த விஞ்ஞானத்தை கீதையிலிருந்து நாம் கற்க வேண்டும். இந்த கிருஷ்ண உணர்வு விஞ்ஞானம் பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த அறிவியலில் சிறந்து விளங்கும்போது, எல்லா அமங்கலத்திலிருந்தும் விடுபடுவீர்கள்.