உயிர்வாழிகளின் இயக்கம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், முப்பத்தொன்றாம் அத்தியாயம்

முதுமை, மரணம், எம தூதர்களின் தண்டனைகள் முதலியவை குறித்து சென்ற இதழில் கண்டோம். இவ்விதழில் உயிரினங்களின் இயக்கம் குறித்த கபிலரின் விளக்கத்தைக் காணலாம்.

கர்ப வாசம்

பகவான் கபிலதேவர் உயிர்வாழியின் பிறப்பைப் பற்றி தேவஹூதியிடம் பின்வருமாறு விளக்கினார்:

பகவானின் மேற்பார்வையின் கீழ் ஜீவன் தான் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வகை உடலை அடைவதற்காக ஆணின் விந்து மூலம் ஒரு பெண்ணின் கருப்பையை அடைகிறான். முதல் இரவில் விந்துவும் சினையும் கலக்கின்றன. ஐந்தாம் இரவில் அக்கலவை ஒரு நீர்க்குமிழியாக நுரைத்து எழுகிறது. பத்தாம் இரவில் சதைப்பற்றுள்ள பழம்போன்று வளர்ந்து படிப்படியாக சதைத் தொகுதியாகவோ, பறவை முதலிய உடலாக இருப்பின் முட்டையாகவோ மாறுகிறது. முதல் மாதத்தில் தலையும், இரு மாதங்களின் முடிவில் கை, கால் மற்றும் பிற உறுப்புகளும் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களில் நகங்கள், எலும்பு, தோல், உரோமம், பிறப்புறுப்பு, கண்கள், காதுகள், மூக்குத் துவாரம், வாய், மலவாய் ஆகியவை தோன்றுகின்றன.

கருவுற்ற நான்கு மாதங்களில் ஏழு தாதுக்களும் (வெள்ளை நிணநீர், குருதி, சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் அல்லது சோணிதம்), ஐந்தாம் மாதத்தில் பசி-தாகம் முதலியவையும் தோன்றுகின்றன. ஆறு மாதங்களில் கருவானது அதைச் சுற்றியுள்ள சவ்வினால் மூடப்படுகிறது. ஆணாக இருந்தால் வலப்பக்கமாகவும், பெண்ணாக இருந்தால் இடப்பக்கமாகவும் அசையத் தொடங்குகிறது.

தாய் உட்கொள்ளும் உணவு மற்றும் நீரிலிருந்து தேவையான சத்துகள் தொப்புள் கொடி மூலம் கருவைச் சென்றடைகின்றன. மல மூத்திரங்கள் நிறைந்த இடத்தில் குழந்தை விருப்பமின்றி வசிக்கின்றது. அங்குள்ள புழு, பூச்சிகள் அதன் மிருதுவான உடலைக் கடிப்பதால் மிகுந்த வேதனை அடைகிறது.

தாய் உட்கொள்ளும் கசப்பான, காரமான உணவு வகைகள் அல்லது மிக உப்பான அல்லது புளிப்பான உணவால் குழந்தையின் உடல் தாங்கவியலாத தொடர்ந்த வலியினால் துன்பப்படுகிறது. (குறிப்பு: இது கர்ப்பமுற்ற காலத்தில் பெண்கள் அவசியம் நினைவிற்கொள்ள வேண்டியதாகும்.)

சிசு, தொப்புள் கொடியால் சுற்றப்பட்டும், ஜவ்வினால் மூடப்பட்டும் தாயின் அடி வயிற்றின் ஒரு புறத்தில் படுத்திருக்கிறது. முதுகும் கழுத்தும் வளைந்து மேல் வயிற்றிலும், தலை அடிவயிற்றிலுமாக ஒரு வில்லைப் போல வளைந்து இருக்கிறது. சுதந்திரமாக அசைய இடமின்றி கூண்டில் அடைக்கப்பட்ட பறவையைப் போல சிக்குண்டு இருக்கின்றது, அச்சமயத்தில் அக்குழந்தை அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தனது கடந்த நூறு பிறவிகளில் செய்த கர்மங்கள் அதன் நினைவிற்கு வருகின்றன.

ஏழாம் மாத முடிவில் சுக துக்கங்களைப் பற்றிய அறிவு தோன்றியவனாக கருப்பையில் உள்ள சூதிகா வாயு எனும் பிரசவக் காற்றினால் கீழ்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் ஒரே இடத்தில் தங்க இயலாது புழுவைப் போல நெளிந்து கொண்டிருக்கிறது. இனி கர்ப வாசமே கூடாது என்று தன்னை இக்கருப்பையில் இட்ட பகவானிடம் இரு கைகளையும் கூப்பி பின்வருமாறு பிரார்த்தனை செய்கிறது.

சிசுவின் பிரார்த்தனை

பல்வேறு வகையான நித்திய ரூபங்களில் தோன்றும் பரம புருஷ பகவானிடம் நான் சரணடைகிறேன். அவர் மட்டுமே எல்லா பாவங்களி லிருந்தும் என்னைக் காத்தருள முடியும். எனது பக்தியற்ற செயல்களின் விளைவுகளால் இந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். பகவானே!  துயர்மிகுந்த ஆத்மாவாகிய நான் இந்தச் சிறையிலிருந்து எப்போது விடுதலை பெறுவேன்? பத்து மாத வயதையுடைய எனக்கு இந்த தத்துவ ஞானத்தை அளித்த உமது கருணையே கருணை. வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களின் நண்பனாகிய உமது இந்த அபார கருணைக்காக எனது நன்றியைத் தெரிவிக்க வழியில்லை. அதனால் கூப்பிய கரங்களுடன் மனதார வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

எம்பெருமானே, அளவிட முடியாத துன்பங்கள் நிறைந்த இந்தக் கருக்குழியில் இருந்து கொண்டு நான் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கின்றேன். இருப்பினும், சம்சாரமாகிய இருள்நிறைந்த பாழுங்கிணற்றில் விழ நேரிடும் என்பதால் நான் இதிலிருந்து வெளிவர விரும்பவில்லை. ஏனெனில், தேவமாயா எனப்படும் உமது வெளிப்புறச் சக்தி புதிதாக பிறந்த குழந்தையைப் பிடிக்கின்றது. இதனால் அவன் போலி அடையாளங்களில் வீழ்கிறான்.

ஆனால், மேலும் கலக்கமுறாது எனது நண்பனான புத்தியின் துணைக் கொண்டு உமது திருவடிகளை என் இதயத்திலே நிறுத்தி அதன் மூலம் இந்த சம்சாரக் கடலை நான் கடப்பேன்.”

பிறப்பு மற்றும் குழந்தைப் பருவம்

கபிலதேவர் தொடர்ந்து பேசலானார்: இவ்வாறு உறுதிபூண்டு கருக்குழியில் துதித்து நிற்கும் ஜீவன், பத்து மாதங்கள் கழிந்ததும் பிள்ளைப்பேற்றுக்கு உதவும் சூதிகா வாயுவினால் தாயின் கருப்பையிலிருந்து கீழ்நோக்கி தலைகீழாகத் தள்ளப்படுகிறது. இவ்வாறு தள்ளப்படுவதால் மூச்சின்றி, கடுந்துயரத்துடன் நினைவிழந்து, கருப்பையிலிருந்து வெளிவருகிறது.

இவ்வாறு குழந்தை மலம் மற்றும் குருதியால் பூசப்பட்டு, பூமியில் விழுகிறது, தன் அறிவை இழந்து மாயையின் பிடியில் சிக்கி அழுகிறது. பின்னர், அக்குழந்தை அதன் தேவைகளைப் புரிந்துகொள்ள இயலாத மக்களிடம் பாதுகாப்பாக தரப்படுகிறது. குழந்தை தனக்குத் தரப்படும் எதையும் மறுக்க இயலாது துன்புறுகிறது, காலப்போக்கில் விரும்பத்தகாத சூழ்நிலைகளில் விழுகிறது. மெல்லிய தோலையுடைய குழந்தையை கொசு, மூட்டைப் பூச்சி முதலியவை கடிக்க, அவன் கருப்பையில் இருந்தபோது பெற்ற அறிவை இழந்து கடுந்துயரில் வீறிட்டு அழுகிறது.

இவ்வாறு பற்பல தொல்லைகளை அனுபவித்து குழந்தைப் பருவத்தை கடந்து பிள்ளைப் பிராயத்தை அடைகிறான். அப்போது அடையவியலாத பொருட்கள்மீது ஆசை கொண்டு ஏமாற்றத்தாலும் அறியாமையாலும் வேதனையடைகிறான்.

பொய் அஹங்காரத்தின் வளர்ச்சி

உடல் வளரவளர, போலி கௌரவமும் கோபமும் அதிகரிக்கிறது. அவன் பலவிதமான சுகபோகங்களைத் தேடி அலைகிறான். அறியாமையின் காரணமாக பஞ்ச பூதங்களாலான இந்த உடலையே தானென்றும் நிலையில்லாத ஜடப்பொருட்களைத் தனதென்றும் எண்ணுகிறான்.

கர்மங்களின் பலனாக கிடைத்த இந்த உடலைக் காக்க, மறுபடியும் பல்வேறு கர்மங்களைச் செய்கிறான். இவ்வாறு கர்மங்களாலேயே கட்டுண்டு மீண்டும் மீண்டும் தொடரும் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்குகிறான். வயிற்றுக்காகவும் இன்ப சுகத்திற்காகவும் சிற்றின்ப நாட்டமுள்ள மக்களுடன் நட்பு கொண்டு பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். இதன் காரணமாக முன்புபோல மீண்டும் (சென்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டபடி) நரகத்திற்குச் செல்கிறான்.

உண்மை, தூய்மை, கருணை, ஆன்மீக அறிவுக்கூர்மை, மௌனம், வெட்கம், தவம், புகழ், மன்னிக்கும் குணம், மனக்கட்டுப்பாடு, புலன்கட்டுப்பாடு, அதிர்ஷ்டம் ஆகிய நற்குணங்கள் அனைத்தையும் தீயோரின் சங்கத்தால் இழக்கிறான்.

தன்னை உணரும் அறிவை இழந்தவன், பெண்ணின் கைப்பாவையாக இயங்குபவன் ஆகியோருடன் ஒருவன் தொடர்பு கொள்ளக்கூடாது. பெண்களுடன் அல்லது பெண்களிடம் வசப்படும் ஆண்களுடன் கொள்ளும் தொடர்பினால் ஒருவன் கட்டுண்ட வாழ்வில் முழுவதுமாக மூழ்கிப் போகிறான். பெரும் தேவர்கள்கூட பெண்களின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. பிரம்மாவால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் பெண்ணின் புற அழகினால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்.

தனது புருவ அசைவினாலேயே உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களையும் தன்பிடியில் சிக்க வைக்கும் பெண் வடிவிலுள்ள மாயையின் சக்தியைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். யோகத்தின் உயர்நிலையை அடைய விரும்பி பகவானின் தொண்டில் ஈடுபடுபவர் ஒருபோதும் மாயையின் பிரதிநிதியான பெண்ணுடன் தொடர்புகொள்ளக் கூடாது. அவளுடன் கொள்ளும் தொடர்பானது, புற்களால் மூடப்பட்ட பாழுங்கிணற்றைப் போன்று மரணத்திற்கு வழிவகுக்கும்.

புலனின்பத்திற்காக ஒருவரோடு ஒருவர் பற்றுக்கொள்ளும் வரை பெண் ஆணுக்கும், ஆண் பெண்ணிற்கும் மாயையாவர். ஆணும் பெண்ணும் கிருஷ்ணரது தொண்டில் கடமைகளைச் செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே கிருஷ்ண பக்தியுடன் இல்லறத்தார்களாகச் சேர்ந்து வாழும்பொழுது எந்த நேரத்திலும் தாழ்ந்து போவதற்கு வாய்ப்பில்லை.

உயிர்வாழியின் குறிப்பிட்ட செயலின் விளைவுகள் முடிவுக்கு வரும்போது, அது மரணம் எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வினைகள் தொடங்கும்போது, அது பிறப்பு எனப்படுகிறது.

குறிப்பு: உயிர் நம்மை விட்டுச் செல்வதே மரணம் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் நாமே அந்த உயிர் அல்லது ஆத்மா. நாம் உடலை விட்டுச் செல்வதே மரணம் எனப்படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் புது உடல்களை ஏற்பதே பிறப்பு எனப்படுகிறது.

உடலை உயிராகக் கருதுவதாலேயே அச்சம் ஏற்படுகிறது. உடலைவிடும் வேளையில் தேகாபிமானத்திலிருந்து (உடலே தான் என்ற கருத்திலிருந்து) முழுவதுமாக விடுபட்டு பகவானின் திருத்தலத்திற்குச் செல்வது எனும் குறிக்கோளுடன் செல்ல வேண்டும். இக்குறிக்கோளை அடைய பக்தித் தொண்டை போதிக்கும் தூய பக்தர்களின் செய்திகளைக் கேட்டு பயிற்சி செய்ய வேண்டும். இதுவே மண்ணுலகம் பற்றிய கவலைகளிலிருந்து விடுதலை பெற சிறந்த வழியாகும்.

முப்பத்தொன்றாம் அத்தியாயத்தின் பகுதிகள்

(1)   கருப்பை வாசம் (1-10)

கருவின் வளர்ச்சி பற்றிய விவரம்

(2)   சிசுவின் பிரார்த்தனை (11-21)

நித்திய நண்பன், பிறவிச் சக்கரத்தின் காரணம்

(3)   பிறப்பு மற்றும் குழந்தைப் பருவம் (22-28)

(4)   பொய் அஹங்காரத்தின் வளர்ச்சி (29-42)

(5)   பிறப்பு இறப்பின் உண்மை (43-48)

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment