நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

Must read

மஹாபிரபுவின் தீக்ஷை

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

அந்த திருநாமங்களை உச்சரித்து பரவசமடைந்த நிமாய், விரைவில் ஒரு வினாவுடன் ஈஸ்வர புரியிடம் திரும்பி வந்தார்: பிரபுவே! தாங்கள் எத்தகைய மந்திரத்தை எனக்கு அளித்தீர்? இஃது என்னைப் பித்தனாக்கி விட்டது. ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கும்போது, நான் சில சமயங்களில் ஆடுகிறேன், சில சமயங்களில் அழுகிறேன், சில சமயங்களில் தரையில் விழுகிறேன்.” மகிழ்ச்சியில் புன்னகைத்த ஈஸ்வர புரி பதிலளித்தார், அன்புள்ள சீடனே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினால் வாழ்வின் பக்குவநிலையை நீங்கள் அடைந்துள்ளது நன்று. இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்குக் கிருஷ்ணரின் மீதான பற்றுதல் நிச்சயம் அதிகரிக்கும்ஶீஇதுவே இந்த மஹா மந்திரத்தின் தன்மை. தொடர்ந்து உச்சரியுங்கள்! மற்றவர்களையும் உச்சரிக்கத் தூண்டுங்கள்!”

நிமாயிடம் எழுந்த மாற்றம்

அதன் பின்னர், நிமாய் தமது பாண்டித்துவத்தின் பெருமையை விட்டொழித்து கிருஷ்ண பிரேமையில் முழுமையாக மயங்கினார். நவத்வீபத்திற்குத் திரும்பும் வழி முழுவதும் ஹரே கிருஷ்ண என்று பரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தார். வேறுபட்ட நபராக வீட்டை அடைந்த நிமாய், தனது இதய தெய்வமான கிருஷ்ணரின் பிரிவினால் சில சமயங்களில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்; வேறு சில சமயங்களில் கிருஷ்ணரின் நாமங்களைப் பாடிக் கொண்டோ, அவரது வசீகரம், சிறப்பான குணங்கள், மற்றும் லீலைகளைப் பற்றி உயிரோட்டத்துடன் பேசிக் கொண்டோ இருப்பார்.

நவத்வீபத்தின் வைஷ்ணவர்களுடன் கிருஷ்ணரைப் பற்றி உரையாடுவதில் பகல் பொழுதையும், அவர்களுடன் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வதில் இரவுப் பொழுதையும் நிமாய் கழித்தார். தனது பக்தர்களைக் கவனிப்பதிலுள்ள இன்பத்தை அனுபவிப்பதற்காகவும் பொதுமக்களுக்கு உதாரணத்தை வகுப்பதற்காகவும், கௌராங்கர், வைஷ்ணவர்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார். அவ்வைஷ்ணவர்கள் கங்கையில் குளிப்பதற்குச் செல்லும்போதும் வழிபாட்டிற்காகச் செல்லும்போதும், அவர்களுடைய துணிகள், பூஜைப் பொருட்கள், சந்தனம், மற்றும் பூக்கூடைகளை நிமாய் எடுத்து வருவார்.

கௌராங்கர் கிருஷ்ண பிரேமையின் மயக்கத்தில் மேன்மேலும் மூழ்க ஆரம்பித்தார். மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பித்தனைப் போன்று பாடுவார், ஆடுவார், சிரிப்பார், அழுவார்.

நவத்வீபத்தில் மஹாபிரபு நாம ஸங்கீர்த்தனம் புரிந்து பரவசத்தில் நடனமாடுதல்

ஸங்கீர்த்தன இயக்கத்தின் தொடக்கம்

ஒருநாள், பகவான் நரசிம்மதேவரின் விக்ரஹத்தை வழிபட்டுக் கொண்டிருந்த ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டினுள் ஓடிவந்த நிமாய், ஸ்ரீவாஸரே! நீ யாரை வழிபடுகின்றாயோ அவர் தற்போது உன் முன் இருப்பதைக் கவனித்துப் பார்!” என்று கூற, தனது கண்களைத் திறந்த ஸ்ரீவாஸர், சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரை மலருடன் நான்கு கரங்களுடைய ரூபத்தில் கௌராங்கரைக் கண்டார். திகைப்புற்ற ஸ்ரீவாஸ பண்டிதர் மகிழ்ச்சியில் அழத் தொடங்கினார். நரசிம்மரை வழிபடுவதற்காக தயாரித்திருந்த உபகரணங்களைக் கொண்டு, தன்னை வழிபடுமாறு கௌராங்கர் ஸ்ரீவாஸரிடம் கேட்டார். அவ்வாறே செய்து முடித்தபின் ஸ்ரீவாஸரும் அவரது குடும்பத்தினரும் பகவானின் முன்பு விழுந்து வணங்கினர். திருப்தியுற்ற பகவான் தனது தாமரைத் திருவடிகளை அவர்களின் சிரசில் வைத்தார்.

அடுத்தபடியாக, கிருஷ்ணரின் ரூபத்தை ஸ்ரீவாஸருக்குக் காட்டிய பகவான் கௌராங்கர், ஸங்கீர்த்தன இயக்கத்தை எதிர்க்கக்கூடிய எவரைக் கண்டும் அச்சம்கொள்ள வேண்டாம். நான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் இருக்கும் காரணத்தினால் யாரும் எனது விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது. என்னால் கொடிய காட்டு விலங்குகளைக்கூட கிருஷ்ண பிரேமையினால் ஊக்குவிக்க முடியும்,” என்று அவருக்கு உறுதியளித்தார். தனது திறனை நிரூபிக்க ஸ்ரீவாஸருடைய சகோதரனின் நான்கு வயது மகள் நாராயணியை அழைத்தார்: நாராயணி! ஹரே கிருஷ்ண என்று உச்சரித்து பரவசத்தில் அழுவாயாக!” உடனடியாக தெய்வீக அன்புப் பரவசத்தினால் மயக்கமுற்ற நாராயணி, நடனமாடவும் அழவும் தொடங்கினாள். அன்று முதல் ஸ்ரீவாஸ பண்டிதரும் அவரது குடும்பமும் பகவான் சைதன்யரின் தீவிர பக்தர்களாயினர். இரவுதோறும் வீட்டில் ஸங்கீர்த்தனம் புரியத் தொடங்கினர்.

வாக்குவாதம் செய்யும் பண்டிதர்களிடமிருந்து தற்போது பேதப்படுத்தப்பட்ட கௌராங்கர், நவத்வீபத்தில் ஒரு வைஷ்ணவ மறுமலர்ச்சியை முன்னின்று நடத்த ஆரம்பித்தார். நித்யானந்த பிரபு அவரது முக்கிய உதவியாளரானார், ஸ்ரீவாஸ பண்டிதரின் வீடு அவரது தலைமையகமாக மாறியது.

அவரது முக்கிய சகாக்களும் நாம ஸங்கீர்த்தனம் புரிதல்

இருபத்தியொரு மணி நேர ஸங்கீர்த்தனம்

ஒருநாள், ஸ்ரீவாஸரின் வீட்டில் விஷ்ணுவை வழிபடுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்த கௌராங்கர், அவ்விடத்திலேயே இருபத்தியொரு மணிநேரம் இருந்தார். அப்போது அவரது பக்தர்கள், பூக்கள், துளசி, கங்கை நீர், இனிப்புகள், மற்றும் உகுந்த பொருட்களை அர்ப்பணித்து அவரை வழிபட்டனர்.

ஸ்ரீவாஸரது வீட்டு வேலைக்காரிகளில் ஒருவளான துக்கி (பொருள்: வருத்தமானவள்), பகவானின் அபிஷேகத்திற்காக களைப்பின்றி கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்தாள். அவளது பக்தியைக் கண்ட கௌராங்கர் அவளது பெயரை சுகி (பொருள்: மகிழ்ச்சியானவள்) என்று மாற்றினார். பின்னர், வெவ்வேறு யுகங்களில் பகவான் சைதன்யர் எடுத்த அவதாரங்களைப் புகழ்ந்து பக்தர்கள் திருப்பாடல்களைப் பாடினர். தனது அற்புதமான பெருமை, சக்தி, அழகு, மற்றும் ஐஸ்வர்யத்தை பக்தர்களிடம் வெளிப்படுத்திய பகவான், தனது வெவ்வேறு அவதார ரூபங்களான கிருஷ்ணர், நாராயணர், இராமர், மற்றும் இதர ரூபங்களை பக்தர்களுக்குக் காட்டினார். ஒவ்வொரு பக்தரும் எத்தகு தோற்றத்தின் மீது மிகுந்த பற்றுதலுடன் இருந்தனரோ, அத்தகு தோற்றத்தில் அவர்கள் கௌராங்கரைக் கண்டனர்.

பகவான் தனது பால்ய நண்பனான முகுந்த தத்தரை அழைக்காததைக் கண்ட பக்தர்கள் காரணத்தை வினவினர். பூரண சத்தியத்திற்கு ரூபமில்லை, நாமமில்லை, இயல்புகளில்லை, மற்றும் குணங்களில்லை என்று வீண்பிடிவாதமாக இருக்கும் அயோக்கியர்களான மாயாவாதிகளிடம், முகுந்தன் சங்கம் கொண்டுள்ளான். அவனை வரவிடாதீர்கள்,” என்று பதிலளித்தார் கௌராங்கர். இதனை வெளியிலிருந்து கேட்ட முகுந்தரின் இதயம் உடைந்துபோயிற்று. தன்னால் மீண்டும் அவரை எப்பொழுது அணுக இயலும் என்பதை பக்தர்களின் மூலமாக பகவான் சைதன்யரிடம் முகுந்தர் வினவ, கோடி பிறவிகளுக்குப் பின்னர்,” என்று பகவான் பதிலளித்தார். இது முகுந்தரிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் ஆனந்தத்தில் ஆடினார். நான் கோடி பிறவிகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்; இருப்பினும், இறுதியில் எனது மஹாபிரபுவை நான் மீண்டும் காண்பேன்,” என்று அவர் எண்ணினார். தனது தரிசனத்திற்காக இவ்வளவு பொறுமையுடன் காத்திருப்பதில் முகுந்தர் மகிழ்ச்சியுற்றதைக் கேட்ட கௌராங்கர், உடனடியாக அவரை அழைத்தார். கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்ட மனிதர்களிடம் மீண்டும் சங்கம்கொள்ளக் கூடாது என்று அவரை எச்சரித்த பகவான், அவரது அபராதங்கள் அனைத்தையும் மன்னித்தார்.

ஸ்ரீவாஸருடைய மகனின் மரணம்

ஒரு மாலைப்பொழுதில் கௌராங்கரும் அவரது பக்தர்களும் ஆனந்தத்தில் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தபோது, ஸ்ரீவாஸ பண்டிதரின் மகன் மரணமடைந்தான். எனினும், கௌராங்கருடைய பரவச நிலை சிதறாமல் இருப்பதற்காக, ஸ்ரீவாஸர் தமது குடும்பத்தினரின் அழுகையைத் தடை செய்தார். நள்ளிரவில் இவ்விபரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கௌராங்கர், உடனே தமது சகாக்களுடன் இறந்த குழந்தையைக் காணச் சென்றார். பிரிந்து போன ஆத்மா, அவ்வுடலினுள் மீண்டும் நுழைந்து தனது திடீர் மரணத்தைப் பற்றிய அற்புதங்களை விளக்கியது: நான் ஓர் ஆத்மா. பகவானின் விருப்பத்தினால் ஸ்ரீவாஸ பண்டிதரையும் மாலினி தேவியையும் எனது பெற்றோராகப் பெற்று இங்கு வந்தேன். மேலும், அதே பகவானின் விருப்பத்தினால் எனது ஆயுள் முடிவிற்கு வந்தது. தற்போது நான் வேறு உலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மஹாபிரபுவே! தயவுசெய்து நான் எங்கு பிறந்தாலும் தங்களின் நித்திய சேவகனாக இருக்கும்படி ஆசிர்வதிப்பீராக.” பலமான நாம ஸங்கீர்த்தனத்திற்கு மத்தியில் அந்த ஆத்மா அந்த உடலை விட்டுச் சென்றது. ஸ்ரீவாஸரது குடும்பத்தினரும் தங்களது ஆழ்ந்த துக்கத்திலிருந்து விடுபட்டனர்.

கௌராங்கர், ஸ்ரீவாஸ தாகூரின் மகன் மரணமடைந்ததைக் காண வருதல்

ஜகாய், மாதாய் விடுதலை

நித்யானந்த பிரபுவையும் ஹரிதாஸரையும் நவத்வீபத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அங்குள்ள ஒவ்வொருவரையும் கிருஷ்ணரை வழிபடும்படியும் அவரது திருநாமங்களை உச்சரிக்கும்படியும் அவரது போதனைகளைக் கற்கும்படியும் வேண்டிக் கேட்பதற்காக பகவான் கௌராங்கர் அனுப்புவது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில், குடிகாரர்கள், மாமிசம் உண்பவர்கள், கொடூரக் குற்றவாளிகளிலேயே மிகவும் மோசமானவர்கள் என்றெல்லாம் அவப்பேர் பெற்றிருந்த ஜகாய், மாதாய் என்ற இரு சகோதரர்களைச் சந்திக்க நேர்ந்தது. தெய்வீக கருணையின் கடலாகத் திகழும் பகவான் நித்யானந்தர், அந்த அயோக்கியர்களையும் விடுவிக்க விரும்பி கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அவர்களை வேண்டிக் கொண்டார். அதற்குப் பிரதிபலனாக, மண்பானையின் ஒரு பாகத்தை மாதாய் தூக்கியெறிய, அது நித்யானந்த பிரபுவின் தலையில் பட்டு இரத்தம் கொட்டியபோது, மாதாயைத் தடுக்க ஜகாய் முயன்றான்.

தனது உயிரைக் காட்டிலும் பிரியமான நித்யானந்த பிரபு தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டு, கௌராங்கர் கடும் கோபம் கொண்டார். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து, ஜகாய், மாதாயைக் கொல்வதற்காகத் தனது நித்திய ஆயுதமான சுதர்ஸன சக்கரத்தை அவர் அழைத்தார். பகவானின் ஆவேசத்தைக் கண்ட ஜகாய், செய்த தவறுக்காக வருந்தினான், மன்னிக்கும்படி கெஞ்சினான். ஆனால் மாதாய் அவ்வாறு செய்யாததால், நித்யானந்தர் பகவான் சைதன்யரைத் தடுக்க வேண்டியிருந்தது: எம்பெருமானே! தயவுசெய்து இவனைக் கொல்லாதீர். தாழ்ந்தவர்கள், இழிவானவர்கள், பரிதாபமான பாவிகள் என அனைவரையும் காப்பதற்காக நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நாம் ஜகாய், மாதாயை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் தாழ்ந்தவர்களைத் தூய்மைப்படுத்துபவர்கள் (பதீத பாவன) என்னும் நமது நற்பெயரை நாம் காப்பாற்றுவோம். மற்ற யுகங்களில் நாம் பல்வேறு அரக்கர்களைக் கொன்றுள்ளோம்; தற்போது இவ்விரு பாவிகளையும் விடுவிப்போமாக.”

பாவச் செயல்களை விட்டுவிட்டு இறைவனின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் இருவரையும் பகவான் கௌராங்கர் மன்னித்தார். அன்று முதல், நவத்வீபத்தின் முன்னாள் போக்கிரிகள் உயர்ந்த பக்தர்களாகப் பிரபலமடைந்தனர்.

தங்களது தவறை உணர்ந்த ஜகாய்,  மாதாய் இருவரும் மஹாபிரபுவிடம் சரணடைதல்

இஸ்லாமிய காஜியுடன் உரையாடல்

நகரம் முழுவதும் ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாகக் கூடிய மக்கள், தங்களது வீடுகளில் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபட்டனர். ஆனால் நவத்வீபத்தைச் சேர்ந்த வைதீக பிராமணர்களோ கௌராங்கரை அபாயமாகக் கருதினர். தெருக்களுக்குச் சென்று பலதரப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து கடவுளின் நாமத்தை எவ்வாறு உச்சரிக்க முடியும்? இஃது அனைத்து மதப் பழக்கங்களையும் நிச்சயமாகக் கெடுத்துவிடும்,” என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

அப்பகுதியின் நீதிபதியாகப் பொறுப்பு வகித்திருந்த இஸ்லாமிய காஜியிடம் சென்று பிராமணர்கள் புகார் கூறினர். உடனே ஸங்கீர்த்தனம் நிறுத்தப்பட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார். வலுவான கீர்த்தனம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வீட்டினுள் அவரே நுழைந்து மிருதங்கத்தை உடைத்தார். கீர்த்தனம் செய்வதை நிறுத்தாவிடில் கொடிய பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அங்கு வசிப்பவர்களிடம் எச்சரிக்கையும் விடுத்தார். தனது அடியார்களின் மனத்தளர்ச்சியைக் கண்ட நிமாய், பயப்பட வேண்டாம். இன்று மாலை நாம் மிகப்பெரிய ஸங்கீர்த்தனக் குழுவை ஏற்படுத்துவோம். எந்த காஜி நம்மை நிறுத்த முயல்வான் என்று பார்க்கலாம்,” என உறுதியளித்தார். அன்று மாலை காஜியின் வீட்டை நோக்கி நவத்வீபத்தின் தெருக்கள், சந்துகள் மற்றும் கங்கைக் கரையின் வழியாக மாபெரும் பேரணியொன்றை கௌராங்கர் நடத்திச் சென்றார். நிமாயின் அடியார்களில் சிலர் காஜியின் வீட்டையும் தோட்டத்தையும் அழிக்கத் தொடங்கினர். ஆனால் நிமாய் அவர்களைத் தடுத்து காஜியைச் சந்திக்கத் தூது அனுப்பினார்.

விரோதமான எண்ணத்துடன் தான் வரவில்லை என்று விளக்கமளித்து, காஜியை சமாதானப்படுத்திய பின்னர், நிமாய் அவருடன் நீண்ட நேரம் விவாதித்தார். நிமாய் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் பேச, காஜி குரானை விவரித்தார். இறுதியில், பசுவதை மதத்தின் உண்மையான கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை ஒப்புக் கொண்ட காஜி, நானோ எனது சந்ததியினரோ ஒருபோதும் தங்களின் ஸங்கீர்த்தன இயக்கத்திற்குத் தடையாக இருக்க மாட்டோம்,” என கௌராங்கரிடம் சத்தியம் அளித்தார். நவத்வீபத்தின் தெருக்கள் வழியாகத் திரும்பிச் சென்ற ஸங்கீர்த்தன பேரணியில் அவரும் இணைந்து கொண்டார்.

நாம ஸங்கீர்த்தனத்தை தடை செய்ததற்காக மஹாபிரபு காஜியுடன் உரையாடுதல்

சந்நியாசத்திற்கான எண்ணம்

மஹாபிரபுவின் நெருங்கிய பக்தர்களைத் தவிர, மற்றவர்கள் அவரை ஒரு சாதாரண மனிதராகக் கருதியதுடன் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தைப் பரப்புவதால் உலகிலுள்ள அனைவரையும் முக்தி பெறச் செய்யும் அவரது விருப்பத்தையும் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் சந்நியாசம் ஏற்றுக் கொண்டால் மக்கள் எனது போதனைகளை தீவிரமாக ஏற்றுக்கொள்வர். குறைந்தபட்சம் சந்நியாசிக்கு வந்தனம் செலுத்துதல் என்னும் நற்பழக்கத்தைப் பின்பற்றி, அவர்கள் என்முன் விழுந்து வணங்குவர். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாகிய என்முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதால் அவர்களும் பயனடைவர். மேலும், சந்நியாசம் எடுப்பதால், குடும்பப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு, எங்கும் பயணம் செய்து பிரச்சாரம் செய்ய தடையற்றவனாகி விடுவேன்,” என்று பகவான் சைதன்யர் கருதினார். இவ்வாறாக, சந்நியாசம் ஏற்று உலகம் முழுவதையும் காப்பாற்றத் தீர்மானித்தார் பகவான்.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது.)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives