பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 31

சென்ற இதழில் பிரசேதர்களின் செயல்களை விரிவாகக் கண்டோம். இந்த இதழில் பிரசேதர்களுக்கு நாரதர் வழங்கிய அறிவுரைகளைக் காண்போம்.

பிரசேதர்களை நாரதர் சந்தித்தல்

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும் மைந்தர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைத் துறந்தனர். பின் ஜாஜலி முனிவர் வாழ்ந்து வந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர்.

அவரது வழிகாட்டுதலின் கீழ் பிராணாயாமம் மற்றும் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆன்மீக ஞானத்தில் நிறைவுடையவர்கள் ஆயினர். அச்சமயத்தில் தேவர்களாலும் அசுரர்களாலும் வழிபடப்படுகின்ற நாரத முனிவர் வருவதைக் கண்டு அவரை வரவேற்று அவருக்கு தக்க ஆசனம் அளித்து முறைப்படி வழிபட்டனர். அவர்கள் அவரிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தனர், “மாமுனிவரே, சூரியனைப் போல் வலம் வந்து அனைத்து வகை அச்சங்களாகிய இருளை விரட்டுகின்ற தங்களை தரிசித்தது எங்களது பெரும் பேறாகும். இல்லற வாழ்வில் பெரும் பற்றுதல் கொண்டு வாழ்ந்ததால் சிவபெருமானும் பகவான் விஷ்ணுவும் அளித்த உபதேசங்களை மறந்து விட்டோம். பெளதிக வாழ்க்கை எனும் இருண்ட வாழ்வைக் கடப்பதற்கு ஞான ஒளி தந்து எங்களைக் காத்தருள வேண்டுகிறோம்.”

பகவானின் புகழ்

முழுமுதற் கடவுளைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் பரம பக்தரான நாரத முனிவர் பின்வருமாறு உரைத்தார்.

முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதாலேயே ஒருவரது பிறப்பு, செயல்கள், ஆயுள், மனம், வாக்கு ஆகியவை அனைத்தும் முழு நிறைவு பெறுகின்றன. நாகரிகம் அடைந்த மனிதன் மூன்று வகையான பிறப்பை எடுக்கிறான். தாய், தந்தை மூலம் முதல் பிறப்பு, ஆன்மீக குருவிடம் தீக்ஷை பெறுவதன் மூலம் இரண்டாம் பிறப்பு (ஸாவித்ர), மற்றும் பகவான் விஷ்ணுவை வழிப்படுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு எனும் மூன்றாம் பிறப்பு (யாஜ்ஞிக) ஆகியவை மூன்று பிறப்புகள் ஆகும். பகவானை திருப்திப்படுத்தாமல், அவரது தொண்டில் ஈடுபடாமல் இருந்தால், மேற்கூறிய அனைத்தும் பயனற்றவையே. பக்தித் தொண்டின்றி கடும் தவம், கேட்டல், பேசும் சக்தி, மனயூக சக்தி, புத்தி நுட்பம், வலிமை மற்றும் புலன்களின் சக்தி முதலியவற்றால் ஒரு பயனும் இல்லை. ஆன்மீகப் பயிற்சிகளான யோக சித்தி, துறவு, வேத கல்வி முதலியவை அனைத்தும் முழுமுதற் கடவுளை உணர்ந்துகொள்ளாத வரை பயனற்றவையே.

தன்னுணர்வு பெறுவதற்கு உண்மையான ஆதாரமாகத் திகழ்பவர் முழுமுதற் கடவுளே. மரத்தின் வேரில் நீர் ஊற்றும்பொழுது அஃது அடிமரம், கிளைகள், சிறு கிளைகள் என அனைத்து பாகங்களுக்கும் சக்தியளிக்கிறது; வயிற்றுக்கு இடப்படும் உணவு, புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்றே பக்தித் தொண்டின் மூலம் முழுமுதற் கடவுளை வணங்குவது அவரின் பாகங்களாக விளங்கும் தேவர்களையும் மற்ற எல்லா உயிர்வாழிகளையும் திருப்திப்படுத்துகிறது. உலகிலுள்ள அனைத்தும் பகவானிடமிருந்தே தோன்றி, அவரிடமே இறுதியில் அடைக்கலம் பெறுகின்றன. இப்பிரபஞ்சப் படைப்பு அவரது சக்தி என்பதால் ஒரே சமயத்தில் அவரோடு ஒன்றாகவும் வேறாகவும் இருக்கிறது. இருளும் ஒளியும் மேகமும் சிலசமயம் தோன்றவும் மறையவும் செய்கின்றன. அதுபோல் இயற்கையின் மூன்று குணங்களும் சில சமயங்களில் மாறிமாறித் தோன்றவும் மறையவும் செய்கின்றன.

நாம் பகவானுடன் தன்மையில் ஒன்றாகவும் அளவில் வேறாகவும் இருப்பதை உணர்ந்து பணிவுடன் பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும். மற்ற உயிர்வாழிகளிடம் அன்பு கொண்டு கிருஷ்ண உணர்வை போதிப்பதாலும், புலன்களைக் கட்டுப்படுத்தி கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவதாலும் அந்த பகவான் கிருஷ்ணரை திருப்திப்படுத்த முடியும்.

மரத்தின் வேருக்கு நீரூற்றுவதால் எல்லா பாகங்களுக்கும் சக்தியளிக்கப்படுகிறது. அதுபோல, கிருஷ்ணருக்கு சேவை செய்வதால் எல்லா உயிர்வாழிகளும் திருப்தியடைவர்.

பரஸ்பர உறவு

உலக ஆசைகளிலிருந்து விடுபட்ட தூய பக்தர்கள், பகவானைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி உணர்ச்சிப் பெருக்குடன் உரையாடுகின்றனர். அத்தூய பக்தர்களின் அன்புக்கட்டுக்குள் பகவான் பெரும் விருப்பத்துடன் தன்னை வைத்துக்கொள்கிறார். மேலும், அவர்களை விட்டு அவர் ஒரு கணம்கூட பிரிவதில்லை. ஜட உடைமைகள் ஏதுமின்றி, பகவானின் பக்தித் தொண்டில் முழு மகிழ்ச்சியுடன் ஈடுபடும் பக்தர்களின் மீது பகவான் மிகுந்த திருப்தியடைந்து அவர்களது செயல்களைப் பேரன்புடன் ரசிக்கிறார். கல்வி, செல்வம், குலப் பெருமை, பௌதிகத் திறமைகள் போன்ற விஷயங்களால் ஆணவமும் தற்பெருமையும் கொள்ளும் மக்கள் பக்தர்களின் உயர்‍வை அறியாமல் இழித்துரைக்கின்றனர். அத்தகையவர்களின் வழிபாட்டை பகவான் ஏற்பதில்லை. தம்மில் திருப்தியுற்றவராக இருப்பினும் பகவான் தம் பக்தர்களைச் சார்ந்திருப்பதில் ஆனந்தமடைகிறார்.

இவ்வாறாக, பகவானின் புகழையும் பக்தர்களுடன் அவருக்குள்ள உறவையும் விளக்கிய நாரதர் பிரம்ம லோகத்திற்குத் திரும்பினார். நாரதரின் விளக்கங்களைக் கேட்ட பிரசேதர்கள் முழுமுதற் கடவுளின் மீது உன்னதமான அன்பை விருத்தி செய்து கொண்டு அவரது தொண்டில் ஈடுபட்டு வைகுண்டத்திற்கு உயர்வு பெற்றனர்.

விதுரரின் பரவசம்

இதுவரை மைத்ரேயர் விதுரரிடம் பக்தர்களுக்கும் பகவானுக்கும் நடந்த பற்பல லீலைகளை விளக்கியுள்ளார்.

இவற்றையெல்லாம் கேட்ட விதுரர் தம்மை மறந்த பரவச நிலையில் கண்ணீர் பெருக்கெடுக்க தம் ஆன்மீக குருவான மைத்ரேயரின் பாத கமலங்களில் நன்றியுணர்வுடன் வீழ்ந்து வணங்கி, பின்வருமாறு பேசலானார். “மஹா யோகியே! உமது அளவற்ற கருணையாலே இந்த இருண்ட உலகத்திலிருந்து விடுதலையடையும் பாதையை அறிந்தோம். அதன்படி நடந்தால் முக்தியடைவதோடு, பகவானின் இருப்பிடத்தையும் அடையலாம்.”

அதனைத் தொடர்ந்து, மைத்ரேயரிடம் அனுமதி பெற்று பௌதிகத் தளையிலிருந்து தன் உறவினர்களைக் காப்பாற்றும் பொருட்டு விதுரர் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஸ்வாயம்புவ மனுவின் மகனான உத்தானபாதரின் சந்ததியினரைப் பற்றி நான்காம் ஸ்கந்தத்தில் பார்த்தோம். அவரது மற்றொரு மகனான பிரியவிரதரின் சந்ததியினரைப் பற்றி ஐந்தாவது ஸ்கந்தத்தில் காணலாம்.

(நான்காவது ஸ்கந்தம் நிறைவு பெற்றது)

விதுரர் தன் ஆன்மீக குருவான மைத்ரேய முனிவரிடம் பிரார்த்தித்தல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives