இயற்கையான வாழ்வும் தொழில் சார்ந்த வாழ்வும்

வழங்கியவர்: ஸவ்ய சச்சி தாஸ்

இன்றைய உலக நிலவரத்தின்படி, வளமான வாழ்க்கை என்பது தொழிற்சாலைகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அடிப்படையாக கொண்டுள்ளது. தொழில் முன்னேற்றத்தை வைத்தே வளர்ந்த நாடு, வளரும் நாடு, வளர்ச்சி குன்றிய நாடு என்று பிரிக்கப்படுகிறது. தனிமனிதனைப் பொருத்தவரையிலும் வளமான வாழ்வு என்பது, அவன் சேர்த்து வைத்திருக்கும் கார், மின்சாதன பொருட்கள், ஆடம்பரமான மாளிகை போன்றவற்றை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இத்தகைய வாழ்க்கை, மனிதர்களுக்கு சந்தோஷம், அமைதி மற்றும் சுதந்திரத்தை வழங்குவதாக எண்ணப்படுகிறது.

தற்போது இருக்கும் இந்த சூழ்நிலையினை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும்பாலான மக்கள் போக்குவரத்து தொடர்பில்லாத சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வசித்தனர். அவர்களின் வாழ்க்கை சுய தன்னிறைவு கொண்டதாகவும், விவசாயம் மற்றும் பசுப் பராமரிப்பினை அடிப்படையாக கொண்டும் இருந்தது. அந்த கிராம வாழ்க்கையில் மக்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தும் அந்த கிராமத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டது. ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாக இருந்தது, அனைத்து வேலைகளும் கிராம மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. கிராமங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையினால், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் விளையாத பொருட்கள் பண்டமாற்று முறையினால் பெறப்பட்டன,   வாழ்க்கை எளிதாக, ஆரோக்கியமாக, அமைதியாக இருந்தது.

பல்வேறு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி கிடையாது, பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது, தொழிற்சாலைகள் கிடையாது. செழிப்பான வாழ்வின் அளவுகோல், கவயா தனவான் தான்யேன தனவான், யாரிடம் பசுக்களும் தானியங்களும் இருக்கின்றனவோ, அவர்களே செல்வந்தர்கள். வளமான வாழ்வானது, இயற்கையின் கொடைகளான காய்கறிகள், பழங்கள், மலைகள், நதிகள், இரத்தினங்கள், கடல்கள் போன்றவற்றால் மேலும் செழித்தது.

தற்போதைய தொழில் முன்னேற்றம் மனிதர்களின் வாழ்வு, மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை ஒவ்வொன்றாக காணலாம்.

உணவு

நவீன கால விவசாயம் மிகக் குறைந்த ஆட்களை வைத்து மிகப்பெரிய நிலத்தில் இயந்திரத்தினால் செய்யப்படுகிறது, பூச்சிக் கொல்லிகளும் செயற்கை உரங்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. நிலங்கள் உணவு உற்பத்திக்கு மட்டுமின்றி ரப்பர், தேயிலை, புகையிலை போன்ற தொழில் சார்ந்த பணப் பயிர்களை பயிரிடவும் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்டவை தொலைவிலுள்ள நுகர்வோருக்கு வாகனங்களின் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

பழங்கால முறையில் நிலம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது, இயந்திரங்களின் தேவை இருக்கவில்லை. மாட்டுச்சாணமும் இதர இயற்கை உரங்களும் கிராமத்திலேயே கிடைத்தன. விவசாயம், பால், போக்குவரத்து போன்றவற்றிற்காக பசுக்களும் காளைகளும் வளர்க்கப்பட்டன. உற்பத்தி செய்யப்பட்டவை பெரும்பாலும் உள்ளூரிலேயே உபயோகிக்கப்பட்டன. ஆகையால், தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமும் சிக்கலான சந்தை முறைகளும் இல்லை.

தற்போது நாம், உணவு, பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்திலும் பற்றாக்குறையைச் சந்திக்கிறோம். பழமையான கிராம வாழ்க்கையில் சுத்தமான குடிநீர் போதுமான அளவு கிடைத்தது, அது விலைகொடுத்து வாங்கப்படவும் இல்லை, விற்கப்படவும் இல்லை. அதே போல பால் அதிகமாக கிடைத்ததால், அதனை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அனைவருக்கும் தூய்மையான, ஆரோக்கியமான சத்தான உணவு கிடைத்தது. தற்போது நகரத்தில் வசிக்கும் கோடீஸ்வரனுக்கும்கூட விஷக் கலப்படம் இல்லாத பழங்களோ காய்கறிகளோ கிடைப்பதில்லை.

மேலும், நவீன உணவு உற்பத்தி மற்றும் விநியோக முறையினால், ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் நடக்கும் யுத்தமும் வேலைநிறுத்தமும்கூட உணவு பொருட்களின் விலையை ஏற்றுகின்றன. அது மட்டுமின்றி, விதை முதல் பயிர் வரை அனைத்தின் விலைகளும் சில பன்னாட்டு நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. வர்த்தகம் என்பது அவர்களின் பணப் பேராசையை பூர்த்தி செய்வதாகவே உள்ளது. இதனால் பொதுமக்களுக்கான துன்பங்கள் அதிகரிக்கின்றன. செயற்கை உரங்கள் நிலத்தைப் பாழ்படுத்துகின்றன.

பழங்கால வீடுகள் சுகாதாரமானவை, நவீன வீடுகள் காற்று வசதியே இல்லாதவை.

வீடு

மக்கள் நகரங்களை நோக்கி குடிபெயர்வதால் நிலத்தின் விலை விண்ணைத் தொடுகின்றது. கட்டுமான பொருட்களின் விலையும் அதிகமாகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டால்கூட நடுத்தர வர்க்கத்தினரால் அடுக்குமாடிக் கட்டிடத்தில் சின்னஞ்சிறு  குடியிருப்பை மட்டுமே வாங்க முடிகிறது. அதில் சூரிய வெளிச்சத்திற்கோ காற்று வசதிக்கோ இடம் இருப்பதில்லை. பழமையான கிராம வாழ்வில், அனைவருக்கும் சொந்தமான வீடும் வீட்டைச் சுற்றி காலியிடமும் தோட்டமும் இருந்தன.

மின்சாரம்

கிராம வாழ்க்கையில் செயற்கையான ஒளி என்பது சில மணி நேரங்களுக்கு மட்டுமே தேவைப்பட்டது. அதுவும் பெரும்பாலும் விளக்கெண்ணையின் மூலமாக பெறப்பட்டது. தற்போதைய காலத்தைப்போல அணுமின் உலைகளும் இதர மின் உற்பத்தி சாதனங்களும் அதற்கான பாதுகாப்புகளும் தேவையில்லை. விளக்கினால் எளிமையாக பெறப்பட்ட வெளிச்சத்திற்கு பதிலாக, மாபெரும் மின்கலங்கள் இன்று தேவைப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அவை உண்மையிலேயே தேவையா என்ற கேள்வி எழுகிறது.

எரிபொருள்

எரிபொருளானது மிக எளிதாக மரங்களிலிருந்து கிடைக்கும் காய்ந்த விறகுகளின் மூலமாக செலவின்றி பெறப்பட்டு வந்தது. அது தீர்ந்துவிடுமோ என்ற கவலையும் இருக்கவில்லை. தற்போது அதே எரிபொருள் தேவையானது, மிகவும் சிக்கலான முறையில் விலை அதிகமான சிலிண்டர்கள் மற்றும் குழாய்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

போக்குவரத்து

கடவுள் கொடுத்துள்ள தானாக இயங்கும் கால்கள் நமக்குப் போதுமானவை. ஏனெனில், தொலைதூரம் பயணம் செய்து அலுவலகம் செல்ல வேண்டிய தேவை யாருக்கும் இருக்கவில்லை. அவ்வப்போது சில பொருட்களை கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகள் போதுமானவையாக இருந்தன. எனவே, நவீன கால போக்குவரத்தினால் ஏற்படும் நெருக்கடிகளும் விபத்துகளும் சுற்றுப்புற தீங்கும் கிடையாது. உறவினர்கள் அனைவரும் பெரும்பாலும் அருகருகில் வசித்ததாலும் உணவுப் பொருட்கள் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டதாலும் போக்குவரத்தின் தேவை மிகமிக குறைவாகவே இருந்தது

ஆரோக்கியம்

இன்று இருப்பது போல பலதரப்பட்ட மருத்துவ வசதிகள் அப்போது இருக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், மருத்துவத்திற்கான அவசியம் மக்களிடையே இன்று போல் அன்று இருக்கவில்லை என்பதே உண்மை. மக்கள் இயற்கையுடன் ஒத்து வாழ்ந்ததால், நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்தனர். இன்று நமக்கு புத்தம்புதிய வியாதிகளைக் கொடுக்கும் சுற்றுப்புற சுகாதார கேடு என்பது அன்று இல்லாத காரணத்தினால், இன்றைய மாபெரும் மருத்துவமனைகளுக்கான தேவையும் இருக்கவில்லை. அவ்வாறு இருப்பினும், எல்லா தரப்பட்ட வியாதிகளும் (எப்போதாவது ஏற்பட்டால்) உள்ளூரில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே  குணமாக்கப்பட்டன.

இதற்கு நேர்மாறாக, இன்று ஒவ்வொருவரும் தனது வருமானத்தின் கணிசமான பகுதியினை மருத்துவத்திற்கு செலவழிக்கின்றனர். மருத்துவத் துறையின் முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகிறோம், ஆனால் நமது வாழ்க்கை முறை விலையுயர்ந்த  மருந்துகளைச் சுற்றியே அமைந்துள்ளது என்னும் ஆரோக்கியமற்ற சூழ்நிலைக்காக வெட்கப்படுவதில்லை.

நவீன கால போக்குவரத்தின் சிக்கல்கள் ஏதும் பண்டைய கால வாழ்வில் கிடையாது.

கல்வி

அன்றைய வாழ்வில் கல்வி என்பது நன்னடத்தையைக் கற்பிப்பதற்காக இருந்தது, வாழ்வாதாரத்திற்காக அல்ல. ஆனால் தற்போது ஒருவன் கல்வி கற்காவிடில் அவனால் தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ உணவளிக்க முடியாது. முன்பு உணவு என்பது கல்வியைச் சாராமல் இருந்தது. தற்போது ஒருவன் தன் வாழ்வாதாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக, சுமார் இருபத்தைந்து வருடங்கள் பள்ளியில் செலவழிக்க வேண்டியுள்ளது. விலங்குகள்கூட உணவிற்காக இவ்வளவு கஷ்டப்படுவதில்லை. தன் கல்விக்காக கடன் வாங்குகிறான், பிறகு தன் வாழ்நாள் முழுவதும் அந்தக் கடனை அடைப்பதற்காக வேலை செய்கிறான்.

 

பாதுகாப்பு

கிராம முறையில் பிரச்சனைகள் உள்ளூரிலேயே செலவின்றி தீர்த்துக் கொள்ளப்பட்டன. தற்போது நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் வழக்குகள் நடத்தப்பட்டு, இருசாராரின் சொத்துக்களுமே செலவழிக்கப் படுகின்றன. அளவுக்கு அதிகமான பேராசை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் நிறைய திருட்டு, கொள்ளைகளும் நடக்கின்றன.

உலக அளவில் பெரும்பாலான நாடுகள் தமது நாட்டின் பெரும்பகுதி வருமானத்தை நாட்டின் பாதுகாப்பிற்காக ஒதுக்குகின்றனர். இதனால் ஒவ்வொரு குடிமகனின் மீதும் பொருளாதாரச் சுமை உள்ளது. நான் என் போர்த்திறமையால் முன்னேறுகிறேன், நீ உன் போர்த்திறமையால் முன்னேறுகிறாய், முடிவில் நாம் ஒருவரைக் கண்டு மற்றொருவர் அச்சப்படுகிறோம்.

மனித அறிவின் பயன்

சுருக்கமாக கூறினால், மனிதரின் அடிப்படைத் தேவைகள் பழங்கால கிராம முறையில் எளிதாகவும் எளிமையாகவும் நிறைவேற்றப்பட்டன. அதே சமயத்தில் கிராம வாழ்வு பிரச்சனைகளே இல்லாத வாழ்வு என்று கூற முடியாது. ஆனால் பிரச்சனைகள் குறைவாகவும் சிக்கலின்றியும் இருந்தன. இயற்கையின் நியதிப்படி, பூமியில் அனைத்து உயிர்களுக்கும் தேவையான பொருட்கள் போதுமான அளவில் உள்ளன.

புத்திவாய்ந்த மனிதனைத் தவிர, வேறெந்த உயிரினத்திலும் பொருளாதாரப் பிரச்சனைகள் கிடையாது. புத்தியற்ற மற்ற உயிரினங்கள் எளிமையாக இயற்கையின் சட்டத்தைப் பின்பற்றுகின்றன, அதனால் அவர்கள் இயற்கையாக பாதுகாக்கப்படுகின்றனர். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மேம்பட்ட அறிவானது வாழ்வின் சிக்கலை அதிகப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, உயர்ந்த சிந்தனையுடன் வாழ்வின் முக்கிய பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் வியாதியைத் தீர்ப்பதற்கானது.

தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ

ந லப்யதே யத் ப்ரமதாம் உபர்யத:

தல் லப்யதே து:கவத் அன்யத: ஸுகம்

காலேன ஸர்வத்ர கபீர-ரம்ஹஸா

“உண்மையான புத்திசாலிகளாகவும் தத்துவ பிரியர்களாகவும் இருப்பவர்கள், பிரம்ம லோகத்திலிருந்து பாதாள லோகம் வரை சுற்றித் திரிந்தாலும் அடையமுடியாத அவ்வுயர்ந்த முடிவிற்காக மட்டுமே முயல வேண்டும். துன்பங்களை நாம் விரும்பாதபோதிலும் காலப்போக்கில் அவற்றை நாம் அடைவதைப் போலவே, புலனுகர்வால் பெறப்படும் மகிழ்ச்சியும் காலப்போக்கில் தானாகவே நம்மை வந்தடையும்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.5.18)

மனிதனுடைய அறிவுத்திறன் வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அடைவதற்கு உபயோகப்படுத்தப்படாமல், இயற்கை அன்னையின் வளங்களை தன்னுடைய சுகத்திற்காக சுரண்டவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக தவறாக உபயோகப்படுத்தப்பட்ட அறிவுத் திறனே எளிமையான கிராம வாழ்விலிருந்து நகர வாழ்விற்கு மாறுவதற்கு காரணமாக இருக்கிறது.

பாரம்பரிய விளையாட்டுகளும் பொழுதுபோக்குகளும் மகிழ்ச்சியானவை, மன அழுத்தம் இல்லாதவை.

அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது

இந்த சூழ்நிலையில், அமைதி மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளான முழுமுதற் கடவுளை அறிந்துகொள்வதற்கும் வேத இலக்கியமான ஸ்ரீ ஈஷோபநிஷத் வழிகாட்டுகிறது.

 

ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம்யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன தியக்தேன புஞ்ஜீதாமா க்ருத: கஸ்ய ஸ்வித் தனம்

“இந்த பிரபஞ்சத்திலுள்ள அசையும் மற்றும் அசையாதவை அனைத்தும் கடவுளால் கட்டுப்படுத்தப்படுகின்றன, கடவுளுக்குச் சொந்தமானவை. ஒருவன் தனக்கென்று ஒதுக்கப்படுகின்ற அளவை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவை யாருக்குச் சொந்தம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.” (ஈஷோபநிஷத் 1)

இயற்கை அன்னை நமக்கு அதிகமான உணவு தானியங்கள், பால், காய்கறிகளை அளிக்கின்றாள். நாம் திரைப்படங்கள், விபசாரம், உணவகங்கள், கார்கள், இயந்திரங்கள், இறைச்சிக் கூடங்கள் என ஏன் செயற்கையாக நம் தேவையை அதிகரிக்க வேண்டும்? இவற்றினால், ஒரு சிலர் ஆடம்பர வாழ்விலும், பல்லாயிரக்கணக்கான மனிதர்களும் இலட்சக்கணக்கான விலங்குகளும் இயற்கையின் கொடையை அனுபவிக்கும் உரிமையிலிருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.

ஆகையால், நாம் இந்த சமுதாயத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் வளத்தினை நிறுவ வேண்டும் என்று விரும்பினால், மேலே குறிப்பிட்ட இயற்கையின் சட்டத்தினைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். படைக்கப்பட்ட அனைத்தும் கடவுளின் சொத்து என்பதால், அனைத்தும் கடவுளின் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஒருவன் தன் உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான அளவினை எடுத்துக்கொள்ளலாம், அதைவிட அதிகமாக அல்ல, அதை விடக் குறைவாகவும் அல்ல. ஆடம்பரத்திற்காக இயற்கை வளங்களைச் சுரண்டுவதால், அதன் எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்கின்றோம். மழையின்மை, வெள்ளம், அல்லது இயற்கைச் சீற்றங்களினால் துன்பப்படுகிறோம். ஆகையால், தொழில் முன்னேற்றமும் சுரண்ட வேண்டும் என்னும் மனிதனின் பேராசையும் இந்த அன்னை பூமியை நரகமாக்கிவிட்டன. இயற்கை வளமானது மனிதனின் தொழில்நுட்பத்தைப் பொறுத்து அமைவதில்லை, கடவுளின் அருளாலேயே கிடைக்கிறது. கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படியாமை நம்முடைய அழிவிற்கு காரணமாகிறது.

தலைவர்களுக்கு அழைப்பு

தொழில் நுட்பத்தினால் இயற்கையைச் சுரண்ட வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை ஒவ்வொரு சமுதாயத் தலைவர்களும் மாற்ற வேண்டும். இயற்கை அன்னையின் மடியிலும் கடவுளைச் சார்ந்தும் வாழக்கூடிய அறிவு சார்ந்த வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். இதை எவ்வாறு அடைவது என்பதற்கான முழுமையான வழிகாட்டுதலை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்கள் தான் எழுதிய புத்தகங்களில் குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்தின் விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் உலகம் முழுவதும் பண்ணை சார்ந்த சமுதாயத்தை உருவாக்கி, ஸ்ரீ ஈஷோபநிஷத்தில் குறிப்பிட்டுள்ளபடி எவ்வாறு வாழ்வது என்பதை விளக்கியுள்ளார். இந்த சமுதாயத்தைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிலத்திலிருந்தும் பசுக்களிடமிருந்தும் பெறுகின்றனர். இயற்கை அன்னையின் மடியிலும் கடவுளின் கருணையைச் சார்ந்தும் எளிமையான வாழ்க்கையை  வாழ்கின்றனர்.

About the Author:

ஸவ்ய-ஸாசி தாஸ் அவா்கள் பண்ணை நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளாா்.

Leave A Comment