அசைவ உணவு நியதியற்றது

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்றும், அதனால் அசைவு உணவு சாப்பிடுதல் தவறல்ல என்றும் கூறிய கிருஸ்துவ பாதிரியாருடனான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: இயேசு கிறிஸ்து “கொல்லாதிருப்பாயாக” என்று கூறியுள்ளார். பின் ஏன் கிருஸ்தவர்கள் மிருகங்களைக் கொல்வதிலும் இறைச்சியை உண்பதிலும் ஈடுபட்டுள்ளனர்?

 

கிருஸ்துவ பாதிரியார் கார்டினல் ஜியன் டேனியல்: கொலை செய்வது கிருஸ்துவ மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது உண்மையே. ஆனால் மனிதனின் உயிருக்கும் மிருகத்தின் உயிருக்கும் வேறுபாடுகள் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மனிதன் கடவுளின் உருவத்தைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளதால், அவனது உயிர் புனிதமானது. இதனால் மனிதனைக் கொல்வது பைபிளில் தடுக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், “மனிதரைக் கொல்லாதிருப்பாயாக” என்று பைபிள் கூறவில்லை. “கொல்லாதிருப்பாயாக” என்று பொதுப்படையாகவே கூறுகின்றது.

 

கார்டினல்: சாப்பிடுவதற்குத் தேவையான உணவைப் பெறுவதற்காக மிருகங்களைக் கொல்வது மனிதனுக்கு அவசியமாகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. மனிதன் பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்களை உண்ணலாம், பாலைப் பருகலாம்.

 

கார்டினல்: இறைச்சி தேவையில்லையா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. மனிதர்கள் சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டியவர்கள். புலியானது உங்களின் பழங்களை உண்ண வருவதில்லை. மிருகங்களின் இறைச்சியே அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உணவு. ஆனால் மனிதனின் உணவோ, காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், மற்றும் பால் பொருட்கள். இவ்வாறு இருக்கையில், மிருகவதை பாவமல்ல என்று நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்?

 

கார்டினல்: என்ன காரணத்திற்காகக் கொலை செய்கிறோம் என்பதைப் பொறுத்தது இஃது என்று நாங்கள் நம்புகிறோம். மிருகங்களைக் கொல்வது பசியால் வாடும் மனிதர்களுக்கு உணவளிப்பதற்காக இருக்குமெனில், அச்செயல் நியாயமாக கருதப்படுகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் பசுவை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் பசுவின் பாலைக் குடிப்பதால், அவள் நமக்கு தாய். இதை ஒப்புக் கொள்கிறீர்களா?

 

கார்டினல்: ஆம். நிச்சயமாக.

 

ஸ்ரீல பிரபுபாதர்: பசு உங்களது தாய் என்றால், அவளைக் கொல்வதை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும்? அவளிடமிருந்து பால் குடிக்கிறீர்கள்; ஆனால் அவள் வயதாகி பால் கொடுக்க இயலாமல் போகும்போது, அவளது கழுத்தை வெட்டுகிறீர்கள். இது மனிதர்கள் செய்யும் செயலா? இந்தியாவில், மாமிசம் உண்ண விரும்புவோர், ஆடு, பன்றி போன்ற சில தாழ்ந்த மிருகங்களைக் கொல்லலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், எருமையைக்கூட கொல்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் பசுவதை மிகமிகப் பெரிய பாவச் செயலாகும். கிருஷ்ண உணர்வை போதிக்கும் நாங்கள் எந்தவிதமான இறைச்சியையும் உண்ண வேண்டாம் என்று மக்களிடம் அறிவுறுத்துகிறோம். என்னுடைய சீடர்கள் இதனைக் கடுமையாகக் கடைபிடிக்கின்றனர். ஆனால், மற்றவர்கள் யாரேனும், சில குறிப்பிட்ட சூழ்நிலையில், மாமிசம் உண்ண வேண்டியிருந்தால், அவர்கள் சில கீழ்நிலை மிருகங்களின் இறைச்சியை உண்ணலாம். பசுக்களைக் கொல்லாதீர். இது மாபெரும் பாவச் செயல். மனிதன் பாவியாக இருக்கும்வரை, அவனால் கடவுளை அறிய இயலாது. மனிதர்களின் நோக்கம் கடவுளை அறிந்து, அவரை நேசிப்பதே. ஆனால் நீங்கள் பாவியாகவே இருந்தால், கடவுளை உங்களால் ஒருபோதும் அறிய இயலாது–அவர் மீது அன்பு செலுத்துவது எவ்வாறு சாத்தியம்?

 

வேறு எந்த உணவும் கிடைக்காமல், ஒருவன் பசியினால் வாடும்பொழுது வேண்டுமானால், மாமிசம் சாப்பிடலாம். அது சரியே. ஆனால் நாவை திருப்தி செய்ய கசாப்புக் கூடங்களை நடத்தி வருவது மாபெரும் பாவச் செயல். உண்மையில், கசாப்புக் கூடங்களைப் பராமரித்தல் என்னும் கொடூரமான பழக்கம் நிறுத்தப்படாத வரை, உங்களுடைய சமுதாயத்தினை மனித சமுதாயம் என்றுகூட ஏற்க முடியாது. சில சமயங்களில், மிருகவதை என்பது உயிர் வாழ்வதற்கு அவசியத் தேவையாக இருப்பின், குறைந்தபட்சம் தாய் மிருகமான பசுவை மட்டுமாவது கொல்லாமல் இருக்க வேண்டும். இது மனித இனத்திற்குரிய சாதாரண ஒழுக்கம். எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தில், நாங்கள் எந்த மிருகத்தையும் கொலை செய்ய அனுமதிப்பது இல்லை. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, “காய்கறிகள், பழங்கள், பால், மற்றும் தானியங்களை எனக்கு பக்தியுடன் அர்ப்பணியுங்கள்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். (பகவத் கீதை 9.26) நாங்கள் கிருஷ்ணரால் உண்ணப்பட்ட உணவின் மீதியான பிரசாதத்தினை மட்டுமே உட்கொள்கிறோம். மரங்கள் எங்களுக்கு பல தரப்பட்ட பழங்களைக் கொடுக்கின்றன, ஆனால் அம்மரங்கள் கொல்லப்படுவதில்லை. ஓர் உயிரினம் மற்றோர் உயிரினத்திற்கு உணவு என்பது நியதி. இருப்பினும், அதற்காக தாயைக் கொன்று உண்ணலாம் என்பதை ஏற்க முடியாது. பசுக்கள் அப்பாவிகள், சாதுவானவை; அவை நமக்கு பால் தருகின்றன. நீங்கள் அதன் பாலை எடுத்துக் கொண்டு, பின்னர் அதனை கசாப்புக் கூடத்தில் கொலை செய்கிறீர்கள். இது மிகவும் பாவகரமான செயலாகும்.

 

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, தாழ்ந்த உயிரினங்களுக்கு மனிதர்களைப் போன்ற ஆத்மா இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு மாமிச உணவினை கிருஸ்துவ மதம் அனுமதிக்கின்றது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: இது முட்டாள்தனம். முதலில், உடலுக்குள் ஆத்மா இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர், மனிதனிடம் ஆத்மா உள்ளதா, பசுவிடம் ஆத்மா இல்லையா என்பதைப் பற்றி அறியலாம். பசுவிற்கும் மனிதனுக்கும் உள்ள வெவ்வேறு தன்மைகள் யாவை? இவற்றின் தன்மைகளில் வேறுபாடுகள் இருப்பின், மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்று நாம் கூறலாம். ஆனால் மிருகங்களுக்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியான தன்மைகள் இருப்பதை நாம் பார்க்கும்போது, மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்று எவ்வாறு கூறலாம்? பொதுவான அறிகுறிகளைக் காண்போம். மிருகம் உண்கின்றது, நீங்களும் உண்கிறீர்கள்; மிருகம் உறங்குகின்றது, நீங்களும் உறங்குகிறீர்கள்; மிருகம் உடலுறவு கொள்கிறது, நீங்களும் உடலுறவு கொள்கிறீர்கள்; மிருகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது, நீங்களும் உங்களைப் பாதுகாத்துக் கொள்கிறீர்கள். இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது?

 

கார்டினல்: மிருகத்திற்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியான உயிரியல் தன்மைகள் உள்ளன என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் மிருகங்களுக்கு ஆத்மா இல்லை. ஆத்மா என்பது மனித ஆத்மா மட்டுமே என்று நாங்கள் நம்புகிறோம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஸர்வயோனிஷு, “எல்லா உயிரினங்களிலும் ஆத்மா உள்ளது,” என எங்களின் பகவத் கீதை கூறுகிறது.

 

கார்டினல்: ஆனால் மனிதனின் வாழ்க்கை புனிதமானது. மனிதர்கள் மிருகங்களைக் காட்டிலும் உயர்ந்த தளத்தில் சிந்திக்கின்றனர்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: உயர்ந்த தளம் என்பது என்ன? தனது உடலைப் பராமரிக்க மிருகம் உண்கிறது, நீங்களும் உங்களின் உடலைப் பராமரிக்க உண்கிறீர்கள். பசு வயலில் புல்லை உண்கிறது, ஆனால் மனிதர்கள் நவீன இயந்திரங்கள் நிரம்பிய கசாப்புக் கூடத்திலிருந்து வரும் இறைச்சியை உண்கிறார்கள். உங்களிடம் நவீன இயந்திரங்கள் உள்ளன, கொடூரமான காட்சியும் உள்ளது, மிருகமோ எளிமையான முறையில் புல்லை உண்கிறது. இதை வைத்து நீங்கள் மிகவும் முன்னேறிவிட்டதாகவும், உங்களுக்கு மட்டுமே ஆத்மா உள்ளது என்றும், பசுவிற்கு ஆத்மா இல்லையென்றும் நினைத்துவிடாதீர்கள். இத்தகு எண்ணம் வாதத்திற்கு ஒவ்வாததாகும். மிருகங்களிலும் மனிதர்களிலும் அடிப்படைத் தன்மைகள் ஒரே மாதிரியாக இருப்பதை நம்மால் எளிதில் காண முடிகிறது.

 

கார்டினல்: ஆனால் மனிதப் பிறவியில் மட்டுமே ஜடத்திற்கு அப்பாற்பட்ட தேடலை நாம் காண்கிறோம், வாழ்க்கையின் பொருள் என்ன என்பதைத் தேடுகிறோம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஆகவே, மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என நீங்கள் நம்புவதற்கான காரணத்தை ஜடத்திற்கு அப்பால் சென்று கண்டறியுங்கள். அதற்குப் பதிலாக, நீங்களும் மிருகத்தைப் போன்று சிந்திப்பீர்களானால், ஜடத்திற்கு அப்பாற்பட்ட தேடலின் பயன் என்ன? ஸர்வயோனிஷு கௌந்தேய, “ஒவ்வொர் உயிரினத்திலும் ஆத்மா உள்ளது” என பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். இதுவே ஜடத்திற்கு அப்பாற்பட்ட அறிவு.

மனிதன், மிருகம் என எல்லா உயிரினங்களிலும் ஆத்மா உள்ளது; மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்பது ஏற்க முடியாத வாதம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives