வட இந்தியப் பயணங்கள்

மஹாபிரபுவின் சரிதம்

சென்ற இதழில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பி அங்கே நிகழ்த்திய லீலைகளைக் கண்டோம். இந்த இதழில் அவர் மேற்கொண்ட வட இந்தியப் பயணத்தையும் அச்சமயத்தில் நிகழ்ந்த லீலைகளையும் காணலாம்.

நவத்வீப பயணம்

தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.

நவத்வீபவாசிகள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பெருமையினை அப்போது மேன்மேலும் உணர்ந்திருந்தனர். அதனால், அவரது ஸங்கீர்த்தன இயக்கத்தை எதிர்த்தவர்களும்கூட, அப்போது அவரைக் காண்பதற்காகவும் அவரது ஆசிகளைப் பெறுவதற்காகவும் அவரை அலட்சியம் செய்து அபராதம் இழைத்ததற்கு மன்னிப்புக் கோரி கெஞ்சுவதற்காகவும் படகினுள் ஏறினர். படகு ஏறக்குறைய மூழ்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் அதில் ஏறியது, வேறு சிலர் படகிற்காகக் காத்திராமல் நதியில் நீந்தி மறுகரையை அடைந்தனர். பகவான் சைதன்யர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் பெரும் திரளான மக்கள் அவரது தாமரைத் திருவடிகளில் விழுந்தனர்.

 

இஸ்லாமிய மன்னரின் சந்தேகம்

வங்காளத்தின் அப்போதைய தலைநகருக்கு அருகிலிருந்த இராமகேலியை நோக்கி கௌராங்கர் வடக்கே முன்னேறினார். மக்களும் திரளாக அவரைப் பின்தொடர்ந்தனர். ஆயிரக்கணக்கான இந்துக்களால் சூழப்பட்ட ஒரு சந்நியாசி தனது தலைநகரை நோக்கி வருவதைக் கேள்விப்பட்ட இஸ்லாமிய மன்னர் பேராச்சரியமடைந்தார், இவர் கண்டிப்பாக இறைத் தூதராக இருக்க வேண்டும். இல்லையேல் இவ்வளவு மக்களை எவ்வாறு கவர முடியும்?” இவ்வாறு எண்ணியதால், மஹாபிரபுவை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று தமது நீதிபதியிடம் அவர் கட்டளையிட்டார்.

பின்னர், மன்னர் தனது உதவியாளராகிய கேசவ சத்ரியிடம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பற்றி விசாரித்தார். மஹாபிரபுவிற்கு மன்னர் ஏதோ தீங்கிழைக்கப் போவதாக எண்ணி அச்சம் கொண்ட கேசவ சத்ரி, மஹாபிரபுவை யாத்திரை செல்லும் சாதாரண சாது என்றும், குறைவான மக்களே அவரைக் காணச் சென்றனர் என்றும் எடுத்துரைத்து விஷயத்தைத் தவிர்க்க முயற்சித்தார். ஆனால் அவரது பதிலினால் திருப்தியடையாத மன்னர் தமது நிதியமைச்சரான தபீர் காஸிடம் சந்நியாசியைப் பற்றி தனிமையான இடத்தில் கருத்து கேட்டார். அமைச்சரோ, நீங்கள் ஏன் என்னைக் கேட்கின்றீர்? உங்களது சொந்த மனதை ஆராய்வதே சிறந்தது,” என்று கூறினார். இதைக் கேட்ட மன்னரோ, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பரம புருஷ பகவான், நான் இதனை உறுதியாக நம்புகிறேன்,” என்று பதிலளித்தார்.

ரசாங்க பதவியிலிருந்து விலக நினைத்த ஸநாதனரை முஸ்லிம் மன்னர் கடும் கோபத்துடன் கண்டித்தல்

ரூப ஸநாதனரின் சரணாகதி

இப்பரிமாற்றத்திற்குப் பின்பு இல்லத்திற்குத் திரும்பிய தபிர் காஸ் பிரதம மந்திரியாக இருந்த தமது மூத்த சகோதரர் சாகர் மல்லிக்கிடம் ஆலோசனை செய்தார். இச்சகோதரர்கள் உயர்தர பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், இஸ்லாமிய அரசாங்கத்தில் பணிபுரிய கடமைப்பட்டிருந்தனர். காலப்போக்கில், இஸ்லாமிய பெயர்களையும் வழக்கங்களையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். தங்களை களங்கப்பட்டவர்களாகக் கருதிய அவர்கள், பகவான் சைதன்யரின் சங்கத்திற்கு மிகுந்த ஆவல் கொண்டனர்.

இரு சகோதரர்களும் பகவானைக் காண நள்ளிரவில் மறைமுகமாகச் சென்றனர். அடக்கத்தின் சின்னமாக புல்லைத் தங்களது வாயில் கவ்வியபடி, அவரது பாதங்களில் விழுந்தனர். தங்களது தாழ்ந்த சூழ்நிலையை விவரித்தும், மஹாபிரபுவின் காரணமற்ற கருணையை யாசித்தும் அவர்கள் பிரார்த்தனைகளை அர்ப்பணித்தனர்.

அவர்களின் பணிவான பிரார்த்தனைகளைக் கேட்ட பின்னர் மஹாபிரபு உரைத்தார், அன்புள்ள தபிர் காஸ், சாகர் மல்லிக்! நீங்கள் இருவரும் எனது நித்திய சேவகர்கள். இன்று முதல் ரூபர், ஸநாதனர் என்று அறியப்படுவீர். உண்மையில் வங்காளம் வருவதற்கு எனக்கு எந்த வேலையும் கிடையாது, உங்கள் இருவரையும் காண்பதற்காகவே இங்கு வந்தேன். தற்போது வீட்டிற்குச் செல்லுங்கள். எதைப் பற்றியும் அச்சம் வேண்டாம். கிருஷ்ணர் உங்களை விரைவில் விடுவிப்பார்.”

ரூப ஸநாதனரின் துறவு

மஹாபிரபு பெரும் கூட்டத்துடன் விருந்தாவனத்திற்குப் பயணம் செய்வது உகந்ததாக இருக்காது என்று ரூபரும் ஸநாதனரும் மரியாதையுடன் அறிவுறுத்தினர். அவர்களின் அறிவுரையை ஏற்று, மஹாபிரபுவும் தமது நிகழ்ச்சியை மாற்றியமைத்து புரிக்குத் திரும்பினார்.

ரூபரும் ஸநாதனரும் தங்களது அரசாங்க பதவிகளைத் துறந்து பகவான் சைதன்யரின் தொண்டில் முழுமையாக ஈடுபட முடிவு செய்தனர். முதலில் ரூபர் துறவு பூண்டார். அவர் தமது குடும்ப விவகாரங்களை சமாளித்து விட்டு, தமது செல்வத்தினைப் பிரித்து பாதியை பிராமணர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் வழங்கினார்; மீதியில் பாதியை உறவினர்களுக்கு வழங்கினார், மறுபாதியை தமது அவசரத் தேவைகளுக்காக வைத்துக் கொண்டார். ஸநாதனருக்குத் தேவைப்படலாம் என்று எண்ணிய அவர், பத்தாயிரம் தங்க நாணயங்களை உள்ளூர் வியாபாரியிடம் கொடுத்து விட்டு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைச் சந்திக்கப் புறப்பட்டார்.

ஸநாதன கோஸ்வாமியால் அவ்வளவு எளிதாக விலக முடியவில்லை. அலுவலக காரியங்களை நடத்துவதற்கு அவரையே நம்பியிருந்த மன்னர், அவருக்கு அனுமதியளிக்க மறுத்தார். ஸநாதனர் வலியுறுத்த, மன்னர் அவரைச் சிறைப்படுத்தினார். ஸநாதனரோ ரூபருடைய ஏழாயிரம் தங்க நாணயங்களை சிறைக் காவலருக்கு லஞ்சமாக அளித்து அங்கிருந்து தப்பினார். மலைத் தொடர்களை இரகசியமாகக் கடந்து பகவான் சைதன்யரைச் சந்திப்பதற்கு விரைவாகச் சென்றார்.

சந்திரசேகரரின் வீட்டிற்கு வந்திருந்த ஸநாதனரை மஹாபிரபு அன்புடன் அரவணைத்தல்

மஹாபிரபுவின் விருந்தாவனப் பயணம்

இதற்கு மத்தியில் புரிக்குத் திரும்பியிருந்த கௌராங்கர், முன் எப்பொழுதும் இல்லாத அளவில் விருந்தாவனம் செல்வதற்கு மீண்டும் ஏக்கம் கொண்டார். இம்முறை தனியாகச் செல்ல விரும்பிய அவர், தமது சகாக்களின் வேண்டுகோளுக்கிணங்கி பலபத்ர பட்டாசாரியர் என்ற அன்பான கற்றறிந்த பிராமணரை தமக்கு உதவியாக ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டார். இருவரும் ஓர் அதிகாலையில் எழுந்து மற்றவர்கள் பார்க்காத வண்ணம் விருந்தாவனத்தை நோக்கி முன்னேறினர். பொதுமக்களின் பாதையைத் தவிர்த்து, புலி, யானை மற்றும் இதர காட்டு விலங்குகள் நிரம்பிய பெரிய வனமான ஜார்க்கண்டின் வழியே சென்றனர்.

மஹாபிரபுவின் இனிமையான பாடல்களால் கவரப்படும் மான்கள் அவரைப் பின்தொடர்வது வழக்கம். ஒருநாள் சில புலிகளும் இக்குழுவில் இணைந்து கொண்டன. அவற்றை பகவான் சைதன்யர் ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கக் கோரியபோது, புலிகளும் மான்களும் கிருஷ்ண!” என்று உச்சரித்தன. பலபத்ரர் திகைப்புடன் கவனிக்க, அவை ஒன்றையொன்று முத்தமிட்டு கட்டியணைத்து ஆடத் தொடங்கின.

விருந்தாவன விஜயம்

காலப்போக்கில் வாரணாசியின் வழியாக, கௌரஹரி மதுராவை நோக்கி முன்னேறினார். அந்நகரத்தைக் கண்ட மாத்திரத்தில் உடனடியாக விழுந்து நமஸ்கரித்தார், மதுராவினுள் நுழைந்த பின்னர் யமுனையில் நீராடினார், கிருஷ்ணரின் ஜென்ம ஸ்தலத்திற்கு விஜயம் செய்தார், புராதனமான கேசவ விக்ரஹத்தை தரிசித்தார். அவர் மதுராவை அடைந்தபோது, அவரது பரவசம் ஆயிரம் மடங்கு அதிகமானது. மேலும், அவர் உண்மையில் விருந்தாவனத்தினுள் நுழைந்தபோது, அது இலட்சம் மடங்கு அதிகமானது. கிருஷ்ணரின் பிரிவினால் எழுந்த அன்பில் தனது மனதை முற்றிலும் மூழ்கடித்த நிலையில், விருந்தாவனத்தின் பன்னிரெண்டு காடுகளுக்கு மத்தியில் மஹாபிரபு நடந்து சென்றார்.

ஒருநாள் யமுனைக் கரையில் அமர்ந்திருந்த பகவான், திடீரென்று நதியினுள் குதித்தார். பலபத்ரர் அவரை வெளியே இழுத்துவரும் வரை அவர் நீரினுள் இருந்தார். கௌராங்கர் விருந்தாவனத்தினுள் தனியாகச் செல்லும்போது இதுபோன்ற விபத்துகள் நடக்கலாம் என்பதால் அச்சம் கொண்ட பலபத்ரர், அவரை பிரயாகைக்கு அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவித்தார். தமது சேவகனை கவலையில் ஆழ்த்த விரும்பாத மஹாபிரபு அங்கிருந்து புறப்பட ஒப்புக் கொண்டார்.

(மஹாபிரபுவின் விருந்தாவனப் பயணத்தினை விரிவாக அறிய ஆகஸ்ட் 2017 பகவத் தரிசனத்தின் கட்டுரையைப் படிக்கவும்.)

பிரயாகையில் ரூப கோஸ்வாமிக்கு உபதேசம்

பிரயாகையில் திரிவேணிக்கு அருகிலுள்ள பகவான் விஷ்ணுவின் பிரபலமான பிந்து மாதவரின் கோயிலுக்கு மஹாபிரபு தினமும் சென்றார். ரூப கோஸ்வாமியும் அவரது இளைய சகோதரரான அனுபமரும் பிரயாகையை அடைந்தபொழுது, பிந்து மாதவரின் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த வழியில் கௌராங்கரைக் கண்டனர், சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர். பகவானும் அவர்களை வரவேற்று அணைத்துக் கொண்டார்.

பிரயாகையின் கங்கைக் கரையில் ஓர் அமைதியான இடத்தில், பகவான் சைதன்யர் ரூப கோஸ்வாமிக்கு பத்து நாள்கள் கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தை உபதேசித்தார். கிருஷ்ணரைப் பற்றி அதிகாரபூர்வமான முறையில் எழுதுவதற்குத் தேவையான ஆன்மீக சக்தியை ரூப கோஸ்வாமிக்கு வழங்கிய பின்னர், சைதன்ய மஹாபிரபு வாரணாசிக்கு கிளம்பத் தயாரானார். இறைவனின் பிரிவைத் தாங்கவியலாத ரூப கோஸ்வாமி அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதி கேட்டார், ஆனால் கௌராங்கரோ அதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் புரியில் சந்திக்கலாம் என்று கூறி விட்டு, அவர் ரூப கோஸ்வாமியை அரவணைத்து படகில் ஏற, மூர்ச்சையடைந்த ரூப கோஸ்வாமி அவ்விடத்திலேயே விழுந்தார். சிறிது நேரம் கழித்து, அவரும் அவரது சகோதரர் அனுபமரும் விருந்தாவனத்திற்குப் புறப்பட்டனர்.

காசியில் ஸநாதனரைச் சந்தித்தல்

மஹாபிரபு வாரணாசியை (காசியை) அடைவதற்கு முந்தைய நாள் இரவில், சந்திரசேகரர் என்பவர் மஹாபிரபு தமது இல்லத்திற்கு வருவதாகக் கனவு கண்டார். அதனால், மறுநாள் அதிகாலையிலேயே அவர் கௌராங்கரைச் சந்திப்பதற்காக நகரின் வாயிலிற்குச் சென்றார். சந்திரசேகரர் சூத்திர ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது இல்லத்தில் தங்குவதற்கு பகவான் ஒப்புக் கொண்டார். பக்தி என்பது ஜாதிக் கருத்துகளுக்கு உட்பட்டதல்ல என்பதை பகவான் சைதன்யர் மெய்ப்பித்துக் காட்ட விரும்பினார்.

ஒருநாள் சந்திரசேகரரின் இல்லத்தில் அமர்ந்திருந்த பகவான் சைதன்யர், வெளியில் வைஷ்ணவர் ஒருவர் காத்துக் கொண்டுள்ளார். அவரை உள்ளே அழைத்து வாரும்,” என்று திடீரென்று உறுதிபட உரைத்தார். வெளியில் சென்ற சந்திரசேகரர், தாடியுடன் கூடிய அழுக்கான தோற்றத்தில் ஓர் இஸ்லாமிய துறவியை மட்டுமே கண்டார். வாயிலில் எந்த வைஷ்ணவரும் இல்லை,” என்று சந்திரசேகரர் தெரிவிக்க, அங்கு ஒருவர்கூட இல்லையா?” என்று பகவான் சைதன்யர் வினவினார். ஆம், ஒரு முஸ்லீம் ஃபகீர் உள்ளார்,” என்பதைக் கேட்ட பகவான் சைதன்யர், வீட்டைவிட்டு வெளியே ஓடி அத்துறவியைக் கட்டித் தழுவினார். இருவரும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியதை சந்திரசேகரர் மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்கினார். வெளித் தோற்றத்தில் ஃபகீராக தோன்றியவர், வங்காளத்தின் இஸ்லாமிய மன்னரின் சிறைக் காவலிலிருந்து மாறுவேடத்தில் தப்பியோடி வந்த ஸநாதன கோஸ்வாமியைத் தவிர வேறு யாரும் அல்ல.

மாயாவாதி சந்நியாசிகளை வென்ற பின்னர், மஹாபிரபு அவர்களையும் கீர்த்தனத்தில் மூழ்கடித்தல்

ஸநாதன கோஸ்வாமிக்கு உபதேசங்கள்

பகவான் சைதன்யர் மேலும் இரண்டு மாதங்களை வாரணாசியில் செலவிட்டு, பக்தித் தொண்டின் விஞ்ஞானத்தை ஸநாதன கோஸ்வாமிக்கு எடுத்துரைத்தார்; மேலும், வேத அறிவின் ஆழமான உயர்ந்த உண்மைகளால் அவருக்கு அறிவொளியூட்டினார். கிருஷ்ணரின் நித்தியத் தொண்டன் என்னும் ஜீவனின் உண்மை நிலை, பிரம்மன், பரமாத்மா, பகவான் ஆகிய பரம்பொருளின் மூன்று நிலைகள், ஜட, ஆன்மீக உலகங்களின் இயற்கை, முழுமையான தன்னுணர்வு பெற்ற ஆத்மாவின் குணநலன்கள் ஆகியவற்றை அவர் விவரித்தார். தத்துவக் கற்பனை மற்றும் யோக சித்திகளின் பாதைகளைக் காட்டிலும் பக்தியின் உயர்நிலை, பரம புருஷ பகவானின் பல்வேறு உருவங்கள் மற்றும் விரிவுகள், ஜடவுலகில் அவரது அவதாரங்கள், மற்றும் பக்தி சேவைக்கான வழிமுறையையும் அவர் விவரித்தார். இனிமையிலும் மேன்மையிலும் சமுத்திரத்தைப் போன்று விளங்கிய பகவானின் அந்த போதனைகள் ஸநாதன கோஸ்வாமியின் மனதை மூழ்கடித்தன.

மாயாவாதிகளுடன் வாதம்

பொதுமக்களுக்கு மத்தியில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்து நடனமாடிய மஹாபிரபுவின் செயல், வாரணாசியின் பல்வேறு சந்நியாசிகளை திகைப்படையச் செய்தது. பகவான் சைதன்யரின் ஸங்கீர்த்தனம் ஒரு சந்நியாசிக்கு உகந்ததல்ல என்று நிந்திக்கும் அளவிற்கு அந்த மாயாவாதிகள் தைரியம் கொண்டிருந்தனர். ஆனால் மஹாபிரபு அவர்களைக் கண்டு கொள்ளவில்லை, அவர்களது சங்கத்தினைத் தவிர்த்து பாடுவதையும் ஆடுவதையும் தொடர்ந்தார்.

ஒருநாள், வாரணாசியிலுள்ள அனைத்து சந்நியாசிகளையும் மஹாபிரபுவுடன் இணைந்து மதிய உணவை ஏற்றுக்கொள்ள அழைக்கலாம் என்று மஹாபிரபுவின் பக்தரான மராட்டிய பிராமணர் முடிவு செய்தார். பிராமணரின் உள்நோக்கத்தையும் தனது பக்தர்களின் துயரையும் உணர்ந்த கௌராங்கர் அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டார்.

மறுநாள், பகவான் சைதன்யர் அப்பிராமணரின் இல்லத்தினுள் நுழைந்தபோது, மாயாவாத சந்நியாசிகள் அனைவரும் அவருக்கு முன்பாகவே உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் மஹாபிரபு வழக்கம் போல தனது பாதங்களைக் கழுவினார். பின்னர், மக்கள் பாதங்களைக் கழுவும் அதே இடத்தில் அவர் அமர்ந்தார். 60,000 சீடர்களைக் கொண்டிருந்த மாயாவாதிகளின் தலைவரான பிரகாசானந்த சரஸ்வதி, கௌராங்கரின் அடக்கத்தைப் பாராட்டி அவரது கரங்களைப் பிடித்து அவரை இதர சந்நியாசிகளுடன் அமர்வதற்கு அழைத்துச் சென்றார். பின்னர், பகவான் சைதன்யர் தனது திருமேனியின் பிரகாசத்தினை வெளிப்படுத்த, அவர் பரம புருஷ பகவான் என்பதை அது தெளிவாக வெளிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வாத பிரதிவாதங்களில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் அவசியம், அதன் உயர்வான நிலை, வேதாந்தத்தின் உண்மையான அர்த்தம் முதலியவற்றை எடுத்துரைக்க, அந்த மாயாவாதிகள் அனைவரும் அவருடைய தாமரைத் திருவடிகளில் சரணடைந்தனர். பகவானும் அவர்களை மன்னித்து, ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)

அடுத்த இதழில், புரியில் பக்தர்களுடனான லீலைகள்

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment