வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

இன்றைய மனித சமுதாயத்திலுள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நிலைகளில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் யாராவது ஒருவரை அல்லது பலரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. ஆனால் எவரும் என்றும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை. யாரைச் சார்ந்து வாழ்வதால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும் என்பதையும், அதற்கான வழிமுறையையும் காண்போம்.

நமது உலக வாழ்விற்கான காரணம்

உண்மையில் நாம் அனைவரும் பகவானுடைய நித்தியமான ஆன்மீக உலகில் பகவானுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தவர்களே, ஆனால் மிகவும் துர்பாக்கியமானச் சூழ்நிலையின் காரணமாக இந்த துக்கமான பௌதிக உலகில் வீழ்ந்துள்ளோம். நாம் இந்த உலகிற்கு வந்து எத்தனை கோடி வருடங்கள் ஆகிறது என்பதை அறியோம். ஆனால் நாம் இங்கே வந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தோமானால், அதற்கான விடை இரண்டு விஷயங்களே: (1) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது துவேஷ மனப்பான்மை, (2) பகவான் மட்டும் அனுபவிக்க வேண்டுமா, நானும் அனுபவித்தால் என்ன என்ற மனப்பான்மை. இவையே நாம் பௌதிக உலகில் வீழ்வதற்கான மிக முக்கிய காரணங்களாகும். தனியாக அனுபவிப்பதற்கான இச்சை, கிருஷ்ணரின் மீதான துவேஷம் இவற்றினால் மயங்கி, எல்லா உயிர்வாழிகளும் இவ்வுலகில் மிகுந்த குழப்பத்துடன் பிறந்துள்ளனர் என்று பகவத் கீதை (7.27) கூறுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (15.7) ஜீவன்கள் அனைவரும் தம்முடைய அம்சங்கள் என்று கூறுகிறார் (மமைவாம்ஷே ஜீவலோகே). அதன் அடிப்படையில் நாம் அனைவரும் கிருஷ்ணரின் புதல்வர்கள், புதல்வர்கள் ஜடவுலக வாழ்வை விரும்பும்போது தந்தையான அவர் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார், பௌதிக உலகைப் படைக்கின்றார். ஜீவனானவன் தன்னுடைய கர்மத்தின் அடிப்படையில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றான். பல கோடிப் பிறவிகளில் நாம் பல்வேறு பாவங்களையும் புண்ணியங்களையும் செய்துள்ளோம், அந்த பாவத்தின் பலன்களை துன்பங்களாகவும் புண்ணியத்தின் பலன்களை இன்பங்களாகவும் அனுபவிக்கின்றோம்.

சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல்

தந்தையின் குணங்கள் மகனிடம் இருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். அதுபோலவே நாம் அனைவரும் பகவானின் பிள்ளைகள் என்பதால், நமக்கும் அவரைப் போன்ற குணங்களும் சுபாவங்களும் உள்ளன. ஆயினும், பரமாத்மா என்ற முறையில் பகவான் அளவில் மிகப் பெரியவராகவும் ஜீவாத்மா என்ற முறையில் நாம் மிகச் சிறியவர்களாகவும் உள்ளோம். எனவே, பகவானிடம் உள்ள சுதந்திரம் என்னும் தன்மை நம்மிடமும் உள்ளது; ஆனால் அவரது சுதந்திரம் பூரணமானது, நமது சுதந்திரம் வரம்பிற்கு உட்பட்டது.

நம்முடைய சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதன் விளைவால் நாம் இந்த பௌதிக உலகில் வாழ்கிறோம். சாலையில் தந்தையுடன் நடக்கும் குழந்தைக்குத் தந்தையின் சொல்படி நடப்பதே சிறந்தது. குழந்தை தனது விருப்பப்படி நடக்க விரும்பினால் விபத்திற்கு ஆளாவது நிச்சயம். அதுபோல, ஜீவன் தன்னுடைய நித்தியமான தந்தை கிருஷ்ணரின் பேச்சைக் கேட்காததன் விளைவாகவே நாம் இங்கே துன்புறுகிறோம். நாம் நம்மை எப்போதும் புத்திசாலிகளாக நினைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம், நான் ஏன் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்?” இவ்வாறு நினைப்பதே மாயையாகும்.

பலரும் வினவுவதுண்டு, ஏன் கிருஷ்ணர் எங்களை இப்படி கஷ்டப்பட வைக்கின்றார்? அவர் எங்களை ஏன் பக்தர்களாக மாற்றவில்லை?” ஆனால் கிருஷ்ணர் ஜீவனுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை. தன்னிடம் சரணடையுமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். அந்த அழைப்பை ஏற்று சரணடைவதும் மறுப்பதும் ஜீவனின் சுதந்திரம். சரணடைய மறுக்கும் ஜீவன்களுக்கு அவர்களுடைய கர்மத்தின் அடிப்படையில் இன்ப துன்பங்களை வழங்கும்படி அவர் தம்முடைய வெளிப்புற சக்தியான மாயைக்கு உத்தரவிடுகின்றார்.

இருப்பினும், மாயையின் ஆட்சிக்கு உட்பட்ட இவ்வுலகத்தினை து:காலயம் அஷாஷ்வதம் (துன்பகரமானது, தற்காலிகமானது) என்று கீதையில் கிருஷ்ணர் வர்ணிக்கின்றார். நம் அனைவரையும் இந்த பௌதிக உலகத்தை விட்டு சொந்த இருப்பிடமான ஆன்மீக உலகத்திற்கு வருமாறு அவர் அழைக்கின்றார்.

 

சாலையில் நடக்கும் குழந்தையானது தந்தையின் சொல்படி நடப்பதே சிறந்தது. அதுபோல, ஜீவன்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்து வாழ்வதே சிறந்தது.

நாம் சுதந்திரமானவர்கள் அல்ல

ஜீவனின் சுதந்திரம் வரம்பிற்கு உட்பட்டது. அவன் தனது சுதந்திரத்தை கிருஷ்ணரைத் தேர்ந்தெடுப்பதற்கும் மாயையைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்த முடியும். அதாவது, நாம் நம் சுதந்திரத்தை யாரேனும் ஒருவரிடம் ஒப்படைத்தாக வேண்டும்ஶீகிருஷ்ணரிடம் ஒப்படைப்போர் ஆன்மீக உலகிலும் மாயையிடம் ஒப்படைப்போர் பௌதிக உலகிலும் வாழ்கின்றனர். இந்த இரண்டு நிலையிலுமே ஜீவனின் சுதந்திரம் வரம்பிற்குட்பட்டதே.

ஆயினும், கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அன்புத் தொண்டாற்றுவதே ஜீவனின் இயற்கையான நிலையாக அமையும். அந்நிலையானது சுதந்திர நாட்டில் அரசாங்கத்தின் சட்டங்களைப் பின்பற்றும் குடிமகனைப் போன்றதாகும். மாயையின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது சிறைச்சாலையினுள் வசிப்பதைப் போன்றதாகும். நாம் அனைவரும் ஜடவுலகில் வாழ்வதால், நமது வாழ்க்கை சிறை வாழ்க்கையைப் போன்றதே.

துரதிர்ஷ்டவசமாக, இங்குள்ள ஒவ்வொரு ஜீவனும், நான் சுதந்திரமானவன்” என்று எண்ணிக் கொண்டுள்ளனர். உண்மையில் நாம் அனைவருமே யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டியுள்ளது. ஒரு முதலாளி தன்னுடைய தொழிலாளிகளையும், ஒரு தொழிலாளி தனது முதலாளியையும் சார்ந்துள்ளான்; கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சார்ந்துள்ளார்கள். இப்படி அனைவருமே யாராவது ஒருவரைச் சார்ந்துதான் வாழ வேண்டியுள்ளது. இதுவே இயற்கையின் நியதியாகும். யாருக்காவது சேவை செய்து கொண்டிருப்பதே நம்முடைய நித்தியமான தர்மமாகும். ஆனால் யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அறியாமல் இருப்பதால் துன்புறுகிறோம்.

உடலை கவனித்து ஆத்மாவை கவனிக்காமல் இருப்பது, கூண்டை மட்டும் கவனித்து கிளியைக் கவனிக்காமல் இருப்பதைப் போன்றதாகும்.

அறியாமையின் உச்சகட்டம்

நாம் இந்த உடல் அல்ல, நித்தியமான ஆத்மா என்பதை கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் விளக்கியுள்ளார். ஆனால் இன்றைய சமுதாயத்திலுள்ள மக்களோ மிருகங்களைப் போல தான் உடல் என்று நினைத்துக்கொண்டு, இரவுபகலாக உழைத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களால் உருவான இந்த உடலைப் பராமரிப்பதற்காக பலவித சிரமங்களை ஜீவன் ஏற்கின்றான். ஆனால் உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்த உணவையும் அளிப்பதில்லை.

கூண்டிற்குள் இருக்கும் கிளியைப் பராமரிக்காமல் கூண்டை மட்டும் பராமரித்தல் சரியல்ல. காரை நன்கு பராமரித்து ஓட்டுநரைக் கவனிக்காமல் கைவிடுதல் சரியல்ல. அதுபோல, உடலை நன்றாக பராமரித்து ஆத்மாவைக் கண்டுகொள்ளாமல் விடுதல் சரியல்ல. ஆனால் உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அதையே செய்கின்றனர். அழியக்கூடிய உடலின் பராமரிப்பில் அவ்வாறு ஈடுபடுவதே அறியாமையின் உச்சகட்டமாகும்.

சரணடைய மறுக்கும் அயோக்கியர்கள்

நான்கு விதமான நல்லோர் தன்னை வழிபடுகிறார்கள் என்றும், நான்கு விதமான தீயோர் தன்னை வழிபட மறுக்கிறார்கள் என்றும் கீதையில் பகவான் கூறுகிறார். (பகவத் கீதை 7.15-16) எப்படி அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தினை மதிக்காதவர்களுக்காக சிறைச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளதோ, அதுபோல பகவானால் இயற்றப்பட்ட சட்டதிட்டங்களை மதிக்காத நபர்கள் இந்த பௌதிக உலகம் என்னும் சிறைச்சாலையில் துன்பப்படுவது நிச்சயம்.

பகவான் கிருஷ்ணர் கீதையில் தம்மிடம் சரணடையாத நபர்களை மூடர்கள் என்று குறிப்பிடுகிறார். ஏனெனில்,–அவர்கள் வாழ்வின் மிக முக்கியத் தேவையைப் புறக்கணிக்கின்றனர். கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களும் அவர் வழி வருபவர்களும் உரைப்பது வழக்கம். ஒருமுறை அமெரிக்காவில் ஸ்ரீல பிரபுபாதரிடம் வந்த ஒரு விருந்தினர் வினா எழுப்பினார், உங்களுடைய சீடர்கள் இங்கிருக்கும் மிகப்பெரிய நபர்களையும் ’மூடர்கள், அயோக்கியர்கள் என்று கூறுகின்றனர். ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்று நான் அவர்களிடம் வினவினேன். அவர்கள் ’எங்களுடைய குரு கிருஷ்ணரிடம் சரணடையாத நபர்களை இப்படித்தான் கூறுவார் என்று பதிலளித்தனர். இவ்வாறு அழைப்பதற்கு காரணம் என்னவோ?” அதற்கு ஸ்ரீல பிரபுபாதர், நான் அவர்களை அவ்வாறு கூறுவதற்கு பகவத் கீதையில் கிருஷ்ணர் அவ்வாறு சொல்லியிருப்பதே காரணம். வேண்டுமென்றால் பகவத் கீதையின் மீதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதும் குற்றம் சொல்லுங்கள்,” என்றார். மேலும், கிருஷ்ணரிடம் சரணடையாத அனைவரும்ஶீசமுதாயத்தின் மிகவுயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும்ஶீ

மூடர்களும் அயோக்கியர்களுமே என்று ஸ்ரீல பிரபுபாதர் பலமுறை ஆணித்தரமாக கூறியுள்ளார். கிருஷ்ணரிடம் பக்தியில்லா நபர்களிடம் எந்தவிதமான நற்குணங்களும் இருப்பதில்லை என்று ஸ்ரீமத் பாகவதமும் தெளிவாகக் கூறுகிறது.

 

நான்கு விதமான நல்லோர் கிருஷ்ணரிடம் சரணடைகின்றனர், நான்கு விதமான
தீயோர் சரணடைவதில்லை.

கீதையின் சரணாகதி தத்துவம்

பகவத் கீதையில் (18.66) பகவான் கிருஷ்ணர், எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டும் சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே,” என்கிறார். அவ்வாறு கிருஷ்ணரிடம் சரணடைந்தால் நம்முடைய மொத்த பாவங்களும் முற்றிலுமாக எரிக்கப்பட்டுவிடும். பாவங்களிலிருந்து விடுபட கடின முயற்சிகள் அவசியமில்லை. அனைத்து ஜீவராசிகளின் உன்னதமான இரட்சகர் கிருஷ்ணரே என்பதை எந்தவித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்புடனும் நம்பிக்கையுடனும் அவரிடம் சரணடைய வேண்டும்.

சரணடைதல் என்றால், (1) பகவானுடைய பக்தித் தொண்டிற்கு சாதகமான விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒருவன் தன்னுடைய நிலைக்கு ஏற்ற குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றலாம். இருப்பினும், அவனது கடமைகள் கிருஷ்ண உணர்விற்கு சாதகமாக இருந்து அவன் கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வரவில்லையென்றால், அவனது அனைத்து செயல்களும் வீணாகிவிடுகின்றன. எனவே. சாதகமான செயல்களை ஏற்க வேண்டும். (2) கிருஷ்ண உணர்வின் பக்குவநிலைக்கு ஒருவனைக் கொண்டு செல்லாத செயல்களைப் புறக்கணிக்க வேண்டும். (3) எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார். (4) தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் நினைக்க வேண்டும். (5) பணிவான மனோநிலையில் வாழ வேண்டும் (6) கிருஷ்ணரிடம் தன்னை முற்றிலுமாக ஒப்படைக்க வேண்டும்.

கிருஷ்ணரிடம் சரணடைவதற்குப் பல்வேறு விதமான யோகங்களும் தியானங்களும் அவசியமில்லை. கிருஷ்ணரிடம் எளிமையாக சரணடைதல் தேவையற்ற கால விரயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

கிருஷ்ணரிடம் சரணடைதல் என்னும் வழிமுறை மிகவும் எளிமையானது.

முழுமையான சரணாகதி

ஒருவன் எந்த ஆசையும் இல்லாதவனாக, எல்லா ஆசையும் உடையவனாக, முக்தியை விரும்புபவனாக என்று எவ்வாறு இருந்தாலும், அவன் பக்குவத்தின் உன்னத நிலையான கிருஷ்ண உணர்வை அடைவதற்காக, எல்லா முயற்சிகளுடன் பரம புருஷ பகவானை வழிபட வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதம் (2.3.10) கூறுகிறது. அத்தகு தீவிரமான பக்தி அவனைத் தூய்மைப்படுத்தி விடும்.

நம்முடைய புலன்களைக் கொண்டு புலன்களின் அதிபதியான ரிஷிகேசரை திருப்திப்படுத்துவதே உண்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்போது நம்முடைய ஜடப் புலன்களும் தூய்மையடையும். நாம் பகவானை நோக்கி ஓர் அடி வைப்பதன் மூலம் அவர் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைக்கின்றார். ஆனால் நாம் அந்த ஓர் அடியை பகவானை நோக்கி வைப்பதற்கு அவ்வளவு தயக்கம் கொள்கின்றோம்.

எல்லா தயக்கத்தையும் கைவிட்டு பகவான் கிருஷ்ணரை சரணடைந்து அவரது முழு கருணைக்கு பாத்திரராகி ஆன்மீக உலகை அடைவோமாக.