வழங்கியவர்: பரத் தாஸ்

சேலம் மாநகருக்கு அருகே எழில் சூழ்ந்த கல்வராயன் மலையில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்த சமுதாயம் தற்போது வளர்ந்து வருகிறது. பஞ்சவடி பண்ணை” என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்விடத்தில் வருடம் முழுவதும் (குறிப்பாக கோடையில்) நிலவும் இனிய தட்பவெப்பம் இங்கு வசிப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழ்நாட்டின் வெப்பத்திலிருந்து விடுதலையளிக்கிறது.

இத்திட்டம் துவங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளே நிறைந்திருப்பினும், வேத வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கற்றுத்தரும் இடமாக இன்று பஞ்சவடி பண்ணை உருவெடுத்துள்ளது. நகர வாழ்வின் தொல்லைகளின்றி எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை” எனும் வாழ்வை எய்துவதற்கு இவ்விடம் உதவுகிறது.

இங்கு தங்கும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான நிலமும் இடமும் வழங்கப்பட்டு, அவர்கள் அந்நிலத்தில் வேலை செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, இந்த சமுதாயத்தில் இணைபவர்களுக்கு இதுபோன்று வாழ வேண்டும்” என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், தேவையான நிலமும் பயிற்சியும் பண்ணையின் நிர்வாகத்தினால் எவ்வித பௌதிக எதிர்பார்ப்புமின்றி வழங்கப்படுகிறது.

இங்குள்ள பக்தர்கள் அனைவரும் இஸ்கான் கோயில்களில் வாழும் பக்தர்களைப் போன்றே அதிகாலையில் எழுந்து, மங்கள ஆரத்தி முதலிய தீவிர ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். விவசாயப் பணிக்கு உகந்தாற் போல, காலை நிகழ்ச்சிகளில் சில மாறுதல்கள் உள்ளன. இங்கு வழங்கப்படும் ஆன்மீகப் பயிற்சியே இவர்களது பக்தி வாழ்க்கையில் ஆர்வத்தையும், எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை” என்ற கொள்கையை அடைவதற்கான உத்வேகத்தையும் வழங்குகிறது.

பஞ்சவடி பண்ணையிலுள்ள வீடுகளின் முகப்புத் தோற்றம்

நவீன நகரவாசிகளின் மனநிலை

நகரவாசிகள் எளிய வாழ்வு” எனும் கருத்து முட்டாள்தனமானது என்றும், வாழ்வில் எதையும் சாதிக்க இயலாத மக்களுக்கானது என்றும் கூறுகின்றனர், கிராமவாசிகளில் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். புலனின்பத்தையே வாழ்வின் நோக்கமாகக் கொண்ட இவர்கள் நகரங்களில் புலனின்பத்திற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் நகர வாழ்வை வரவேற்கின்றனர். ஆனால் இந்த தற்காலிக புலனின்பத்திற்காக பெரும் விலையை வழங்க வேண்டியுள்ளது என்பதை ஏனோ இவர்கள் அறிய மறுக்கின்றனர். ஒருவன் புலனின்பத்திற்காக தனது நேரம், ஆரோக்கியம், செல்வம், மன சக்தி என அனைத்தையும் விலையாகச் செலவிடுகிறான். தேவைக்கு மீறிய இந்த வாழ்க்கை முறை, நமது தற்கால பேராசைக்குத் தீனி போடுவதற்காக எதிர்கால சந்ததியினருக்கான இயற்கை வளங்களைச் சுரண்டவும் செய்கிறது. மேலும், இது பகவான் கிருஷ்ணரின் கட்டளைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

தற்கால உலகில் வாழும் ஒவ்வொருவரும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என பெயரளவிலான பல்வேறு கல்விக்கூடங்களில் கற்க வேண்டியுள்ளது. இந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக்கூடம் அல்லது தொழிற்சாலையைப் போன்று செயல்படுவதை எந்தவொரு நேர்மையான மனிதனும் ஒப்புக்கொள்வான். ஏனெனில், தனிமனித திறமை, தேவை முதலியவற்றைக் கருத்தில்கொள்ளாது, இக்கல்விமுறை ஒரே அளவான அணுகுமுறையை அனைவரிடமும் முன்வைக்கின்றது. இது வாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது. இதன் விளைவாக, எல்லா குழந்தைகளும் தன் தேவை, திறமை முதலியவற்றைப் பற்றி சிறிதும் அறியாமல், எல்லாருக்கும் பொதுவான தேர்வில் பங்கு பெற வேண்டியுள்ளது. அத்தேர்வே குழந்தையின் வாழ்வை முடிவுசெய்யும் விதியாகவும் இருக்கிறது.

மேஜையில் அமர்ந்து வெள்ளைக் காலருடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை இக்கல்விமுறை அனைவரிடமும் ஏற்படுத்துகிறது; நன்கு படித்து நல்ல சம்பளத்துடன் வேலை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. ஆனால் அவ்வாறு படித்த பின்னர், அந்த வேலைக்காக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களுடன் போட்டியிட வேண்டும் எனும் விஷயம் இக்குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்படுவதில்லை. மேலும், இருக்கும் வேலைகளைக் காட்டிலும், படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

கண்மூடித்தனமான புலனின்பத்திற்காக இவ்வாறு முட்டிமோதும் இன்றைய தலைமுறையினர், அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கிய நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை மறந்து விட்டனர். அந்த வாழ்க்கை முறையில், அரசாங்கம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று யாரும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கும் கார்பரேட் நிறுவனங்களின் தேவையும் அப்போது இருக்கவில்லை. அந்த வாழ்க்கை முறையானது கிருஷ்ண பக்தியை ஆதாரமாகக் கொண்டு மக்களை எளிமையாக வாழச் செய்தது. நவீன கால சமுதாயத்தில் இல்லாத சுதந்திரமும் பாதுகாப்பும் அன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்தன.

பாரம்பரிய வாழ்க்கை முறை

நமது முன்னோர்கள் காட்டிய அமைதியான கிருஷ்ண உணர்வு வாழ்வினைப் பயிற்சி செய்ய விரும்பும் குடும்பஸ்தர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்று பஞ்சவடி பண்ணை பயிற்சியளிக்கும் இடமாக விளங்குகிறது. பலமான ஆன்மீகப் பயிற்சி. பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட வாழ்விற்குத் தேவையான தொழிற்கல்வி ஆகிய இரண்டும் இப்பண்ணையின் முக்கிய நோக்கங்கள். கிருஷ்ணர் பகவத் கீதையில், வர்ணாஷ்ரம அமைப்பின் ஒரு பிரிவான வைசியர்களின் முக்கிய செயல்களாக க்ருஷி, கோ-ரக்ஷ, வாணிஜ்யம் (விவசாயம், பசு பராமரிப்பு, வியாபாரம்) ஆகிய மூன்றையும் கூறுகிறார். (வர்ணாஷ்ரமம் ஒருவனது தனிப்பட்ட தகுதிகளையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்ட அமைப்பாகும், தற்போது இந்தியாவில் பரவலாக அறியப்படும் ஜாதி முறையோடு இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.)

1) யாம் கூறும் விவசாயத்தை இயற்கையைச் சுரண்டும் நோக்கத்துடன் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நவீன விவசாயத்துடன் ஒப்பிட வேண்டாம். உண்மையான விவசாயம் என்பது பல விதத்தில் நிலத்தின் மேல் அக்கறையோடு செய்யப்படும் செயலாகும். இச்செயலில் வேதியியல் பொருட்களும் பூச்சிக் கொல்லிகளும் நிலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், எருதுகளை கசாப்புக் கூடங்களுக்கு அனுப்ப காரணமாக இருக்கும் டிராக்டர்களும் இதர இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. உள்ளூர் நிலைமைக்கு ஏற்றாற்போல பயிர்களை வளர்க்க வேண்டும், அதை கவனத்தில் கொண்டு நீர்ப் பாசனம் இருக்க வேண்டும். மக்களின் உணவுப் பழக்கமும் ஆங்காங்கே விளையும் பயிர்களுக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும்.

2) யாம் கூறும் பசு பராமரிப்பினை இன்றைய பால்பண்ணை நடைமுறையுடன் ஒப்பிட வேண்டாம். நவீன பால்பண்ணை வர்த்தகம் கசாப்புக் கூடங்களுக்குத் தீனி போடுகிறது. பாரம்பரிய பசு பராமரிப்பானது பகவான் கிருஷ்ணரின் கட்டளையைப் பின்பற்றி பால் கொடுக்காத நிலையிலுள்ள பசுக்களையும் பாதுகாத்து பராமரிக்கின்றது. காளையோ பசுவோ எந்நிலையிலும் கசாப்புக்கூடங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.

3) யாம் கூறும் வர்த்தகம் அல்லது வியாபாரத்தினை இன்றைய உக்கிர கர்ம (கொடூர தொழில்) வகையைச் சார்ந்த வர்த்தகத்துடன் ஒப்பிட வேண்டாம். குடிநீர் உட்பட கிடைத்தவை அனைத்தையும் தற்போதைய நவீன உலகம் வர்த்தகம் செய்கிறது. தொழிற்சாலையில் விளைவிக்கப்படும் பொருட்கள், ஆழ்துளையிட்டு பெறப்படும் பொருட்கள், இயற்கையை சீரழித்து பெறப்படும் பொருட்கள் என பலவும் அத்தகு வணிகத்தில் நேரடியாக ஈடுபடுபவருக்கு கெட்ட விளைவுகளை வழங்குவதோடு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கை விளைவிக்கின்றது.

பாசத்துடன் வளர்க்கப்படும் மாடுகளுக்கு குளிரைத் தாங்குவதற்காக சாக்கு போர்த்தப்படுகிறது.

பஞ்சவடியின் பயிற்சித் திட்டம்

கிருஷ்ணரை வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, முன்னோர்களின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் பல முறை உபதேசித்துள்ளார். அவரது விருப்பத்தினை நிறைவேற்றும் பொறுட்டு, அதற்கான பயிற்சி குடும்பஸ்தர்கள், இளம் வாலிபர்கள் என இரு தரப்பினருக்கும் பஞ்சவடியில் அளிக்கப்பட்டு வருகிறது.

பகவத் கீதையை மையமாகக் கொண்ட ஆன்மீகக் கல்வி, தொழில் கல்வி என இரண்டையும் கற்கும் பஞ்சவடியின் இளம் வாலிபர்கள், ஆன்மீகம், பௌதிகம் என இரண்டிலும் சிறந்ததைப் பெறுகின்றனர். நகரத் திற்குச் சென்று பெரும் மனவேதனை தருகின்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. போட்டித் தேர்வுகளில் வென்று வேலையைப் பெறுவதற்காக, நேரத்தை வீணடிக்கவும் தேவை யில்லை. வளமுடன் வாழ்வதற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைக் கற்பதோடு, பகவானின் திருநாட்டிற்குச் செல்லுதல் எனும் மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான பலமான ஆன்மீகப் பயிற்சிகளையும் பெறுகின்றனர்.

வசிப்பவர்களின் வாழ்க்கை முறை

பஞ்சவடியில் தற்போது மூன்று குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் தங்கள் நிலத்திலேயே உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி உழைத்துக் கொண்டுள்ளனர். அதாவது, வெளியுலகிலிருந்து எந்த பொருட்களையும் வாங்காமல், தன்னிறைவு பெற்ற சமுதாயமாக வளர்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது விவசாயத்தில் எவ்வித வேதியியல் பொருள்களையும் உபயோகிப்பதில்லை; இயற்கை உரங்களை பாரம்பரிய முறையில் உபயோகிக்கின்றனர். இயற்கை விவசாயத்தை செலவின்றி செய்வதற்கு பயிற்சி கொடுக்கும் அமைப்பைச் சார்ந்த விவசாய நிபுணர்கள் மாதந்தோறும் இங்கே வருகை புரிந்து வழிகாட்டுகின்றனர்.

அனைத்து பக்தர்களும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து நீராடி இங்குள்ள சிறிய கோயிலில் நடைபெறும் ஆரத்தியில் கலந்துகொள்கின்றனர். பின்னர், பக்தர்களின் சங்கத்தில் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபிக்கின்றனர். இவ்வாறாக சுமார் மூன்று மணிநேர காலை ஆன்மீகப் பயிற்சிக்குப் பின், அவரவரது நிலத்திற்கு அல்லது இதர சேவைகளுக்குச் செல்கின்றனர். மாலை வேளைகளில் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திர உபன்யாசங்களில் கலந்துகொள்கின்றனர், இராமாயணம் முதலிய இதர சாஸ்திரங்களும் கற்றுத் தரப்படுகின்றன.

 

பஞ்சவடி பண்ணையில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.

பயின்றவரின் இன்றைய நிலை

சமீபத்தில் நிறைவு பெற்ற இளம் வாலிபர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கு கொண்டவர்களில் ஒருவரான பதினாறு வயதே நிறைந்த பக்த ஸ்ரீனிவாசன், எட்டு மாத பயிற்சியில் கிருஷ்ணரை மையமாகக் கொண்டு வாழ்வதற்கான பாரம்பரியத்தைக் கற்றுக் கொண்டார். நிலத்தை உழுதல், விதைத்தல், நீர்ப் பாசனம், களையெடுத்தல், அறுவடை செய்தல், விளைந்த பொருட்களை விற்றல் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து கொண்டார். அறுவடை அமோகமாக இருந்தது, தனக்கும் தனது (வருங்கால) குடும்பத்திற்கும் தேவையான உணவுப் பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை நன்கு கற்றுக் கொண்டார். இரண்டு அறுவடைகளை மற்றவர்களின் உதவியுடன் தனக்கென வழங்கப்பட்ட நிலத்தில் செய்திருக்கிறார். இனிமேல் அவர் தனது வாழ்வாதாரத்திற்காக எங்கோ சென்று யாருக்காகவோ உழைக்க வேண்டிய அவசியம் இருக்கப் போவதில்லை.

விவசாயத்திற்கான இயற்கை உரத்திற்கும் பூச்சிகளை விரட்டுவதற்கும் மாட்டுச் சாணம் முக்கிய மூலாதாரமாக உள்ளது. பக்த ஸ்ரீனிவாசன் அவற்றை தயாரிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொண்டார், தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தீங்கிழைக்கும் வேதியியல் பொருட்களை வாங்குவதற்கான தேவை அவருக்கு ஒருபோதும் கிடையாது. இவையனைத்தும் நல்ல ஆன்மீகப் பயிற்சியுடன் இணைந்து கற்பிக்கப் பட்டது. இந்த வெற்றியை அடைவது கடினமானதல்ல, யார் வேண்டுமானாலும் எளிதில் அடையவியலும்.

 

அனைவருக்கும் வாய்ப்பு

இந்த வாழ்க்கை முறையை ஏற்பதற்கு யாரெல்லாம் ஆர்வமுடன் உள்ளனரோ அவர்கள் அனைவருக்கும் பயிற்சி தர பஞ்சவடி பண்ணையின் நிர்வாகம் தயாராக உள்ளது. அதிலும் குறிப்பாக, இளம் வாலிபர்களுக்கு இந்த பயிற்சி மிகமிக உதவியாக அமையும்; ஏனெனில், அவர்கள் இன்னும் தங்களது இதர வாழ்க்கையினைத் தொடங்கவில்லை.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள பஞ்சவடி பண்ணை தன்னார்வமுள்ள உங்களை தயவுடன் அழைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் ஒருமுறை விஜயம் செய்து, இங்குள்ள ஆன்மீக மற்றும் விவசாய சூழ்நிலையை உணரலாம். எத்தனையோ கோடை முகாம்களுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள், இம்முறை அதற்குப் பதிலாக பஞ்சவடி பயிற்சி வகுப்பை கருத்தில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

(குறிப்பு: பஞ்சவடி பண்ணையின் பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள், திரு ஸ்ரீராம சரணாரவிந்த தாஸ் அவர்களை 95000 82200, 77087 89556 என்ற எண்ணிலும், info2sriram@gmail.com என்ற இணைய முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.)

தன்னால் விளைவிக்கப்பட்ட பயிர்களுடன் பக்த ஸ்ரீனிவாசன்.