பிராமண சிறுவனால் மன்னர் பரீக்ஷித் சபிக்கப்படுதல்

திரு. வனமாலி கோபால் தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: பதினெட்டாம் அத்தியாயம்

சென்ற இதழில், பரீக்ஷித் மஹாராஜர் கலி புருஷனை தண்டித்து, தனது இராஜ்ஜியத்தில் அவன் எவ்வித தீங்கையும் செய்யாதபடி செய்து அற்புதமாக அரசாட்சி செய்ததைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் அவரது குணநலன்கள், அவரது வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் போன்றவற்றைக் காணவிருக்கிறோம்.

பரீக்ஷித் மஹாராஜரின் குணநலன்கள்

தனது தாயின் கருப்பைக்குள் இருந்த பரீக்ஷித் மஹாராஜர் பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டபோதிலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் எரிந்துபோகாமல் காப்பாற்றப்பட்டார். அவர் எப்பொழுதும் பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவராக இருந்தார். அவ்வாறு அவர் வாழ்ந்த காரணத்தினால், ஒரு பிராமண சிறுவன் கோபத்தினால் தனக்கு சாபம் கொடுத்து விட்டான் என்பதையும் அதனால் தான் ஏழு நாள்களில் பாம்பினால் தீண்டப்பட்டு மரணத்தைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் கேள்விப்பட்டபோது, அவர் அச்சமோ கலக்கமோ அடையவில்லை. உடனடியாக அரண்மனையைத் துறந்து வியாஸதேவரின் புதல்வரான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியிடம் சரணடைந்து பகவானின் உண்மையான உன்னத நிலையை உணர்ந்து கொண்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான கதைகளைக் கேட்பதில் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கும் அவரது தாமரைப் பாதங்களை இடையறாது நினைப்பவர்களுக்கும் மரண காலத்தில் மதிமயக்கம் ஏற்படாது.

பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூமியை விட்டுச் சென்ற அதே நாளில், அக்கணமே, எல்லா அதர்மச் செயல்களையும் தூண்டும் கலி புருஷன் இவ்வுலகினுள் பிரவேசித்தான். ஆனால் அபிமன்யுவின் சக்திவாய்ந்த மகனான பரீக்ஷித் மஹாராஜர் உலகப் பேரரசராக இருந்தவரை கலி செழிப்படைய வாய்ப்பு ஏற்படவில்லை.

கலி யுகத்திற்கு பரம புருஷ பகவான் சில விசேஷ வசதிகளை அளித்துள்ளார். மற்ற யுகங்களில் பாவத்தைச் செய்ய மனதால் நினைத்தாலே பாவத்தின் பலனை அடைய வேண்டியிருக்கும். மாறாக, கலி யுகத்தில் ஒருவர் பாவத்தினைச் செய்தாலொழிய அதன் பலன் அவரை அணுகாது. ஆனால் புண்ணிய செயல்களைச் செய்ய மனதால் நினைத்தாலே அதற்கான பலன் கிடைக்கிறது. மேலும், பகவானின் புனித நாமங்களைப் பாடுவதாலேயே சகல நன்மைகளையும் அடைய முடியும் என்பது இக்கலி யுகத்தின் மிகச்சிறந்த நன்மையாகும்.

புண்ணியவானாகிய பரீக்ஷித் மஹாராஜரின் சரித்திரத்துடன் தொடர்புடைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்தையும் விவரித்துவிட்டதாக சூத கோஸ்வாமி கூறினார். வாழ்வில் வெற்றி பெற விரும்புபவர்கள், அற்புதமாகச் செயல்படுபவரான பரம புருஷரின் திவ்யமான செயல்கள் மற்றும் குணங்களுடன் தொடர்புடைய எல்லா விஷயங்களையும் அடக்கத்துடன் கேட்க வேண்டும்.

 

கிருஷ்ண கதாம்ருதம்

சூத கோஸ்வாமியின் உரையைக் கேட்ட நைமிஷாரண்ய முனிவர்கள் அவரிடம் கிருஷ்ண கதையை மேலும் விளக்குமாறு விண்ணப்பித்தனர்: “சூத கோஸ்வாமியே, தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். நீங்கள் பேசும் கிருஷ்ண கதை அமிர்தம்போல் எங்களை உயிரூட்டுவதாக உள்ளது. பலன்நோக்குக் கருமமாகிய இந்த யாகத் தீயின் புகையால் எங்கள் உடல்கள் கருமை அடைந்துள்ளன. நீங்கள் கூறும் கிருஷ்ண கதை ஒன்றே எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது.

“பகவத் பக்தருடன் கொள்ளும் கண நேர தொடர்பின் மதிப்பை ஸ்வர்க லோகங்களை அடைதல், பௌதிகத்திலிருந்து முக்தி அடைதல் என எதனோடும் ஒப்பிட முடியாது. எனவே, அழியப் போகின்ற பௌதிக செழுமை எனும் உலகாயத நன்மைகளைப் பற்றி கூற என்ன உள்ளது?

“பகவானின் குணநலன்கள் யாராலும் அளவிட முடியாதது, கேட்க கேட்கத் தெவிட்டாதது. ஆதலால் அத்தகைய லீலைகளைத் தொடர்ந்து கேட்க நாங்கள் மிகவும் ஆவல் கொண்டுள்ளோம். அவற்றை தயவுசெய்து மேலும் விவரித்து கூறுங்கள்.

“தூய பக்தர்களுக்குப் பிரியமானதும், பரீக்ஷித் மஹாராஜருக்கு உபதேசிக்கப்பட்டதும், பக்தியோகம் நிறைந்ததும், தூய்மைப்படுத்துவதும் ஒப்பற்றதுமான அந்த எல்லையற்றவரின் கதைகளை தயவுசெய்து எங்களுக்குக் கூறுங்கள்.”

கிருஷ்ணரின் பெருமைகள்

முனிவர்களின் வேண்டுதல்களை ஏற்ற சூத கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: “நாங்கள் கலப்பட ஜாதியில் பிறந்திருந்த போதிலும் தூய பக்தர்களுக்குத் தொண்டு செய்து அவர்களைப் பின்பற்றுவதாலேயே பிறவிப் பயனை அடைந்தோம். எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் தூய பக்தர்களின் உறவால் நாம் நம்மைத் தூய்மைபடுத்திக் கொள்ள முடியும். பகவானின் புனித நாமத்தைப் பாடும் சிறந்த பக்தர்களின் வழிகாட்டுதலின்கீழ் உள்ளவர்கள் மிகவும் மேன்மையானவர்கள். உன்னத குணங்களையும் சக்தி களையும் அளவின்றி பெற்றிருப்பவரான பகவான் அனந்தர் எனப்படுகிறார். அவருக்கு இணையானவர் யாரும் இல்லை. அவரை முழுமையாக யாராலும் விவரிக்க முடியாது.

“லக்ஷ்மி தேவியின் அனுக்கிரஹத்திற்காக அனைத்து தேவர்களும் காத்திருந்தபோதிலும், அவளோ பகவானின் பாத கமலங்களுக்கு இடையறாது தொண்டு செய்து கொண்டிருக்கிறாள். பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் பாதம்பட்டதால் புனிதமடைந்த கங்கை, சிவபெருமான் உட்பட முழு பிரபஞ்சத்தையும் தூய்மைப்படுத்துகிறது.

“சூரியனைப் போன்று தூய சக்தி பெற்றுள்ள ரிஷிகளே, என் புத்திக்கு எட்டியவரையில் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகளை விவரிக்க நான் முயற்சிக்கிறேன்.” இவ்வாறு கூறிய சூத கோஸ்வாமி பரீக்ஷித் மன்னரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை விரிவாக எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

 

பரீக்ஷித் சமீக ரிஷியை அவமதித்தல்

ஒரு சமயம் வில்லும் அம்புகளும் ஏந்தி காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பரீக்ஷித் மஹாராஜர் பசியும் தாகமும் மேலிட மிகவும் களைப்படைந்தார். நீர் நிலையைத் தேடியலைந்த வேளையில் புகழ்பெற்ற சமீக ரிஷியின் ஆசிரமத்தினுள் அவர் நுழைந்தார். ரிஷி மூடிய கண்களுடன் மௌனமாக அங்கு அமர்ந்திருப்பதை மன்னர் கண்டார். முனிவரின் புலனுறுப்புகள், சுவாசம், மனம், புத்தி ஆகிய அனைத்தும் பௌதிகச் செயல்களிலிருந்து விடுபட்டிருந்தன, தன்மையில் பரிபூரணத்திற்கு இணையான ஓர் உன்னத நிலையை அவர் அடைந்திருந்ததால் சமாதியில் அவர் நிலைபெற்றிருந்தார்.

உடல் முழுவதும் ஜடாமுடி சிதறிக் கிடக்க, மான்தோலை அணிந்து தியானத்திலிருந்த முனிவரை நோக்கி, தாகத்தால் தொண்டை உலர்ந்து போன அரசர் குடிக்க நீர் கேட்டார். முனிவரிடமோ எந்த சலனமும் இல்லை. வழக்கமாக மன்னருக்கு அளிக்கப்படும் ஆசனமோ இடமோ இனிய வார்த்தைகளோ அங்கு இல்லை, குடிப்பதற்கு நீர்கூட அளிக்கப்படாததால் தான் அலட்சியம் செய்யப்பட்டதாக எண்ணிய அரசர் கோபமடைந்தார்.

பசியாலும் தாகத்தாலும் பீடிக்கப்பட்டிருந்ததால், முனிவரிடம் அவர் கொண்ட கோபமும் வெறுப்பும் புதுமையாக இருந்தன. தான் அவமதிக்கப்பட்டதாக எண்ணிய அரசர், அங்கிருந்து வெளியேறும்போது, தனது வில்லின் நுனியால் ஒரு செத்த பாம்பை எடுத்து கோபத்துடன் அதனை சமீகரின் கழுத்தில் போட்டுவிட்டு தனது அரண்மனைக்குத் திரும்பினார்.

முனிவர் உண்மையில் தியான நிலையில் கண்மூடியிருந்தாரா அல்லது அவரைக் காட்டிலும் தாழ்ந்த ஒரு சத்திரியனின் வரவை அலட்சியப்படுத்தி பொய் சமாதியில் இருந்தாரா என அரசர் ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கினார்.

மன்னர் பரீக்ஷித், செத்த பாம்பை எடுத்து சமீக ரிஷியின் கழுத்தில் போடுதல்.

பரீக்ஷித் மஹாராஜர் சபிக்கப்படுதல்

அந்த முனிவருக்கு ஸ்ருங்கி என்றொரு மகன் இருந்தான். ரிஷியின் புதல்வன் என்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். அவன் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட குற்றத்தைக் கேள்விப்பட்டான்.

கடுங்கோபமுற்ற ஸ்ருங்கி கூறினான்: “வாசல் காக்கும் நாய்களைப் போன்ற அரசர்களின் பாவச் செயல்களைப் பாருங்கள். சேவகர்களான இவர்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளைக் கைவிட்டு எஜமானர்களுக்கு எதிராகவே பாவம் செய்ய முற்பட்டு விட்டனர். பரம புருஷரும் பரம ஆளுநருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புறப்பட்டுச் சென்றபின், நம்மைக் காப்பவர் இல்லாத இவ்வேளையில், திடீரென பதவிக்கு வந்துள்ள இவர்களின் கை ஓங்கியுள்ளது. எனவே, அவர்களை இப்பொழுது நானே தண்டிக்கப் போகிறேன். என் தவ வலிமையைப் பாருங்கள்.”

தனது தோழர்களிடம் இவ்வாறு பேசிய ரிஷி புத்திரன், கோபத்தில் சிவந்த கண்களுடன் கௌசிக நதியின் நீரைத் தொட்டு மன்னருக்கு சாபம் விடுத்தான்: ஒழுக்க விதிகளை மீறி எனது தந்தையை அவமதித்த குலத் துரோகியை இன்றிலிருந்து ஏழாவது நாள் ஸர்ப்பராஜனான தக்ஷகன் கடிக்கப் போகிறான்!!!”

 

சமீக ரிஷியின் வருத்தம்

மன்னரை சபித்துவிட்டு ஆசிரமத்திற்குத் திரும்பிய அச்சிறுவன், தன் தந்தையின் கழுத்தில் பாம்பு கிடப்பதைக் கண்டு துக்கம் பொங்கிவர வாய்விட்டு அலறினான். அங்கிரா முனியின் குலத்தவரான சமீக ரிஷி, தன் புத்திரனின் கூக்குரலைக் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்து தம் கழுத்தில் செத்த பாம்பு கிடப்பதைக் கண்டார். அதை ஒரு புறமாக எறிந்துவிட்டு, மகனின் அழுகைக்கு என்ன காரணம் என விசாரிக்க, மகன் நிகழ்ந்ததை விவரித்தான். மனித வர்க்கத்தில் மிகச்சிறந்தவரான அரசரை யாரும் ஒருபோதும் தண்டித்திருக்கக் கூடாது என்பதால், தன் மகன் அவரை சபித்ததை முனிவரால் ஏற்க இயலவில்லை.

அவர் தன் மகனிடம் வருத்தத்துடன் பின்வருமாறு பேசத் தொடங்கினார்: “ஐயகோ, எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்து விட்டாய்! சிறிய பிழைக்கு எத்தனை பெரிய தண்டனை! பக்குவப்படாத புத்தியுடையவனே, அரசர் கடவுளுக்கு சமமானவர் என்பதை நீ அறியவில்லை. அவரை சாதாரண மனிதனைப் போல எண்ணக்கூடாது. மிஞ்ச முடியாத அவரது பராக்கிரம பாதுகாப்பினால் பிரஜைகள் செழிப்புடன் வாழ முடிகிறது.

“மகனே, பகவானின் பிரதிநிதியாகச் செயல்படும் மன்னரின் ஆட்சி அழிக்கப்படும்போது, உலகில் திருடர்கள் நிறைந்து விடுவர். பாதுகாப்பின்றி ஆங்காங்கே திரியும் ஆட்டுக்குட்டிகளைப் போல இருக்கும் பிரஜைகளை அவர்கள் உடனடியாக அழித்துவிடுவர். அரசாட்சி முடிவுறும்போது மக்களின் செல்வம் திருடர்களாலும் அயோக்கியர்களாலும் கொள்ளையடிக்கப்பட்டு சமுதாயத்தில் பெரும் பிளவுகள் ஏற்படும், மக்கள் ஒருவரையொருவர் கொல்வர், மிருகங்களையும் பெண்களையும் அபகரிக்கத் தொடங்குவர். இந்த பாவங்களுக்கெல்லாம் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

“நாகரிக முன்னேற்றப் பாதையிலிருந்து பொதுமக்கள் சரிந்துவிடுவர், வேதக் கட்டளைகளும் வர்ணாஸ்ரம கடமைகளும் சீரழிந்துவிடும். மக்கள் புலனுகர்வை நோக்கமாகக் கொண்ட பொருளாதார முன்னேற்றத்தினால் அதிகமாக கவரப்படுவர். அதன் பலனாக தேவையற்ற மக்கள் தொகை உற்பத்தியாகும்.”

சமீக ரிஷி தொடர்ந்து கூறினார்: “பரீக்ஷித் மஹாராஜர் பரம புருஷரின் முதல்தர பக்தர், ராஜரிஷியான அவர் பல அஸ்வமேத யாகங்களைச் செய்திருக்கிறார். பசியாலும் தாகத்தாலும் களைத்திருந்தபோது அவர் செய்த செயலுக்காக அவர் ஒருபோதும் நமது சாபத்திற்கு உரியவரல்ல.”

அரசரின் பிழையை சமீக ரிஷி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை, மாறாக தனது மகனின் பிழையை பெரும் குற்றமாகக் கருதினார். முற்றிலும் பாவமற்ற பக்குவமான மன்னரை சபித்ததன் மூலமாக தனது மகன் பெரும் பாவம் செய்துவிட்டான் என்பதை உணர்ந்த ரிஷி, பக்குவமற்ற தனது சிறுவனை எங்கும் நிறைந்துள்ள பகவான் மன்னித்தருள வேண்டுமென பிரார்த்தித்தார்.

பகவத் பக்தரான பரீக்ஷித் எந்தவொரு சூழ்நிலையிலும் தான் சபிக்கப்பட்டதற்காக பழிதீர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் சமீக ரிஷி இருந்தார். சாபம் பெற்ற பரீக்ஷித் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்பதை அடுத்த இதழில் காண்போம்.

 

மன்னரை சபித்துவிட்டு ஆசிரமத்திற்குத் திரும்பிய ஸ்ருங்கி, தன் தந்தையின் கழுத்தில் பாம்பு கிடப்பதைக் கண்டு வாய்விட்டு அலறுதல்.

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment