வழங்கியவர்: வனமாலி கோபால் தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: பதினாறாம் அத்தியாயம்

சென்ற இதழில் யுதிஷ்டிர மஹாராஜர், பரீக்ஷித் மஹாராஜரைச் சக்ரவர்த்தியாக முடிசூட்டியதை அறிந்தோம். இந்த இதழில் பரீக்ஷித் கலியைச் சந்தித்த விதத்தை அறிவோமாக.

பரீக்ஷித் மஹாராஜர் கலி புருஷனை சந்தித்தல்

யுதிஷ்டிரரால் முடிசூட்டப்பட்ட பரீக்ஷித் மஹாராஜர் பகவானின் மிகச்சிறந்த பக்தராக இருந்து, சிறந்த பிராமணர்களின் உபதேசங்களின்படி உலகை ஆளத் தொடங்கினார். அவர் பிறந்தபோது ஜோதிடர்கள் எடுத்துரைத்த சிறந்த குணங்களுக்கேற்ப அவர் ஆட்சி புரிந்தார். அவர் தன் தாய்மாமனான உத்தர மஹாராஜரின் மகளான இராவதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜனமேஜயன், ஸ்ருதசேனன், உக்ரசேனன், இரண்டாம் பீமசேனன் ஆகிய நான்கு புத்திரர்கள் பிறந்தனர்.

பரீக்ஷித் மஹாராஜர் தங்களின் குல குருவான கிருபாசாரியரின் வழிகாட்டுதலின்கீழ், கங்கைக் கரையில் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்தார். யாகங்களில் பங்கு கொண்டவர்களுக்கு தகுந்த சன்மானங்களையும் வழங்கினார். அந்த யாகங்களில் தேவர்கள் பங்கேற்பதை சாதாரண மனிதர்களால்கூட காண முடிந்தது. பொதுவாக மண்ணுலக வாசிகளுக்கு தேவலோகவாசிகள் காட்சியளிப்பதில்லை என்றபோதிலும், பரீக்ஷித் மஹாராஜரின் செல்வாக்கினால் தேவர்கள் காட்சிதர முன்வந்தனர்.

ஒருமுறை உலகை வென்று வர புறப்பட்ட பரீக்ஷித், ஓர் அரசனைப் போல உடையணிந்திருந்த இழிவான கலி புருஷன் ஒரு பசு மற்றும் எருதின் கால்களை காயப்படுத்துவதைக் கண்டார். உடனே அவனைத் தண்டிப்பதற்காக கைது செய்தார்.

 

சௌனக ரிஷியின் விசாரணை

பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்கள். பகவானின் புனித நாமம் மற்றும் லீலைகளை கேட்பதும் பாடுவதும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவதற்குரிய ஒரே வழியாகும். எமராஜன் பகவானின் மிகச்சிறந்த பக்தர் என்பதால், பகவானின் பக்தித் தொண்டில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள தூய பக்தர்களின் கீர்த்தனங்களுக்கும் யக்ஞங்களுக்கும் அழைக்கப்படுவதை அவர் பெரிதும் விரும்புகிறார். எனவே, சௌனகரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் நைமிஷாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கு எமராஜரையும் அழைத்திருந்தனர். மரணமடைய விரும்பாத வர்களுக்கு அது நல்ல பலனை அளித்தது.

கிருஷ்ண கதையைக் கேட்பதில் ஈடுபடாத பிறரோ, தங்களது இரவை உறக்கத்திலும் பகலை பயனற்ற செயல்களிலும் கழித்து வீணாக்குகின்றனர்.

பரீக்ஷித் மஹாராஜரின் திக்விஜயம்

பக்தரின் சரித்திரம் பகவானின் சரித்திரத்திலிருந்து வேறானதல்ல. பரீக்ஷித் மஹாராஜரின் திக்விஜயத்தில் (எல்லா திசைகளிலும் உள்ள நாடுகளை வெற்றிகொள்வதில்), பகவான் மட்டுமின்றி பகவத் பக்தர்களான பாண்டவர்களின் புகழும் அடங்கியுள்ளதால், சூதகோஸ்வாமி அதைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.

குரு சாம்ராஜ்யத்தின் தலைநகரில் பரீக்ஷித் மஹாராஜன் வாழ்ந்து வந்தபொழுது, கலி யுகத்தின் அறிகுறிகள் அவரது இராஜ்ஜியத்திற்குள் ஊடுருவத் தொடங்கின. இஃது அவருக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை என்றபோதிலும், கலியைத் தூண்டியவர்களுடன் போரிட ஒரு வாய்ப்புக் கிட்டியதை எண்ணி, சிறந்த சத்திரியரான அவர் ஒருவகையில் மகிழ்ந்தார்.

அவர் கருமை நிற குதிரைகள் பூட்டப்பட்டு சிங்கக் கொடியுடைய தேரில் அமர்ந்து, தேரோட்டிகள், குதிரைப் படை, யானைகள் மற்றும் காலாட் படையுடன் சூழப்பட்டு எல்லா திசைகளையும் வெற்றி கொள்வதற்காக வில் மற்றும் அம்புடன் புறப்பட்டார்.

பத்ராஸ்வம், கேதுமாலம், பாரதம், உத்தர குருவர்ஷம், கிம்புருஷம் முதலான மண்ணுலகின் எல்லாப் பகுதிகளையும் வென்று, அவற்றின் அரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்தார். அவர் தம் பாட்டனாரான யுதிஷ்டிர மஹாராஜரால் ஆளப்பட்ட எல்லா நாடுகளுக்கும் சக்ரவர்த்தி என்று ஏற்கனவே முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தார்; இருப்பினும், அத்தகைய நாடுகளிலிருந்து கப்பம் வசூலிப்பதற்காக, அவர் தனது உயர்வை நிலைநாட்ட வேண்டியிருந்தது.

அரசர் சென்ற இடமெல்லாம், பகவத் பக்தர்களான அவரது முன்னோர்கள் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அற்புத செயல்களை மக்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்து அவர்களுக்கு அளவிலா சன்மானங்களை வழங்கி மகிழ்வித்தார்.

பிரபஞ்சம் முழுவதிலும் வணங்கப்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது காரணமற்ற கருணையால், பாண்டவர்களின் விருப்பப்படி, தேரோட்டியாகவும், தலைவர், தூதர், நண்பர், இரவு காவற்காரர் போன்ற எல்லா வகை சேவைகளையும் செய்து, வயதில் இளையவரைப் போல் அவர்களுடன் உறவாடினார். இதையெல்லாம் கேட்ட பரீக்ஷித் மஹாராஜனுக்கு பகவானின் கமல பாதங்களில் பக்தி பெருக்கெடுத்தது.

உலகை வென்று வர புறப்பட்ட பரீக்ஷித், ஓர் அரசனைப் போல உடையணிந்திருந்த இழிவான கலி புருஷன் ஒரு பசு மற்றும் எருதின் கால்களை காயப்படுத்துவதைக் கண்டார்.

தர்மத்தின் கேள்விகள்

அச்சமயத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயத்தை சூத கோஸ்வாமி தொடர்ந்து விவரித்தார்.

மதக் கொள்கைகளின் ஸ்வரூபமான தர்மம், ஓர் எருதின் வடிவில் திரிந்து கொண்டிருந்தது. அது கண்களில் கண்ணீருடன் குழந்தையை இழந்து தவிக்கும் பொலிவிழந்த ஒரு பசுவின் உருவில் இருந்த பூமித்தாயைக் கண்டு அதனிடம் பின்வருமாறு விசாரித்தது:

“தாயே, நீங்கள் ஏன் இவ்வளவு துயரத்துடன் தென்படுகிறீர்கள்? ஏதேனும் நோயினால் துன்புறுகிறீர்களா? அல்லது வெகு தூரத்திலுள்ள உறவினரைப் பற்றி நினைத்து கவலைப்படுகிறீர்களா? நான் எனது மூன்று கால்களை இழந்து இப்பொழுது ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். என் நிலைமையைக் கண்டு வருந்துகிறீர்களா? அல்லது இனிமேல் சட்டவிரோதமாக மாமிசம் உண்பவர்கள், உங்களை துஷ்பிரயோகம் செய்யப் போகிறார்கள் என்பதற்காக பெருங் கவலையில் ஆழ்ந்துவிட்டீர்களா?

“தற்போது யாகங்கள் செய்யப்படாததால் தேவர்கள் தங்களுக்குரிய யாகப் பங்குகளை இழந்திருப்பதைக் கண்டு  வருந்துகிறீர்களா? அல்லது பசியாலும் பஞ்சத்தாலும் ஜீவராசிகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் கண்டு விசனப்படுகிறீர்களா?

“அயோக்கியர்களால் கேவலமான நிலையில் விட்டுச் செல்லப்ட்ட மகிழ்ச்சியற்ற பெண்களுக்காகவும் குழந்தை களுக்காகவும் விசனப்படுகிறீர்களா? அல்லது மதக் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதில் பற்றுக் கொண்ட பிராமணர்களால் கல்வி தெய்வம் கையாளப்படுவது குறித்து கவலைப்படுகிறீர்களா? அல்லது பிராமணப் பண்பாட்டை மதிக்காமல் ஆட்சிபுரியும் குடும்பங்களில் பிராமணர்கள் புகலிடம் கொண்டிருப்பதைக் கண்டு வருந்துகிறீர்களா?

“கலி யுகத்தின் ஆதிக்கத்தால் பெயரளவேயான தகுதியற்ற நிர்வாகிகள் இப்பொழுது குழப்பமடைந்து அரசாங்க விவகாரங்களையெல்லாம் ஒழுங்கற்ற நிலைக்கு உள்ளாக்கி விட்டனரே, இந்த ஒழுங்கின்மை குறித்து வருந்துகிறீர்களா?

“பூமித் தாயே, பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது திவ்யமான லீலைகளை முடித்துக் கொண்டு இங்கிருந்து சென்று விட்டதால், அவரின் மறைவிற்காக வருந்துகிறீர்கள் என நினைக்கிறேன். தாயே, எல்லா செல்வங்களுக்கும் பிறப்பிடமான உங்களது செல்வங்கள் தேவர்களாலும் பூஜிக்கப்பட்டன. சக்தி வாய்ந்தவரையும் தோல்வியடையச் செய்யும் சக்திமிக்க காலத்தின் ஆதிக்கத்தால் அவை பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். தயவுசெய்து பேசுவீராக.”

 

பூமியின் பதில்கள்

இவ்வாறு எருதின் வடிவிலிருந்த தர்மதேவனால் விசாரிக்கப் பட்ட பசுவின் உருவிலிருந்த பூமித் தாய் பின்வருமாறு பதிலளித்தாள்:

“உங்களின் கேள்விகளுக்கு பதில் தர முயற்சிக்கிறேன். முன்பு நீங்களும் நான்கு கால்களுடன்தான் இருந்தீர்கள். அப்போது பகவானின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியை பெருக்கினீர்கள். எல்லா நற்குணங்களின் இருப்பிடமான, ஒப்பற்ற அழகின் பிறப்பிடமான அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது உன்னத லீலைகளை முடித்துக் கொண்டு, இங்கிருந்து சென்றுவிட்ட பிறகு, கலி தன் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்துள்ளது. இந்த நிலையைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.

“நான் என்னைப் பற்றியும், தேவர்களில் சிறந்தவரான உம்மைப் பற்றியும், தேவர்கள், ரிஷிகள், பித்ருலோகவாசிகள், பகவத் பக்தர்கள், மனித சமூகத்தில் வர்ணாஷ்ரம முறையைப் பின்பற்றுபவர்கள் ஆகிய அனைவரைப் பற்றியும் சிந்தித்து கொண்டிருக்கிறேன்.

“அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மி, தாமரை வனத்திலுள்ள தனது சொந்த இருப்பிடத்தைத் துறந்து, பகவானின் தாமரைப் பாத சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். பகவான் இங்கே இருந்தபோது அத்தாமரை பாதங்களை குறிக்கும் அடையாளங்களான கொடி, மின்னல், அங்குசம், தாமரைப்பூ ஆகிய சின்னங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருந்தேன். இதனால் மூவுலக செல்வங்களையும் மிஞ்சிவிடக்கூடிய விசேஷ சக்திகளை நான் பெற்றிருந்தேன்.

“அவர் தம் அன்பான புன்னகையாலும் இன்பமூட்டும் பார்வையாலும் இனிய வேண்டுகோள்களாலும் சத்தியபாமா வைப் போன்ற தம் மனதிற்கினியவர்களின் கடுங்கோபத்தைக் கூட அவரால் வெல்ல முடிந்தது. எனது (பூமியின்) மேற்பரப்பில் அவர் நடந்து சென்றபோது, அவரது தாமரைத் திருவடித் தூசுகளால் நான் மூழ்கடிக்கப்பட்டிருந்தேன். எனவே, இன்பத்தினால் மெய் சிலிர்த்ததுபோன்று அதிகமான புற்களால் நான் மூடப் பட்டிருந்தேன்.

“என்னை நான் பெரும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்து பெருமிதம் கொள்ளும் சமயத்தில், அவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார். அந்த பரம புருஷ பகவானின் பிரிவுத் துயரை யாரால் தாங்க முடியும்?

“பகவான் அவ்வப்போது அவரது அரண்மனையை விட்டு வெளியே சென்றதால், அவரது ஆயிரக்கணக்கான இராணிகள் அவரை சில நேரம் பிரிந்து வாழ்ந்தனர். ஆனால் அவரது அவதார காலம் முழுவதும் அவரது தாமரைப் பாத உறவை இடைவிடாது அனுபவித்து வந்த எனக்கு அவரது பிரிவு மிகவும் கடுமையான துன்பத்தைத் தந்துள்ளது.”

இவ்வாறாக பூமியும் தர்மதேவனும் உரையாடிக் கொண்டிருந்தபோது, ராஜரிஷியான பரீக்ஷித் மஹாராஜன் சரஸ்வதி நதிக்கரையிலிருந்த அவ்விடத்தை அடைந்தார்.