ஸ்ரீ இராமானுஜரின் வழியில்

Must read

Jaya Krishna Dasa
திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஸ்ரீபாத இராமானுஜ ஆச்சாரியரைப் பற்றிய முன்னுரை தேவையில்லை. நான்கு வைஷ்ணவ ஸம்பிரதாயங்களில் ஒன்றான ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆச்சாரியர்களுள் மணிமகுடமாக விளங்குபவரும், ஆன்மீகத்தில் பல்வேறு புரட்சிகளைச் செய்த மகானும், அனைத்து துறவிகளுக்கும் தலைவர் என்பதால் யதிராஜர் என்றும் பக்தர்களால் எம்பெருமானார் என்றும் அன்புடன் அழைக்கப்படுபவருமான இவரது ஆயிரமாவது ஆண்டு அவதாரத் திருநாள் கொண்டாடப்படும் தருணத்தில், பிரம்ம-மத்வ-கௌடீய ஸம்பிரதாயத்தைச் சார்ந்த இஸ்கான் பக்தர்கள் ஸ்ரீபாத இராமானுஜரின் போதனைகளை எவ்வாறு பின்பற்றுகின்றனர் என்பதைச் சற்று பார்ப்போம்.

திருப்பாவை ஜீயர்

இராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்றொரு பெயரும் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்து கோபியர்களின் மனோபாவத்தினைப் புகழ்ந்திருப்பாள். ஸ்ரீ இராமானுஜர் தன்னுடைய சீடர்களை அந்த பாவத்தினைப் பின்பற்றச் சொல்லவில்லை என்றாலும், அவர் அந்த அர்த்தங்களால் பெரிதும் மயங்கி, தினமும் யாசிக்கச் செல்லும்போதெல்லாம் திருப்பாவையைப் பாடுவார். கிருஷ்ணரை வழிபடுவதற்கு மிகவுயர்ந்த வழிமுறை கோபியர்களின் மனோபாவமே என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உரைத்துள்ளார். பக்தர்கள்

பலர் இருப்பினும், அவர்கள் அனைவருமே உயர்ந்தவர்கள் என்றபோதிலும், ரஸங்களின் அடிப்படையில் கோபியர்களின் பக்தியினை மஹாபிரபு முன்நிறுத்தினார். இஸ்கான் பக்தர்களும் கோபியர்களின் பக்தியைப் போற்றிப் புகழ்பவர்களாக உள்ளனர்.

திருப்பாவையில் எப்படிப்பட்ட கிருஷ்ணர் வணங்கப்படுகிறார்? கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் (1). நந்தகோபருக்கும் யசோதைக்கும் உரிய இடையர் குலத்தின் குமரனாகவும் இளஞ்சிங்கமாகவும் அவர் வணங்கப்படுகிறார். இஸ்கான் பக்தர்களும் பிரத்யேகமாக விருந்தாவனத்து கிருஷ்ணரை வணங்குகின்றனர்.

கிருஷ்ணருடைய ஒப்பற்ற நிலை என்ன? முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே (20), எல்லா தேவர்களிலும் அவரே உயர்ந்தவர், அவரை வழிபடுவோர் வேறு யாரையும் வழிபடத் தேவையில்லை. கிருஷ்ணரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும்? எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் (29), அவரிடம் பூரணமாக சரணடைய வேண்டும். இஸ்கான் பக்தர்கள் இந்நிலையை துல்லியமாக ஏற்று கிருஷ்ணரை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர் என்பதை எவரும் எளிதில் உணரலாம்.

கிருஷ்ணருக்கு நாம் எவ்வாறு பக்தி புரிய வேண்டும்? என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் (24), கிருஷ்ணரைப் போற்றிப் பாடி அவருக்கு சேவகம் செய்வதே நமது தொழில். மேலும், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி (3), வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க (5) முதலிய வரிகள், கிருஷ்ணரின் பெயரை உச்சரித்து ஆடிப் பாடுவதை எடுத்துரைக்கின்றன. இஸ்கானின் மிக முக்கிய திருப்பணி, அறியாமையிலுள்ள மக்களுக்கு பகவானின் திருப்பெயர் என்னும் அருமருந்தினை ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் வடிவில் கொடுத்து, அவர்கள் பிறவிப் பிணி நீங்கி, பகவானின் நித்திய லீலைகளில் பங்கு பெற வாய்ப்பினை வழங்குவதாகும்.

வைஷ்ணவ சேவை

ஸ்ரீ இராமானுஜர் பகவானுக்கு கைங்கரியம் செய்வது ஒருபுறம் இருப்பினும், பக்தர்களுக்குச் செய்யும் கைங்கரியத்தை வெகுவாக வலியுறுத்தியுள்ளார். அடியார்க்கு அடியார்க்கு அடியார் என்பதுதான் வைஷ்ணவ பக்தர்களின் ஒரே எண்ணம். இந்த வைஷ்ணவ கைங்கரிய மனப்பான்மையை இஸ்கானிலும் வெகுவாகக் காணலாம். அனைத்து ஆராதனைகளிலும் உயர்ந்தது பகவான் விஷ்ணுவின் ஆராதனை, அதனினும் உயர்ந்தது அவரது பக்தர்களுக்குச் செய்யும் ஆராதனை என்னும் பத்ம புராண வார்த்தைகளை இஸ்கான் வழுவாது பின்பற்றுகின்றது.

நான் கிருஷ்ண பக்தன்,” என்று யாரேனும் கூறினால், கிருஷ்ணர் அந்த பக்தரை தமது பக்தராக ஏற்பதில்லை. மாறாக, நான் கிருஷ்ண பக்தனின் பக்தன்,” என்று யாரேனும் கூறினால், அவரையே கிருஷ்ணர் தமது பக்தனாக ஏற்கிறார். இந்த பணிவான கைங்கரிய சுபாவம் பக்தித் தொண்டில் வளர்ச்சி பெறுவதற்கு மிகமிக இன்றியமையாத ஒன்றாகும். இந்த சுபாவம் வெறும் வளர்ச்சிக்கான வழியாக அன்றி, உண்மையான முறையில் உள்ளூர உணரப்பட வேண்டும். இஸ்கான் இயக்கத்தில் இந்த தன்மை பக்தர்களுக்கு தொடக்கத்திலிருந்தே ஊக்குவிக்கப்படுகிறது.

இராமானுஜ ஸம்பிரதாயத்தினர் தங்களை அடையாளப்படுத்தும்போது, அடியேன்” என்று உரைத்து தமது பணிவினை வெளிப்படுத்துகின்றனர். இஸ்கானில் தீக்ஷை பெறும் பக்தர்கள் தங்களை மற்றவர்களின் சேவையில் அவ்வாறு அடியேனாக வைத்துக்கொள்வதற்காக, அவர்களுக்குச் சூட்டும் பெயரின் இறுதியில், தாஸ அல்லது தாஸி என்னும் பின்னடை சேர்க்கப்படுகிறது. மேலும், ஒரு பக்தர் மற்றொரு பக்தரை பிரபு” (எஜமானர்) என்று அழைக்கிறார், அதாவது நீங்கள் எனது எஜமானர், நான் உங்களின் சேவகன்,” என்ற உள்ளர்த்தம் பக்தர்களை வைஷ்ணவ சேவையில் திளைக்கச் செய்கிறது. மனைவியைத் தவிர இதர பெண் பக்தர்களை அம்மா” என்று அழைத்து, அவர்களுக்கு சேவகம் செய்வதற்கான மனப்பான்மை வளர்க்கப்படுகிறது.

இஸ்கான் பக்தர்கள் பகவானின் திருநாமத்தை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்துகின்றனர்.

தூய பக்தித் தொண்டு

உபாயேஷு ப்ரபத்திஷ்யாத், சரணாகதியே முக்திக்கான சிறந்த நெறி,” இது பகவான் வரதராஜரால் ஸ்ரீ இராமானுஜருக்கு வழங்கப்பட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்றாகும். இதையே இஸ்கானும் வழிமொழிகின்றது. பக்தி, சரணாகதி ஆகிய வார்த்தைகளை விளக்குவதில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் கௌடீய வைஷ்ணவர் களுக்கும் சில வேறுபாடுகள் மேலோட்டமாகத் தோன்றினாலும், தாத்பரியம் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். தூய பக்தியுடன்கூடிய சரணாகதியே கீதையின் சாரமாகும். இஸ்கான் பகவத் கீதையின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு பக்தியினை பிரச்சாரம் செய்கின்றது. எனவே, முழு சரணாகதியினைத் தாண்டிய கலப்பு பக்தியை இஸ்கான் பக்தர்கள் சிறிதளவும் ஊக்குவிப்பதில்லை.

உயிர் போகும் நிலையாயினும் தேவர்களின் ஆலயங்களுள் நுழையாதவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள். அதாவது, விஷ்ணுவைத் தவிர வேறு எவரையும் தொழக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். அதே போன்று, இஸ்கான் பக்தர்களும் பகவான் கிருஷ்ணரை (விஷ்ணுவை) தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை. கிருஷ்ணருடனான உறவின் அடிப்படையில், சில நேரங்களில் தேவர்களும் அணுகப்படலாம். ஆனால் பொதுவாக வேறு எந்த தேவர்களின் வழிபாடும் இஸ்கான் பக்தர்களின் வாழ்வில் கிடையாது.

ஸ்ரீல பிரபுபாதரின் வார்த்தைகள்

ஸ்ரீபாத இராமானுஜரிடம் சரணடைவது பற்றி ஸ்ரீல பிரபுபாதர் கூறிய கருத்து: ஸ்ரீ இராமானுஜ ஆச்சாரியரின் தாமரை பாதங்களில் நாம் பெரும் அடைக்கலத்தைக் காண்கிறோம்; ஏனெனில், அவருடைய தாமரை பாதங்கள் மாயாவாதத்தை எதிர்க்கும் மிகப்பெரும் கோட்டை.” (வி.எஸ்.ஆர். சக்ரவர்த்திக்கு 22/11/1974 அன்று எழுதிய கடிதம்)

பின்வரும் உரையாடல் இதனை மேலும் தெளிவுபடுத்தும்.

டாக்டர் படேல்: உங்களின் பகவத் கீதையினைப் படித்தேன், இராமானுஜருடையதையும் படித்தேன். அவை ஏறக்குறைய ஒன்றே.

பிரபுபாதர்: ஒன்றே. ஆச்சாரியர்களுக்குள் வேறுபாடு என்பது கிடையாது. வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்தால் அவர் எவ்வாறு ஆச்சாரியராக முடியும்?

மாறுபட்ட ஸம்பிரதாயத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஸ்ரீல பிரபுபாதர், அனைத்து வைஷ்ணவ ஆச்சாரியர்களின் மீதும், குறிப்பாக, ஸ்ரீபாத இராமானுஜ ஆச்சாரியரிடமும் அவரது தத்துவங்களின் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தார். எனவே, அவரது இஸ்கான் இயக்கமும் ஸ்ரீபாத இராமானுஜரின் மீதும் அவரது உபதேசங்களின் மீதும் பெரும் மதிப்புடன் திகழ்கிறது.

ஸ்ரீபாத இராமானுஜர் அனைத்து வைஷ்ணவ ஸம்பிரதாயங்களின் வழிபாட்டிற்கு உரியவராகத் திகழ்கிறார்.

மாயாவாதத்தை வேரறுத்தல்

சங்கரரின் மாயாவாதம் (அத்வைதம்) தழைத்தோங்கியிருந்த காலத்தில், வேதங்களுக்கு அவர்கள் கூறிய அர்த்தமற்ற விளக்கங்களைத் தகர்த்து வேதங்களின் உண்மையான பொருளை தெள்ளத்தெளிவாக உரைத்தவர் ஸ்ரீபாத இராமானுஜ ஆச்சாரியர்.

இதனை ஸ்ரீல பிரபுபாதர் தனது சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடுகின்றார்: நாங்கள் (சங்கரரைப் பின்பற்றும்) வேதாந்திகளை வித3ந்தீகள், அதாவது பற்கள் இல்லாதவர்கள்” என்று குறிப்பிடுகிறோம் (வி என்றால் இல்லாத” என்றும், த3ந்தீ என்றால் பற்கள்” என்றும் பொருள்). மாயாவாதிகளின் பற்களாக இருக்கும் சங்கரரின் அத்வைத கருத்துக்கள் வைஷ்ணவ தத்துவ அறிஞர்களால், குறிப்பாக இராமானுஜாசாரியரைப் போன்ற மிகச்சிறந்த ஆச்சாரியர்களால், பலமான வாதங்களின் மூலமாக எப்பொழுதும் உடைக்கப்படு கின்றன. (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.128 பொருளுரை)

மாயாவாதத்திற்கு எதிரான இராமானுஜரின் பூரண விளக்கங்களை இங்கே வழங்கவியலாது. இருப்பினும், ஓர் எடுத்துக்காட்டினை வழங்குகிறோம்.

பிரம்மனைப் பற்றி விளக்குவதற்காக ஸ்ரீபாத சங்கரர் தைத்திரீய உபநிஷத்திலிருந்து பின்வரும் வரியினை மேற்கோள் காட்டுகிறார்: ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம. இதை வைத்து எல்லையற்ற உண்மையும் ஞானமுமே பிரம்மன் என்று சங்கரர் கூறுகின்றார். ஆனால் ஸ்ரீபாத இராமானுஜரோ இந்த எல்லையற்ற, உண்மை மற்றும் ஞானம் எல்லாம் பிரம்மனின் பண்புகளே என்று நிறுவுகிறார். அதாவது பிரம்மன் இதுபோன்று எத்தனையோ குணங்களை (பண்புகளை) கொண்டுள்ளது என்று பொருள். பிரம்மன் மட்டுமே உள்ளது என்று கூறினால், அது ஞானமுடையதாக இருந்தால், எதைப் பற்றிய ஞானம் என்ற வினா எழும். தான் மட்டுமுள்ளபோது, ஞானம் அர்த்தமற்றதாகிவிடும்.

மூன்று விஷயங்களை இராமானுஜர் தனது தத்துவங்களில் தெளிவாக விளக்கியுள்ளார்: (1) பல்வேறு அசிந்திய (புரிந்துகொள்ளவியலாத) குணங்களை உடைய பகவான், (2) உணர்வுள்ள ஜீவன், (3) உணர்வற்ற ஜடம்–இவை எல்லாம் சேர்ந்ததே பிரம்மன். அதாவது, பகவான் எங்கும் நிறைந்தவர் என்றாலும் அவர் ஒரு நபர் (புருஷர்), பல முரண்பட்ட தன்மைகளை ஒருங்கே கொண்டவர்; அவர் அழகானவராக இருப்பினும் ஜட புலன்களுக்குள் உணர முடியாதவர்.

இதனை ஸ்ரீல பிரபுபாதர் தமது சைதன்ய சரிதாம்ருத விளக்கவுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

கிருஷ்ணர் தனியாக இருப்பதாக ஒருபோதும் கற்றுத்தரப்படக் கூடாது, மாறாக இராமானுஜாசாரியர் விளக்கியபடி கிருஷ்ணர் நித்தியமாகத் தமது தோற்றங்களுடன் உள்ளார் என்று கருதப்பட வேண்டும். விசிஷ்டாத்வைத கொள்கையில், கடவுளின் சக்திகள், விரிவுகள், அவதாரங்கள் என அனைத்தும் வேற்றுமையில் ஒற்றுமையாகக் கருதப்படுகின்றன. வேறு விதமாகக் கூறினால், கடவுள் இவை எல்லாவற்றிலிருந்தும் பிரிந்தவர் அல்ல, அனைத்தும் இணைந்ததே கடவுள். (சைதன்ய சரிதாம்ருதம் அறிமுகம்)

வேதங்களின் இறுதி

சைவர்கள் கூறுவது போன்று வேதங்களின் இறுதி தெரியாத ஒன்று அல்ல; இன்றைய புதுக் கவிஞர்கள் எழுதிக்கொள்வதுபோன்று யார் வேண்டுமானாலும் கடவுள் என்பதும் இல்லை. வேதங்களின் இறுதி பகவான் நாராயணரே என்பதை மிகத் தெளிவாக இராமானுஜர் எடுத்துரைத்துள்ளார். ஸ்ரீல பிரபுபாதரும் இதனை மீண்டும்மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

வேதங்களின் குறிக்கோள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே. வேதங்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான பாதையையும் அவரை உணர்வதற்கான வழிமுறையையும் நமக்கு வழங்குகின்றன. வேதங்களின் இறுதி இலக்கு புருஷோத்தமரான முழுமுதற் கடவுளே. (பகவத் கீதை உண்மையுருவில் 15.15)

வேதங்களின் இறுதியான பரம்பொருளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீபாத இராமானுஜர் கூறியுள்ளதை ஸ்ரீல பிரபுபாதர் தமது விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளார்:

பரம்பொருளின் உண்மையான அடையாளம் அவரது ஞானம் மற்றும் குணங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று இராமானுஜர் குறிப்பிடுகிறார். பரம்பொருள் ஞானம் நிறைந்தது என்று மட்டும் புரிந்துகொள்ளுதல் போதுமானதல்ல.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.140 பொருளுரை)

 

 

ஸ்ரீபாத இராமானுஜரைப் பின்பற்றி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பிரச்சாரப் பணியினை இஸ்கான் உலகெங்கிலும் மேற்கொண்டு வருகிறது.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறை

18 முறை சென்று வாங்கிய ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தினை இராமானுஜர் உடனடியாக உலக மக்களின் நன்மைக்காக, தாம் நரகம் புகவேண்டியிருப்பினும் பலரிடம் எடுத்துரைத்து ஆன்மீகப் புரட்சியை மேற்கொண்டார்.

அதே மனப்பான்மையினைத் தாங்கிய ஸ்ரீல பிரபுபாதர் இன்னும் ஒரு படி கீழே சென்று, மிலேச்சர்கள் என்று ஸநாதன தர்மத்தால் அழைக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்களிடம் சென்று அவர்களிடமும் கிருஷ்ண பக்தியினைப் பரப்பினார். ஸ்ரீல பிரபுபாதரின் இந்த பிரச்சார வழியினை இஸ்கான் இயக்கம் இன்றும் தொடர்ந்து பின்பற்றி ஜாதி, மதம் என்ற எந்தக் கட்டுப்பாடுமின்றி விருப்பமுடையோர் அனைவருக்கும் கிருஷ்ண பக்தியினை வழங்கி, அவர்களை பிராமணர்களாகவும் அதற்கு மேல் வைஷ்ணவர்களாகவும் உயர்த்துகின்றது.

 

உடல் நோய் தீர்ப்பவர் அல்ல, பிறவி நோயினைத் தீர்ப்பவர்

நாம் இந்த உடல் அல்ல, நாம் பகவானின் அங்கங்கள் என்னும் உண்மையினை ஸ்ரீ இராமானுஜர் எடுத்துரைத்தார். அதுபோன்றே ஸ்ரீல பிரபுபாதரும் தமது உபன்யாசங்கள், புத்தகங்கள், உரையாடல்கள் என அனைத்திலும் திரும்பத்திரும்ப கூறினார். அதனையே இஸ்கான் இன்று வரை பல வழிகளில் எடுத்துரைக்கின்றது.

இன்றைய மக்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அங்குள்ள பெருமாளையும் ஆச்சாரியர்களையும் தங்களுடைய உடல் பிணிகளைத் தீர்ப்பவர், சட்ட சிக்கல்களைத் தீர்ப்பவர், பிள்ளைப்பேறு வழங்குபவர் என்ற அடிப்படையில் அணுகுகின்றனர். இது முறையல்ல. பெருமாளும் ஆச்சாரியர்களும் நமது பிறவி நோயைத் தீர்ப்பவர்கள் என்பதை உணர்ந்து அதற்காக அவர்களை அணுகுவதற்கு ஸ்ரீபாத இராமானுஜாசாரியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இஸ்கான் பக்தர்கள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

வரவேற்கின்றோம்

இது ஸ்ரீபாத இராமானுஜ ஆச்சாரியரின் ஆயிரமாவது அவதாரத் திருவிழாக் காலம், ஸ்ரீ வைஷ்ணவர்கள் மட்டுமின்றி அனைத்து வைஷ்ணவர்களுக்கும் இஃது ஒரு சிறப்பான வருடம். ஸ்ரீல பிரபுபாதருக்கு முன்பாக இந்தியாவைத் தவிர வேறு எங்கும் எந்த வைஷ்ணவ பிரிவும் செயல்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இருந்த தடைகளை ஸ்ரீல பிரபுபாதர் உடைத்து அகற்றி, அனைத்து வைஷ்ணவர்களுக்கும் வழி ஏற்படுத்தியுள்ளார். இன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உட்பட பல பிரிவினர் உலகம் முழுவதும் பெருமாளின் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீ வைஷ்ணவம், கௌடீய வைஷ்ணவம் என்று ஸம்பிரதாய பேதம் இருந்தாலும், ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இஸ்கான் பக்தர்களுக்கும் இடையிலான உறவுமுறை எல்லா இடங்களிலும் சீரும் சிறப்புமாக உள்ளது. இஸ்கான் இயக்கம் மேலும் வளர்ச்சிபெற ஸ்ரீபாத இராமானுஜரிடம் இத்திருநாளில் யாம் வேண்டிக் கொள்கிறோம். அனைத்து வைஷ்ணவ பெருமக்களும் பொதுமக்களும் இவ்வியக்கத்தை அரவணைத்து அனைவரும் பயன்பெற வழி செய்வோமாக!

ஸ்ரீ இராமானுஜரின் திருவடிகளே வாழி!

ஸ்ரீல பிரபுபாதரின் திருவடிகளே வாழி!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives