மனித சமுதாயத்திற்கான சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தானே தன்னுடைய சொந்த பக்தராக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உருவில் தோன்றினார். அவருடைய வாழ்க்கையையும் உபதேசங்களையும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் நூலில் பதிவு செய்தார்.

துஷ்டர்களை அழித்து பக்தர்களைக் காப்பது தனது எல்லா அவதாரங்களின் குறிக்கோள் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். முழுமுதற் கடவுளுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான பல்வேறு போர்களை நாம் எல்லா அவதாரங்களிலும் காண்கிறோம். ஆயினும், பொன்னிற அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இதர அவதாரங்களிலிருந்து வேறுபட்டு, மிகவும் கருணை வாய்ந்த அவதாரமாகக் காணப்படுகிறார். அவர் நாம ஸங்கீர்த்தனத்தின் மூலமாகவும் கிருஷ்ண பிரேமையை விநியோகம் செய்ததன் மூலமாகவும் அசுர சுபாவத்தினை மக்களிடமிருந்து விலக்கினார். இதனால், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மஹாபிரபுவின் லீலைகளை மட்டுமின்றி, அவர் வழங்கிய இணையற்ற பக்தி தத்துவத்தையும் விளக்குகின்றது.
மூன்று பகுதிகளைக் கொண்ட ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் முதல் பகுதி, ஆதி லீலை என்று அழைக்கப்படுகிறது. இது கிருஷ்ண பிரேமையினை பழமாகக் கொண்ட அற்புதமான கற்பக மரத்தினைப் பற்றிய வர்ணனையை வழங்குகிறது. இந்த மரத்தைப் புரிந்துகொள்வதன் மூலமாக, ஒருவரால் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மாபெரும் சக்தியைப் புரிந்துகொள்ள முடியும். அந்த கற்பக மரத்திற்கு முழுமுதற் கடவுள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அடிமரமாக உள்ளார், அவரிலிருந்து வரும் சீடப் பரம்பரையானது அந்த மரத்தின் பல்வேறு கிளைகளாக உள்ளன; அக்கிளைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இந்த தெய்வீக மரத்தைப் பற்றிக் கேட்பவர்களின் இதயத்தில் நிச்சயமாக கிருஷ்ண பிரேமையின் விதைகள் விதைக்கப்படுகிறது, அதன் மூலமாக அவரால் கிருஷ்ண பக்தி இயக்கத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள இயலும்.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் பொருளுரையும் வழங்கியுள்ளார். தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் அந்நூலின் பின்வரும் பகுதியிலிருந்து, சைதன்ய மரம் எவ்வாறு உலகின் மாபெரும் நன்மைக்காக பழங்களை விநியோகம் செய்கின்றது என்பதையும் அஃது எவ்வாறு முழுமுதற் கடவுளின் காரணமற்ற கருணையை வெளிப்படுத்துகிறது என்பதையும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

புத்திசாலி மனிதன் தனது எண்ணங்கள், செயல், மற்றும் வார்த்தைகளை அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்.

புத்திசாலி மனிதன் தனது எண்ணங்கள், செயல், மற்றும் வார்த்தைகளை அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்.

ஸ்லோகம் 42

ஏதாவஜ் ஜன்ம-ஸாபல்யம்தேஹினாம் இஹ தேஹிஷு
ப்ராணைர் அர்தைர் தியா வாசாஷ்ரேய-ஆசரணம் ஸதா
“மற்றவர்களின் நன்மைக்காக தனது வாழ்க்கை, செல்வம், புத்தி மற்றும் வார்த்தைகளைக் கொண்டு நலப்பணிகளில் ஈடுபடுவது ஒவ்வோர் உயிர்வாழியின் கடமையாகும்.”

 

பொருளுரை: பொதுவான செயல்கள் இரண்டு வகைப்படும்ஶீ(1) ஷ்ரேய, அல்லது நன்மையையும் மங்களத்தையும் இறுதியில் கொடுக்கும் செயல்கள், (2) ப்ரேய, அல்லது உடனடி நன்மையையும் மங்களத்தையும் கொடுக்கும் செயல்கள். உதாரணமாக, குழந்தைகள் விளையாடுவதில் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் கல்வி கற்பதற்காக பள்ளிக்குச் செல்ல விரும்புவதில்லை, இரவு பகலாக விளையாடுவதும் நண்பர்களுடன் அனுபவிப்பதுமே வாழ்வின் குறிக்கோள் என்று அவர்கள் எண்ணுகின்றனர். கிருஷ்ணருடைய தெய்வீக வாழ்வில்கூட, அவர் குழந்தையாக இருந்தபோது தனது வயதை ஒத்த இடையர் குலச் சிறுவர்களுடன் இணைந்து விளையாடுவதை மிகவும் விரும்பினார். இல்லத்திற்குச் சென்று உணவு அருந்துவதற்குக்கூட அவர் விரும்ப மாட்டார். அன்னை யசோதை வெளியே வந்து வீட்டிற்கு வரும்படி அவரை வலியுறுத்த வேண்டியிருக்கும். இவ்வாறாக தன்னுடைய உடல் நலத்தையும் இதர முக்கிய விஷயங்களையும் சற்றும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக விளையாடுவது குழந்தையின் இயற்கையாகும். இது ப்ரேய, அல்லது உடனடி நன்மை தரும் செயல்களுக்கு ஓர் உதாரணமாகும். ஆனால் ஷ்ரேய என்று அழைக்கப்படும் இறுதி மங்களத்தை வழங்கும் செயல்களும் உள்ளன. வேத நாகரிகத்தின்படி, ஒரு மனிதன் இறையுணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். கடவுள் என்றால் என்ன, ஜடவுலகம் என்றால் என்ன. தான் யார், இவற்றிற்கு இடையில் உள்ள உறவுமுறை என்ன ஆகியவற்றை அவன் புரிந்துகொள்ள வேண்டும். இது ஷ்ரேய, அல்லது இறுதியான மங்களச் செயல் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீமத் பாகவதத்தின் இந்த ஸ்லோகத்தில், ஒருவர் ஷ்ரேய செயல்களில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஷ்ரேய எனப்படும் இறுதிக் குறிக்கோளை அல்லது நல்லதிர்ஷ்டத்தினை அடைவதற்கு, ஒருவன் தனது வாழ்க்கை, சொத்து மற்றும் வார்த்தைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டும், அது தனக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்காகவும் இருத்தல் அவசியமாகும். அவ்வாறு இருப்பினும், ஒருவன் தனது சொந்த வாழ்வின் ஷ்ரேய-த்தில் ஆர்வமுடையவனாக இல்லாவிடில், அவன் மற்றவர்களின் நன்மைக்காக ஷ்ரேய-த்தினை பிரச்சாரம் செய்ய முடியாது.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் மேற்கோள் காட்டப்பட்ட இந்த ஸ்லோகம் மனிதர்களுக்கு பொருந்தக்கூடியதாகும், மிருகங்களுக்கு அல்ல. முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்ட மனுஷ்ய-ஜன்ம என்னும் வார்த்தைகள், இந்த அறிவுரைகள் மனிதர்களுக்கானவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் மனித உடலைக் கொண்டுள்ளபோதிலும் அவர்களுடைய நடத்தை மிருகங்களைக் காட்டிலும் கீழ்த்தரமானதாகி வருகிறது. இது நவீன கல்வியின் குறைபாடாகும். நவீன கல்வியாளர்கள் மனித வாழ்வின் குறிக்கோளை அறியாமல் உள்ளனர்; அவர்கள் தங்களுடைய நாடு அல்லது மனித சமுதாயத்தின் பொருளாதார நிலையினை எவ்வாறு முன்னேற்றுவது என்பதில் மட்டும் கருத்துடையவர்களாக உள்ளனர். அதுவும் அவசியமே; வேத நாகரிகம், தர்மம், அர்த்தம் (பொருளாதார முன்னேற்றம்), காமம் (புலனுகர்ச்சி), மோக்ஷம் (முக்தி) என்னும் மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும் கருத்திற்கொள்கிறது. ஆனால் மனிதனின் முதல் கவனம் தர்மமாக இருக்க வேண்டும். தர்மவானாக இருப்பதற்கு ஒருவன் கடவுளின் கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த யுகத்திலுள்ள மக்கள் தர்மத்தினைப் புறக்கணித்துவிட்டனர், அவர்கள் பொருளாதார முன்னேற்றத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, அவர்கள் பணத்தைப் பெறுவதற்காக எந்த வழியையும் செயல்படுத்துவர். பொருளாதார முன்னேற்றத்திற்காக மந்திரத்தினாலோ தந்திரத்தினாலோ பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை; ஒருவன் தனது உடலையும் ஆத்மாவையும் பராமரிப்பதற்குத் தேவையான அளவு பணத்தை சேகரித்தால்போதும். ஆனால், நவீன பொருளாதார முன்னேற்றம் எந்தவொரு தர்மத்தின் பின்னணியுமின்றி செல்லும் காரணத்தினால், மக்கள் காமமுடையவர்களாக, பேராசையுடையவர்களாக, மற்றும் பணத்தின் மீது பைத்தியமானவர்களாக மாறிவிட்டனர். அவர்கள் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் மட்டுமே வளர்த்து வருகின்றனர், இயற்கையின் மற்றொரு குணமான ஸத்வ குணத்தையும் பிராமணத் தகுதிகளையும் புறக்கணிக்கின்றனர். இதனால் முழு சமுதாயமும் குழப்பத்தில் உள்ளது.
முன்னேறிய மனிதனின் கடமை மனித சமுதாயம் வாழ்வின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு வழிவகுக்கும் வகையில் செயல்படுவதே என்று பாகவதம் கூறுகிறது. இதே போன்ற மற்றொரு ஸ்லோகம் விஷ்ணு புராணத்தில் (3.12.45) கொடுக்கப்பட்டுள்ளது, அது சைதன்ய சரிதாம்ருதத்தில் அடுத்ததாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

- ஸ்ரீ சைதன்யர் கிருஷ்ண பிரேமையின் மரத்திற்கு தோட்டக்காரராக செயல்பட்டு அனைவருக்கும் கருணையை வழங்குகிறார்.

– ஸ்ரீ சைதன்யர் கிருஷ்ண பிரேமையின் மரத்திற்கு தோட்டக்காரராக செயல்பட்டு அனைவருக்கும் கருணையை வழங்குகிறார்.

ஸ்லோகம் 43

ப்ராணினாம் உபகாராயயத் ஏவேஹ பரத்ர ச
கர்மணா மனஸா வாசாதத் ஏவ மதி-மான் பஜேத்

“புத்திசாலி மனிதன், தனது செயல், எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளினால், எல்லா உயிர்வாழிகளுக்கும் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் நன்மை பயக்கக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும்.”

பொருளுரை: துரதிர்ஷ்டவசமாக மக்கள் பொதுவாக மறுவாழ்வில் என்ன நிகழப் போகிறது என்பதை அறியாமல் உள்ளனர். மறுவாழ்விற்காகத் தன்னை தயார் செய்தல் பொது அறிவாகும், இதுவே வேத நாகரிகத்தின் கோட்பாடாகும், ஆனால் தற்போது உலகெங்கிலுமுள்ள மக்கள் மறுவாழ்வினை நம்புவதில்லை. செல்வாக்குள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர கல்வியாளர்கள்கூட உடல் முடிந்தவுடன் அனைத்தும் முடிந்துவிடுகிறது எனக் கூறுகின்றனர். இத்தகு நாஸ்திக கொள்கை மனித நாகரிகத்தை கொன்று வருகிறது. மக்கள் பொறுப்பற்ற முறையில் எல்லாவித பாவ காரியங்களையும் செய்கின்றனர், இதனால் மனித வாழ்வின் விசேஷ தன்மையானது பெயரளவு தலைவர்களின் கல்வி பிரச்சாரத்தினால் அகற்றப்பட்டு விடுகிறது. உண்மையில், இந்த வாழ்க்கையானது மறுவாழ்விற்குத் தயார் செய்வதற்கானது என்பதே உண்மையாகும்; பரிணாம வளர்ச்சியின் மூலமாக ஒருவன் பற்பல உயிரினங்களைக் கடந்து மனித வாழ்வைப் பெற்றுள்ளான், இஃது அவன் தன்னை சிறந்த வாழ்விற்கு ஏற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும். இது பகவத் கீதையில் (9.25) விளக்கப்பட்டுள்ளது:

யாந்தி தேவ-வ்ரதா தேவான்பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யாயாந்தி மத்-யாஜினோ மாம்
“தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.”

எனவே, ஒருவன் தேவர்கள் வசிக்கக்கூடிய மேலுலகங்களுக்கு தன்னை உயர்த்திக் கொள்ளலாம். அவன் தன்னை பித்ரு லோகத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம், பூமியிலேயே தொடர்ந்து வாழலாம், அல்லது முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்லலாம். இது பகவத் கீதையில் (4.9) மற்றோர் இடத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ. உடலைக் கைவிட்ட பின்னர் கிருஷ்ணரை உண்மையாக அறிந்தவன் மீண்டும் இந்த உலகத்திற்கு ஜடவுடலை ஏற்பதற்கு வருவதில்லை, மாறாக, அவன் முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்கிறான். இந்த ஞானம் சாஸ்திரங்களில் உள்ளது, இதனைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒருவனால் ஒரே வாழ்வில் முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்ல இயலாவிடினும், தேவர்கள் வசிக்கக்கூடிய மேலுலகங்களுக்கு ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பையாவது வேத நாகரிகம் அவனுக்கு வழங்குகின்றது, அவன் மீண்டும் மிருக வாழ்வில் சரிந்து விடுவதில்லை. இந்த அறிவில் மாபெரும் விஞ்ஞானம் உள்ளடங்கியுள்ளது என்றபோதிலும், தற்போதைய நிலையில், மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதாலும் இந்த விஞ்ஞானத்தை ஏற்காமல் இருப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாலும், அவர்களால் இந்த அறிவைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதுவே நவீன மனித சமுதாயத்தின் மிக மோசமான சூழ்நிலையாகும். இதனால், கிருஷ்ண பக்தி இயக்கம் மட்டுமே புத்திசாலி மனிதர்களின் கவனத்தினை வாழ்வின் மிகச்சிறந்த நன்மையை நோக்கி வழிகாட்டுவதற்கான ஒரே நம்பிக்கையாகும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த யுகத்தின் மக்கள் தர்மத்தில் ஆர்வம் காட்டாமல், பொருளாதார முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த யுகத்தின் மக்கள் தர்மத்தில் ஆர்வம் காட்டாமல், பொருளாதார முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஸ்லோகம் 44

மாலீ மனுஷ்ய ஆமார நாஹி ராஜ்ய-தன
பல-புல தியா கரி புண்ய உபார்ஜன
“நான் சாதாரண தோட்டக்காரன் மட்டுமே, என்னிடம் ராஜ்ஜியமோ பெரும் செல்வமோ இல்லை. என்னிடம் சில பழங்களும் பூக்களும் உள்ளன, அவற்றை உபயோகித்து நான் என்னுடைய வாழ்வில் சற்று புண்ணியத்தைத் தேட விரும்புகிறேன்.”

பொருளுரை: மனித சமுதாயத்திற்கு நலப்பணிகளைச் செய்கையில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தன்னை செல்வந்தன் அல்ல என்று கூறுகிறார். இதன் மூலமாக, மனித சமுதாயத்திற்கு நன்மை தரக்கூடிய செயல்களைச் செய்வதற்கு ஒருவன் செல்வந்தனாக அல்லது வசதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சில நேரங்களில் பணக்காரர்கள் மனித சமுதாயத்திற்கு தங்களால் நலப்பணிகளைச் செய்ய முடிவதாகவும் மற்றவர்களால் இயலாது என்றும் மிகவும் பெருமைகொள்கின்றனர். இதற்கான நடைமுறை உதாரணத்தினைக் காணலாம்: இந்தியாவில் மிகக்குறைந்த மழைப்பொழிவின் காரணத்தினால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, பணக்கார வர்க்கத்தின் சில நபர்கள் மிகவும் பெருமையுடன் உணவுப் பொருட்களை விநியோகிக்கின்றனர், அரசாங்கத்தின் உதவியுடன் பெரும் ஏற்பாடுகளை செய்கின்றனர், அத்தகு செயல்களால்தான் மக்கள் நன்மை பெறுவதாக எண்ணி செயல்படுகின்றனர். ஆனால், உணவு தானியங்களே இல்லை என்று எடுத்துக்கொள்வோம், அப்போது இந்த பணக்காரர்களால் எவ்வாறு உணவை விநியோகிக்க முடியும்? தானிய உற்பத்தி என்பது முற்றிலும் பகவானின் கரங்களைச் சார்ந்தது. மழை இல்லையேல் தானியம் இல்லை, இந்த பெயரளவு பணக்காரர்களால் மக்களுக்கு தானியத்தை விநியோகிக்க இயலாது.
எனவே, வாழ்வின் உண்மையான குறிக்கோள் பரம புருஷ பகவானை திருப்தி செய்வதே. பக்தித் தொண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மையையும் மங்களத்தையும் வழங்குமளவிற்கு மிகவுயர்ந்தது என ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது பக்தி ரஸாம்ருத சிந்துவில் விவரிக்கின்றார். மனித சமுதாயத்தில் பக்தித் தொண்டின் பாதையினை பிரச்சாரம் செய்வதற்கு செல்வந்தனாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை என ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அறிவித்துள்ளார். பிரச்சாரக் கலையை அறிந்தவர் எவரும் இதனைச் செய்யலாம், மனித சமுதாயத்திற்கு மிகவுயர்ந்த நன்மையை வழங்கலாம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஒரு தோட்டக்காரரின் பாகத்தை ஏற்கின்றார்; ஏனெனில், தோட்டக்காரர் என்பவர் இயற்கையாகவே செல்வந்தனாக இல்லாவிடினும் அவரிடம் சில பழங்களும் பூக்களும் உள்ளன. எந்தவொரு மனிதனும் சில பழங்களையும் பூக்களையும் சேகரித்து பக்தித் தொண்டினால் பரம புருஷ பகவானைத் திருப்திப்படுத்த முடியும், இது பகவானால் பகவத் கீதையில் (9.26) பரிந்துரைக்கப்பட்டுள்ளது:

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்யுபஹ்ருதம்அஷ்னாமி ப்ரயதாத்மன:

ஒருவன் முழுமுதற் கடவுளைத் தன்னுடைய செல்வம், சொத்து, அந்தஸ்து போன்றவற்றினால் திருப்திபடுத்த இயலாது, ஆனால் சிறிதளவு பழமோ பூவோ சேகரித்து அதனை அவருக்கு அர்ப்பணிக்க யாராலும் இயலும். அவ்வாறு பக்தியுடன் அர்ப்பணிப்பதற்காக ஒருவன் எதையேனும் கொண்டு வந்தால், அதனை ஏற்று உண்பதாக பகவான் கூறுகிறார். கிருஷ்ணர் உண்ணும்போது முழு உலகமும் திருப்தியடைகிறது. கிருஷ்ணர் உண்டதால் துர்வாஸ முனிவருடைய அறுபதாயிரம் சீடர்கள் அனைவரும் எவ்வாறு திருப்தியுற்றனர் என்பதை விளக்கும் கதை ஒன்று மஹாபாரதத்தில் உள்ளது. எனவே, நாம் நம்முடைய உயிர் (ப்ராணை:), நம்முடைய செல்வம் (அர்தை:), நம்முடைய புத்தி (தியா) அல்லது நம்முடைய வார்த்தைகளைக் (வாசா) கொண்டு பரம புருஷ பகவானை திருப்தி செய்ய இயலும் என்பது உண்மையாகும், அச்செயலினால் இயற்கையாகவே முழு உலகமும் மகிழ்ச்சியடையும். எனவே, நமது முக்கிய கடமை பரம புருஷ பகவானை நம்முடைய செயல்கள், நம்முடைய பணம் மற்றும் நம்முடைய வார்த்தைகளினால் திருப்திப்படுத்துவதே. இது மிகவும் எளிமையானதாகும். ஒருவனிடம் பணம் இல்லாவிட்டால்கூட, அவன் ஹரே கிருஷ்ண மந்திரத்தினை ஒவ்வொருவருக்கும் பிரச்சாரம் செய்யலாம். அவன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்லலாம், ஒவ்வொருவரையும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கும்படி வேண்டலாம். இவ்வாறாக ஒட்டுமொத்த உலகின் சூழ்நிலை மிக மகிழ்ச்சிகரமானதாகவும் அமைதியாகவும் மாறிவிடும்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment