முட்டாளாக வாழும் மக்கள்

பின்வரும் உரையாடலில் காம வாழ்வின் துச்சமான நிலைகுறித்தும் இந்த மயக்கத்திலிருந்து வெளிவருவதுகுறித்தும் மக்கள் முட்டாள்களாக வாழ்வதுகுறித்தும் தமது சீடர்களிடையே எடுத்துரைக்கின்றார்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: வேத கலாச்சாரம் குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக மட்டுமே பாலுறவை அனுமதிக்கின்றது. வேறுவிதமாகக் கூறினால், கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றது. சமய விதிமுறைகளுக்கு உட்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பாலுறவு அனுமதிக்கப்படுகின்றது.

கர்பதான சம்ஸ்காரம் முதலிய பல சடங்குகள் உள்ளன. குழந்தை பெறுவதற்காக உடலுறவில் ஈடுபட்டால், அதுகூட எவருக்கும் தெரியாமல் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதில்லை. கர்பதான சம்ஸ்காரம் என்னும் சடங்கு அங்கே மேற்கொள்ளப்பட வேண்டும். பிராமணர்கள், உறவினர்கள் என அங்குள்ள அனைவரும், இன்னும் சிறிது நேரத்தில் இந்த தம்பதியர் குழந்தை பெறுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபட உள்ளனர் என்பதை அறிவர். இதுவே கண்ணியமான பாலுறவு. பூனைகளையும் நாய்களையும் போன்று நினைத்த நேரத்தில் பாலுறவில் ஈடுபடுதல் தவறு.

உண்மையில், நாய்களும் பூனைகளும்கூட இரகசியமான பாலுறவில் ஈடுபடுவதில்லை, மனிதனே இரகசியமாக ஈடுபடுகிறான், மனிதனே கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகிறான். ஏனெனில், அவன் குழந்தை பேற்றினால் வரும் தொல்லைகளைத் தவிர்க்க நினைக்கிறான். எனவே, குழந்தைகளைக் கொல்வது, கருத்தடுப்பு மாத்திரைகளை உபயோகிப்பது, கருக்கலைப்பு செய்வது முதலியவற்றை இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுத்து, “தாராளமாக உடலுறவில் ஈடுபடுங்கள், ஆனால் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது,” என்று ஊக்குவிப்பதே மனிதர்களின் விஞ்ஞான முன்னேற்றமாக உள்ளது.

பல தொல்லைகளைக் கொடுக்கும் பாலுறவை ஏன் நிறுத்தக் கூடாது? அதை அவர்களால் செய்ய முடியாது. ஏனெனில், அவர்கள் மிருகங்களாக உள்ளனர். அவர்கள் மிருக நாகரிகத்தை உருவாக்கி உள்ளதால், இந்த தொல்லைகளிலிருந்து அவர்களால் விடுபட முடிவதில்லை. கண்டூதிவன் மனிஸிஜம் விஷ-ஹேத தீர, மக்களுக்கு நிதானமான வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்காதது ஏன்? (பாலுறவிற்கான தூண்டுதல் என்னும்) அரிப்பைப் பொறுத்துக் கொண்டு, பிரம்மசரியத்தை மேற்கொண்டு, ஆன்மீகத் தளத்தில் நிலைபெறுவதற்கான கல்வி மக்களுக்கு ஏன் கற்றுத் தரப்படுவதில்லை?

பாலுறவு தொடர்ந்து ஈடுபடுங்கள் என்னும் அவர்களது அறிவுரைகள் நல்லதல்ல. அதன் விளைவாக மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அந்த துன்பங்களைத் தவிர்க்க முயன்று அவர்கள் மேலும் துன்பப்படுகின்றனர். பஹு-து:க பாஜ, முறையான பாலுறவு, முறையற்ற பாலுறவு ஆகிய இரண்டும் துன்பகரமானதே. முறையான பாலுறவில், மனைவியையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். குழந்தைகளுடைய உணவு, உடை, கல்வி, வளர்ச்சி என பல்வேறு விஷயங்களுக்காக எப்போதும் கவலையிலேயே மூழ்கியிருக்க வேண்டும். எனவே, இதில் கவலையே நிரந்தரம். முறையற்ற பாலுறவிலோ கருத்தடை சாதனங்கள், கருக்கலைப்பு ஆகியவற்றின் மூலமாக குழந்தைகளைக் கொல்லும் பாவத்தை மேற்கொள்வதால், அடுத்த பிறவியில் நீங்கள் கொல்லப்பட வேண்டியவர்களாக ஆகின்றீர்கள். மருத்துவருக்கான கட்டணமும் மிக அதிகமாக இருக்கிறது. இவ்வாறாக, முறையான பாலுறவு என்றாலும் முறையற்ற பாலுறவு என்றாலும், துன்பம் துன்பமே.

எனவே, மனிதனை நிதான புத்தியுடையவனாகப் பயிற்றுவித்தல் அவசியம். “நான் இந்த அரிப்பைப் பொறுத்துக்கொள்கிறேன். இதனால் எண்ணற்ற துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்படுவேன்.” இதுவே அறிவு. ஒருவனை அயோக்கியனாக்குவதும் அவனை மேன்மேலும் அயோக்கியனாக்குவதும் நாகரிகமா? மக்களை அயோக்கியர்களாக்கி அவர்களைத் துன்பப்படுத்தி ஆன்மீகத் தற்கொலை செய்ய வைப்பதுதான் நாகரிகமா?

ஒவ்வொரு மனிதனும் அயோக்கியனாகி துன்பப்பட வேண்டும் என்னும் விதத்தில் நவீன நாகரிகத்தை மக்கள் உருவாக்கி உள்ளனர். இதனை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். இயற்கையின் ஏற்பாட்டில் அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். இயற்கை கூறுகிறாள், “நீ கிருஷ்ணரை மறந்துவிட்டதால், எனது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளாய்.  அயோக்கியனாக இருப்பதால் நிச்சயம் துன்புறுவாய்.” எதற்காக அவள் இதுபோன்று செயல்படுகிறாள்? நாம் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்பதையும் இல்லையெனில் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும் என்பதையும் அவள் நமக்குக் கற்றுத் தருகிறாள்.

சீடர்: பிரபுபாதரே, இத்தகைய துன்பங்களை அவர்கள் உண்மையான மகிழ்ச்சி என்று கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியென்றால் நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சியிலேயே வாழுங்கள். யார் உங்களை தடுக்கின்றனர்? இந்த மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டு இருங்கள். இந்த ஜடவுலகில் உள்ள அனைத்துமே உங்களுடைய கட்டுப்பாடற்ற மகிழ்ச்சிக்காக என்றால், நீங்கள் எதற்காக கருத்தடை முறைகளை மேற்கொள்ள வேண்டும்? குழந்தைகளைக் கொல்வதற்கான திட்டத்தை ஏன் மேற்கொள்கிறீர்கள்? இங்குள்ள அனைத்து ஏற்பாடுகளும் உங்களை தண்டித்து, நீங்கள் ஆன்மீகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உள்ளது. ஆனால் நீங்களோ இவை புலன்களின் இன்பத்திற்காக இருக்கிறது என்று எண்ணுகின்றீர்.

இவர்கள் அயோக்கியர்கள் என்பதற்கு இதுவே சாட்சி. மூடோயம் நாபிஜானாதி, “மூடர்களால் எது என்ன என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது,” என்று கிருஷ்ணர் கூறுகின்றார். மூடா:, மாயயாபஹ்ருத-ஜ்ஞானா:, என கிருஷ்ணர் பலமுறை கூறுகின்றார். இதிலுள்ள அர்த்தத்தை அறிய முயலுங்கள்.

மனித நாகரிகம் என்பது ஆன்மீக நிவாரணத்திற்கானது. புத்திசாலித்தனமான சுகமான வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இது மிருகங்களைப் போன்று வாழ்வதற்காக அல்ல.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, பக்தர்கள் மட்டுமே அன்றாட வாழ்வின் கவலையிலிருந்து விடுபட்டிருப்பதைக் காண்கின்றோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், இதுவே உண்மை. நாமும் சில நேரங்களில் கவலையை எதிர்கொள்கிறோம், அஃது இந்த அயோக்கியர்களின் உலகத்துடன் தொடர்புகொள்வதால் மட்டுமே. இல்லையெனில், நமக்கு கவலையே இல்லை. இருப்பினும், மக்களை அணுகி அவர்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லும் திருப்பணியை நாம் ஏற்றிருப்பதால், நமக்கு இச்சிறிய கவலை ஏற்படுகிறது. இல்லையெனில், நமக்கு கவலை என்பதற்கான கேள்விக்கே இடமில்லை.

இந்த உலகம் முழுவதும் மூடர்களாலும் அயோக்கியர்களாலும் நிறைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இஃது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்டது அல்ல. இதில் உங்களுக்கு ஏதேனும்  மாற்றுக்கருத்து உள்ளதா?

சீடர்: இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதனை ஒப்புக்கொள்கிறீர்களா?

சீடர்: ஆம், அவர்கள் மூடர்களே.

ஸ்ரீல பிரபுபாதர்: (சிரித்தபடி) ஆம், இவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பதே நமது இறுதி தீர்மானம்.

பகவத் கீதையில் அர்ஜுனன் பெரிய அறிவாளியைப் போல பேசினாலும், கிருஷ்ணர் அவனை இழிவடைந்த முட்டாள் என்ற கூறினார். ஆத்மாவை அறியாமல் உடலைப் பற்றி கவலை கொண்டிருந்த அர்ஜுனனை கிருஷ்ணர் கண்டித்தார். இதுவே ஒவ்வொருவருடைய நிலை. அனைவருமே முட்டாள்களாக, வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை அலட்சியம் செய்பவர்களாக உள்ளனர். மாண்டிரியல் நகரில் ஒரு வங்காள மனிதர் என்னிடம் வினவினார், “ஸ்வாமிஜி, ‘முட்டாள்கள், அயோக்கியர்கள்,’ என்று நீங்கள் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறீர். இதை வேறு விதமாக விளக்க முடியாதா?”

நான் கூறினேன், “முடியாது. நீங்கள் முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் இருப்பதால், உங்களது நிலையை எடுத்துரைக்க இந்த வார்த்தைகளே உள்ளன.”

சீடர்: ஜட உடலில் இருப்பவன் ஒவ்வொருவனும் அயோக்கியன் என்று நீங்கள் ஒருமுறை கூறினீர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அயோக்கியன். இந்த உடல் அழிந்துவிடும் என்பதை அறிந்தும், அழியப்போகும் இந்த உடலிற்காக இவர்கள் எவ்வளவு முயல்கின்றனர்! இந்த முயற்சிகள் எல்லாம் முட்டாள்தனம்தானே.

சீடர்: ஆம், இஃது அவர்களது அயோக்கியத்தனத்தின் மற்றொரு அறிகுறி. அழியப்போகும் முயற்சிகள் என்பதை அவர்கள் ஏற்பதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உடல் அழிகிறது என்பதை அவர்கள் பார்க்கின்றனர், உணர்கின்றனர்; ஆயினும், ஏற்க மறுக்கின்றனர். வரலாற்றில் அமரத்துவம் பெற்றவர் யாரும் இல்லை. இயற்கை ஓர் உதை விட்டால் இவர்கள் அனைவரும் மடிந்து விடுவர். இந்தக் கல்வியை நாம் மக்களுக்கு வழங்க வேண்டும்.

மனிதனை நிதான புத்தியுடையவனாகப் பயிற்றுவித்தல் அவசியம்

மனித நாகரிகம் மிருகங்களைப் போன்று வாழ்வதற்காக அல்ல.